அரிக்கமேடா? வீராம்பட்டினமா?

அரிக்கமேடா? வீராம்பட்டினமா?

இவ்வகழாய்வு ஆராய்ச்சியில், அகழ்வாய்விடத்தின் பெயர் “அரிக்கமேடா” அல்லது “வீராம்பட்டணமா” என்பது பற்றி அகழ்வாய்வு அறிஞரிடையே ஒருமித்த கருத்து இருந்ததில்லை.

இவ்வகழாய்வில் பெரிதும் பங்கு கொண்ட ஃபொஷே முனிவர் (PERE FAUCHEUX) அவர்கள் “வீராம்பட்டணம் ” என்பதுதான் பொருத்தமான பெயர் எனக் கருதினார். அவர் கூறுவது யாதெனில்:

“வீரபட்டணம்” அல்லது “வீராம்பட்டினம்” என்ற இவ்வகழாய்விடத்தைக் கண்டுபிடித்தவுடன் அவ்விடத்தை வழக்கத்திலிருந்த “வீராம்பட்டணம்” என்று குறிப்பிடாமல், “அரிக்கமேடு” என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர்.

“அரிக்கமேடு” என்ற பெயர் அரசின் நில அளவை ஆவணத்தில் இல்லாத (CADASTRE)’ ஒன்றாகும்.

மேலும், “அரிக்கமேடு” என்பது “அரிப்பு மேடு புஞ்சே” என்ற சொல்லின் சிதைவு ஆகும் என்பது ஃபொஷே முனிவரின் கருத்து. இதன் பொருள் – தினைப் பயிரிடுவதற்கு மட்டும் ஏற்ற நிலம் -என்பதாகும்.

ஆகவே அண்மையில் நடந்த சில ஆய்வுகளில் அரிக்கமேடு என்ற பெயரை நீக்கிவிட்டு, அவ்விடத்திற்கு வழக்கமான பழைய பெயராகிய “வீராம்பட்டணம்” என்ற சொல்லையே பயன்படுத்தினார்.

மேலும் அறிஞர் திரு. ஃபொஷே அவர்களின் கருத்து என்னவெனில், PERIPLE DE LA MER ERYTHREE (பெரிப்ள்ஸ்) என்ற நூலும் “ப்தோலெமே” PTOLEMEE என்ற வானவியல் அறிஞர்குறிப்பிடும் “பொதுக்கே” என்ற ஊரும், “வீராம்பட்டணமும்” ஒன்றேயாகும் என்பதாகும்:

அவர் கூறும் மற்றொரு விளக்கம் வருமாறு: வீராம்பட்டணம் என்பது “வீரா” என்ற ஒரு சிற்றரசனைக் குறிக்கும் சொல்லுடன் “பட்டணம்” என்ற சொல் சேர்ந்து பிறந்ததாகும்.

பட்டணம் என்ற சொல் EMPORIUM என்ற “சந்தை “யை உணர்த்தும் சொல்லாகும். ஆகவே வீராம்பட்டணம் என்பதே அந்த இடத்திற்கு உரிய பெயராகும்.

ஆய்வறிஞர் டாக்டர் “ஃபில்லியோஜா” Dr. M.J.FILLOZAT அவர்களும் இதே கருத்தைத் தமது கட்டுரையில்’ வலியுறுத்தி யுள்ளார். அவர் கூறுவதாவது:

அந்த இடத்திற்கு உரிய பெயர் “வீராம்பட்டணம்” என்பதில் சந்தேகமேயில்லை. கி.பி. 18-ம் நூற்றாண்டில் வரலாற்றறிஞர் “லெழாந்த்தீய்” LEGENTIL கூறியுள்ள “பொதுக்கே” என்னும் பட்டணம், இந்த இடத்திலிருந்து மறைந்த ஒரு மாபெரும் நகரத்தையே குறிப்பிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவ்விடத் திற்கு அருகாமையில் வீராம்பட்டணம் என்ற சிற்றூர் இன்றும் உள்ளது; இவ்விடம் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே இப்பெயரில் விளங்கி வந்துள்ளது.

இவ்வகழாய்வுக்களங்களின் அருகாமையில், அத்ரான் முனிவர் வீடு (ADRAN) இடிந்து பாழடைந்த நிலையில் இன்றும் காணப்படுகிறது. இந்த வீடு இருக்குமிடத்தை “வீரபட்டணம்” அல்லது “வீராம்பட்டணம்” என்றே அங்குள்ள மக்கள் அழைத்து வந்தனர்.

இதற்கு அருகில் காணப்படும் ஒரு புராதன புத்தர் சிலை, சென்ற நூற்றாண்டின் இறுதிவரை வீராம்பட்டணத்தின் கிராம தெய்வமாகவே கருதப்பட்டு வந்தது என்பது இவரது கருத்தாகும்.

ஆனால் புதுச்சேரி வரலாற்றறிஞர் திரு. PZ. பட்டாபிராமன் அவர்கள், அரிக்கன்மேடு என்றால் “புத்தர்மேடு” என்று பொருள் படும் என்றும், அகழ்வாய்விடத்திற்கு அருகே ஒரு மண்மேட்டில்

புத்தர் சிலை அமைந்துள்ளது என்றும் ஆகவே “அரிக்கமேடு என்று கூறுவதே சாலப்பொருந்தும் எனக் கூறுகிறார்.

அவர் 1956 மே மாதம் வெளியான “லெ த்ரே துய்னியம்” LE TRATI-DUNION என்ற மாதவிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறுவதாவது:

அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டணம் செல்லும் வழியில் காக்காயந்தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு என்ற ஒரு பெருமணல்மேடு அரியாங்குப்பம் ஆற்றிற்குக் கீழ்க்கரையில் கம்பீரமாக உயர்ந்து காட்சியளிக்கிறது. அம்மணல்மேட்டில் ஒரு பழங்கால புத்தர்சிலை உள்ளது.

இம்மேட்டிற்கு “அரிக்கன் மேடு” என்று பெயர் வரக்காரணம் என்ன என்று யோசிக்கும்போது, புத்தருக்கு “அருக்கன்”‘ என்ற ஒரு பெயருமுண்டு என்பது நமது நினைவுக்கு வருகிறது.

ஆகவேதான் இம்மேடு “அருக்கன் மேடு” என்று அழைக்கப் பட்டு, பின்னர் ”அரிக்கமேடு” என மருவியுள்ளது. மேலும், “அருக்கன் மேடு” என்பது “அரிக்கன் மேடு” ஆகி, பின்னர் “அரிக்கமேடு” ஆனது எப்படியெனில், புல் என்பது பில் அகவும் பருப்பு என்பது பரிப்பு ஆகவும் மருமகள் என்பது மரிமகள் ஆகவும் பேச்சு வழக்கில் மாறுவது போல், “அருக்கன் மேடு” அரிக்கன் மேடு என்று மாறியித்தல் வேண்டும்.

கருங்கல் சிற்பமாகிய அப்புத்தர் சிலையின் உயரம் 118 சென்டிமீட்டர் ஆகும். தலைமுடி சுருட்டையாகவும், தலை உச்சியில் கொண்டையும், காதுகளின் கீழ்ப்பாகம் தொங்கிக் கொண்டும் காணப்படுகின்றன. சிலையின் இடையில் ஒரு வேட்டியும், மார்பில் ஒரு துண்டும் (போர்த்திய நிலையில் ) அலங்கரிக்கின்றன – பத்மாசன முறையில், சிலை ஒரு பத்ம பீடத்தில் உட்கார்ந்துள்ளது. இது 10-ம் நூற்றாண்டு இறுதி அல்லது 11-ம் நூற்றாண்டில் அமைந்ததாக இருத்தல் வேண்டும். இச்சிலை, நீண்ட நாளாக அதேயிடத்தில் இருந்து வருகிறது என்பதை “லெ ழாந்ததீய்” LEGENTIL என்ற வரலாற்று அறிஞர் தமது பயண நூலில் குறிப்பிட்டிருப்பது மேலும் இதனை உறுதிப்படுத்துகிறது. அவர் 1761ஆம் ஆண்டில் தமது நூலில் குறிப்பிடுவதாவது:

புதுச்சேரிக்குச் சிறிது தெற்கே, வீராம்பட்டணம் என்னும் சிற்றூரின் சமவெளியில், அரியாங்குப்பம் ஆற்றின் அருகாமையில் அழகிய உறுதியான கருங்கல் சிற்பம் ஒன்று அமைந்துள்ளது. 3லிருந்து 3% அடிவரை உயரமுள்ள இச்சிலை இடுப்பளவு வரை மண்ணில் புதையுண்டு காணப்படுகிறது.

அம்மணல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இச்சிலையானது தாய்லாந்திலுள்ள புத்தர் சிலை போன்றே காணப்படுகிறது. தலையின் வடிவம், முகபாவம், கைகளை அமைத்திருக்கும் முறை. அதன் காதுகள், அனைத்தும் புத்தர் சிலையை ஒத்திருக்கிறது. வழிபாட்டிலுள்ள மற்ற இந்து மத தெய்வங்களுக்கு இது பெரிதும் மாறுபட்டுள்ளது. ஆகவேதான் இச்சிலை என் கவனத்தைக் கவர்ந்தது என்கிறார் அறிஞர் லெ ழாந்த்தீய். அங்கிருந்த மக்களிடம் நான் விசாரித்தபோது அவர்களும் – இது பவுத்தசிலை (BAOUTH) என்று கூறினர்.”

ஆகவே இச்சிலை, இதே இடத்தில் 1761-ம் ஆண்டிலேயே இருந்தது என்பது உறுதியாகிறது.

இச்செய்திகளின் அடிப்படையில் “புத்தர்மேடு” என்ற பொருளில் “அருக்கன் மேடு” என்று அந்த இடம் அழைக்கப் பட்டிருத்தல் வேண்டும் என்பதையும், நாளடைவில் அப்பெயர் மருவி “அரிக்கன்மேடு” என்றும், பின்னர் “அரிக்கமேடு” என்றும் மாறியிருத்தல் வேண்டும் என்பது அறிஞர் P.Z.பட்டாபிராமன் அவர்களின் உறுதியான முடிவாகும்.

வரலாற்றில் அரிக்கமேடு – புலவர். ந. வெங்கடேசன்
₹200

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.