மல்லையில் உள்ள கடற்கரைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் இரட்டை விமானங்கள் தமிழகத்தின் ஒரு முக்கியமான அடையாளம் என்றால் அது மிகையாகாது. இந்த விமானங்களைக் காண்கையில், இது இரண்டு கோயில்களை உள்ளடிக்கியது என்று தான் பலரும் நினைப்பர். ஆனால், இங்கு மூன்று கோயில்கள் உண்டு.
1. கிழக்கு நோக்கிய சிவன்கோயில்
2. மேற்கு நோக்கிய சிவன் கோயில்
3. இரண்டிற்கும் நடுவே உள்ள விஷ்ணு ஆலயம்
இவற்றிற்கு முறையே, ராஜசிம்ம பல்லவேஸ்வர க்ரிஹம் என்றும், க்ஷத்திரிய சிம்ம பல்லவேஸ்வர க்ரிஹம் என்றும், நரபதி சிம்ம பல்லவ விஷ்ணு க்ரிஹம் என்றும் பெயர். இவற்றில் விஷ்ணு ஆலயம் பழையது. அதனைச் சுற்றி இரண்டு சிவாலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.
இந்த விஷ்ணுவே நமது கட்டுரையின் நாயகன் ஆகிறார். இவர் தலசயனமாக, பாம்பின் மேல் சயனியாது, வெறும் தரையில் படுத்திருக்கிறார்.நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் இவரின் திருமேனி, காலத்தாலும், கடற்காற்றாலும் மிகவும் தேய்ந்து காணப்படுகிறது.
மல்லையின் கடற்கரை அருகில் கிடக்கும் முகுந்தனின் தளி குறித்த குறிப்புகள் நமக்கு 7-8ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சியில் வாழ்ந்த, தண்டி என்கிற கவியின் அவந்திசுந்தரிகதா’ என்கிற காவியத்தில் கிட்டுகின்றது.
“மஹாமல்லபுரே தேவ: ஸ்வைரம் வாரிதி சன்னிதொள” என்று தொடங்குகின்றன. கடலுக்கு அருகில் மஹாமல்லபுரத்தில் முகுந்தனுடைய ஆலயம் இருக்கிறது என்று தொடங்கும் அவன், அந்த விஷ்ணு ஏதோ ஒரு காரணத்தால் பின்னமான செய்தியைத் தருகிறான்.
“பக்ன: கேனாபி தஸ்ய ஆஸீத் காரணம்” – அது பின்னமானது ஏதோ காரணத்தால் என்கிறான். இந்தப் பின்னமான விஷ்ணுவை, கவியின் தோழனான லலிதாலயன் என்கிற கலைஞன், சீர் செய்திருப்பதாகவும், அதனைக் காண தோழர்கள் எல்லோரும் அந்த ஆலயம் செல்வதாகவும் கதை தொடங்குகிறது.
அங்குச் சென்று விஷ்ணுவைப் பார்க்கும் கவி, கடலின் அலைகள் அவரின் மீது தடவி பரிமாற, அவர் பாற்கடலில் பள்ளி கொண்டார்போலவே காட்சியளிக்கிறார் என்கிற வர்ணனையைத் தருகிறான்.
நீரினை கொண்டு, நேரில் காண்பது போன்ற ஒரு கலைநயம் தருதல் மல்லையின் தனிச்சிறப்பாகும். பகீரதன் தபசு சிற்பத்தில், நடுவில் உள்ள பிரிவு நீர் ஓடி வந்து, கங்கைப் பெருகுவதை நேரில் நமக்கு உணர்த்தத் தான். அதே போல, கோவர்த்தன மண்டபத்திலும், நீர் மேலே ஊற்ற, இந்திரன் மழை பொழிய, மாயோன் மலையை குடையாகப் பிடிப்பதை நிழற்படமெடுத்தாற்போலப் பிரதிபலிக்க வைத்திருக்கிறார்கள் பல்லவ சிற்பிகள்.
இதே போல, இங்கும் கடல் கிடக்கும் அண்ணலை வடித்திருக்க வேண்டும்.
பல்லவர்கள் காலத்திலேயே அந்த விஷ்ணு திருமேனியில் தொய்வு ஏற்பட்டு, சீர் செய்யப்பட்டதென்றால், அதனினும் பழைய திருமேனியாக இருத்தல் வேண்டும் என்பது சரியான அனுமானமாகத் தெரிகிறது.
ஆனால், இந்தத் தண்டியின் கவிதையை வரலாற்றுப் பிரமாணமாக ஏற்றுக்கொள்ள இயலுமா என்பது கேள்விக்குறியே. அவன்பின் வரும் சுலோகங்களில், அக்கடலில் ஒரு தாமரை மிதந்து வந்ததாகவும், அந்தக் கமலம் பெருமானின் திருவடியை அடைந்தவுடன் ஒரு வித்தியாதரனாக மாறியதாகவும் தெரிவிக்கிறான். வரலாற்று மூளைக்கு இது பிதற்றலாக அமையும்.
கோயிலுக்கும் மூர்த்திக்கும் இதனைப் பிரமாணமாக ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், சிறு நெருடல் உள்ளது. இவன், அந்த விஷ்ணு அனந்தசயனத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறான். ஆனால், உண்மையில் அவர் தலசயனமாக, வெறும் தரையில் படுத்திருக்கிறார்.
சில ஐயங்கள் எழுகின்றன, அவையாவன
1. நாக பர்யங்கம் சுதையிலோ, வர்ணத்திலோ அமைந்து, பின்னர் நலிவடைந்திருக்கலாம்
2. கோயிலை பற்றிக் குறிப்பிட்டு பேசிவிட்டு, விஷ்ணு மூர்த்தியைப் பொதுவாக தண்டி வர்ணித்திருக்கலாம்.
3.வேறு கோயிலில் உறையும் விஷ்ணுவைத் தண்டி சொல்லியிருக்கலாம்.
இப்படிப் பல கேள்விகளை எழுப்பவைக்கும் தண்டியின் காவியம் ஆச்சரியமானதே. இந்த மூர்த்தியை ஆபிசாரிக மூர்த்தி என்றும் சிலர் கருதுகின்றனர். அதாவது, எதிரிகளை அழிக்க, கோரமான முகத்துடன், எதிரியை நோக்கி, தலசயனமாக ஊருக்கு வெளியில் பிரதிஷ்டை செய்த மூர்த்தி என்று கருதுகின்றனர். அந்த மூர்த்திக்குப் பாம்பணையின்றி, தரையில் சயனம் அமைவது வழக்கம் என்பதால்.
மேலும், இன்று திவ்ய தேசம் என்று கூறப்படும் தலசயன பெருமாள் கோயில், பிற்கால விஜயநகர பாணியில் அமைந்த கோயிலாகத் தெரிகிறது. ஆக, திருமங்கை ஆழ்வார் பாடிய தலசயனம், நாம் கட்டுரையில் கூறிய விஷ்ணுவாக இருக்கக்கூடும். பின்னர், சிவன் கோயிலுக்கு நடுவே சென்று வழிபட வேண்டிய நிலை வேண்டாம் என்று, பிற்கால வைணவர்கள் தனிக்கோயில் அமைத்து, அதனைத் திவ்ய தேசமாக்கி இருக்கக்கூடும்.
வைணவர்கள் இன்று ‘ராமானுஜ மண்டபம்’ என்று அழைக்கப்படும் குகைக்கோயிலை சிதைத்து, சங்கு சக்கரங்கள் பொரித்தும், கோவர்த்தன மண்டபத்தில் தூண்கள் எழுப்பி, மாடுகளுக்கு நாமம் போட்டிருப்பதும் மல்லைக்குச்செல்லும் யாவரும் காண்பதே. அத்தகைய மாற்றங்களில் ஒன்றாக, இந்த விஷ்ணு கோயில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.
இந்த விஷ்ணு மூர்த்தியை இன்று கடற்கரை கோயிலுக்குச் சென்றால் காண இயலாது. ஏ.எஸ்.ஐ. அந்த பாதையைப் பொது மக்கள் அனுமதிக்குத் தடை விதித்துள்ளனர். ஆனால், இரு மருங்கிலும், சுவற்றில், கருடாரூடனான மூர்த்தியையும், மறு சுவற்றில் காளிய மர்தன மூர்த்தியையும் மிகவும் தேய்ந்த நிலையில் காண இயலும்.
மல்லைக்குச் சென்று இவற்றை ஆராய்ந்து, ரசித்து வந்து இவற்றின் பெருமைகளை எடுத்துரைத்து இன்பமடைவோமாக.
பிரதிக் முரளி, மாணவர், வரலாறு