தொல் திராவிட மொழி குடும்பம் கண்டுபிடிப்பு

தொல் திராவிட மொழி குடும்பம் கண்டுபிடிப்பு

மொழிக் குடும்பங்கள்:

உலகில் பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. அவை பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க மொழிக் குடும்பம் முதலியன அவை மொழிகட் கிடையே உள்ள பல்வேறு ஒற்றுமைகளைக் கருதிக் குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்திலிருந்து வங்காளம் வரையும் உள்ள மொழிகளுள் பெரும்பாலான இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனலாம். ஐரோப்பாவில் தலைமை தாங்கும் கிரேக்கம் – இலத்தின்-இவற்றினின்றும் பிறந்த – பிரிந்த – திரிந்த மொழிகள் ஆகியவையும், வட இந்தியாவில் தலைமை தாங்கும் சமசுகிருதம் இதினின்றும் பிறந்த – பிரிந்த – திரிந்த மொழிகள் ஆகியவையும் இந்தோ-ஐரோப்பிய – மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.

திராவிடக் குடும்பம் :

இவ்வாறு பல குடும்ப மொழிகளைப் பற்றியும் கூறலாம். இனி, இந்நூலில் விதந்து எடுத்துக் கொண்ட திராவிட மொழிக் குடும்ப மொழிகளைப் பற்றிமட்டும் ஆராயலாம். தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகள் திராவிட மொழிகள் எனப்படுகின்றன. திராவிடம் என்ற பெயர் பற்றிய ஆராய்ச்சி இங்கே தேவையில்லை. இந்தப் பெயர், எப்படியோ, இந்தியாவின் நாட்டுப் பண்ணாகிய “ஜன கண மன” என்று தொடங்கும் பாடலிலும் இடம் பெற்று விட்டது. ‘தெக்கணமும் அதில் சிறந்ததிராவிட நல் திருநாடும் எனப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியப் பாடவிலும் இடம் பெற்றுள்ளது. உலக மொழியாராய்ச்சியாளர்களாலும் இந்தப் பெயர் ஆளப்படுகிறது. இந்த அளவோடு இது பற்றிய செய்தியை நிறுத்திக் கொள்ளலாம். அடுத்து, திராவிடமொழிகளை நோக்கிப் பயணம் தொடங்கலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழ் நாட்டில் வந்து தங்கிய ‘கால்டுவெல்’ (Caldwell) என்னும் ஆங்கில அறிஞர் தென்னிந்திய மொழிகளைக் கற்றார். அம்மொழிகட் கிடையே உள்ள இலக்கண ஒப்புமைகளை ஆய்ந்து பதினைந்து ஆண்டுகாலம் உழைத்து, ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’ Congantive nmmar of Dravidian Languages) என்னும் அரிய நூலை 7856 ஆம் ஆண்டு படைத்தளித்தார். இவரது முயற்சி, திராவிட மொழிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்க்கு ஊக்கம் ஊட்டியது. இம்மொழிகளின் தொடர்பு பற்றிய எண்ணமும் எழுந்தது. இந்தத் திராவிட மொழிகள் வருமாறு:-தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகம், துடவர் மொழி, கோடர் மொழி, கோண்டு, கூ, குருக், படகா, கதபா, இருளா, கொலாமி, குறவா, மால்தோ, கோயா, நயிக்காடி, நாக்கிபோடி, கவர், மாலர், உராவன், பிராகுயி, பார்ஜி முதலியன திராவிட மொழிகளாகும். இவற்றுள் பிராகுயி மொழி தமிழ் நாட்டுக்கு வடமேற்கே உள்ள பலுச்சித்தானத்தில் வழங்குவதாகும். இதைக் கொண்டும், சிந்துவெளி அகழ்வாராய்ச்சியைக் கொண்டும், இந்தியா முழுதும் ஒரு காலத்தில் திராவிட மொழிகளே இடம்பெற்றிருந்தன; ஆரியம் வந்ததும் அவை தெற்கே தள்ளப்பட்டு ஒதுங்கின – என்றெல்லாம் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர்.

தொல் திராவிடம்:

இந்தத் திராவிட மொழிகட்கெல்லாம் தலைமைத் தாய்மொழி – தலைமை முதல் மொழி – அதாவது, தொல் திராவிட மொழி ஒன்று இருந்ததாகவும், அதிலிருந்தே இந்தத் திராவிட மொழிகள் பிறந்ததாகவும் – பிரிந்ததாகவும், அந்த தொல் திராவிட முதன்மைத் தாய்மொழி அழிந்து விட்டதாகவும் இப்போது கிடைக்கவில்லை என்பதாகவும், மொழியியலார் சிலர் அல்லது பலர் கூறுகின்றனர். அந்தத் தொல் திராவிட மொழி எங்கே போயிற்று? அதில் பாதியைக் காக்கை தூக்கிக் கொண்டு போய் விட்டதா? மீதிப் பாதியை எலி இழுத்துக் கொண்டு போய்விட்டதா? எங்கே எவ்வாறு போயிற்று? அந்தத் தொல் திராவிட மொழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

இலத்தீன்:

ஐரோப்பாவில் வழங்கப்பெறும் இத்தாலியன், பிரெஞ்சு, – ஸ்பானிஷ், போர்த்துகீசியம். ருமேனியன் முதலிய மொழிகள், ரோமன் மொழி எனப்படும் இலத்தீனின் சிதைவு மொழிகளே அதனால் இம் மொழிகளை ‘ரோமன்சு” (Romance) எனல் மரபு அமெரிக்கக் கண்டத்தில் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசியம் ஆகிய மொழிகள் வழங்கப்படும் அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, குவாட்ட மாலா முதலிய இருபது நாடுகள் அடங்கிய பகுதி ‘இலத்தீன் அமெரிக்க’ எனப் பெயர் வழங்கப் படுவதை ஈண்டு நினைவில் கொள்ள வேண்டும். மற்றும், இலத்தீனிலிருந்து இத்தனை மொழிகள் பிறந்தோ -பிரிந்தோட -திரிந்தோ தோன்றியும், இலத்தீன் மொழி அழியாமல் இன்றும் இருப்பதை எண்ணத்தில் நிறுத்த வேண்டும்.

சமசுகிருதம்:

இதேபோல, வட இந்தியாவில் சமசுகிருதத்திலிருந்து பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளும் இப்போது வழங்கிப் பெறும் பல வட இந்திய மொழிகளும் பிறந்தோ பிரிந்தோ திரிந்தோ தோன்றியும், சமசுகிருத மொழி அழியாமல் இன்றும் இருப்பதையும் ஈண்டு நினைவு கூற வேண்டும்.

பல மொழிகட்கு முதன்மைத் தாய்மொழிகளாகிய இலத்தீனும் சமசுகிருதமும் அழியாமல் இன்றும் இருக்கும் போது, திராவிட மொழிகளின் முதன்மைத் தாய்மொழி எனக் கற்பனை செய்யப்படும் தொல்திராவிட மொழி மட்டும் எவ்வாறு அழிந்து போயிருக்கக் கூடும்? அந்தத் தொல் திராவிட மொழி இன்றும் இருக்கிறது. ஆனால் இலத்தீனும் சமசுகிருதமும் பேச்சு வழக்கில் இல்லாமல் எழுத்து வழக்கில் மட்டும் உள்ளன. தொல் திராவிட மொழியோ, பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு ஆகிய இரண்டிலும் உள்ளது என்னும் உண்மையை, தெளிவு பெறாத மொழியியலார் சிலருக்குத் தெளிவு படுத்த வேண்டும் இந்த இலக்கை அடைவதற்காக, பெருவாரியாக வழங்கப்பெறும் திராவிட மொழிகளைப் பற்றிச் சிறு குறிப்புகள் தரவேண்டும். எனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளைப் பற்றிய சிறு குறிப்புகள் பின் வருமாறு:தமிழ்:

தொடக்கக் காலம் தெரியாத மிகவும் பழைய மொழி தமிழ் மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இலக்கிய இலக்கண வளம் உடைய தமிழ். இப்போது கிடைத்திருக்கும் நூல்களுள் பழமையானது தொல்காப்பியம். இதன் ஆசிரியர் தொல்காப்பியர் இவர், தமக்கு முன்பே பலர் நூல்கள் எழுதியுள்ளார்கள் எனப் பலவிடங்களில் கூறியுள்ளார். இந்நூல் கி.மு.500 அல்லது கி.மு. 1000 ஆண்டுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. பிறமொழிச் சொற்கள் கலக்காமல், குறிப்பாக வடமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதக்கூடிய வளம் உடைய மொழி தமிழ். இது மேன்மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.

தெலுங்கு:

தெலுங்கு மொழி ஆந்திராவில் வழங்கப்படுகின்றது. ஆந்திரா என்பது மொழியைக் குறிக்காது; நாட்டையே குறிக்கும். மொழியின் பெயர் தெலுங்கு என்பதே இதற்குத் தெனுகு, தெலுகு என்னும் வேறு பெயர்களும் உண்டு. தெற்கேயிருந்து வந்தது தெனுகு என்றும், தெளிவுடையது தெலுகு என்றும் ஒரு வகைப் பெயர்க் காரண விளக்கம் கூறப்படுகிறது.

தெலுங்கில் சமசுகிருதச் சொற்களும் அதன் திரிபான பிராகிருதச் சொற்களும் மிக்குள்ளன. சமசுகிருதச் சொற்கள் சிறிதும் மாறுபடாமல் தற்சமச் சொற்களாகத் தெலுங்கில் கலந்து வழங்கப்படுகின்றன. ஆரியா வர்த்தத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் தெலுங்கு நாடு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சமசுகிருதத்திலிருந்து தெலுங்கு வந்ததாகக் கூறுவாரும் உளர்.

தெலுங்கின் முதல் இலக்கண நூல், கேதனர் என்பவர் கி.பி. 1260 ஆம் ஆண்டில் இயற்றிய ‘ஆந்திரபாஷா பூஷணம்’ என்பது ஆந்திரபாஷா என்பது மொழியின் பெயர் அன்று; ஆந்திரத்தில் உள்ள மொழி என இதற்குப் பொருள் கொள்ள வேண்டுமாம். இந்த நூல், கன்னட மொழியில் உள்ள ‘கரு நாடக பாஷா பூஷணம்’ என்னும் இலக்கண நூலைத் தழுவியதாம். தெலுங்கின் இறுதி இலக்கண நூல்; பிரவஸ்து சின்னய சூரி’ என்பவர் கி.பி. 1260 ஆம் ஆண்டில் இயற்றிய ‘பால வியாகரணம்’ என்பது.

தெலுங்கின் முதல் இலக்கிய நூல், நன்னய பட்டர் என்பவர், கி.பி. 1050 ஆம் ஆண்டு, சமசுகிருத மகா பாரத நூலின் மூன்றுபருவங்களைத் தெலுங்கில் மொழி பெயர்த்த பாரத நூலாகும். அடுத்த பழைய இலக்கியம், நன்னி சோடர் என்பவர் கி.பி. 1120 ஆம் ஆண்டில் இயற்றிய ‘குமார சம்பவம்’ என்னும் புராணக் கதை நூலாகும் சமசுகிருதம் கலந்த தெலுங்கு மொழியின் இரங்கத் தக்க நிலை இது.

கன்னடம்:

இது கருநாடக மாநிலத்தில் பேசப்படுவது. இப்போது வழங்கும் கன்னட மொழி அமைப்புக்கு முன் இருந்த அமைப்பு ‘பழங்கன்னடம்’ எனப்படுகிறது. பழங் கன்னடம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையது. பழங் கன்னடத்தில் எ,ஒ,ழ,ற,ன என்னும் எழுத்துக்கள் தமிழில் உள்ளாங்கு இருந்தன. புதுக்கன்னடத்தில் ‘ற’ என்பது ‘ர’ ஆகவும். ‘ழ’ என்பது ‘ள’ ஆகவும் ஒலிக்கப்படுகின்றன. கன்னடத்தில் உள்ள முதல் இலக்கண நூல் ‘கவிராஜ மார்க்கம்’ என்பது. இது கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதன் ஆசிரியர் இராட்டிர கூட மன்னரான ‘நிருப துங்க’ அமோகவர்ஷன் (814 – 877) என்பவர் என்று சிலரும், இவரது அவைக்களப் புலவர் என்று சிலரும் கூறுகின்றனர். நூலின் பெயரும் அரசர் பெயரும் வடமொழியாயிருப்பது காண்க. திராவிட மொழி ஒன்றின் நிலை இது. இந்த வேந்தரே மிகுதியான வடமொழிக் கலப்பைப் பழித்துள்ளார். கன்னட மொழியில் சொற்களின் இறுதியில் மெய்யெழுத்து இராது. தமிழுக்கும் கன்னடத்திற்கும் உள்ள சிறு சிறு ஒலி வேறுபாட்டைப் பிறகு காணலாம்.

மலையாளம்:

தமிழ் நாட்டின் முப்பெரும் பிரிவுகளாகிய சேர நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு என்பவற்றுள் ஒன்றாகிய சேர நாடு என்பதே இப்போதுள்ள கேரள நாடு எனப்படும் மலையாளமாகும். மதம், இனம், அரசியல், பண்பாடு, முதலியவை தொடர்பான வேற்றுக் கலப்பினால், சேர நாட்டிற்கும் மற்ற தமிழ்ப் பகுதிக்கும் இடையேயும், சேரநாட்டுத் தமிழுக்கும் மற்ற பகுதித் தமிழுக்கும் இடையேயும் நாளடைவில் வேற்றுமை தோன்றலாயிற்று. இரு பகுதிகட்கும் இடையே நீண்டு படுத்துக் கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், வேறுபாடு உண்டாக்கியதில் பங்கு உண்டு.

இடத்தின் பெயர் மலையாளம். எனவே, பண்டு சேர நாட்டுத்தமிழ், மலை நாட்டுத் தமிழ்-மலையாளத் தமிழ் – மலையாண்மை என்னும் பெயர்களால் வழங்கப்பட்டது. கி.பி.14ஆம் நூற்றாண்டளவில், மலை நாட்டுத் தமிழ் இப்போதுள்ள மலையாளம் ஆயிற்று. வடமொழி எழுத்துக்களும் சொற்களும் சேர்க்கப்பட்டன.

கி.பி.9 ஆம் நூற்றாண்டிற்கும் 14 ஆம் நூற்றாண்டிற்கும் இடையே பல மாறுதல்கள் நிகழ்ந்தன. மலையாளத் தமிழும் பிற பகுதித் தமிழும் கலந்த நடை ‘மிசிர பாஷை’ எனப்பட்டது; இதைப் பார்ப்பனர் அல்லாதார் பேசினர். மலையாளத் தமிழும் சமசுகிருதமும் கலந்த நடை ‘மணிப் பிரவாளம்’ எனப்பட்டது; இதனைக் கோயில் பூசனை செய்பவரும் உயர்ந்த வகுப்பினர் என்று சொல்லிக் கொள்பவரு மாகிய ‘நம்பூதிரி’ என்னும் இனத்தினர் பேசி வந்தனர். 16 ஆம் நூற்றாண்டளவில், மேற் கூறப்பெற்றுள்ள இரண்டு நடைகளும் கலக்கவே, இப்போதுள்ள மலையாள மொழி உருவாயிற்று. இது ஏறக் குறைய மாறாமல் இன்றளவும் நீடித்து நிற்கிறது.

கி.பி. 12 – 13 ஆம் நூற்றாண்டளவில் சீராமன் என்பவர் ‘இராம சரிதம்’ என்னும் நூல் இயற்றினார். இதில் யுத்த காண்டம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் கலப்பு நடையில் சில பாடல்களும் சிறுசிறு நூல்களும் இயற்றப் பெற்றன. 15 ஆம் நூற்றாண்டில் செறுசேரி என்பவர், ‘கிருஷ்ண காதா’ என்னும் நூல் இயற்றினார். 16 ஆம் நூற்றாண்டினர் எனக் கருதப் பெறும் ‘துஞ்சத்து எழுத்தச்சன்’ என்பவர் ‘அத்தியாத்தும இராமாயணம்’, ‘பாரதம்’ முதலிய நூல்கள் இயற்றினார். மலையாள மொழியை ஒருமுகப்படுத்தி நிலைபெறச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இதனால் இவர் மலையாள மொழிக்கு 14 ஆம் நூற்றாண்டில் ‘லீல திலகம்’ என்னும் இலக்கண நூல் சமசுகிருதமொழியில் இயற்றப் பெற்றது வியப்பிற்கு உரியது. வழிகாட்டி (Guide) நூலாக, ஒரு மொழிக்கு இன்னொரு மொழியில் இலக்கணம் எழுதுவதே இயல்பு.

துளுவம்:

துளுவம் என்னும் துளு மொழி, கருநாடக மாநிலத்தில் -தென் கன்னடம் என்னும் மாவட்டத்தில் உள்ள துளு நாடு என்னும் வட்டாரத்தில் பேசப் படுகிறது. இதைப் பேசுவோர் தொகை மிகக் குறைவே, இந்த மொழிக்கு எனத் தனி எழுத்து இல்லை. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு வரை இது மலையாளஎழுத்தால் எழுதப்பட்டது. 1842 ஆம் ஆண்டில், ‘பாசல் மிஷன் அச்சகத்தார்’ (Basel Mission Press) துளு மொழிக்குக் கன்னட எழுத்தைப் பயன்படுத்தினர். பிறகு இன்று வரை கன்னட எழுத்தே – நீடித்துப் பயன்படுத்தப் படுகிறது. மென்மையான இனிய பலாப் பழத்தை இம்மொழி மக்கள் ‘துளுவம் பழம்’ என்கின்றனர். எனவே, துளுவம் என்பதற்கு இனிமை என்னும் பொருள் கூறலாம் – என்று சொல்லப்படுகிறது.
(நூலிலிருந்து)

தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு – சுந்தர சண்முகனார்
விலை: 80/-
Buy this book online: https://www.heritager.in/product/thol-thiravida-mozhi-kandupidipu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers