கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் :
நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களை ஆராயுங்கால் முற்காலத்தில் நிலவிய சில தமிழ் நூல்களின் பெயர்களும் அந்நூல்களை இயற்றிய புலவர்பெருமக்கள் செய்திகளும் வெளியாகின்றன. அவற்றையெல்லாம், ராவ்சாகிப் திருவாளர் மு.இராகவையங்காரவர்கள், சாசனத்தமிழ்க்கவிசரிதம் என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் வெளியிட்டுள்ளார்கள். அரசாங்கத்தார் அண்மையில் வெளியிட்ட கல்வெட்டிலா காவின் ஆண்டு அறிக்கைகளின் மூலம் அறியக்கிடக்கும் மூன்று தமிழ் நூல்களைப் பற்றிய செய்திகள், தமிழ் இலக்கிய வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்று கருதி, அவற்றை அடியிற் குறிக்கின்றேன்.
1. திருப்பாலைப்பந்தல் உலா :
திருப்பாலைப்பந்தல் என்பது தென்னார்க்காடு ஜில்லா திருக்கோவலூர்த் தாலூகா விலுள்ள ஓர் ஊர். அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது எல்லப்ப நயினார் என்னும் புலவர் பெருமானால் பாடப்பெற்றது இவ்வுலா என்பது அவ்வூர்க்கோயிற் கருப்ப இல்லின் தென்சுவரில் வரையப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டாற் புலப்படுகின்றது. (Inscription No. 401 of 1938). உலா இயற்றி அரங்கேற்றிய இவ்வாசிரியர்க்குக் கோயில் அதிகாரிகள் சில நிலங்களும் ஒரு மனையும் அளித்ததோடு இறைவர்க்குப் படைக்கப்பெறுந் திருவமுதில் ஒரு பகுதியை நாள்தோறும் வழங்கிவருமாறு செய்திருந்தமையும் அக் கல்வெட்டால் அறியப்படுகின்றது. அன்றியும், அக் கல்வெட்டு இவ்வாசிரியர் உண்ணாமுலை நயினார் என்பவருடைய புதல்வர் என்றும் காலிங்கராயர் என்ற பட்டமுடையவர் என்றும் கூறுகின்றது. இவர் இயற்றிய வேறு நூல்கள், திருவாரூர்க்கோவை (இக்கோவை, காலஞ்சென்ற மகாமகோபாத்தியாய – டாக்டர் ஐயரவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.), அருணாசல புராணம், திருவருணையந்தாதி என்பன. அன்றியும், வீரைக் கவிராசபண்டிதர் இயற்றிய சௌந்தரியலகரிக்குச் சிறந்ததோர் உரையும் இவர் எழுதியுள்ளனர். இவர் வடமொழியிலும் சிறந்த புலமையுடையவராயிருந்தனர் என்பது அவ்வுரையால் புலனாகின்றது. இவர் திருவண்ணாமலைக்கு மேற்கேயுள்ள தாழையூரினர் என்பதும் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதும் ஈண்டு அறியத்தக்கன.
2. இறைசைப்புராணம் :
இறைசை என்பது இந் நாளில் எலவானாசூர் என்னும் பெயருடன் தென்னார்க்காடு ஜில்லா திருக்கோவலூர் தாலுகாவில் உளது. அது முற்காலத்தில் இறையானரையூர் என்னும் பெயருடையதாயிருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் இயற்றியருளிய திருவிளையாடல்களைக் கூறும் தலபுராணமே இறைசைப்புராணமாகும். இந்நூலின் ஆசிரியர் திருமலை நயினார் சந்திரசேகரர் என்னும் புலவர் ஆவர். எனவே இவர் சந்திரசேகரர் என்ற இயற்பெயருடையவர் என்பதும் திருமலை நயினாருடைய புதல்வர் என்பதும் அறியக்கிடத்தல் காண்க. இவ்வாசிரியர் மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்த திருவண்ணாமலைச் சத்திய ஞானதரிசினிகளின் மாணவர். இவர் இறைசைப்புராணம் பாடி அரங்கேற்றியபோது, கோயில் அதிகாரிகள் இவருக்குச் சில நிலங்களும், ஆனந்த தாண்டவன் திருவீதியில் ஒரு மனையும் கி.பி. 1510 ஆம் ஆண்டில் அளித்துள்ளனர். இச்செய்திகளெல்லாம் எலவானாசூர்க்கோயில் முதற்பிரகாரம் மேலைச்சுவரில் வரையப்பட்டுள்ள ஒரு கல்வெட்டினால் நன்கு புலனாகின்றன (Ins.485 of 1938). இந் நூலாசிரியர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவர்.
3.ஓங்கு கோயிற்புராணம் :
இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள திருப்புத்தூரில் திருத்தளியாண்ட நாயனார் கோயிலில் எழுந்தருளியுள்ள ஓங்குகோயிலுறைவார் என்னுஞ் சிவபெருமான் புரிந்தருளிய திருவிளையாடல்களைக் கூறுவது இப்புராணமாகும். இது, திருவம்பலமுடையார் மறைஞானசம்பந்தர் என்னும் பெரியாரால் இயற்றப்பெற்றது. இவ்வாசிரியர் திருப்புத்தூரிலிருந்த சிறுமடம் என்னும் பெயருடைய ஒரு மடத்தில் வதிந்தவர்; மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர்; கி.பி. 1484ஆம் ஆண்டில் புராணம்பாடி அரங்கேற்றியவர். இவர் தம் நூலை அரங்கேற்றியபோது கோயிலதிகாரிகள், மேல் திருமங்கலம் என்ற மண்ணிமங்கலத்தில் இவருக்கும் ஐந்து மாநிலம் அளித்தனர் என்று தெரிகிறது. இச்செய்திகள், திருப்புத்தூர்க் கோயிற் கீழைப்பிரகாரத்திற் காணப்படும் ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பெற்றுள்ளன (Ins. 180 of 1936). இவ்வாசிரியர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவர்.
மேலே குறிப்பிட்ட திருப்பாலைப்பந்தல் உலா, இறைசைப் புராணம், ஓங்கு கோயிற்புராணம் என்னும் நூல்கள் இக்காலத்தில் உள்ளனவா என்பது
புலப்படவில்லை.
இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் – சதாசிவ பண்டாரத்தார்
விலை: 100/-
Buy this book online: https://www.heritager.in/product/ilakkiya-aaraaichchiyum-kalvettugalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/