பாம்பன் கலங்கரை விளக்கம்

பாம்பன் கலங்கரை விளக்கம் :

சோழ மண்டலக்கரையெனப் பன்னெடுங்காலமாக வழங்கப்பெற்றுவரும் கிழக்கு கடற்கரை, இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. மன்னார் வளைகுடா’ எனவும் ‘பாக் ஜலசந்தி’ எனவும் புவியியலார் குறிப்பிடுகின்ற இந்தக் கடற்பகுதி கடந்த காலங்களில், பாண்டிய நாட்டின் நுழைபெரும் வாயிலாக அமைந்து வெளிநாட்டு உள்நாட்டு வாணிப பெருக்கிற்கு உதவியது.

இந்தக் கடற்கரையில் எழுந்து சிறந்து நிலைத்து மறைந்த பட்டினங்கள் பல . கோட்டைப்பட்டினம், சுந்தரபாண்டிய பட்டினம், பாசிப்பட்டினம், முத்து ராமலிங்க பட்டினம் அம்மா பட்டினம், தொண்டிப் பட்டினம், மாவூபரன்பட்டினம், சீவல்லப பட்டினம், உலகமாதேவி பட்டினம், முடிவீரன் பட்டினம், மரைக்காயர்பட்டினம், பவித்திரமாணிக்கப் பட்டினம், நினைத்தது முடித்தான் பட்டினம் என்ற கடல்துறைகள் காலத்தின் அழிவுக்கரங்களுக்கு ஆற்றாது சீர்குலைந்துவிட்டன. இப்பட்டினங்களின் அங்கமாக கலங்கரை விளக்கங்கள் நிர்மானிக்கப்பட்டதற்கான செய்திகள் இல்லை ஆனால் ஆங்கிலேயர் ஆற்காட்டு நவாபிடமிருந்து இந்தப் பகுதியை 1792 இல் தானம் பெற்றபிறகு, தொண்டியிலும் பாம்பனிலும் கலங்கரை விளக்கங்களைக் கட்டுவித்தனர். அந்நாளில் இவை டச்சு, ஆங்கில வர்த்தகர்களின் முக்கிய வர்த்தகத் தொடர்பு நிலையங்களாகக் கருதப்பட்டு வந்தன. எனினும் தவிர்க்க இயலாத காரணங்களினால் தொண்டியில் இயங்கிய கலங்கரை விளக்கம் தொடர்ந்து செயல்படவில்லை அதேவேளை பாம்பனில் உள்ளது இன்றளவும் செம்மையாகச் செயல்பட்டுவருகிறது.

பாம்பன் தீவின் வடமேற்கு மூலையில் சிதைந்து போன சேதுபதிகளது கோட்டைக்கு அண்மையில் இந்தக் கலங்கரை விளக்கம் 1846இல் அமைக்கப்பட்டது. கடல் மட்டத்திற்கு மேல் தொன்னூற்று நான்கு அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள இம் மண்டபம், ஆகாயத்தில் அறுபத்து ஏழு அடி உயரத்தில் நிமிர்ந்து நின்று கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. அதன் உச்சியிலுள்ள ஒளிவிளக்கு நான்கு திசைகளிலும் ஓராயிரம் சுடர் (வத்தி) பிரகாசத்தை அள்ளி தெளிக்கும் ஆற்றல் வாய்ந்தது. பதினைந்து மைல் தொலைவிற்குள் நடமாடும் மரக்கலங்கள் இதன் ஒளிவீச்சின் உதவியினால் தங்களது பயணத் திசையையும்,இலக்கையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

பரமக்குடி பாளையம் :

விஜய நகரப் பேரரசில் மிகுந்த அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்த ‘தும்பிச்சிகள்’ கீழக்கரை மாரியூர், காரையூர் கோயில் திருப்பணிகளைத் தொடர்ந்ததற்கான கல்வெட்டுக்கள் உள்ளன. ஆனால் நாளடைவில் நாயக்க அரசியலில் எழுந்த வெறுப்புக் காரணமாக பரமக்குடி தும்பிச்சி நாயக்கர் மதுரைப் பிரதிநிதியுடன் பகைமை கொண்டார். சிறந்த போர் வீரரும் அரசியல் அறிஞருமான தும்பிச்சியை ஒழிப்பதற்காக 1564இல் மதுரைப் படையொன்று பரமக்குடியை நோக்கிப் புறப்பட்டது.அப்படை பரமக்குடி கோட்டையை அடைவதற்கு முன்னதாகவே, அதனை வழிமறித்து போரிட்டு அழித்தார் தும்பிச்சி நாயக்கர். மதுரைத்தளபதி பெத்தகேசவப்பா போரில் கொல்லப்பட்டார். மதுரை அரசுக்கு ஏற்பட்ட இந்தக் களங்கத்தைத் துடைப்பதற்கு மற்றுமொரு பெரும்படை பரமக்குடிக்கு அனுப்பப்பட்டது. பரமக்குடிக்குத் தெற்கே நடைபெற்ற போரில் தும்பிச்சி நாயக்கர் தோல்வியுற்றார். பின்னர் சிரச்சேதம் செய்யப்பட்டார். பரமக்குடி பாளையத்தின் தனித்தன்மையும் கலைந்தது.

ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டு காலம், தன்னரசு போலத் திகழ்ந்த தும்பிச்சி நாயக்கர்களது சிறப்பான ஆட்சியின்பொழுது மதுரையில் குடியேறிய பட்டுநூல்காரர்களின் சில குடும்பத்தினர் பரமக்குடியிலும் குடியேறினர். சேதுநாட்டின் ஒரு பகுதியான பரமக்குடியிலும் பிறகு இராமநாதபுரத்திலும் இந்த மக்கள்நிலை கொண்டதால் அவர்கள் தங்களது பெயர்களுடன் கொடுவா, சேனாதி, கும்பா, கஸ்தூரி, கெட்டல்,தொகுலுவா, கிதுவாஏழை, ஜவுளி, துடுகுச்சி, சின்னக்காவடி, அம்பலம், நாட்டாண்மை, சிலந்தி, நீலம், தஸ்மா, வானால்,பழிஞ்சி, சுத்து, தெள்ளு கொண்டா, சலகவா, உமாபதி, வைத்தியம், ராணி லோகந்தா,ராமியா, அன்னா, புளியபடி, கந்தாள்ளு குட்டுவா. மல்லி என்ற சொற்களை இணைத்துக் கொண்டதுபோல் சேதுபதி என்ற விகுதியையும் இவர்கள் சேர்த்து வழங்கினர். பட்டுநூல் கலையில் வல்ல இந்தப் பாட்டாளிகளைப் பற்றிய சில விபரங்கள் கிழக்கு இந்தியக் கம்பெனியாரது பதினெட்டாவது நூற்றாண்டு ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

1793இல் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி பரமக்குடி ‘பட்டுநூல்கார் களிடம் (தற்போது சௌராஷ்டிரா சமூகத்தினர் என வழங்கப்படுவர்களிடம்) அறுநூறு தறிகள் இருந்திருக்கின்றன. மற்றும் கைக்கோளர்களும் சோனக லெப்பைகளும் எழுபது தறிகள் போட்டிருந்தாலும் ‘பட்டுநூல்கார்கள்’ மட்டுமே சிறப்பான துணிவகைகளை உற்பத்தி செய்தனர். பெரும்பாலும் அன்றைய காலகட்டத்தில் ‘சாலாம்பூர்’ என வழங்கப்பட்ட சாதாரண ‘லாங்க் கிளாத்’, நீளமான துணிகளாகவும், வேட்டிகளாகவும் சேலைகளாகவும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டன. பிற நெசவாளர்கள் இத்தகைய முறையில் துணி நெய்து கொண்டிருந்தபோது, பரமக்குடி பட்டுநூல்காரர்கள், ஆங்கிலேயர், பிரஞ்சுக்கார், டச்சுக்காரர் போன்ற மேனாட்டார் விரும்பி வாங்கக்கூடிய மஸ்லின் (Muslin) துர்பு, (Turbu) பூபேலா, (Bubelas) தொரியாஸ் (Dorias) காம்பிரிக், (Cambric) விரிப்புகள், கைக்குட்டைகள் மற்றும் வெளிநாட்டார் விரும்பி அணியும் அனைத்து வகைத் துணிகளையும் உற்பத்தி செய்து கொடுத்தார்கள்.

அவர்களது தறியொன்றுக்கு நான்கு பணமும், துணிகளை வாங்குகிற இடைத்தரகரும், வியாபாரியும் 1/8 பணமும் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குத் தீர்வையாகச் செலுத்தி வந்தனர். அத்துடன் பரமக்குடியில் உள்ள தறிகளில் 132 தறிகள் சேது மன்னர்களது ‘ஆர்டர்களை’ நிறைவேற்றும் ஒப்பந்தத் தறிகளாக இருந்தன. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட துணிகளைப் பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, கல்கத்தா போன்ற இடங்களுக்குச் சேதுபதி மன்னர்கள் அனுப்பிவைத்து நல்ல ஊதியம் பெற்றுவந்ததை ஆங்கிலகிழகிந்தியக் கம்பெனியார் மிகுந்த பொறாமையுடன் கவனித்து வந்ததாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த இருநூறு ஆண்டுகளில், தமிழகத்தில் கைத்தறி துணி உற்பத்தியில் சிறந்து விளங்கிவரும் குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் ஒன்றாக பரமக்குடி திகழ்ந்து வருகிறது. இங்கு நிலையாகத் தங்கிவிட்ட பட்டுநூல்காரர்களது உழைப்பும் உத்வேகமுந்தான் இவற்றிற்குக் காரணம் என்றால் மிகையில்லை.

பரமக்குடியில் தற்போது 7300 தறிகள் உள்ளன. அவற்றில் 2000 பனாரஸ் தறிகளும், 150 அசல் பட்டுத் தறிகளும் போக எஞ்சியவை பருத்தி மற்றும் பம்பர் ரகத்தறிகளாகும். பட்டுத்தறிக்கென்றே தனியாக ஒரு சொஸைட்டி உள்ளது. சொந்தத்தில் தறி இல்லாதவர்களுக்கென ‘இன்டஸ்டிரியல் சொஸைட்டி’ ஒன்றை அரசு அமைத்துக்கொடுத்துள்ளது. ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி அளவுக்குத் துணி உற்பத்தியாவதும் கூலியாக மட்டுமே இரண்டுகோடி செலவிடப்படுவதும் பரமக்குடியில் இத்தொழில் வளர்ச்சியின் மேன்மையைக் காட்டுவதாக உள்ளது.

இராமநாதபுரம் வரலாறு :எஸ்.எம். கமால்
₹200

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.