பல்லவர்களும் ஓவியக்கலையும் :
ஒவியக்கலையில் வல்லவனான மகேந்திரவர்ம பல்லவன், சித்திரங்கள் வரைவதிலும் கைதேர்ந்த கலைஞன். எனவே அவன் ‘சித்திரகாரப் புலி’ எனப் போற்றப்பட்டான். அவன் ‘தக்ஷண சித்திரம்’ என்னும் நூலையும் எழுதியுள்ளான். இதனை மாமண்டூர்க் கல்வெட்டு ‘வருத்திம் தக்ஷண சித்திராக்யம்’ எனக் குறிப்பிடுகின்றது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்து ஓவியங்களுக்குச் சான்றாக சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் விளங்குகின்றன. இது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது. இங்குள்ள குகையில் உள்ள ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை.
சித்தன்னவாசல் குகையின் நடுமண்டபத்தின் மேல் விதானத்தில் தாமரைக்குளம் ஓவியம் வரையப்பட்டுள்ளது. செந்தாமரையும் வெண்டாமரையும் மலர்ந்துள்ள இத்தாடகத்தினைத் தாமரை இலைகள் நிறைத்துள்ளன. ஆங்காங்கே அல்லியும் மலர்ந்துள்ளன. அன்னப் பறவைகள் நடந்து செல்கின்றன. கம்பீரமான யானைகள் தாமரைத் தண்டுகளை முறிக்கின்றன. வெள்ளிய மீன்கள் நீந்திச் செல்கின்றன. கையில் தாமரை மலர்களைத் தாங்கிய கந்தவர்கள் காணப்படுகின்றனர். இக்குளத்தின் ஒருபுறம் நீண்ட காதுகளைக் கொண்ட கோவணம் கட்டிய இருமுனிவர்கள் நிற்கின்றனர். ஒருவர் பூக்குடலையை வைத்து மலர் பறிக்கின்றார். இன்னொருவரின் வலக்கரம் சமண முத்திரையைக் காட்டுகின்றது. இவரது இடக்கரம் தாமரை மலரைத் தாங்கியுள்ளது. இவர்கள் சமண முனிவர்களாக இருக்கலாம்.
சித்தன்னவாசல் குகைக் கோயிலின் தென்புறத் தூணிலும், வடபுறத் தூணிலும் நடனப் பெண்கள் இருவர் வரையப்பெற்றுள் ளனர். இருவரும் மார்பகக் கச்சு அணிந்துள்ளனர். விரல்களில் மோதிரம்; கைகளில் காப்பும் வளையலும் ; முழங்கையின் மேல் கடகம்; கழுத்தில் மணிபதித்த முத்தாரம்; காதுகளில் கல் இழைத்த காதணியும் குடையும் அணிந்துள்ளனர். தூக்கிக் கொண்டை முடியப்பட்ட கூந்தலில் தாழை மடல்களும் நெற்றியில் சுட்டியும், உடலில் மெல்லிய மேலாடையும் அணிந்துள்ளனர். கூந்தலில் பல அணிகளும் பூங்கொத்துக்களும் தாமரை இதழ்களும் அழகுக்கு அழகுகூட்டுகின்றன. இவர்களின் மூக்கில் மூக்குத்தி இல்லை. ஆதலால் தமிழகப் பெண்கள் மூக்குத்தி அணியும் வழக்கம் நாயக்கர் காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும்.
பனைமலைக் கோயில் ஓவியங்களை இராசசிம்ம பல்லவன் வரைந்துள்ளான். இக்கோயிலின் பார்வதி ஓவியம் கண்ணைக் கவரும் அழகுடையது. இது காஞ்சி கைலாசநாதர் கோயிலின் சிற்பத்தை ஒத்தது. தலையில் மணிமகுடத்தையும் கழுத்தில் மணிமாலையையும் காதில் குழையையும் பார்வதி அணிந்திருக்கின்றாள். அவள் இடக்காலை மடக்கி வலக்காலில் நின்று கொண்டிருக்கின்றாள். இடையில் பூ வேலைப்பாடுள்ள மேலாடையை உடுத்தியிருக்கின்றாள். சிவபெருமானின் நடனத்தில் தன்னை மறந்து பார்வதி நிற்கின்றாள். இவ்ஒவியங்கள் நீலம், இளஞ்சிவப்பு, மஞ்சள், சிவப்பு ஆகிய வண்ணங்களில் வரையப் பெற்றுள்ளன.
காஞ்சி கைலாசநாதர் கோயிலின் திருச்சுற்றுக்களில் அமைந்துள்ள அறைகள் முழுவதிலும் அக்கால ஓவியங்கள் நிறைந்துள்ளன. கொற்றவை, இலக்குமி சிற்பங்களில் பூசப்பட்டுள்ள வண்ணங்கள் இன்றும் தெளிவாகத் தெரிகின்றன.
சோழர்களும் ஓவியக்கலையும் :
தஞ்சைப் பெரியகோயிலின் கருவறையில் சோழர்கால ஓவியங்களின் தொழில் நுணுக்கத்தைக் காணலாம். சிவபெருமான் முப்புரத்தை எரித்தது. சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் கையிலைக்குச் சென்றது. சுந்தரரை இறைவன் தடுத்தாட் கொண்டது ஆகிய நிகழ்வுகள் ஓவியங்களாக்கப்பட்டுள்ளன.
சிவன், வெண்மையாக நரைத்த முடியை முடித்து கோவண உடையினராக கிழவேதியர் வடிவில் காணப்படுகின்றார். கையில் தாழங்குடையும் ஓலையும் உள்ளன. சுந்தரர் வியப்புடன் வேதியரைப் பார்க்கின்றார். திருமண உறவினர் திகைத்து நிற்கும் காட்சியும், அவர்களுக்கு எதிரே திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலும் காட்சி தருகின்றன.
கையிலை மலையில் சிவன் புலித்தோலின் மீது உட்கார்ந்து இருக்கின்றார். சற்றுத் தூரத்தில் சேரமானும் சுந்தரரும் கையிலை மலைக்குச் செல்கின்றனர். சுந்தரர் வெள்ளை யானையின் மீதுஅமர்ந்து கந்தர்வர் புடை சூழ, தேவகானம் முழங்க வாழ்த்துப் பெறுகின்றார். நடுவில் ஓடும் ஆற்றைக் கடந்து வெள்ளை யானை வேகமாகச் செல்கின்றது.
சிவன் மேருமலையை வளைத்து முப்புரத்தை எரிக்கின்றார். தாருகாட்சன், கமலாட்சன், வித்துண்மாலி என்னும் மூன்று அரக்கர்களும் எதிரே காணப்படுகின்றனர். ஓவியங்களில் தெற்றெனத் தெரிகின்றது. சிவன் சீற்றம்
சேரர்களும் ஓவியக்கலையும் :
சேரநாட்டின் திருவஞ்சிக்களத்தில் சோழ ஓவியங்களை ஒத்த ஓவியங்களே காணப்படுகின்றன. இங்குள்ள சிவாலய மண்டபத்தின் சுவர்களில் ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியம் ஒன்றில் அலங்காரமான உடையையும் முடியையும் அணிந்திருந்தாலும் இரண்டாம் முறையாகப் பிரிய வேண்டும் என்ற துயரத்துடன் காட்சி யளிக்கின்றான் இராமன். சீதை துயரத்தோடு கூடிய புன்னகையோடு காட்சியளிக்கின்றாள். இலக்குவன் எதிர்காலத்தில் நடக்கப் போவதை நினைத்து ஆழ்ந்த யோசனையில் இருப்பதைப் போலக் காட்சியளிக்கின்றான்.
பாண்டியர்களும் ஓவியக்கலையும் :
பாண்டிய மன்னர்களுள் அரிகேசரி பராங்குசன், மாறவர்மன் இராசசிம்மன், நெடுஞ்சடையன் ஆகியோர் ஓவியக்கலையைச் சிறப்பாக வளர்த்துள்ளனர். இவர்களது ஓவியங்களைத் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலைப்புரம் குகைக்கோயிலில் காணலாம். மத்தளம் வாசிக்கும் பெண்ணின் உருவமும், ஆண் பெண் வடிவங்களும், இலைக்கொடி, பூக்கொடி உருவங்களும் வாத்து உருவங்களும் கவினுற இங்கு வரையப்பெற்றுள்ளன.
