திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வரை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தின் நவீனத்துவமும், ‘உலக வியாபார வழக்கும்’ (3718), சைவ மடங்களின் கடாட்சமும், ஜமீன் மற்றும் சமஸ்தானங்களின் சன்மானங்களும், பிரிட்டிஷ் துரைத்தனத்தின் கெடுபிடிகளும், கவிராயர் வித்துவான் புலவர் பிரசங்கி ஆகியோரின் நச்சரிப்பும் தீண்டாத கிராமப்புறத்தில் இராமலிங்கர் தமது சன்மார்க்கப் பணிகளைச் செய்து வந்தார். அவ்வாறு ஒதுங்கி வாழ்ந்தாலும், அவரது எண்ணங்களும், சிந்தனைகளும், கருத்தாக்கங்களும் ஒதுங்கியவையாக இல்லை; இவற்றிற்கு சுமார் ஆயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உண்டு. திருமூலரின் ‘திருமந்திரம்’, மணிவாசகரின் ‘திருவாசகம்’, அப்பர் சம்பந்தர் சுந்தரரின் ‘தேவாரம்’, சேக்கிழாரின் ‘பெரிய புராணம்’ மற்றும் பரஞ்சோதியாரின் ‘திருவிளையாடற் புராணம்’ முதலிய மூல சைவ சாத்திர, தோத்திர நூல்களையும், சைவ சித்தாந்த சாத்திர நூல்களையும், பிறகு அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர் பாடிய பாடல்களையும், இவைதவிர தமிழ் இலக்கண நூல்கள், யாப்பு அணி நூல்கள் முதலானவற்றையும் இராமலிங்கர் நன்றாகக் கற்று அவற்றின் சாராம்சங்களை உள்வாங்கியவர். அவர் ஓதாது உணர்ந்தாரோ அல்லது பிறர் ஓத உணர்ந்தாரோ தெரியாது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எந்தத் தமிழ் வித்துவானுக்கும் குறைந்தவராக அவர் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
இராமலிங்கர் வாழையடி வாழையாக வந்த சைவ அடியார்களின் மரபில் முகிழ்த்தவர்தான். ஆனால் சற்று வித்தியாசமாக முகிழ்த்தவர்; அந்த மரபில் சிறந்த பக்தராகவும் சித்தராகவும் முகிழ்த்தவர். சன்மார்க்கக் கொள்கையில் மிகுந்த தீவிரத்தோடு செயல்பட்டவர். தொடக்கத்தில் எந்தச் சைவ சமயத்தையும், வேதத்தையும், ஆகமத்தையும், கோயில் வழிபாட்டையும், புராண – இதிகாசங்களையும், சிரமேற் கொண்டு போற்றினாரோ அவற்றை 1869-க்குப் பிறகு தூக்கி எறிந்தார்.அவற்றைப் பொய் என்றார். இது பற்றிய ஆய்வு இப்போது வேண்டாம். இங்கே, அவரது கருத்துருவாக்கத்தின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ளுவதற்கு, முன்சொன்ன மூலவர்களின் முக்கிய கருத்துக்களையும், அவற்றின் தாக்கங்களையும் இந்த அதிகாரத்தில் சுருக்கமாகக் காணலாம்.
இராமலிங்கர், இறைவனைச் சோதியாகவும், கருணையாகவும், வெளியாகவும் வழிபட்டது, சாதிமத சமய விகற்பங்களை வெறுத்தது. உடலைப் பேணி யோகநெறியில் நிற்கச் சொன்னது, இறைவனின் அருளுக்காக ஏங்கிய அவரது ஆன்ம உருக்கம், வேத ஆகம, வேதாந்த சித்தாந்த சமரசம் கண்டது, இறுதியில் இவற்றை நிராகரித்தது. ஏகான்மவாதத்தை மறுத்தது, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முதன்மைப் படுத்தியது, செத்தாரைப் புதைக்கச் சொன்னது போன்ற பல்வேறு கருத்துக்களில் ஒரு நீண்ட நெடிய தொடர்ச்சி இருக்கிறது. அந்தத் தொடர்ச்சியை அறிந்து கொண்டால், எவ்வாறு இராமலிங்கர் இந்தத் தொடர்வரிசையில் வந்தார் என்பதையும், கடைசியில் ஏன் வரிசையை உடைத்துப் புதிய தடத்தை உண்டாக்கினார் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிகாரத் தலைப்பு ‘திருமூலர் முதல் சி.இராமலிங்கர் வரை என்றிருந்தாலும், இராமலிங்கரின் பரிணாம வளர்ச்சியில் முதலில் அவர் சைவ சமயத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் என்பதால், இந்த விதத்தில் அவரிடம் பாதிப்பை ஏற்படுத்திய வாதவூரர் என்ற மாணிக்கவாசகரின் திருவாசகத்தை முதலில் எடுத்துக் கொள்ளலாம். எனவே,திருமூலர் முதல் இராமலிங்கர் வரை உள்ளவர்கள் கால வரிசைப்படி இங்குப் பார்க்கப்படவில்லை என்பதை மனதிற் கொண்டால் போதும்.
முதலில் மாணிக்கவாசகரிலிருந்து தொடங்கி, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் வரையுள்ள அடியார்களின் தனித்தன்மைகளைக் கவனித்து, இவற்றோடு இராமலிங்கரின் பாடல்களில் காணப்படும் கருத்துக்களின் ஒற்றுமைகளைக் காணலாம். அடுத்ததாக, இவர்கள் அனைவருடைய படைப்புக்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்படும் விசயங்கள் இராமலிங்கர் பாடல்களில் வெளிப்படும் விதத்தைக் காணலாம். இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தமிழ் இலக்கிய மரபில் தொடர்ந்து ஒருசில கருத்துக்களும், சொற்களும், தொடர்களும், உவமைகளும், பாணிகளும், காலந்தோறும் அடியார்களின் பாடல்களில் சம்பிரதாயமாக மீண்டும் மீண்டும் இடம்பெற்றுவந்துள்ளன. நவீன காலத்தில் ஒரு நூலுக்கு ஒரு ஆசிரியரை முழுப் பொறுப்பாக்கி, அதில் எழுதப்பட்டவை அனைத்துக்கும் அவரையே காரணகர்த்தாவாக ஆக்குவதைப் போல, மரபான செய்யுள் இலக்கியங்களைப் பார்க்கவியலாது. எல்லாமட்டங்களிலும் அவை யவற்றுக்கென்று ‘மாறாத’ ஆசாரங்களும், நியமங்களும் பின்பற்றப்பட்டுக் கறாராக நடைமுறைப்படுத்தப்பட்ட அக்காலத்தில் தனிப்பட்ட ஆசிரியரின் சொந்தப் பங்களிப்பும் இடம்பெற்று வந்தன.
கோயில், சிற்பம், விக்கிரகம், மருத்துவம், வழிபாடு தோத்திரப் பாடல், காவியம், இலக்கணம் – முதலான எல்லாமே குறிப்பிட்ட ஆசாரங்கள் – விதிகள் நியமங்கள் – சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக்கொண்டே இயற்றப்பட்டன. எந்த ஆசிரியனானாலும் தன் சொந்த அனுபவங்களை மேற்படி சம்பிரதாயங்கள் பிசகாமல் வெளிப்படுத்தக் கடமைப்பட்டவன். இதனால் ஒரு சில விசயங்கள் சம்பிரதாயமாக எல்லோருடைய படைப்புக்களிலும் இடம்பெறலாயின. இருந்த போதிலும், காலப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களினால் – குறிப்பாகப் பல்வேறு சம்பிரதாயங்களின் கலப்புக்களாலும், புதியன வந்து தாக்குவதாலும் மேற்படி சம்பிரதாயங் களோடு கூடக் கருத்துக்களும் மிதமாகவோ அன்றித் தீவிரமாகவோ மாற்றமடைந்தும் வந்துள்ளன. இராமலிங்கரின் பாடல்களில் இந்த மாற்றத்தை நன்கு அவதானிக்கலாம்.(நூலிலிருந்து)
கண்மூடி வழக்கம் எல்லாம் மண் மூடிப் போக…! சி.இராமலிங்கம் (1823-1874) – ராஜ் கௌதமன்
விலை:180/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/kanmoodi-vazhakkam-ellaam-man-moodipoga-c-ramalingam-1823-1874/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers