குரங்கின் பெயர்கள் :
சங்க இலக்கியத்தில் குரங்கும், அதன் வகைகளான கடுவன், மந்தி, கலை, முசு,ஊகம் என்பனவும் சுட்டப்பட்டுள்ளன.
குரங்கு :
குரங்கு, குரங்கினங்களின் பொதுப் பெயராகும். குரங்கு என்ற பெயர் “குர்…உர்+கு என அதன் சத்தத்தின் அடிப்படையில் அமைந்ததென்பர்”(39) தி. முருகரத்தினம். இச்சொல் நான்கிடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
கடுவன் :
கடுவன்- மந்திக் குரங்கின் ஆண். கடுவன் என்ற பெயர் கடி என்பதன் அடியாகப் பிறந்தது. கடி – காவல், வன்-வ-மை. குரங்குகளுக்குக் காவலான தலைவன்-கடிவன்-கடுவன் என “பதினேழுஇடங்களில் “(40) குறிக்கப்பட்டுள்ளது. இதனை,
“குரங்கின் றலைவன் குருமயிர்க் கடுவன்” (ஐங். 275: 1)
“பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்” (அகநா. 352: 2)
என்னும் அடிகள் விளக்கும். வ-மையான ஆண் குரங்கு கூட்டத்திற்குத் தலைமை தாங்குகின்றது. பல்கிளைத் தலைவன் எனக் குறிக்கப்படுவதற்குக் காரணம், குரங்குகள் சிறுசிறு கூட்டமாக வாழக் கூடியவை (நற். 334: 1, குறுந். 69: 3). அக்கூட்டங்களில் தன் வ-மையால் தலைவனாக உள்ள குரங்கு-கடுவன் என வழங்கப்பட்டுள்ளது.
மந்தி :
மந்தி என்ற பெயர் பெண் குரங்கினைக் குறிப்பதாகும். இச்சொல் சங்க இலக்கியத்தில் “நாற்பத்தாறு”(41) இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மந்தி நிறத்தினால் அமைந்த பெயர். இதன் முகம் சிவப்பாகக் காணப்படுவதால், இதனைச் செம்முக மந்தி (நற்.151:8) என்றே சங்க இலக்கியங்கள் சுட்டியுள்ளன. கயிறு தயாரிக்கப் பயன்படும் தேங்காய்நார், கற்றாழை போன்றவை மஞ்சி என்று வழங்கப்படும். தேங்காய் நார் மஞ்சள் கலந்த சிவப்புடனும், மஞ்சிக் கற்றாழை வெளிரிய மஞ்சள் நிறத்துடனும் காணப்படும். செம்முகம் என்பதும்-வெளிரியமஞ்சள் நிறத்தையே குறிக்கும். மந்தி என்ற பெயரும் மஞ்சி என்று குறிப்பிடப்படுவதுபோல நிற அடிப்படையில் அமைந்த பெயராகும். மந்தியின் முகம் சிவப்பாக இருத்தலை.
“அதவத் தீம்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தாங்க” (நற். 95: 3-4)
“கருவிரல் மந்தி செம்முகப் பெருங்கிளை” (நற். 334: 1) என்பன போன்ற அடிகள் விளக்கும். தொல்காப்பியர்,
“குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி” (தொல்.1567)
எனக் குரங்கு முதலாயின மூன்றும் மந்தி என்னும் பெண்பாற் பெயர் பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சங்க இலக்கியத்தில் “நான்கிடத்தைத்”(42) தவிரப் பிற இடங்களில் கடுவன் எனும் ஆண் குரங்கின் துணையாகவே மந்தி சுட்டப்பட்டுள்ளது.
கலை :
கலை என்னும் பெயர் முசுவில் ஆண் குரங்கினைக் குறிக்கின்றது. குரங்கினங்களில் முகம் கருமையான ஆண்குரங்கு கலை எனப்படும். கலை என்பதற்கு ‘மரவயிரம்”(43) என்ற பொருளுண்டு.மரவயிரம்-முற்றிய மரத்தின் உள்பகுதி. இதன் நிறம் கருமையாக இருக்கும். எனவே கருமை நிறக் குரங்கு கலை என வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் கலை என்னும் பெயர் முசுவிற்கும் உரித்தாகும் (தொல். 1548) என்பர். “முசுவிற்கும் நிலைபெற்றனவே அத்துணை நிலைபேறின்றிக் குரங்கிற்கு வருவனவும் கொள்க” “(44) என்பர் பேராசிரியர். இதன் முகம் கருமையாக இருப்பதை,
“மைபட்டன்ன மாமுக முசுக்கலை” (குறுந். 121:2)
“மாமுக முசுக்கலை” (திருமு. 303)
என்னும் அடிகள் நன்கு விளக்கும். கலை என்ற சொல் “பதினேழு இடங்களில்”(45) குறிக்கப்பட்டுள்ளது.
முசு :
”முகங் கரியதாகிய ஒரு வகைக் குரங்கு (46 முசுவில் ஆண் கலை என வழங்கப்படுவதால் முசு, பெண் குரங்கினைக் குறிக்கும். முசு- சிறியது. பலாக்காயில் சிறியதைப் பலாமூஸ் என்பர். பலாமுசு என்பதே பலாமூஸ் என மருவி வழங்கப்படுகின்றது. ஆணைவிடச் சிறிய, முகம் சுருங்கிய குரங்கு முசு என வழங்கப்பட்டுள்ளது. முசு – கருமுக மந்தி என்பதை,
“கருமுக முசுவின்” (அகநா. 121: 15)
“மைபட்டன்ன மாமுக முசுவினம்” (அகநா. 267: 9)
என்ற அடிகள் சுட்டும்.
ஊகம் :
”தமிழ்நாட்டுக் காடுகளில் அடர்ந்த பகுதிகளில் கருமையான உடலுடன் முகத்தில் பிடரிமயிர் போன்று நீண்ட நரைத்த கற்றை மயிர்களை உடைய ஒருவகைக் குரங்குகள் உண்டு. அவையே ஊகமெனச் சங்க நூல்களில் அழைக்கப்படுகின்றன. இதன் முகத்தைச் சுற்றி நரைமயிர்க் கற்றை (Grey Gairs) தொங்குவதால் நரைமுக ஊகம் என்று கூறினர்.” (47) ஊகத்தின் முகத்தில் நரைத்த முடிகள் காணப்படுவதை, “நரைமுக வூகம் பார்ப்பொடு பனிப்ப” (குறுந்.249:2) எனக் குறுந்தொகை உரைக்கும். “அதன் முடிகள் நீண்டதாகவும், பற்கள் கூர்மையானதாகவும் காணப்படுவதைக் குறிப்பிட்டுள்ளன. விரல்கள் கருமையானதாகவும்” (48) குறுந்தொகையும், மலைபடுகடாமும்
குரங்கின் வகைகளைப் பிரித்தறிய அதன் முக அமைப்பே பெரிதும் உதவுகிறது. சிவந்த நிறக் குரங்கு மந்தி என்றும், அதன் ஆண் கடுவன் என்றும், கரிய முகமுடைய குரங்கு முசுவென்றும், ஆண் கலை என்றும் முகத்தில் வெள்ளிய முடிகளை உடைய குரங்கு ஊகம் என்றும் வழங்கப்பட்டுள்ளன. குரங்குப் பெயர்கள் அனைத்தும் அதன் தோற்றத்தாலும், நிறத்தாலும் இடப்பட்டனவாகும்.
சங்க இலக்கியத்தில் மக்கள்-விலங்கு பறவை பெயர்கள் – பேராசிரியர் துரை ரவிக்குமார்
விலை: 400
Buy this book online: https://www.heritager.in/product/sanga-ilakkiyathil-makkal-vilangu-paravai-peyargal-2/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/