விசயநகர மன்னர்களும் ஓவியக்கலையும் :
விசயநகர மன்னர்களின் ஓவியங்கள் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் திருவரங்கத்தில் வேணுகோபாலர் சந்நிதியில் வரையப்பெற்றுள்ளன. குழல்வாசிக்கும் வேணுகோபாலனையும் அவனைச் சூழ்ந்து நிற்கும் பசுக்கூட்டங்களையும், கோகுலத்துப் பெண்களையும் கண்டு மகிழும் வகையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் நடுவிலுள்ள வேணுகோபாலன் ஓவியம் கலைநயமிக்கது. கண்ணன் தன் கையில் புல்லாங்குழலை எடுத்துத் தன் சிவந்த இதழில் வைத்து ஊதி இன்னிசை எழுப்பும் காட்சி வியப்பாக உள்ளது. கோகுலத்துக் கோபியர்கள் அவனைச் சூழ்ந்து நிற்கும் காட்சி மற்றொருபுறம். கண்ணன் இடக்காலை காளிங்கன் தலையில் வைத்து வலக்காலைத் தூக்கி ஆடுகின்றான். அவன் இருபுறமும் ருக்மணியும் சத்தியபாமாவும் நிற்கின்றனர்.
நாயக்கர்களும் ஓவியக்கலையும் :
தஞ்சைக்கோயிலில் மதுரை நாயக்கரின் ஓவியங்கள் காணப்படுகின்றன. மதுரை, தில்லை ஆகிய இடங்களிலும் நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இராணிமங்கம்மாள் ஓவியம் காணப்படுகின்றது. இராணி மங்கம்மாளுக்கு அன்னை மீனாட்சி அவ் ஓவியத்தில் செங்கோலைக் கொடுக்கின்றாள். மற்றொரு புறத்தில் மங்கம்மாள் அருகே விஜயரங்கச் சொக்கநாத நாயக்கர் சிறுவனாக நிற்கின்றார். மறுபுறம் தளவாய் இராமப்பய்யன் உருவமும் பெயரும் உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலின் ஊஞ்சல் மண்டபத்தில் எதிரிலுள்ள சிறுமண்டபத்தில் அங்கயற்கண்ணியின் திருமணக்காட்சி வரையப் பெற்றுள்ளது. அவளைச் சுந்தரேசர் மணக்கின்றார். திருமால் தாரை வார்த்துக் கொடுக்கின்றார். சுந்தரேசர் அங்கயற்கண்ணியின் கையைப் பற்றும்போது தேவர்கள் மகிழ்கின்றனர்.
மராட்டியர்களும் ஓவியக்கலையும் :
மராட்டியர்கள் தமிழகத்தை கி.பி. 1676-1855 வரை ஆண்டனர். இக்காலக் கட்டத்தில் பல்வேறு சமுதாய மாற்றங்கள் – நிகழ்ந்துள்ளதை இக்கால ஓவியங்கள் காட்டுகின்றன. மராட்டியர்களின் தொடக்ககால ஓவியங்கள் நாயக்கர் பாணியையும், இடைக்கால ஓவியங்கள் மராத்தியர்களின் தனிப்பாணியையும், ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் மேலைநாட்டுப் பாணியையும் கொண்டிருக்கின்றன. இரண்டாம் சகஜி, இரண்டாம் சரபோஜி ஆகிய இரு மராட்டிய மன்னர்களும் ஓவியக்கலைக்குச் சிறப்புக் கொடுத்துள்ளனர். அரண்மனைகளில் ஓவியர்களைப் பணியமர்த்தி மாத ஊதியம் கொடுத்துள்ளனர்.
(நூலிலிருந்து)
தமிழும் பிற துறைகளும் – முனைவர் உ.கருப்பத்தேவன்
விலை: 200 /-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/tamilum-pira-thuraigalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers