அதியமான்கள் – வரலாற்று சுருக்கம்

தகடூர் வீழ்ச்சிக்குப் பின்னர் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய அதியமான் மரபு குறித்த செய்திகளை அறிய இயல வில்லை. மழகொங்குப் பகுதியில் பாண்டியரால் வெற்றி கொள்ளப்பட்ட அதியர்கள், அதியமான் மரபின் வழித் தோன்றலாவர். ‘அதியமான்’ எனும் தமிழ்ச் சொல்லே வட மொழியில் அதியர் எனப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டிய அரசர்கள் மழகொங்குப் போரில் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளமையால் அதியமான் மரபிலும் ஒன்றுக்கு மேற் பட்ட தலைவர்கள் இக்காலத்தில் சேலம்-நாமக்கல் பகுதிகளை உள்ளடக்கிய மழகொங்குப் பகுதியில் ஆட்சி புரிந்தனர் எனலாம். இருப்பினும், நாமக்கல் குடைவரைக் கோவில்களை அமைத்தவனான குணசீலன் எனும் அதியமான் தலைவன் குறித்த செய்திகளை மட்டுமே உறுதியாக அறியமுடிகிறது. கிரந்த எழுத்தில் அமைந்துள்ள நாமக்கல் வடமொழிக் கல்வெட்டில் (இ.க : 36:131மு) இவனது சிறப்புப் பெயர்கள் கூறப்படுகின்றன. அவையாவன: உத்பல கர்ணீக (காதுகளில் அல்லி மலர் சூடியவன்), மதன விலாசன் (மதனைப் போன்ற அழகன்), மான சார (ஒழுக்க சீலன்), நர பரன் (மென்மைக் குணம் படைத்தவன்), நர தேவன் (மனிதருள் தேவன்), பிராகிருதப் பிரியன் (மக்களால் விரும்பப்படுபவன்), உதார சித்தன் (தயாள குணமுடையவன்). விமல சரிதன் (குற்றமற்ற நடத்தையுடையவன்).

தன்னாட்சி பெற்ற தலைவனாகத் தன் பெயரிலேயே நாமக்கல் கல்வெட்டைப் பொறித்துள்ள இவன், பல்லவரின் குடைவரைக் கலைப்பாணியைப் பின்பற்றியே நாமக்கல் குடைவரைக் கோவில்களை அமைத்துள்ளான். இந்த அளவிற்குச் செல்வாக்குப் பெற்ற இவ்வாட்சியாளனைப் பாண்டியர் பலமுறை எதிர் கொள்ள நேர்ந்ததில் வியப்பேதுமில்லை. புகழ்ச்சோழனும் அதியமானை எதிர்கொண்டு வெற்றிகொண்டான் எனப் பெரிய புராணச் செய்திகள் புலப்படுத்தும். குறும்பொறையூர் அருகே நடைபெற்ற போரில் புகழ்ச்சோழன் அதியமானை வென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது. பழந்தமிழ்ப் பாடல் (அகம் : 159) குறிப்பிடும் குறும்பொறை மலையரணே குறும்பொறையூர் எனக் கருதப்படுகிறது. அதியேந்திர விஷ்ணு கிரகம் என அறியப் படும் நாமக்கல் குடைவரைக் கோவிலும் காவிரிக்கரையில் அமைந்துள்ள குணசீலம் எனும் ஊரும் இத்தலைவனின் நினைவைப் போற்றும்.

அதியமான் மரபினர், தர்மபுரி அருகேயுள்ள அதமன் கோட்டை எனப்படும் அதியமான்கோட்டையைத் தலைமை யிடமாகக் கொண்டு, தர்மபுரி மற்றும் வடகொங்குப் பகுதி அடங்கிய நிலப்பரப்பில் குறுநிலத் தலைவர்களாக ஆட்சி புரிந்துள்ளனர். அசோகரின் கல்வெட்டுக்களில், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய தமிழ் நாட்டு ஆட்சியாளர்களுடன் குறிப்பிடப்பட்டுள்ள சத்தியபுத்திரர் என்பார் அதியமான்களே எனும் கருத்து இம்மரபின் தொன்மையையும் சிறப்பையும் புலப் படுத்துகின்றது. அதியமான், அதிகமான், அதிகன் எனும் பெயர்களால் இலக்கியத்தில் சுட்டப்படும் இவர்களை ‘அதியர் மகன்’ எனக் கொண்டு சேரர் இனக் குழுவின் உட்பிரிவாக அரங்கசாமி (1947-48: 113மு) கருதுகிறார்.

அதியமான் அஞ்சி தம் முன்னோன் போன்று பனம் பூ மாலையை அணிந்திருந்தான் எனும் குறிப்பு (புறம் : 99), அரங்கசாமியின் கருத்தை வலுப்படுத்தும். பனம் பூ மாலை சேரர்க்கே உரியதாகையால், அதியமானின் ‘முன்னோன்’ சேரனே எனக் கொள்ளலாம். அதியமான்கள், சேரரின் கிளை மரபினர் எனும் செய்தி, மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய அதியமான் விடுகாதழகியானின் கல்வெட்டுக்களால் மேலும் உறுதிசெய்யப் படுகிறது. இவனது திருமலைக் கல்வெட்டில் ‘சேர வம்சத்து அதியமான் எழினி’ எனத் தனது சேர வம்சத் தொடர்பைப் பெருமையுடன் அறிவிக்கிறான் (இ.க. 6 எண் 34). மேலும், சித்தூர் மாவட்டம் லதிகம் எனுமிடத்திலுள்ள இவனது கல் வெட்டில் சேரரின் அரசுச் சின்னங்களான வில், அம்பு பொறிக் கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது (1906:544, 545,547). எனவே, அதியமான்கள் சேரரின் கிளைமரபினர் என்பது தெளிவு.

அசோகரின் கல்வெட்டுக்களில் அதியமான்கள் (சத்திய புத்திரர்) தனித்து இடம்பெற்றுள்ளமையால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் சேரர் இனக்குழுவிலிருந்து அதியமான் மரபினர் பிரிந்துவிட்டனர் எனக் கருதலாம். இது குறித்த செய்திகளை அறிவதற்கு முன்பாகச் சத்தியபுத்திரரே அதியமான் கள் எனும் கருத்தை மதிப்பீடு செய்வது இன்றியமையாததாகும்.

சத்தியபுத்திரர் எனும் தொடரிலுள்ள சத்திய எனும் சொல்லையும் கோசரது நம்பகத்தன்மையையும் இணைத்துக் கோசரே சத்தியபுத்திரர் எனக் கருதப்பட்டது. ஆனால், சேஷ ஐயர் (1937: 17மு), அதியமான் எனும் சொல்லிலிருந்தே சத்திய புத்திரர் எனும் சொல் பெறப்பட்டுள்ளதாக விளக்குகிறார். சத்தியபுத்திரர் எனும் சொல்லைச் ச + திய + புத்திரர் எனப் பிரித்து ‘அ’, வடமொழியில் ‘ஹ’ எனவும், அதுவே பாலியில் ‘ச’ எனவும் மாற்றம் பெற்றது; மான், அதாவது, மகன் என்பதன் வடமொழி வடிவைப் புத்திரர் எனக் கொண்டு, அதியமான் (அ+திய+மான்) எனும் சொல் சத்தியபுத்திரர் (ச+திய+புத்திரர்) ஆயிற்று எனச் சேஷ ஐயர் விளக்குகிறார். இவ்விளக்கம் மொழியியல் அடிப் படையில் சரியானதே எனும் பர்ரோவின் கருத்தைச் சுட்டிக் காட்டி நீலகண்ட சாஸ்திரியாரும் (1958: 83/அ.கு.) ஏற்றுக் கொள்கிறார். சத்தியபுத்திரர்-அதியமான் தொடர்பை உறுதி செய்வதற்கு ஜம்பையில் காணப்பட்டுள்ள பண்டையத் தமிழ்க் கல்வெட்டு சான்றாகக் கருதப்படுகிறது. இது குறித்துப் பின்னர் விரிவாகக் காண்போம்.

சேரர் தம் நலன்களைக் காக்கும் பொருட்டுத் தமது கிளைமரபினரான அதியமான்களைக் கொங்கு- தர்மபுரிப் பகுதியின் ஆட்சியாளராக அமர்த்தினர் எனக் கருதப்படுகிறது. ஆனால், வரலாற்றுத் தொடக்கக் காலத்திய இலக்கியத் தரவுகளில் சேரரும் அதியமான்களும் கடுமையான போர்களில் மோதிக் கொண்ட செய்திகளையே நாம் காணமுடிகிறது.

சத்தியபுத்திரர் என அசோகரின் கல்வெட்டுக்களால் அதியமான்கள் தனித்துக் குறிப்பிடப்படுவதால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் சேரரிடமிருந்து அதியமான்கள் தனியே பிரிந்து சென்றமைக்குரிய காரணம் அறியப்படவேண்டியுள்ளது. பெருக்கத்தின் காரணமாக இனக்குழு பிளவுண்டு சிறிய குழுக்கள் தனியே பிரிந்து செல்வது இயல்பே. இதனடிப்படையில் சேரர் இனக்குழுவும் பிளவுண்டு, அதியமான்கள் தனித்துச் சென்றி ருக்கலாம். சேரரின் ஆதிக்கம் விரிவடைந்த காரணத்தால், அவர்களது கிளை மரபுகள் சில தனியே பிரிந்து சென்றன, சிலர் குடிபெயர்ந்து கிழக்கே சென்றனர் எனும் அரங்கசாமியின் (1947-48: 116-7) கருத்து பொருத்தமாகத் தோன்றுகிறது.

அதியமான்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தனித்த ஆட்சியை அமைத்துக்கொண்டிருப்பினும், வரலாற்றுத் தொடக்கக் காலத்திய இலக்கியத் தரவுகளே இவர்கள் குறித்த செய்திகளை அளிக்கின்றன. இவ்வகையில் அதியமான் நெடுமிடல் அஞ்சி, அதியமான் நெடுமான் அஞ்சி, பொருட் டெழினி ஆகிய மூன்று தலைவர்களை வேங்கடசாமி (1974: 51) குறிப்பிடுகிறார். இவர்கள் கடும் போர்களில் ஈடுபட்டு இறந்தனர் என இலக்கியத் தரவுகள் சுட்டுவதால் அதனடிப்படையில் அதியமான்களின் இனவழிப் பட்டியலை அமைக்கலாம். இதற்குரிய இலக்கியக் குறிப்புக்களை முதலில் காணலாம்.

(அ) நெடுமிடல் அஞ்சி, நார்முடிச் சேரலுடன் போரிட்டு இறந்தான் (பதி : 32).(ஆ) அதியமான் தலைவன் ஒருவன் (பெயர் குறிப்பிடப்படவில்லை), பசும்பூண் பாண்டியனின் ஏவலின் பொருட்டு வாகைப்பறந்தலையில் எதிரிகளுடன் போரிட்டு இறந்தது கண்டு கொங்கர் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர் (குறு : 393). (இ) நன்னனது பெரும்படையுடன் மோதிய அதிகன், அவனது படைத்தலைவன் மிஞிலியால் கொல்லப்பட்டான் (அகம் : 142). (ஈ) அதியமான் நெடுமான் அஞ்சியும் அவனது மகன் பொருட்டெழுனியும், தகடூரில் சேரருடன் போரிட்டு மடிந்தனர்.

நார்முடிச் சேரலுடன் போரிட்டு இறந்த நெடுமிடல் அஞ்சி, வாகைப்பறந்தலையில் உயிர் நீத்த அதிகன் மற்றும் மிஞிலியால் கொல்லப்பட்ட அதிகன் ஆகிய அதியமான்களிலிருந்து வேறுபட்டவன் என்பது தெளிவு. அதியமான் நெடுமான் அஞ்சியும் அவனது மகன் பொருட்டெழினியும் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய அதியமான் மரபின் கடைசி ஆட்சியாளர் என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி.

வாகைப்பறந்தலையில் உயிர்நீத்த அதிகன், மிஞிலியால் கொல்லப்பட்ட அதிகன் ஆகிய பெயர் குறிப்பிடப்படாத ஆட்சியாளர்கள் வெவ்வேறு நபர்கள் போலத் தோன்றினும், வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியைக் கருத்திற் கொண்டால் இருவரும் ஒரு நபரே எனத் தோன்றும்.

அதியமான்கள் பெரும்பாலும் சேரருடனேயே போர் புரிந்துள்ளனர். ஆனால், வாகைப்பறந்தலையில் எதிரி யார் எனக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், அதிகன் இறந்துபட்டமை, கொங்கர் ஆர்ப்பரிக்கக் காரணமாயிற்று. மேலும், வாகைப்பறந்தலையில் பசும்பூண் பாண்டியனுக்காக அதிகன் போரிட்டுள்ளான். பாண்டியன் படைகள் அதிகனின் ஆட்சிப்பகுதியில் நிலைபெற்றிருந்தன (அகம் : 62). பின்னர் இப் படைகள் கொங்கரை விரட்டியடித்தன (குறு : 253). கொங்கரைக் குடகடல் நோக்கி ஒட்டிய இப்போரில் பாண்டியப் படை களுக்கு ஆய் அண்டிரன் தலைமை ஏற்றிருக்கலாம் (புறம் : 130).

பாண்டியரும் அதியமான்களும் கொங்கில் இணைந்து செயல்பட, எதிர் அணியில் சேரரும் கொங்கரும் இடம் பெற்றனர். கொங்கர் குடகடல் நோக்கி ஓடினர் எனில் அவரின் நட்பரசான சேரரின் கை தாழ்ந்திருந்தது எனவும், சேரரின் எதிரியான நன்னனின் ஆதிக்கம் வலுவாக இருந்தது எனவும் கருதலாம். எனவே, வாகைப்பறந்தலைப் போர் அதிகனுக்கும் நன்னனுக்குமிடையே நிகழ்ந்ததெனக் கொண்டால் போரின் இறுதியில் நன்னனின் படைத்தலைவன் மிஞிலியால் அதிகன் கொல்லப்பட்டான் என ஊகிக்கலாம். தாங்கள் நேரடியாகப் போரில் பங்கேற்காவிடினும் தங்களது எதிரி மாய்ந்தான் எனும் செய்தி கேட்டுக் கொங்கர் ஆர்ப்பரித்தனர் எனக் கருதுவதில் தவறில்லை.

மேற்குறித்த செய்திகளின் அடிப்படையில், வரலாற்றுத் தொடக்கக் கால அதியமான் ஆட்சியாளர்களாக நால்வரை நாம் இனங் காணலாம். முதல் அதிகன், அதியமான் நெடுமிடல் அஞ்சி; இரண்டாம் அதிகன், பெயர் தெரியவில்லை; மூன்றாம் அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி ; நான்காம் அதிகன் பொருட்டெழினி. இவர்களுள் கடைசி ஆட்சியாளர்கள் இருவருக்கு மட்டுமே தந்தை-மகன் எனும் உறவுத் தொடர்பை அறிய முடிகிறது.

முன்னரே குறிப்பிட்டவாறு அதியமான்கள் தம் மூதாதை மரபினரான சேரர்களுடன் சுடும் ஆதிக்கப் போர்களில் ஈடுபட்டுள்ளனர். இப்போர்களில் சோழரும் பாண்டியரும் அதியமான்களோடு இணைந்து செயல்பட்டுள்ளனர். சேரர்- அதியமான் மோதல் மூன்றாம் அதிகனான நெடுமான் அஞ்சியின் காலத்தில் அதன் உச்சத்தை எட்டியது. கொங்கில் தம் ஆதிக்கம் விரிவடைவதற்குப் பெருந்தடையாகச் செயல்பட்ட அதியமான் களுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளைச் சேரர் மேற்கொள்ளவேண்டியதாயிற்று.

அதியமான் அணியிலிருந்த ஓரிக்கு எதிராக மலையமான் காரி போரிட்டு, ஓரியை வென்றான்; கொல்லி வாழ் மக்களின் கடும் எதிர்ப்பிற்கிடையே காரி இப்பகுதியில் நுழைந்து தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு, கொல்லி மலையைத் நட்பரசான சேரர்க்கு அளித்தான் (நற்: 320; அகம் : 209). கொல்லியைச் சேரர் அகப்படுத்திய பின்னர், கொல்லிப் பொருநன் என ஓரி கொண்டிருந்த சிறப்புப் பெயரைச் (புறம் : 152) சேரரும் சூட்டிக் கொண்டதோடு (பதி: 73: 11), கொல்லிப்புறை, கொல்லிரும் பொறை எனும் பெயர்களில் நாணயங்களையும் (படம் 8) வெளியிட்டு மகிழ்ந்தனர்.

தம் அணியின் வலுவான தலைவனான ஓரியின் இழப்பிற்குப் பழிவாங்கும் வகையில் காரியின் திருக்கோவலூரைத் தாக்கி அதியமான் அணியினர் வெற்றி பெற்றனர் (புறம் : 99). இதனை யடுத்துக் கொல்லியைச் சேரரிடமிருந்து மீட்பதற்கு அதியமான் அணியினர் முயன்றிருக்கலாம். கொல்லிக் கூற்றத்தின் நீர்கூரில் இரண்டு அணியினருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இப்போரில் சேரர், அதியமானையும் அவனுக்கு உதவிய சோழர்,பாண்டியர் ஆகிய பெருவேந்தரையும் வென்றனர். இவ்வெற்றி கொங்கில் சேரர் ஆதிக்கம் முழுமைபெறக் காரணமாயிற்று எனலாம்.

தோல்வியுற்ற அதியமான், பின்வாங்கித் தகடூரை அடைந் தான். பின்தொடர்ந்த சேரர் தகடூரை முற்றுகையிட்டனர். மூன்றாம் அதிகன் நெடுமான் அஞ்சி போரில் இறந்துபட அவனது மகன் எழினி, தன் படைத்தலைவன் பெரும்பாக்கனின் துணையோடு சேரரை எதிர்த்தான். சேரரின் யானைப் படை தகடூரின் கோட்டைக் கதவுகளை உடைத்தெறிய எதிரிப்படை கோட்டைக்குள் நுழைந்தது. இறுதியாக எழினியும் வீழ்ந்தான்.

அதியமான்களை முழுமையாக வென்ற பெருஞ்சேரல் இரும்பொறை ‘தகடூர் எறிந்த’ எனும் சிறப்புப் பெயரைப் பெற்றான். தகடூர்ப் போர் நிகழ்வுகளைக் கூறும் தகடூர் யாத்திரை எனும் நூலின் எஞ்சியுள்ள சில பாக்களும், இப்போர்க் காட்சி களை நேரில் கண்ணுற்ற அரிசில் கிழார், பொன்முடியார் ஆகிய புலவர்களின் பாக்களும் மேற்குறித்த செய்திகளை நமக்குப் புலப் படுத்துகின்றன.

‘சத்தியபுத்திரர் அதியமான்’ எனும் தொடர் காணப்படும் ஜம்பைக் கல்வெட்டுக் குறித்து இனிக் காண்போம். ‘சதிய புதோ அதியமான் நெடுமான் அஞ்சி ஈத்த பாழி’ எனும் இக்கல்வெட்டு இவ்விருக்கை (பாழி), சத்தியபுத்திரர் எனப்படும் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடை (ஈத்த) யாகும்’ என விளக்கம் பெறும். நெடுமான் அஞ்சி, காரியை வென்ற பிறகு இக்கல் வெட்டுப் பொறிக்கப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது.

இக்கல்வெட்டுச் செய்திகள் குறித்து ஆய்வாளர்கள் தம் ளின் ஆய்வுரைகளின் அடிக்குறிப்புக்களின் வாயிலாக ஐயங்களை எழுப்பியுள்ளனர்; இக்கல்வெட்டுக் காணப்பட்டுள்ள இடத்திற்கருகேயுள்ள குகையும் அங்குக் காணப்படும் சமண முனிவருக்கான இருக்கைகளும் இத்தகைய ஐயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக மகாதேவன் (நாகசாமி: 1995 : iமு) தனது மதிப்புரையில் கூறுகிறார். இருப்பினும் மைய அரசின் கல்வெட்டுத் துறை இயக்குநர் ரமேஷ் (1985 : 3மு) மொழியியல் மற்றும் எழுத்தமைதி அடிப்படையில் எழுப்பி யுள்ள ஐயங்களுக்கு மகாதேவனின் விளக்கம் தீர்வாக அமைய வில்லை என்றே கூறவேண்டும்.

அதியமான் எனும் சொல்லே சத்தியபுத்திரர் என மாறியது என மேலே கண்டோம். அவ்வாறாயின் குலப்பெயரைக் குறிப் பிடுவதற்கு சத்தியபுத்திரர், அதியமான் எனும் இரு சொற்கள் தேவையில்லையே! இவ்வாறு ஒரு வரலாற்றுப் புதிராகத் தோற்றமளிக்கும் ஜம்பைக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அதியமான்களே சத்தியபுத்திரர் எனச் சேஷஐயரும் பர்ரோவும் நிறுவியுள்ளனர். அதனையே நாமும் ஏற்றுக் கொள்வோம்.

கொங்கு நாடு – வீ. மாணிக்கம்

படம்: வேலுதரன்