மதுரை நாயக்க மன்னர் காலம் :
நாயக்க மன்னர்கள், மக்கள் பாராட்டும் வண்ணம் நல்லாட்சி செலுத்தினர். முடியாட்சி முறை நிலவியது. தந்தைக்குப் பின் மூத்தமகனே அரசாண்டான். அரியணைக்கு உரியவர் சிறியவனாக இருந்தால், அவனுடைய மிக நெருங்கிய உறவினர் ஆட்சிக் காப்பாளராக ஆட்சி புரிந்தார்.
மன்னருக்கு உதவியாக அமைச்சர் குழு இருந்தது. அரசு நிர்வாகத்தில் தளவாய் அனைத்திற்கும் அதிகாரியாக விளங்கினார். அமைச்சர் பதவியையும், படைத் தலைமைப் பதவியையும் தளவாய் ஏற்றார். நிதி அதிகாரியாக, பிரதானி தலைமை அதிகாரியாக இராயசம் போன்ற உயர் பதவிகள் இருந்தன. மன்னருக்கு அறிவுரை வழங்க ராஜகுருக்களும் இருந்தனர். இவர்கள் கருத்தை ஏற்று மன்னர்கள் தெய்வத் திருப்பணிகளில் ஈடுபட்டனர்.
மன்னர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய, குறைகளைப் போக்கினார்கள். மக்களும், மன்னருக்குக் காணிக்கை செலுத்தித் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். எந்த நேரத்திலும் மக்கள் மன்னரைச் சந்தித்துத் தங்கள் குறைகளை எடுத்துக் கூறி, அதற்கு உடனடியாகத் தீர்வு கண்டனர். கள்வர்களால் மக்களுக்கு தரப்பட்ட துன்பங்கள் துடைக்கப்பட்டு, நாட்டில் அமைதிக்கு மன்னர்கள் வழி வகுத்தனர். ராணுவ முறையுடன் காவல் முறையும் இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும், தலையாரிகள் என அழைக்கப்பட்ட காவல்காரர்கள் இருந்தனர். கிராம மக்களின் உடமைகளைப் பாதுகாப்பது அவருடைய முழு பொறுப்பாகும்.
மதுரை நாடு சில பெரிய மாநிலங்களா:கப் பிரிக்கப்பட்டு, இவை சீமைகள் என அழைக்கப்பட்டன. மாநில அதிகாரிகளுக்குக் கீழ் பெரிய பாளையபட்டுக்காரர்களும், அவர்களுக்கு, கீழ் சிறிய பாளையப்பட்டுக்காரர்களும் பணியாற்றினார்கள்.
நாட்டில் பாளையப்பட்டு முறை இருந்ததால், இது ஸ்தல ஆட்சி முறைக்கு வழி வகுத்தது. பாளையக்காரர்கள் தங்களுடைய பகுதிகளில் சிறப்பாகச் செயல்பாட்டு, நல்லாட்சியும் நல்ல நீதியும் அளித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டினர். தெலுங்கு பாளைய மன்னர்களும், தமிழக பாளைய மன்னர்களும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. பாளையக்காரர்கள் சிற்றரசர்கள் போல் வாழ்ந்து, மதுரை அரசுக்குக் கப்பம் செலுத்தி வந்ததுடன், மதுரை மன்னர்கள் பாளையக்காரர்களுக்குப் பட்டமும், பரிசும், கப்பத்தொகையில் விலக்கும் அளித்து வந்ததால் அவர்கள் மதுரை மன்னர்களிடம் விசுவாசமுடன், அன்பு பாராட்டினர்.
மதுரை நாயக்கரின் ஆட்சி வலுவோடு இருந்த வரையில் பாளையப்பட்டு முறை, திட்டமிட்டபடிச் செயல்பட்டு வந்தது. மதுரை மன்னர்களின் பலம் குறையத் தொடங்கியதும், பாளையக்காரர்களின் எண்ணிக்கையும் எழுபத்திரண்டையும் மீறி அதிகரித்தன. பாளையக்காரர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்தி, தங்கள் அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ள முற்பட்டதால், போட்டிகளும் பூசல்களும் உருவாயின. மதுரை நாயக்கர் மரபு கி.பி. 1736ல் முடிவடைந்ததும், தமிழகத்தின் அரசியல் நிலையும் முற்றும் மாறுபட்டது.
நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரை மீனாட்சி கோயிலும், ஸ்ரீரங்கம் கோயிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலும் முக்கிய கோயில்களாக விளங்கின. இத்துடன் இராமேஸ்வரம் கோயிலும், சிதம்பரம் கோயிலும் சிறப்புப்பெற்றன.
மதுரையில் தெப்பக்குளம் வெட்டியும், ராஜகோபுரங்களை எழுப்பியும், புது மண்டபங்களை ஏற்படுத்தியும் மதுரை நகரைக் கலைக் கூடமாக்கி விட்டனர். திருப்பணிகள் செய்து, கோயில் மண்டபங்களின் தூண்களிலும், சுவர்களிலும் தங்களுடைய உருவச்சிலைகளைக் கற்படிமமாக இடம் பெறச் செய்தனர். சிறந்த கலை நுணுக்கத்துடன் ஜீவன் உள்ளவைகளாகவும், உணர்ச்சிகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தும் வகையில் மிகப்பெரியனவாகவும், சிற்பங்களை அமைத்தனர். சில இடங்களில் அவர்களுடைய மனைவியர்கள், மற்றும் அரசு அதிகாரிகளின் உருவச் சிலைகளும் இடம் பெற்றன. கோயில் விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மிக நீண்ட நாள் – முப்பது நாள் திருவிழாவாகச் சித்திரைத் திருவிழாவை மிகச் சிறந்த முறையில் நடத்தினர். மதுரை நாயக்க மன்னர்களின் காலத்தில் தான் மதுரைவீரன் வழிபாடு தோன்றியது.
நாயக்க மன்னர்கள் வைணவர்களாக இருந்தாலும், சைவத்திற்கும், வைணவத்திற்கும் பெரும் தொண்டாற்றினார்கள். சமயத்தின் பால் அவர்கள் சகிப்புத்தன்மை காட்டியதால், கிறித்துவத்துடன் முஸ்லீம் சமயமும் வளர்ச்சி பெற்றன.
நாயக்க மன்னர்கள், விவசாயத்திற்கு முதலிடம் கொடுத்தனர். கிணறுகள் தோண்டப்பட்டன. அணைகள் கட்டப்பட்டன. நீர்ப்பாசனம் முதலிடம் பெற்றது. சாலையோரங்களில் மரங்கள் நடப்பட்டன. அன்னச்சத்திரங்களை ஏற்படுத்தி, அன்னதானம் நடைபெற்றது. தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டன. தொழில் வளர்ச்சி கண்டது. நெசவுத் தொழிலுக்கு முக்கிய இடம் அளித்தனர்.
சட்டத்தின் முன் அனைவரும் ஒன்று என்ற நியதி இருந்தாலும், பார்ப்பனருக்கு ஒரு நீதி என்றும், மற்றவர்களுக்கு ஒரு நீதி என்றும் காணும் குறை இருந்தது. ஜான்நியுஹாப் எழுதியுள்ள குறிப்பால், தலைநகரில் நீதிமன்றம், சிற்றூர்களில் நீதி மன்றங்கள் இருந்தன எனவும் ஒவ்வொரு கிராமத்திலும், பொதுமக்களால் நன்கு மதிக்கப்பட்ட இருவர் நடுவராக இருந்தனர் எனவும் அறியமுடிகிறது.
நாயக்க மன்னர்கள் குற்றவாளிக்குச் சிறைத் தண்டனை அளித்தனர்; யானையின் காலில் மிதிக்கவிட்டனர்; சித்திரவதை செய்தனர்; அங்கங்களை வெட்டும் தண்டனையும், மலை உச்சியிலிருந்து உருட்டி விடும் தண்டனையும் அளித்தனர்.
தங்கள் தாய்மொழியான தெலுங்கு மொழியுடன், தமிழ், வடமொழிப் புலவர்களை ஆதரித்தனர். இவர்கள் காலத்தில் சமஸ்கிருத நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. தெலுங்கு மொழி நூல்களும் வெளியிடப்பட்டன. குமரகுருபரசுவாமிகள், திரிகூடராசப்பக் கவிராயர், சுப்பிரதீபக்கவிராயர், அதிவீரராமபாண்டியன், தாயுமானவர், நீலகண்டதீட்சதர் போன்ற மாபெரும் கவிஞர்கள், நாயக்க மன்னர்களால் போற்றப்பட்டனர். இவர்கள் காலத்தில் குமரகுருபரரின் ‘மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்’, மீனாட்சி அம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், கந்தர்கலி வெண்பாவும், சுப்பிரதீபக்கவிராயரின் ‘கூளப்ப நாயக்கன் காதல், நூலும் திரிகூடராசப் பக்கவிராயரின்’ குற்றாலக்குறவஞ்சியும், அதிவீரராம பாண்டியனின் ‘நைடதமும், பரண்கோட்டு முனிவரின் திருவிளையாடல் புராணம் போன்ற தமிழ் நூல்கள் தோன்றின. ராஜகுரு நீலகண்ட தீட்சிதரின் “ஆனந்த சாகரசிவம்” என்ற சமஸ்கிருத நூலும் வெளிவந்தன.
மதுரை நாயக்க மன்னர்கள் காலத்தில், நாயக்கர்களே அதிகமாகத் தமிழகத்தில் குடியேறினார்கள். பெரும்பாலான பாளையக்காரர்கள் நாயக்கர்களாகவே இருந்தனர். சிறுபான்மை கன்னடர்களும் தமிழர்களும் இருந்தனர். காவிரிக்கரையிலும், வைகைக்கரையிலும் வாழ்ந்த குடும்பங்கள், கோதாவரி, கிருஷ்ணா நதிக்கரைகளிலும் அதே போன்று கோதாவரி, கிருஷ்ணா நதிக்கரைகளிலும் வாழ்ந்து வந்த குடும்பங்கள், காவிரிக்கரையிலும், வைகை கரையிலும் குடியேறினர்.
இவர்கள் காலத்தில் தங்களுக்குத் துணிகள் நூதனமாக நெசவு செய்ய நாயக்க மன்னர்களால் குடியேறியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள், பட்டு நூல்காரர்கள் என்று அழைக்கப்படும் சௌராஷ்டிரர்கள் ஆவார்கள். பட்டு நூல் நெசவுத் தொழிலை மேற்கொண்டிருந்த இவர்கள் திருமலை நாயக்கர் காலத்தில் மதுரையில் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.மன்னர் மரணமுற்ற போது, அவருடைய மனைவியர்கள் அவருடன் உடன்கட்டை ஏறினர். உயர்குடி மக்களும், தங்கள் கணவர் இறந்தும், அவர்கள் மனைவியரும் உடன்கட்டை யேறினர்.
அரேபியா போன்ற வெளிநாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தனர். அந்நாடுகளிலிருந்து குதிரைகள் இறக்குமதி -செய்தனர். உணவுப்பொருள்களும், வாசனைத் திரவியங்களும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
மதுரை நாயக்கர் ஆட்சியில் கடற்கரை முற்றிலும் போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஏகபோக உரிமை வாய்த்த வேட்டைக்களங்களாய் விட்டன.
பாலாறு முதல் தாமிரபரணி வரை பரவியிருந்த தெலுங்கர்கள், தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்து, நகமும், சதையும் போல, பிரிக்க முடியாத நிலையில் வாழ்ந்தனர்.(நூலிலிருந்து.)
தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு – எத்திராஜ்
விலை:160/-
வெளியீடு: ராமையா பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/tamilka-naaykka-minnarkalin-varalaru/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers