கூத்தர், பாணர், பொருநர், விறலி :
தொல்காப்பியம் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த ஆற்றுப்படை இலக்கிய நூல்களில் பேசப்படும் கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோருள், கூத்தர், பாணர், பொருநர் ஆகியோர் மட்டுமே தனித்தனிக் கலைக் குழுவிற்கும் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால், பெண் கலைஞரான விறலி அவ்வாறு கலைக் குழுவிற்குத் தலைமையேற்று முன்னடத்திச் சென்றதாக எங்கும் சான்று இல்லை. ஆனால்,கூத்தர், பாணர், பொருநர் ஆகிய ஒவ்வொருவர் குழுவிலும் ஒரு இன்றியமையாத நிகழ்த்துநராக விறலி திகழ்ந்தாள் என்பதை ஆற்றுப்படை நூல்கள் காட்டுகின்றன. அவ்வாறே, அவளுக்கு அரசர்கள், வள்ளல்கள் வழங்கிய சிறப்பான பரிசில்களும் அவளைப் பற்றிப் புலவர்கள் முன்னிறுத்தும் கேசாதிபாத வருணனையும் அவளுடைய முக்கியத்துவத்தைப் புலப்படுத்துகின்றன. வாய்ப்பாட்டு, யாழிகை தடாரி அல்லது முழவு ஆகியவற்றுள் எவ்வகையான இசை வடிவம் முதன்மை பெற்றிருந்த கலை நிகழ்த்துகையானாலும் விறிலியின் நடனம் என்பது அந்தந்த நிகழ்த்துகையின் ஓர் இன்றிமையாத பகுதியாக இடம்பெற்றிருந்ததை அறிய முடிகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால், ஒவ்வொரு நிகழ்த்துக்கலை வடிவத்திலும் பார்வையாளர் கவனத்தில் குவிமையமாக விறலியே திகழ்ந்திருக்க வேண்டும்.
விறலி, ஒவ்வொரு கலைக் குழுவிலும் தவிர்க்கவியலா அங்கத்தினராக விளங்கியதை அறியும்போது, அந்த ஒவ்வொரு கலைக் குழுவின் சமூகக் குழு ஓர்மையை இனம் காண்பதில் சற்றே சிக்கல் ஏற்படுகிறது. கூத்தர், பாணர், பொருநர் முதலிய கலைஞர்களின் ஒவ்வொரு குழுவையும் ஒருங்கிணைக்கும் சமூக, பண்பாட்டுக் கூறுகள் எவை எவை என்று அறிவதிலும் கவனம் தேவைப்படுகிறது.
கூத்தரின் கலைக் குழுவை எடுத்துக் கொள்வோமானால், ஆடல், இசை ஆகிய இரண்டு துறைகளில் திறன்மிக்க கலைஞர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த குழுவிற்குக் கூத்தனே தலைவனாக விளங்கினான் என்பதை “கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ” (மலை. 50) என்ற மலைபடு கடாம் கூற்றினைக் கொண்டு அறியலாம். ‘ஒக்கல்’ என்னும் சொல்லிற்குச் சமமாயிருத்தாத சுற்றம், உறவு, குடி என்பன போன்ற பொருள்கள் உண்டு. எனவே குருதி வழியிலமைந்த உறவுமுறை தழுவிய தனித்த சிறுகுழுவாகவே கூத்தரின் கலைக்குழு திகழ்ந்தது என்று கருதத் தோன்றுகிறது. பாணர்கள். வாய்பாட்டிசை, கருவி (யாழ்) இசை ஆகிய இரண்டு இசைத்துறைகளிலும் வல்லவராக விளங்கினர். இப்பாணர், இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றனர். யாழ்ப்பாணருள் பெரும்பாணர், சிறுபாணர் என்றிரு வகையாகப் பகுக்கப்படுவதற்குப் ‘பேரியாழ்’ (“இடனுடை பேரியாழ் முறையுளிக் கழிப்பி” – பெரும்பாண். 462) ‘சீறியாழ்’ (“இன்குரல் சீறியாழ் இடவயிற் தழீஇ”-சிறுபாண். 35) என்று யாழிசைக் சுருவிகளுள் வேறுபட்டமைந்தவற்றை இசைத்தவர்கள் என்பதே அடிப்படைக் காரணமாகக் கூறுவர் (உவே.சா. 1956: xiv) ஒவ்வொரு பாணரும் தத்தம் குழுவிற்குத் தலைவராக விளங்கினர். இப்பாணர் குழுவும் உறவுமுறையைக் கொண்ட குழுச் சமூகமாகவே இருந்திருக்க வேண்டும்.
இசையை முதன்மையான தொழிலாகக் கொண்ட சமூகக் குழுக்களில் பொருநருடையதும் ஒன்று. இச்சமூகக் குழுவிலேயே, பாணருடையவை போன்றே, உட்பிரிவுகள் சொல்லப்படுகின்றன. பொருநரில் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர். பரணி பாடுவோர் என்று பல வகையினராக வகைப்படுத்தப் படுகின்றனர். பொருநராற்றுப் படையில் இடம்பெறுபவன் போர்க்களம் பாடும் பொருநன் என்றும், மேலும் இவன் தடாரி (உடுக்கை) என்னும் தோற் கருவியைக் கொட்டுபவனும் ஆவான் என்றும் கூறப்படுகிறது. அதாவது, தானே தடாரியை முழக்கி, அதன் இரட்டைத் தாளத்திற்கேற்பப் பாட்டிசைக்கக் கூடியவனாக அப்பொருநன் விளங்கினான் (பொருநர் 69-73). இவ்வாறு தனித்து இயங்கிய ஒவ்வொரு கலைக்குழுவும் ஒரு தனித்த குழுச்சமூகமாகத் திகழ்ந்தது என்பது நமது அனுமானமாகும். பாடினி, விறல்ஆகியோரும் அந்தந்தக் குழுவின் ஒருங்கிணைந்த, உறவுமுறைக்குள் அடங்கிய உறுப்பினராகவே இருந்திருக்க வேண்டும்.
பாணர் முதலிய கலைஞர்களின் அலைகுடிகள் அடிப்படையில், தத்தம் உணவுக்குத் தேவைப்படக்கூடிய தானியங்கள் முதலியவற்றைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளவோ விலங்குகளை இறைச்சிக்காக வேட்டை யாடவோ அறியாதவர்கள். பகுதி நேரமாகக் கூட அவர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டதாக இலக்கியத்தில் குறிப்புகள் இல்லை. தத்தம் கலைத்திறனை வெளிப்படுத்திக் காட்டி மேற்கொண்ட நிகழ்த்துதல்கள் மூலம் மன்னர், வள்ளல்களை மகிழ்வித்து அந்தச் சேவைக்குச் சன்மானமாக உணவு, உடை மற்றும் பரிசுப் பொருட்களைப் பெற்றுப் பசியாற்றி வாழ்க்கையை நடத்தும் அரசு நிறுவனச் சார்புநிலைக் குடியினராகவே பாணர் முதலியோர் காணப்படுகின்றனர். அம்மக்களின் சமூக ஒழுங்கமைப்பினைப் ‘பரிசில் வாழ்க்கை’ என்னும் தொடர்களால் விளங்கிக் கொள்ளமுடியும்.
தற்காலத்தில் ஆடல், பாடல், விலங்கு வித்தை உள்ளிட்ட கலை நிகழ்த்துதல்களை ஊர் ஊராகச் சென்று வீடுகள் தோறும் நிகழ்த்திக் காட்டிவிட்டு, அதற்குச் சன்மானமாகப் பழைய உடை, சோறு, அரிசி, காசு போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு, பிழைப்பு நடத்தும் நாடோடி இரவலர்கள் தமிழகத்தில் ஓரிரு நூற்றாண்டுக் காலத்திற்கு முன்பிருந்தே தொடர்ந்து வாழ்க்கை நடத்திவருகின்றனர். இந்நாடோடிகளின் குழுக்கள், குழுச் சமூகங்களாகவே உள்ளன. அவற்றுள் ஒரு சில நாடோடிக் குழுக்கள் கைவினைத் தொழிலில் ஈடுபடுகின்றன. உணவு உற்பத்தியில் ஈடுபடுபவை மிகவும் அரியனவாகவே உள்ளன. முழு நேரம் வேட்டைத் தொழிலில் ஈடுபடக்கூடியவை அல்ல. எனினும், குறைந்தபட்ச அளவில், பகுதி நேரமாகத் தூண்டில், வலை, ஈட்டி (சுளுக்கு) முதலிய வேட்டைக் கருவிகளின் மூலம் மீன், ஆமை, பறவைகள் மற்றும் நரி, முயல், கீரி உள்ளிட்ட சிலவகை விலங்கினம் போன்ற வற்றைப் பிடித்து அவற்றின் இறைச்சியை உணவாக்கிக் கொள்கின்றன. ஆனால், தமிழகத்திலுள்ள பலவகை நாடோடிக் குடிகளுக்கு வேட்டையாடுதல் மற்றும் உணவுப் பொருள்களைச் சேகரிப்பது என்பது முழு நேரத் தொழில் அல்ல; திருப்திகரமான அளவில் வேட்டையாடிய பொருட் களைக் கொண்டோ சேகரித்த இயற்கைப் பொருட்களைக் கொண்டோ அவை வாழ்க்கை நடத்துவது கிடையாது.
குருதி உறவு முறையால் பிணைக்கப்பட்ட குறைத்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டச் சமூகத்தினராகவே நாடோடிகள் உள்ளனர். அரசர், ஜமீன்தார். மிராசுதாரர் என்று செல்வந்தர்களை மட்டுமே தங்கள் முதன்மைப் புரவலர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர்களை நாடிச் செல்லும் வழக்கம் ஏதும் இம்மக்களிடம் இல்லை. எனினும் குறிப்பிட்ட ஊரின் மக்கள் என்ற ஒட்டு மொத்தத் திரள்தான் இந்நாடோடிகளின் புரவலாதரவாக அணுகப்பட்டிருக்கிறது. மேலும் ‘இவர்கள் தங்களுக்கு உணவுப் பொருட்களையோ சன்மானத்தையோ கட்டாயம் கொடுத்தாக வேண்டும்’ என்ற வரையறை எதுவும் இல்லை. ஆனால் ஒரு சில ‘நிலைகுடிச் சமூகத்தினர் தங்களுக்கு உணவுப் பொருட் களையும் பணத்தையும் கொடுத்து, புரவலர்களாக ஆதரவு தருவது இன்றியமையாதது’ என்பது போன்ற வரையறுக்கப் பட்ட புரவல் ஆதரவு பற்றிய “ஆவணம்” ஒன்று ‘வன்னிய சாதிப்பிள்ளை’ என்னும் அலைகுடிச் சமூகத்தினரிடம் உள்ளது. இங்கு ‘இரவலர்’ சமூகமும் ‘புரவலர்’ சமூகமும் அந்த எழுத்தாவணத்தின் அடிப்படையில் ஒரு மரபினை நடைமுறையில் பாதுகாத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது . (A.Dhananjayan, 2012: 40-42).
ஆனால், இங்கு ஒரு அம்சத்தினை மட்டும் ஒப்பிட்டு நோக்கலாம். ‘புரவலர் சமூகமான’ வன்னியர் சாதியினரின் புராண முன்னோரைப் போற்றிப் பாடும் வாய்மொழிப் பாடலை, மன்னர்களைப் போற்றும் சங்ககாலத் தனிநிலைப் பாடல்கள், ஆற்றுப்படை உள்ளிட்ட தொடர்நிலைப் பாடல்கள் (பத்துப் பாட்டு) ஆகியவற்றோடு ஒரு பகுதி அளவில் மட்டும் ஒப்பிட்டு நோக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.
தமிழக அலைகுடிகளின் வாழ்க்கை முறையினை ஒருவாறு உற்று நோக்கி அறிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், சங்ககால அலைகுடி மக்களான பாணர்கள் பற்றி அவ்வாறு அறிவதற்கு வாய்ப்பில்லை. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் ஆற்றுப்படை நூல்களும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவும் பாணர் முதலிய கலைஞர்கள் பற்றிப் பேசும் ஆதாரங்களாகும்.
ஆற்றுப்படை நூல்கள் பேசும் பாடுபொருளைக் கவனத்திற் கொள்ளும்போது, ஓர் உண்மை மிகவும் வெளிப்படையாகத் தோன்றுகிறது. அதாவது, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம்என்ற கூத்தராற்றுப்படை ஆகிய நூல்கள் முறையே பொருநர், பாணர் (சிறுபாணர், பெரும்பாணர்), கூத்தர் ஆகிய நிகழ்கலைக் கலைஞர்களின் சமூகக் குடிப்பெயர்களை முன்னொட்டாகக் கொண்டு, அவர்களே அந்நூல்களின் முகாமை மாந்தர்களாகத் திகழ்கின்றனர் எனக் கருதுமாறு நம்மைத் தூண்டுகின்றன. ஆனால், அந்நூல்களில் அவர்களுக்கு இரண்டாமிடமே கொடுக்கப் பட்டிருக்கிறதே அன்றி, முதன்மை இடம் இல்லை. பாணன் முதலிய கலைஞர்களுக்கு அவர்தம் வறுமை போக்கி ஆதரவு நல்கும் வள்ளல்களாகிய மன்னர்கள்தாம் அவ்விலக்கியப் படைப்புகளின் முகாமை மாந்தர்களாக இடம்பெறுகிறார்கள். மன்னர்களின் குடிச் சிறப்பு, ஆட்சித் திறன், எதிரிகளான ஏனைய மன்னர்களைப் போரில் புறமுதுகிடச் செய்து, சூடிய வெற்றிவாகைகள், நாட்டின் இயற்கைவளம் முதலிய சிறப்புகள், மன்னருடைய நாட்டெல்லைக்குள் வாழும் பலவகைக் குடிகள், அவர்தம் இயல்புகள், மன்னரின் கொடைத்திறம் என்று மன்னர்களைப் பற்றியே முதன்மை இடம் கொடுத்து ஆற்றுப்படை நூல்கள் சித்திரிக்கின்றன.
தமிழில் இலக்கிய மானிடவியல் – முனைவர் ஆ.தனஞ்செயன்
விலை: 80/-
Buy this book online: https://www.heritager.in/product/tamilil-ilakkiya-maanitviyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/