இன்று இரப்பர், நெகிழி எந்தெந்த இடங்களில் எல்லாம் பயன்படுகிறதோ அந்த இடங்களில் தோலால் செய்யப்பட்ட பொருட்கள் இருந்தன. காலனியக் காலத் துவக்கம்வரை ஆட்டு தோலில் பைகளை தைத்து தொலைவிடங்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்லப்பட்டது. தென்னிந்தியாவில் இடைக்காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டுவரை எல்லாவித தோல் பைகளையும், தோல் பொருட்களையும் செய்யும் மக்களாக சக்கிலியர்கள் விளங்கினர். அது பெரும் வருவாயை அவர்களுக்கு வழங்கியது. பலர் வணிகர்களாகம் பெரும் பணக்காரர்களாகவும் விளங்கினர். பின்பு ஏற்பட்ட தொழில் புரட்சி மற்றும் இரப்பர் உற்பத்தி பெருக்கத்திற்கு பிறகு தோல் உற்பத்தி தொழிலில் ஈடுபட்ட சக்கலியர்களின் வாழ்வு அடியோடு ஒடுங்கியது.
“தமிழ்க் கல்வெட்டுகள் புலப்படுகின்ற வணிகக் குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள்” என்ற நூலில் சக்கிலியர் என்போரில் தோல் வணிகத் தொழில் செய்த வணிகர்கள் இருந்துள்ளனர் என்பது குறிக்கப்படுகிறது. மூன்றாம் குலோதுங்கன் காலத்தில் இறைவனை சிறப்பு தரிசனம் செய்ய இவர்களுக்கு உரிமை இருந்துள்ளது.