காவிரி தீரத்தில் ஒரு கங்காதரர்

காவிரி தீரத்தில் ஒரு கங்காதரர்

ராமாயணத்தில் ஒரு ஒட்டுக் கதை. கடுங்கோபத்திலிருந்த ரிஷி அந்த ஆயிரம் சகரர்களையும் எரித்து பொசுக்கி சாம்பலாக்கி விட்டார். அவர்களை உயிர்த்தெழ வைக்கவேண்டுமானால் மேலுலகிலிருந்து கங்கை நதியை இங்கு வரச் செய்யவேண்டும். இதற்காக பகீரதன் கடுந்தவம் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றார். தவம் பலிக்கின்றது. கங்கை பெருவெள்ளமென பூமி நோக்கி பாய்கின்றாள். இந்த வேகத்தில் நதி இறங்கினால் பூவுலகு தாங்காது என உணர்ந்த பகீரதன் அழிவினின்று உலகை காப்பாற்ற சிவபெருமானை நாடுகின்றார். இரக்கம் கொண்ட சிவன் தனது சடைமுடியில் கங்கையைத் தாங்கி நிறுத்தி பூமியைப் பாதுகாக்கின்றார். பேரருவி போல பாய்ந்து வந்த கங்கையைத் தடுத்து, மக்களையும் பூவுலகையும் காப்பாற்றுகின்றார். சிவனின் இந்த கங்காதரர் வடிவம், பல பல்லவ ஆலயங்களில் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது. சோழ கற்றளிகளில் நடராஜர் காணப்படுவதைப் போல, பல்லவ ஆலயங்களில் கங்காதரரை சிற்ப வடிவில் காணலாம்.திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குப் போகும் படிகளில் ஏறிச்சென்றால், வழியில் தாயுமானவர் ஆலயத்தை கடந்த பின் வெளியேறும் இடத்தில், இடது புறத்திலுள்ளது ஒரு பல்லவர் கால குடவரைக்கோவில். இந்திய தொல்லியல்துறையின் (ASI) ஒரு நீலநிற அறிவிப்பு பலகை, இந்த கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் உருவாக்கப்பட்டது என்றும் இது பாதுகாக்கப் பட்ட தொல்லியல் சின்னம் என்றும் அறிவிக்கின்றது. இந்த கோவிலின் தெற்குப் பகுதியில் ஒரு பெரிய கங்காதரர் சிற்பம் உள்ளது.

நான் திருச்சிக்கு செல்லும்போதெல்லாம் இந்த குடவரைக் கோவிலுக்கு போவது வழக்கம். காலை ஏழு முதல் ஏழரைக்குள் சென்றால், கதிரவனின் கிரணங்கள் இந்த ஆலயத்தின் உட்புகுந்து ஒளியூட்டும் போது, சிற்பங்களை நன்கு கவனிக்க முடிகின்றது. அப்போது கூட்டமும் இருக்காது. கீழே, புதிய நாளொன்றை எதிர் கொள்ள ஒரு நகரம் தயாராகும் ஒலிகளின் பின்னணியில், 7ஆம் நூற்றாண்டின் உன்னத கலைப்படைப்பொன்றில் மனதை பறிகொடுக் கலாம்.தமிழ்நாட்டில் குடவரைக் கோவில்களை முதன்முதலில் உருவாக்கியது பல்லவ அரசன் மகேந்திரவர்மன்தான் (600-630 கி.பி.). சைவ மறுமலர்ச்சி தென்னாடெங்கும் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். அப்பர் போன்ற சைவக் குரவர் இயங்கிக் கொண்டிருந்த காலம் இது. சமணராயிருந்த மகேந்திரன் சைவ மதத்திற்கு மாறியபின், அந்த உற்சாகத்தில் பாறைகளை அகழ்ந்து மகேந்திரவாடி, மண்டகப்பட்டு, மாமல்லபுரம் போன்ற இடங்களில் பல குடவரைக் கோயில்களை உருவாக்கினார். அதற்கு முன் யாரும் இங்கு குடவரை ஆலயங்களை உருவாக்கியதில்லை. பல்லவ சிற்பிகளும் ஸ்தபதிகளும் பல குடவரைக் கோயில்களை இவரது ஆட்சியின்போது தோற்று வித்தனர். “செங்கல், காரை, மரம், உலோகம் எதுவுமின்றி இக்கோயில் களை வடிவமைத்தேன்” என்று ஒரு ஆலயத்தில் பெருமைமிக செதுக்கி வைத்தார். இவருக்கு ‘விசித்திரசித்தன்’ என்றொரு பட்டமிருந்தது.

இந்தக் குகைக்கோயிலின் தெற்கு பக்கத்தில் முழுப்பகுதியும் வியாபித்திருக்கின்றது கங்காதரர் சிற்பம். எதிர்ப்புறமுள்ள கருவறைக்கு முன்னுள்ள சிறிய படிக்கட்டில் அமர்ந்து, இந்தச் சிற்பத்தை நிதானமாக பார்க்கலாம். உயிர்த்துடிப்பு ததும்பும் அற்புதமான புடைப்புச் சிற்பம். பல்லவ சிற்பங்கள் எல்லாமே புடைப்புச் சிற்பங்கள்தானே. நம் நாட்டின் சிற்பங்களில் சிறந்த கலைப்படைப்புகளில் இதுவும் ஒன்று. இதின் நடுநாயகமாக இருப்பது கங்காதரர். நான்கு கரம் கொண்ட சிவன், ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு, பின்புற வலதுகையில் கங்கையை ஏந்திக்கொண்டிருக்கின்றார். பல்லவ சிற்ப நியதிகளின் படி, பூணூல் அவரது வலது கையின் மேலோடிக் கிடக்கிறது. இடது கால் உயர்த்தியபடி இருக்க, வலதுகால் முயலகன் எனும் அரக்கனை அழுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த குள்ள அரக்கனை நடராஜர் காலடியிலும் காணலாம். சிவனின் முகத்தில் கருணையும் திருப்தியும் தெரிகின்றது. ஒரு சிறிய பெண்ணுருவில் கைகூப்பியபடி கங்கை, சிவனின் முடியில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றாள். தனது கடமையை நன்கே முடித்த பகீரதன் ஒரு மூலையில் நிற்கிறார்.நான்கு மூலை களிலும் நான்கு தேவர்கள் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருக் கின்றார்கள்.

கங்காதரன்பின் – இடதுபுறக்கையிற்கு மேலே அந்தரத்தில் ஒரு நாயின் உருவம் உள்ளது. பல பல்லவ கங்காதர சிற்பங்களில் இதைக் காணலாம். அண்மையில் தான் இது நாய் என்று அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது. கங்காதரர் கதையில் நாய் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை. புராணக் கதையில் நாய் வருவதில்லை. இந்த சிற்பத்திற்கு எதிர்புறம் இக்கோவிலின் கருவறை உள்ளது. ஆனால் அதனுள்ளே சிற்பம் ஏதுமில்லை. பல்லவ குடைவரை கோயில்களின் உட்புறமெங்கும் ஓவியங்கள்தீட்டப்பட்டிருந்தன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். புடைப்புச் சிற்பங்கள் மீதும் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. இந்த ஆலயத்தில் கருவறை மூலவர் ஒரு ஓவிய வடிவில் இருந்திருக்கலாம். மகேந்திரவர்மனுக்கு ‘சித்ரகாரப்புலி’ என்றொரு பட்டமும் இருந்தது. அவனது காலத்தில் ஓவியம் பற்றிய, தட்சிணசித்ரா என்றொரு நூலொன்றும் இருந்தது.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் தத்துவப் போராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மைக்கேல் லாக்வுட் பல்லவர் கலை (Pallava Art) என்ற நூலை எழுதியுள்ளார். சமஸ்கிருதத்தில் புலமை கொண்ட இவர் இக்குடவரைக் கோவிலில் இரு தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள நீண்ட கவிதைக் கல்வெட்டை ஆராய்ந்து எழுதியிருக்கின்றார். இந்தக் கிரந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டி ருக்கும் அழகே பார்த்து வியக்கத்தக்கது. அந்தக் கவிதையின் ஆதாரத்தில்தான் இந்த சிற்பத்தில் கங்காதரராக காட்சியளிப்பது மன்னர் மகேந்திர பல்லவனே என்கிறார். மன்னர் உருவில் சிவனை வடித்திருக்கின்றார் சிற்பி. இந்த சிற்பம் கங்காதரரை காட்டும் போதே மன்னரின் உருவ சிற்பமாகவும் விளங்குகின்றது. ஐரோப்பியாவில்,மறுமலர்ச்சி கால ஓவியர்களும் இந்த உத்தியைப் பின்பற்றி, தங்களுக்கு பணம் கொடுத்த வள்ளல்களையும் அவர்களது குடும்பத்தாரையும், யோசேப்பு, மரியம்மாள், குழந்தை ஏசு என சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அந்த நீண்ட கல்வெட்டு கவிதை இன்னும் சில குறிப்புகளை தருகின்றது.மலையின் மகள் (கங்கை) தனது தந்தையின் வீட்டை விட்டு இந்த மலையில் (திருச்சி மலைக்கோட்டை) குடிவந்துவிட்டாள் என்கிறது. காவிரி, பல்லவ மன்னனின் துணைவி என்றும் குறிப்பிடுகின்றது. சிவனும் மகேந்திரவர்மனும் ஒரே உருவில் காட்டப் பட்டிருப்பதால், அந்த சிறு பெண்ணின் உருவம் கங்கையையும் அதே சமயத்தில் காவிரியையும் சித்தரிக்கின்றது என்கிறார். அப்படியானால், காவிரியின் வேகத்தை தடுத்ததில் – அதாவது அணைகட்டியதில் மகேந்திரனுக்கும் பங்கு உண்டு என்பதை இந்த வரி உணர்த்துகிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றார் லாக்வுட்.

தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்குமுன் படித்து, மொழிபெயர்த்து, விளக்கம் தந்த கல்வெட்டுகளை மறுபடியும் வெகுசிலரே படிக்கின்றார்கள். மற்றபடி முதலில் படித்தவர் என்ன சொன்னாரோ அதையே திருப்பித் திருப்பி எழுதுகின்றார்கள். மறுபடியும் படித்தால் வேறுவிதமான புரிதல் நமக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது இன்றோ, கல்வெட்டியலை பயிலுவதற்கே மாணவர்கள் வருவதில்லை என்கிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டையில், பல்லவ குடவரைக் கோவில் இருக்கும் திசைக்கு மறுபுறம் ஒரு இயற்கையான குகையும் அதில் சில கற்படுக்கைகளும் உள்ளன. ஆனால் இன்று இந்த குகைக்கு போவதற்கு பாதுகாப்பு செய்து தருவதற்கு பதிலாக, யாரும் போக முடியாமல் தடுப்புச்சுவர் கட்டியிருப்பதை என்ன சொல்வது?

தமிழ்நாட்டில் பல இடங்களில் பாறைக் குன்றுகளில் இம்மாதிரி யான கற்படுக்கைகள், கல்வெட்டுகள் கொண்ட பாறைக்குடில்கள் உள்ளன. இதுவரை நம்பபட்டு வந்ததுபோல் இந்த பாறைக் குடில்கள் சமணத் துறவிகளுடைது அல்ல. ஆசீவிக துறவிகளுடையது என்று தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் வாதிடுகிறார். சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் பரவியிருந்த காலகட்டதில் ஆசீவிக சமயமே ஓங்கியிருந்தது என்கிறார். (காண்க அவரது நூல் ‘சங்ககால தமிழர் சமயம்’ 2006). பல ஊர்களில் பாறைக்குடில் உள்ள அதே குன்றில் சைவக் கோயிலொன்றும் இருப்பதையும் நாம் காணலாம். திருப்பரங்குன்ற . புகளூர் நினைவிற்குவருகின்றன.
(நூலிலிருந்து)

கல் மேல் நடந்த காலம் – சு . தியடோர் பாஸ்கரன்
விலை: 250/-
வெளியீடு: NCBH
Buy this book online: https://www.heritager.in/product/kal-mel-nadantha-kaalam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers