“நெல்லை” என்று செல்லமாக அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் இன்று தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நெல்லை மாவட்டம் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கொண்ட மிக அழகிய மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். இந்த மாவட்டம் ஒரு காலத்தில் ‘திருநெல்வேலிச் சீமை’ என அழைக்கப்பட்டது. பாண்டியர்கள் பிரதானமாய் வாழ்ந்த இரண்டாம் பெரும் தலைநகரமாக விளங்கியது. சுருக்கமாக. இந்தத் திருநெல்வேலி நகரம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக சுவாரஸ்யமான வரலாற்று பின்னணியைக் கொண்டது.
திருநெல்வேலியின் தோற்றமும் அதன் பரிமாணமும் :
திருநெல்வேலி என்று சொன்னதும் பலருக்கும் நினைவுக்கு வந்து போவது ‘அல்வா’ (சுவைகளில்) தான். ஆனால் அந்த அல்வாவை உருவாக்கியவர் திருநெல்வேலிக்காரர் (லாலா என்று சொல்லப்படும் பஞ்சாப் இனத்தவர்) இல்லை என்பது வேறு ஒரு கதையாகும். திருநெல்வேலி என்றதும் ஏலே அண்ணாசி என்ற வழக்காற்றால் பின்னப்பட்டு கிடந்தாலும் சுதந்திரப் போராட்ட வீர வரலாற்றால் வீரம் விளைந்த மண் என்ற பெருமையுடனும் பேசிக் கொள்ளும் அளவிற்கு ஏராளமான விசயங்கள் உள்ள போதும் திருநெல்வேலி என்ற தனித்த பெயருடனான புகழ் என்று கூறுவதை விட ஒரு சமுதாயத்திற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட அடையாளங்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். பல்வேறு இனம் மதம் மொழி கடந்த நிலையில் வாழ்ந்த மனிதர்களின் கூட்டு வாழ்வாகவும் இஃது அமைந்துள்ளது. திருநெல்வேலி எப்போதும் பழமையும் பெருமையும் வாய்ந்த நீண்ட வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட தேசமாகவே (தேசம் என்பது எனது கருத்தல்ல) அங்கலாய்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் தற்போது 37 மாவட்டங்கள் உள்ளன. இதில் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி தனது சுயத்தன்மையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி சுருங்கி வந்துள்ளது. தற்போது திருநெல்வேலி என்பது நெல்லை பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், திசையன்விளை, இராதாபுரம் போன்ற வட்டங்களுடன் வரையறைக்குள் உட்பட்டதாக தகுதிச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய திருநெல்வேலி இதுவல்ல, பரந்த மிகப்பெரியதாக தமிழரின் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல், பாலை என்பவை கொண்டதாக இருந்துள்ளது என்பதைக் கூறியாக வேண்டும். அவ்வாறான திருநெல்வேலி தோற்றம் குறித்தும் அதன் பரிமாணம் குறித்தும் நுணுகி ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.
திருநெல்வேலி சீமை உருவாக்கம் :
தென்பாண்டி சீமையான திருநெல்வேலிச் சீமை தோற்றம் என்பது காலத்தின் விளைவால் தோன்றியது என்பதை விட அரசியல் விளைவால் (இன்றுள்ளதைப் போல) அன்றும் தேவை கருதியே தோன்றியது என்று கூற வேண்டும். தமிழ் நிலத்தினை சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குட்பட்டதாக கருதிக் கொண்ட மக்களிடம் தென் பகுதியைத் தனியாகப் பிரித்து ஒரு அரசாங்கம்போல ஆட்சி அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். பெருங் கொண்ட பேரரசின்கீழ் இருந்த அரசை தனித்த ஆட்சி அமைப்பாக உருவாக்குவதை அன்றைய மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர். பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்ட மதுரை தலைநகரம் மட்டுமின்றி மதுரைக்கு தென் பகுதிகளும் இவர்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்துள்ளது.(தென் பகுதியில் தென் திருவிதாங்கூர் ஆட்சிச் செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து) 16ஆம் நூற்றாண்டு காலங்களில் பாண்டியரின் வம்ச வழியினர் மற்றும் நிர்வாக அமைப்பினர் போன்றோரால் திறமையற்ற ஆட்சி, குழப்பமான சூழ்நிலைகலவரம் என்பதாகவே இருந்துள்ளது. இதை வரலாறு பறைசாற்றுகிறது.
தென் பாண்டிச் சீமை என்றாலே அது திருநெல்வேலிச் சீமையைத் தான் சொல்லுகிறார்கள் என்பதாகப் பொருள் கொள்ளும் அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது. திருநெல்வேலித் தோற்றம் என்பது அன்றைய அரசின் வரி வசூல் செய்து கொள்ள வரையறை செய்து கொள்ளப்பட்டதின் விளைவால் உருவாக்கம் பெற்றது.இதனை “ஏறக்குறைய கி.பி.1744இல் ஆர்க்காட்டு நவாபுவின் ஆட்சியின் கீழிருந்த நாடுகளுடன் மதுரை நாடும் அதைச் சார்ந்த மாவட்டங்களின் பகுதிகளும் சேர்க்கப்பட்டன. அதன் பின்பே திருநெல்வேலி மாவட்டம் முதற்கண் வரியீட்டுச் செயல்களுக்காக மட்டும் மதுரையினின்றும் வேறான தனி மாவட்டமாகக் கருதப்பட்டது” என்று கேலம் பிஷப் கால்டுவெல் குறிப்பிடுகிறார் என்று திருநெல்வேலிச் சரித்திரத்தை மொழிபெயர்த்த ந.சஞ்சீவி கூறுகிறார்.
மேலே கண்ட மேற்கோளில் அடிப்படையில் ஆர்க்காட்டு நவாப் ஆட்சியின் கீழ் பாண்டியரின் ஆட்சிப் பகுதி மாறியுள்ளது. இதை தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. காரணம் அன்றைய குழப்பமான பாண்டியரின் ஆட்சி அமைப்பாகக் கொள்ளலாம். தனி மாவட்டம் என்ற சொல்லைத் தவிர்த்து சீமை என்றே அழைக்கின்றனர். சீமை என்பது தேசம் என்று பொருள் தரும் அளவில் உள்ளது. எல்லா ஆட்சியாளர்களும் தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களை தனித்த நாடாக அங்கீகரித்து வாழ்ந்து உள்ளனர். சீமை எனும் தெலுங்குச் சொல்லை தமிழர்கள் எப்படி தங்களுக்கானதாக வடித்துக் கொள்ளமுடிந்தது என்று பார்ப்போமானால் 15ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டியர் பகுதிகளில் கலவரத்தையும் குழப்பத்தையும் சரி செய்ய வந்த கன்னடியர் (நாயுடு)களால் தமிழ்ச் சமூகத்தோடு இரண்டறக் கலந்து உள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதியை திருநெல்வேலி உதயமான தினமாக அரசு கொண்டாடுகிறது. அதாவது கி.பி.1744 செப்டம்பர் 1ஆம் தேதி அன்று திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு தோன்றியது என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இன்று இருக்கும் திருநெல்வேலி அல்ல. அன்றைய திருநெல்வேலிச் சீமை திருநெல்வேலி, தூத்துக்குடி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளதை உணர வேண்டும்.
திருநெல்வேலி பெயர்க் காரணம் :
திருநெல்வேலியை ஆங்கிலேய அரசு TN NEVELLY என்றே உச்சரிக்கின்றனர். இன்று இதற்கான கல்வெட்டைப் பார்ப்போமானால் நெல்லை நகரத்துக்குள் வரும் பகுதியான பார்வதி (பார்வதி திரையரங்கு இன்று கல்யாண மண்டபமாக மாறி விட்டது.
திருநெல்வேலி பெயர் வரக் காரணத்தைக் கூறும்போது நெல்லையப்பர் கோவிலின் புரோகிதர் வேதபட்டர் கதையும் ஊடுபொருளாக வந்து நிற்பதை யாரும் ஏன்? எவரும் தவிர்க்க முடியாது உள்ளது. இந்த வேதபட்டர் எனும் சிவனடியார் யாசகம் பெற்றே இறைவனுக்கு திருவமுதம் படைத்து வந்துள்ளதாகவும் அவ்வாறு ஒரு நாள் திருவமுதம் படைப்பதற்கான நெல்லை காயப்போட்டு சென்றதாகவும் அச்சமயம் மழை வந்ததாகவும் நெல்லை அள்ளாத குறையுடன் ஓடி வந்ததாகவும் வந்து பார்க்க நெல்லைச் சுற்றி மழை பெய்ததாகவும் நெல்லைக் காத்ததனால் வேணுவன நாதனாக இருந்து நெல்லையப்பர் ஆனதாகவும் கூறப்படுகிறது. நெல்லை வேலி போல காத்ததனால் நெல்வேலியாகி திருநெல்வேலியானதாகக் கூறுகின்றனர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன் வேதபட்டர் என்றும் குருகுஹதாஸப்பிள்ளை வேதசன்மர் என்றும் கூறுகின்றனர்.
இவ்வாறான கட்டுக்கதை பிற்காலத்தில் உருவாகி இருக்கலாம். உண்மையைத் திரித்து செய்யும் ஹிந்துத்துவ வேலை இங்கே நடந்துள்ளதாக யூகிக்க முடிகிறது. திருநெல்வேலியைச் சுற்றி நெல்வயற்காடு வேலி போல செழித்து வளர்ந்து சுற்றி இருந்ததால் திருநெல்வேலி ஆனதாகக் கூறலாம். மேலும் திருநெல்வேலிப் பகுதியில் நெல் வயற்காடு அதிகம் என்பதைக் கூறிக்கொள்ள வேண்டும். திருநெல்வேலி என்ற பெயரை திருஞானசம்பந்தர் தனது திருநெல்வேலி பதிகத்தில்,
“திருநெல்வேலி யுறை செல்வர் தாமே”
“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலியாக”
என்ற பதிவு மூலம் திருஞானசம்பந்தர் காலத்தில் திருநெல்வேலி என்ற பெயர் வழங்கப்பட்டு வந்துள்ளதை உணர முடிகிறது. திருநெல்வேலி என்பது காரணப் பெயர் தான் என்றாலும் இதற்கு முன் என்ன பெயரில் அழைத்து இருந்தனர். இதனை “நெல்வேலி நெல்லையம்பலம் நெல்லூர் சால்வேலி சாலிவாடி சாலிநகர் என்ற பெயர்களில் குறிப்பிடலாயிற்று” என்பார். மூங்கில் காடுகளால் ஆனதால் வேணுவனம் என்றும் அழைத்துள்ளனர். அதனால் வேணுவன நாதன் என்ற பெயர் நெல்லையப்பருக்கு உண்டு. வேணு என்னும் வடமொழிச் சொல்லுக்கு மூங்கில் என்ற பொருள். இந்த வடமொழிச் சொல் திருநெல்வேலி என்ற தமிழ்ச்சொல்லுக்கு முன் வழக்கில் இருந்திருக்குமா?மேலும் இந்நகரத்தை ‘பிரம்ம விருத்தபுரம் தாருகாவனம்’ என்றும் அழைத்தும் உள்ளனர். திருநெல்வேலிக்கு “செப்பறை’ என்றோர் மறுபெயர் காணப்படலால் அம்பலங்கள் ஐந்தினுள் செப்பறை யென்றதனை நெல்லையம்பலம் எனக் கூறலுமுண்டாம்” என்றும் அழைத்துள்ளதாக கூறுகின்றனர். அம்பலங்கள் என்பது கோவிலாகும்.
நெல்லையப்பர் கோவில் கோபுரம் கி.பி. 1606 லும் காந்திமதி கோவில் கோபுரம் 1626லும் உருவாகியுள்ளது. இக்கோபுரம் உருவாகுவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தேரோட்டம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு சில புத்தகங்கள் உள்ளன. “இம்மண்ணின் வரலாற்றை ஸ்டூவர்ட் (1876) கால்டுவெல் (1881) பேட் (1917) ஆகியோர் எழுதிய வரலாற்று நூல்கள் மட்டுமல்லாமல் எட்டயபுரம் குருகுகதாச பிள்ளை (1936) எழுதிய ‘திருநெல்வேலிச் சீமை சரித்திரம்’ கணபதியா பிள்ளையின் ETTAYAPURAM PASTAND PRESENT அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ச.கணபதி ராமனின் ‘பொருநை நாடு’ சோமலெயின் ‘திருநெல்வேலி மாவட்டம்’ போன்ற பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன’ என்கிறார் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். இவை மட்டுமின்றி அப்பணசாமி, முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோரும் திருநெல்வேலி பற்றி எழுதியுள்ளனர்.
திருநெல்வேலி பரிமாணம் :
திருநெல்வேலிச் சீமையிலிருந்து விருதுநகர், சாத்தூர், வில்லிபுத்தூர் என்பன வெவ்வேறு காலக்கட்டங்களில் பிரிந்தன. தூத்துக்குடி 1986யில் செப்டம்பர் மாதத்தில் பிரிந்தது.
1956இல் கேரள மாநிலத்திலிருந்து செங்கோட்டைப் பகுதி இம்மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது’ ‘2019 நவம்பர் மாதத்தில் தென்காசியை மையமாக வைத்து தென்காசி மாவட்டம் தற்போது உருவாக்கியுள்ளனர்.’ இலங்கையில் திருநெல்வேலி என்ற பகுதியும் தாமிரபரணி பெயரும் இடம் பெற்றுள்ளது.
காலமும் காலத்திற்கான சூழலுமே ஒரு அரசாங்கத்தை வழி நடத்துகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களை நிர்ணயிக் கின்றனர். எது எவ்வாறாக இருந்தாலும் திருநெல்வேலி பரப்பு தனித் தன்மையுடன் விளங்குகிறது.கொடுந்தமிழுடன் பேசும் மக்களுக்குள் எப்போதும் தான் திருநெல்வேலிக்காரன் என்ற பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது. (நூலிலிருந்து)
வரலாற்றில் திருநெல்வேலி- பூர்ணா
விலை: 375/-
வெளியீடு: NCBH
Buy this book online: https://www.heritager.in/product/varalaatril-thirunelveeli/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers