இராசபாளையம் – தோற்றமும் விரிவாக்கமும்
‘பாளையம்’ என்பது ‘கண்டோன்மென்ட்’ என்னும் ஆங்கிலச் சொல்லை உணர்த்துவது. அதாவது படைகள் முகாமிட்ட இடம். ஒவ்வொரு பாளையமும் அதனை உருவாக்கியவர் பெயரில் அமைவது வழக்கம். மதுரையின் அடையாளமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பிரமாண்ட உருவச் சிலை அமைந்துள்ள கோரிப்பாளையம் கோரி முகமது பெயரில் அழைக்கப்படுகிறது.
குண்டூர் மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்த ராஜுக்கள் முகாமிட்ட பாளையம் இராஜபாளையம் ஆனது. பாண்டிய நாட்டில் சதா சச்சரவுக் குழப்பங்கள் எழுந்து கொண்டிருந்த காலம். கி. பி. 1404 – 1558. கலகங்களை அடக்குவதற்குத் தெலுங்கு சேனைத் தலைவர்களை அனுப்புமாறு தெலுங்கு கவர்னர்கள் வற்புறுத்தினர். அதன்படி அனுப்பிவைக்கப்பட்ட படைத் தலைவர்களும் படையினரும் முகாமிட்ட இடம் ‘பாளையம்’ (cantonment)
இராசபாளையத்தின் தோற்றம் கி.பி 1565 என்று கருதப்படுகிறது. The castes and Tribes of Southern India -‘தென்னிந்தியாவின் சாதிகளும் ‘இனக்குழுக்களும்’ என்கிற நூலின் ஆசிரியர் தர்ஸ்டன் ‘இராசபாளையத்தை நிறுவியவர்கள் ராஜுக்களே என்கிறார்.
கி. பி. 1558- தெலுங்கு கவர்னர்கள் ஆட்சி முடிவு பெறுகிறது. கி. பி 1559 – விசுவநாத நாயக்கன் ஆட்சி மதுரையில் ஆரம்பம். அமைச்சராக இருந்தவர் தளவாய் அரியநாதமுதலியார்.
மன்னரின் அவையில் ஒரு முறை, இராசபாளையம் பகுதியில் கலகக்காரர்களின் கொட்டம் அடங்கிய பாடில்லை. அங்கு அதிகப்படியான வீரர்களை அனுப்பிவைக்க வேண்டும்என அமைச்சர் அரியநாதர் கோரியதிலிருந்து ஏற்கெனவே இப்பகுதியில் பாளையம் ஓன்று இருந்ததாக உறுதிப்படுகிறது. ராஜூ இனத்தைச் சார்ந்த ஒருவரின் தலைமையில் உருவான போர் வீரர்களின் பாசறை என்பது இராசபாளையம் ஆனது.
இந்தத் திசைக்காவலர்கள் நாளடைவில் அந்தந்தப் பகுதியின் தலைவர்கள் ஆயினர். இவர்களே பாளையக்காரர்கள் எனவும், பின்னர் ஜமீன்தார்கள் எனவும் ஆனாலும், திசைக் காவலர்கள் அனைவருமே பாளையக்காரர்களாக ஆகிவிடவில்லை. உதாரணமாக, பாளையக்காரர் பட்டியலில் பாஞ்சாலங்குறிச்சி சேர்க்கப்படவில்லை. பாண்டிய நாட்டில் விசுவநாத நாயக்கன் காலத்தில் உருவாக்கப் பட்ட பாளையங்கள் 72. இவற்றுள் மறவர் பாளையங்கள் 16. தெலுங்குப் பாளையங்கள் 51.
ராஜுக்கள் தொடர்பான பூர்வ தகவல்கள் பெரும்பாலும் கர்ண பரம்பரைச் செய்திகள். தம்பிராஜா என்பவரின் காலத்துக்குப் பிற்பட்ட செய்திகள் நம்பகத் தன்மை கொண்டவை. மதுரை நாயக்கர் கால வரவாறு ஓரளவு கோர்வைப் படுத்தப் பட்டிருப்பதால் மதுரை அரசைச் சார்ந்து நிலை பெற்ற ராஜுக்கள் குடியேற்றத் தகவல் வரலாற்றுத்தன்மை வாய்த்ததே.
இராசபாளையம் என்னும் ஊரைத் தோற்றுவித்தோர் ராஜுக்களில் பூசப்பாடி பிரிவைச் சேர்ந்தவர்கள். இன்றைய விஜயநகர சமஸ்தானம் கி.பி. 1713 வரை பூசப்பாடி எஸ்டேட் என அழைக்கப்பட்டது என்கிறார்கள். பூசப்பாடி எஸ்டேட் போல ஆந்திராவில் பல எஸ்டேட்கள் இருந்தன. கொட்டி முக்கலூர், எர்ர கொண்டல் போலப் பல எஸ்டேட்கள் வீட்டுப் பெயர்கள் ஆயின. இவர்களின் வாழ்விடம் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், துங்கபத்ரா நதிப்பகுதியாக இருந்தது.
பூசப்பாடி எஸ்டேட்டின் தலைவர் அப்பாள்ராஜா. இவருடைய பின் சந்ததியினர் விபரத்தில் தெளிவில்லை. தம்பிராஜா என்பவரின் காலத்தில் தங்களின் இருப்பிடத்தைப்பூசப்பாடியினர் விசாகபட்டினம் பகுதிக்கு மாற்றினர். கிருஷ்ணா மாவட்டத்தில் பூசப்பாடி என்னும் கிராமத் தலைவராக கி.பி. 1446-ல் இருந்த அப்பாள்ராஜா தன் கிராமத்தின் பெயரை வம்சத்தின் பெயராகவும் ஆக்கினார்.
தம்பிராஜாவின் சிறிய பாட்டனாரே இராசபாளையம் வந்ததாகக் கருதப்படும் முதல் ராஜூ. இவருடைய பெயர் கிருஷ்ணமராஜா. அழைக்கப்பட்ட பெயர் சின்னராஜா. தம்பிராஜாவின் பாட்டனாரின் காலத்தில் பூசப்பாடி எஸ்டேட் சாதாரண நிலையில் இருந்துள்ளது. இராசபாளையம் வந்த முதல் ராஜுவின் வம்சாவளிக் குறிப்புகள் பூசப்பாடி வம்சச் சந்ததியினர் வசமுள்ளது.
இராசபாளையம் வந்த ராஜூ குலத்தவரின் குடும்ப வம்சாவளிப் பட்டியலில் தம்பிராஜா என்ற குறிப்பும், விஜயநகர சமஸ்தானம் என்ற குறிப்பும் காணப்படுகிறது. தம்பிராஜாவின் பேரன் விஜயராம கஜபதி ராஜா கி.பி.1700-ல் பூசப்பாடி எஸ்டேட்டின் தலைவரானார். இவர் கி.பி. 1713-ல் பூசப்பாடி எஸ்டேட் என்பதை விஜயநகர சமஸ்தானம் என்று மாற்றினார்.
இராசபாளையத்துக்கு வந்த முதல் ராஜூ கிருஷ்ணமராஜா எனப்பட்ட சின்னராஜா, இராசகுலராமன் கிராமத்தில் வசித்தபோது, வேட்டையாடிக் கொண்டே இப்போதைய பழையபாளையம் பகுதிக்கு வந்தபோது அவருடைய வேட்டைநாய்களை முயலொன்று எதிர்த்ததாம். நம்மைப் போன்றோர் வசிப்பதற்கு ஏற்ற பூமியிது என்கிற முடிவுக்கு சின்னராஜா வந்ததாக தர்ஸ்டன் தன் நூலில் கூறுகிறார்.
இனிமேல் ஓடமுடியாது என்கிற நிலை வந்ததும் முயலானது தனது பலவீனத்தை உதறித்தள்ளிவிட்டு வேட்டை நாயை எதிர்த்து நிற்கும், இத்தகைய துணிவான போராட்டத்தை ஆங்கிலத்தில் ‘Standing at Bay’ என்பார்கள்.
தென்னகத்தின் வீரமிகு நெற்கட்டான் செவ்வல் மாவீரன் பாளையக்காரனான பூலித்தேவன் (1715-1767) தன் கோட்டையைக் கட்டுவதற்கும்; கட்டபொம்மனின் (1760-1799)பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கட்டுமானத்திலும் வேட்டை நாயை முயல் எதிர்த்த இடமென்கிற ‘உன்னதமாக்கல்’ புனையப்படுகிறது.
விஜயநகர சமஸ்தானத்தின் முன்னோர் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்னும் கருத்தும் உண்டு. இராசபாளையத்தை உருவாக்கிய பூசப்பாடி முன்னோருடன் பல்வேறு எஸ்டேட்டுகளில் இருந்தும் வந்த ராஜுக்கள், ஆந்திர நாட்டின் அரசியல் நிகழ்வுகளால் புலம் பெயர்ந்து குடியேறிய பகுதியே, பழையபாளையம்.
(தென் அழகாபுரி என்கிற ஊர் இங்கிருந்ததாக 400 ஆண்டுகளுக்கு முந்தைய குருசாமி கோவில் தல வரலாறு கூறுவதும் கவனிக்கத்தக்கது)
ஆந்திரர்களைப் பெரும் கலவரத்தில் ஆழ்த்திய தலைக்கோட்டைச் சண்டை (1565)தென்பாண்டி மண்ணில் அவர்களைக் குடியேறச் செய்தது. முன்னமே குடியேறிய ராஜுக்கள் வம்சாவளியுடன் பிற எஸ்டேட் ராஜுக்களும் புலம் பெயர்ந்து வந்தனர். 27 வீட்டுப்பெயர்களால் (ஆந்திராவில் இன்றைக்கும் இருக்கும் கிராமங்கள்) அழைக்கப்படும் இந்த இனக்குழு ஏககாலத்தில் இராசபாளையம் வந்துவிடவில்லை. ஆந்திராவிலிருந்து பற்பல ஊர்களில் தங்கியிருந்த பின்பே இங்கு வந்து சேர்ந்தனர்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதிகள் என ராஜுக்கள் செயல்பட்டனர். இராசபாளைய முன்னோடியாகக் கருதப்படும் சின்னராஜாவுக்கு நான்கு மகன்கள். ஒருவர் பெயர் தெரியவில்லை. ஏனைய மூவர் அப்பாள்ராஜா சின்னையராஜா – கோபால்ராஜா.
இன்றைய பழைய பாளையத்தின் பெரும்பகுதி இனாம் சாசனத்தின் நிலப்பரப்பாகும், மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் (1662-1682) ராஜூ இனத் தளபதிகளுக்கு இனாம் சாசனம் வழங்கினார் முப்பத்தாறு ஆண்டுகளாக இவர்கள் நாயக்க மன்னர்கள் படையில் பணியாற்றியமைக்காக இந்த இனாம்சாசனம் வழங்கப்பட்டுள்ளது. 1901-ஆம் வருட சென்சஸ் அறிக்கை ராஜுக்களைப் போர் வீரர் மரபினர் என்கிறது. போர்த்தொழிலிலிருந்து ராஜுக்கள் ஓய்வுபெறும் தருணத்தில் சின்னையராஜாவின் சந்ததியினருக்கு இந்தச் சாசனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
சின்னையராஜாவின் நான்கு மகன்களில் கோபால் ராஜாவுக்கு வாரிசுகள் இல்லை. தங்கள் மூதாதையர்கள் காலத்தில் பெறப்பட்ட இனாம் பிரதேசத்தை பூபால்ராஜா, கிருஷ்ணமராஜா, சோமராஜா ஆகிய மூவரும் தங்களுக்குள் தனித்தனியாகப் பிரித்துக்கொண்டனர்.
பூபால்ராஜா பெற்றுக் கொண்ட பகுதியே இன்றைய பூபால்ராஜாபட்டி, கிருஷ்ணமராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியே இன்றைய கிருஷ்ணமராஜபாளையம். சோமராஜா பிரித்துக் கொண்ட பகுதி இன்று வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சோமையாபுரம்.
புகைவண்டி நிலையம் இன்றைக்கு அமைந்துள்ள இடம் ஒரு புதரடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்தது.
அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு மேற்புறத்தில் பட்டியலினத்தவர் வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் வன்னிகுளம் என்கிற கண்மாய்ப் பகுதி. வன்னிகுளத்தின் தென்பகுதியே இன்று நாம் பயன்படுத்தும் முடங்கியாறுச் சாலை.
பட்டியலின இனத்தவர் இன்று வாழும் ஆனூர் பகுதி ஆதியில் ஆனையூர்.
இப்போது நடைபெறும் சந்தைக்கு மேற்புறம் தெற்கு நோக்கிச் செல்லும் ஓடையில் தான் வன்னிகுளத்தின் மதகுத் தண்ணீர் வயற்காடுகளுக்குப் பாய்ந்தது.
நாம் காணும் மடத்துப்பட்டி முழுவதுமே ஒரு காலத்தில் வயற்- காட்டுப்பகுதி. மடத்துப்பட்டிப் பகுதிகளை இன்றைக்கும் வயற்காட்டுப்பட்டி என அழைப்போர் உண்டு.அரசினரின் பழைய நிலஆவணங்களிலும் இப்பெயரே காணப்படுகிறது.
வயற்காட்டுப்பட்டியில் திருவாவடுதுறை ஆதீன மடம் கட்டிய பிறகு வயல்வெளிகளிலெல்லாம் வீடுகள் பல்கிப் பெருகி அப்பகுதி மடத்துப்பட்டி ஆனது.
திருமலை நாயக்கர் காலத்தில் ஆண்டாள் கோயிலின் தலைமைக் கணக்கர் சம்பந்தம் பிள்ளைக்குத் தொழுநோய் பீடித்தது. வைத்தியத்திலும் சோதிடத்திலும் வல்ல மலையாள தந்திரி ஒருவர் விஷ்ணு தோசம் அவருக்கு இருப்பதாகச் சொல்லி அதற்கான பரிகாரமாக விஷ்ணு கோயில் ஒன்றையும், பார்ப்பனர்களுக்கான அக்ரஹாரம் ஒன்றையும் அமைத்துத் தருமாறு தெரிவித்தார். பரிகாரச் செலவுக்கான மான்யத்தைத் திருமலைநாயக்கரே வழங்கினார். சம்பந்தம்பிள்ளை கட்டிக் கொடுத்ததே சம்பந்தம் பிள்ளையின் பெயரால் சம்பந்தபுரம் அக்ரகாரம். இதன் மேலைக்கோடியில் அவர் கட்டித் தந்த கோயிலே சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்.
மாயூரநாதர் கோவிலுக்குத் தன் செல்வத்தை எழுதிவைத்த வள்ளல் அழகுத் தேவரின் தம்பிமார்கள் மாயாண்டித் தேவர். கொத்தாள கருப்புசாமித் தேவர் ஆகியோர் இசுலாம் மார்க்கத்தைத் தழுவி கல்பாணி ராவுத்தர் வகையறாக்களுடன் சம்பந்தம் வைத்துக்கொண்டபிறகு அப்பகுதி சம்பந்த புரம் என அழைக்கப்பட்டதாகப் பிறிதொரு கூற்று. திருவில்லிபுத்தூரில் வாழ்ந்த பிராமணக் குலத்தினர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத் திருநாளை ஒருநாள் நடத்துவதற்காக நாயக்க மன்னர் வழங்கிய மானியமே இங்குள்ள செட்டிகுளம் கிராமம். இன்றைய ஆவரம்பட்டியின் வடபாகம் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்ததே. இதன் இன்னொரு பெயர் தானப்பஅய்யன்பட்டி.
இராசபாளையம் உருவாகிப் பல்லாண்டுகளுக்குப் பிறகு ‘புதுப்பாளையம்’ தோன்றிய பிறகு ஏற்கெனவே இருந்த பழைய ஊர் ‘பழைய பாளையம்’ என்றானது.
புதுப்பாளையம் கிராமம் கிரையமாக வாங்கப்பட்டது. 1704-1731 காலகட்டத்தில் மதுரை மன்னராக இருந்த விஜயரெங்க சொக்கநாதரிடம் பெறப்பட்ட கிரைய சாசனம் தமிழிலும், மன்னரின் கையொப்பம் தெலுங்கிலும் காணப்படுகிறதாம். புதுப்பாளையம் பிராந்தியத்தைக் கிரயமாகப் பெற்றவர் கொட்டி முக்கலூர் துரை திம்மராஜா. இன்றைக்கு வருவாய்த் துறை ஆவணப்பிரகாரம் புதுப்பாளையம் கிராமம் முழுவதும் உள்ள புதுப்பாளையம் கிரையச் சாசன எல்லைகள். ஒட்டுமொத்தப் பிரதேசத்தின் கிரையம் 440 பொன்னாகும். (ஒரு பொன்னின் மதிப்பு ரூ 2-1-4 -க்குச் சமம்.)
புதுப்பாளையத்தைக் கிரயமாகப் பெற்ற கொட்டிமுக்கலூர் மரபினர், ஆதியிலிருந்தே மிகுந்த செல்வாக்கையும், பிறரின் மதிப்பையும் ஈட்டியவர்கள் என்கிறார் தர்ஸ்டன். இந்த மரபினரில் பலர் கவிஞர்கள். முத்தலுராஜு ஒரு சிறந்த தெலுங்குக் கவிஞர். கிருஷ்ணமராஜா என்பவரால் தசாவதாரம், சீதா கல்யாணம், சாவித்திரி, பாரிஜாத பஹரணம் முதலிய தெலுங்குக் காவியங்கள் படைக்கப்பட்டன.
துரை திம்மராஜாவுக்கு 3 மகன்கள் சிங்கராஜா – குமார ராஜா – முத்துராஜா. துரைலட்சுமி என்ற ஒரே மகள். அவருக்குப் பூசப்பாடிப் பிரிவில் திருமணமானது.
துரை திம்மராஜா சக்கம்மாள் தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டபடி தன் மகளுக்குப் பிறந்த மகவுக்குச் சக்கராஜா என்று பெயரிட்டார். தாம் கிரையம் பெற்ற புதுப்பாளையத்தின் வடக்குப்பகுதியை மகளுக்குச் சீதனமாகத் தந்தார். அதுவே சக்கராஜாக் கோட்டை.
ஒரு மகனான சிங்கராஜாவின் பெயரில் அமைந்தது புதுப்பாளையத்தின் தென்பகுதியான சிங்கராஜாக் கோட்டை.
போர் வீரர்கள் தாங்கள் வசித்த பகுதிகளைச் சுற்றி மண்ணாலான கோட்டை கட்டியதாக வம்சாவளிக் குறிப்பு கூறுகிறது. கொல்லங்கொண்டான், சேத்தூர், சிவகிரி, திருவில்லிபுத்தூர் கோட்டைகளும் மண்கோட்டைகள் தாம்.இந்த மண் கோட்டையை வைத்துக்கொண்டு தான் மனக்கோட்டையைக் கட்டினானா கட்டபொம்மன்?’ என்பது வீரபாண்டியக் கட்ட பொம்மன் திரைப்பட வசனம்
இராசபாளையத்தில் புகழ் பெற்ற 400 ஆண்டு காலக் குருசாமி கோவில் தலவரலாறு அப்பகுதியைத் ‘தென் அழகாபுரி’ எனக் குறிப்பிடுவது போல; திருநெல்வேலி சாலையிலுள்ள கருங்குளம் பகுதி 900 ஆண்டுகளுக்கு முன் ‘சாதவாசக நல்லூர்’ எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது இராசபாளையம் பகுதிக் குழப்பங்களை வெகுவாக அடக்கிய முத்து வீரப்ப நாயக்கர் தன் ஆட்சிக்காலத்தில் (1609-1623)இராசபாளையத்தின் மீது கனிவான பார்வை கொண்டிருந்தார். பொதுவாகவே நாயக்க மன்னர்களுக்கும் இத்நகர் மீதான பார்வை அனுசரணையாகவே இருந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டு நெடுகிலும் இராசபாளையம் அருகிலிருந்த கொல்லங்கொண்டான், சேத்தூர், சிவகிரி, பாளையங்களில் போர்ச்சூழல் நிலவியதால் அமைதியை விரும்பிய அம்மக்கள் இராசபாளையத்தில் குடியேறினர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஊர் பெரிதானது.
ஆதியில் புதுப்பாளையமும், பழையபாளையமும் தனித்தனிக் கிராமங்கள். இடையிலிருந்தது காட்டுப்பகுதி. இவ்விரு கிராமங்களில் முதன் முதலாகத் தோன்றிய கடைத்தெருக்கள் மதுரைராஜா கடைவீதியும் பெரிய கடைத் தெருவும். இப்போது சந்தைப் பஜாரில் காணப்படும் மக்கள் சந்தடி பெரிய கடைத் தெருவில் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் நகர் விரிவானது. வடக்கு எல்லையிலிருந்து தெற்கு எல்லை வரையிலான 4 கி.மீ.தொலைவு நெடுகிலும் சங்கிலித் தொடராகக் கட்டிடங்கள் எழுந்தன.
1940 அக்டோபர் முதல் இராசபாளையம் நகராட்சியானது. காலிமனைகள், கட்டடங்கள் ஆயின. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்னும் நிலையும் எழாமல் இல்லை. கூட்டுறவுக்கோட்பாட்டின் அடிப்படையில் வசதியானவர்களுக்கான வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு குமாரசாமி ராஜா நகர் என்னும் பெயர் சூட்டப்பட்டது. இப்பகுதியின் கீழ்ப் புறத்தில் ஆலைத் தொழிலாளர்கட்கான வீடுகள் பாரதிநகர் என்னும் பெயரில் உருவானது.
1946ஆம் ஆண்டு எம். இராமசாமி, ஏ.சி.எஸ். ஆறுமுகம் ஆகியோர் முனைப்பில் இராசபாளையத்தின் இரண்டாவது பெரிய நூற்பாலையான சண்முகர் மில்ஸ் தொடங்கிய பிறகு நகரின் கீழ்ப் பகுதியில் குடியிருப்புகள் பெருகின.(நூலிலிருந்து)
இராசபாளையம் வரலாற்றை மீண்டும் எழுதுதல் – இரா. நரேந்திரகுமார்
வெளியீடு: காவ்யா பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/iraasapalaiyam-varalaarrai-mendum-eluthuthal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers