முதல் பெண் மிருதங்கக் கலைஞர் கலைமாமணி திருக்கோகர்ணம் எஸ்.ரங்கநாயகி அம்மாள் வாழ்க்கை வரலாறு – திலகவதியார் திருவருள் ஆதின சந்நிதானம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள்; பக்.100; ரூ.100; திலகவதியார் திருவருள் ஆதினம், புதுக்கோட்டை, 622 001; ✆97891 82825.
1910-இல் பிறந்த ரங்க நாயகி அம்மாள் 1966-இல் திருப்பதி ஸ்ரீபத்மாவதி கல்லூரியில் நாட்டிய ஆசிரியராக இருந்தவர்.
இவரது சகோதரி சாயிமாதா சிவ பிருந்தாதேவியே ஆதினத்தை நிறுவி, முதல் பெண் ஆதினமாக இருந்தவர். இவரது சகோதரர் டி.எஸ். உலகநாதன் புகழ்பெற்ற வயலின் கலைஞர். இசையையும் ஆன்மிகத்தையும் நேசிக்கும் குடும்பத்தில் பிறந்த ரங்கநாயகி, புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி பிள்ளையிடம் மிருதங்கம் பயின்று, தமிழ்நாட்டின் முதல் பெண் மிருதங்கக் கலைஞராகப் புகழ் பெற்றார்.
1936-இல் டி.கே.பட்டம்மாளுடன் கச்சேரி செய்தவர் என்ற பெருமைக்குரிய இவரது வாழ்க்கை வரலாறு, அவருடைய சாதனைகள், அவர் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகள், மாநாடுகளில் வாசிப்புகள், பத்திரிகையில் வெளியான கட்டுரைகள், முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துரைகளும் கடிதங்களும், அரசு நிறுவனங்களில் கிடைத்த மரியாதை, பாராட்டுரைகள் என அவருடைய முழு வாழ்க்கையையும் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.
இசைக்கலைஞர்களாகப் பெண்களும் வரலாம் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ரங்கநாயகி அம்மாளை இசை ஆளுமைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், ஆளுநர்கள் கேகே.ஷா, பிரபுதாஸ் பட்டுவாரி போன்றோர் பாராட்டியுள்ளது வியக்க வைக்கிறது.
நூலாசிரியரின் பாட்டி என்பதால், அவர் தனது இளமைக்காலம் முதல் ரங்கநாயகி அம்மாள் மீது மிகுந்த மதிப்பையும் பாசத்தையும் வைத்திருந்ததும் தெரிவதோடு, அவருக்கு நன்றிக்கடனாக வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். இசைப்பிரியர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.