வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம் :
மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது.
அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. ‘வாரங்கல்’ என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்’ என்று குறிக்கிறது.
மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது.
மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார். (1573)
சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப் பட்டுள்ளது. இதன் காலம் 1574.
கல்வெட்டு :
சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோழ மண்டல பிறதிட்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கு கம்பழமும் யாழ்ப்பாணப் பட்டணமும் கேசரி வேட்டை கொண்டருளிய ராச பரமேசுவரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் வெகுநீதி ராசபரிபாலகன் ராசாக்கள் தம்பிரான் கிஷ்ட்டணராயர் அவர்கள் காரியத்துக் கர்த்தராகிய விசுவநாதநாயக்கன் கிருஷ்ண நாயக்கன் வீரப்ப நாயக்கன் அய்யன் அவர்கள் ராச்சிய பரிபாலனம் பண்ணிச் செய்தருளாநின்ற சாலிவாகன சகாப்தம் 1495 மேல் செல்லாநின்ற பவ வருஷம் தை மாசம் 10 தேதி சுபயோக சுபகரணமம் கூடிய சுபதினத்தில் மதுரை நாட்டில் வைகை நதிக்கு வடகரையாகிய கோரி பாளையத்தில் தில்லி ஒருகோல் சுலுத்தான் பள்ளிவாசல் கோரிக்கு சோளிகுடி சொக்கிகுளம் வீவிகுளக் கண்ணானேம்பல் சிறுத்தூர் திருப்பாவை இந்த ஆறு கிராமமும் முன் கூன்பாண்டியராசா 14 ஆயிரம் தங்கத்துக்கு வாலை பிரமாணம் பண்ணிக் குடுத்து நடந்துவந்த படியினாலே யிதன் பிறகு றாசாக்களுக்கும் மஸ்கருக்கும் தகராறு வந்து நாம் நாயம் விசாரிக்கும்போது பாண்டியன் கோரிக்கு விலைப்பிரமாணம் பண்ணிக் குடுத்த அத்தாட்சி நியாயமானபடி யினாலே முன் நடந்தபடிக்கு நாமும் அபிமானிச்சுக் குடுத்தோம் எல்கை முன் பாண்டிய நாட்டின் கல்லு எல்கைப்படிக்கு இந்த ஆறு கிராமத்தில் சகல சமஸ்த ஆதாயமும் சுகமே என்னென்னைக்கும் சூரியப் பிரவேசம் உள்ளமட்டுக்கும் சுகமே அனுபவித்துக் கொள்வார்களாக.
தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் –
புலவர் செ. இராசு
விலை: 240/-
Buy this book online: https://www.heritager.in/product/thamizhaga-islaamiya-varalaatru-aavangnal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/