ஆசீவகர்கள் – பெயர்க் காரணம்

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம்

ஆசீவகர்கள் எனத் தமிழ் நூல்களில் அழைக்கப்படும் இவர்கள் ‘ஆஜீவக‘ (Ajivika) என வடமொழியில் குறிப்பிடப்படுகின்றனர். ஆஜீவ (Ajiva) என்ற வடமொழிச் சொல், ஓர் வாழ்க்கை நெறிமுறை (mode of life), தொழில், இல்லறத்தோராயினும், துறவறத்தோராயினும் சேர்ந்து வாழும் ஒரு குழுவினர் என்ற பொருள்பட நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆசீவகர்கள் ஓர் குறிப்பிட்ட வாழ்க்கை நெறிமுறையினைத் தம் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தமையால் இப்பெயரை இவர்கள் பெற்றிருக்கலாம்.

அதாவது, இவர்கள் துறவினை வீடுபேறு கருதி மேற்கொள்ள வில்லை.வாழ்வினை ஓட்டுவதற்காகத் துறவு எனும் நெறியைத் துணை கொண்டுள்ளார்கள் எனச் சமூகத்தில் இருந்த ஏனையோர் எண்ணினர். துறவு நெறியைக் கடைப்பிடித்துக் கொண்டே இல்லற இன்பத்தையும் நுகர்ந்தனர் என இவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு ஏனையோரால் எள்ளி நகையாடப்பட்டனர். இவ்விதமான இவர்களது வாழ்க்கை நெறிமுறையினைப் பார்த்த ஏனைய மக்கள் இவர்களுக்கு இட்ட பெயரே ‘ஆசீவகர்’ என ஆய்வாளர்களிடையே நம்பப்படுகின்றது.

ஆசீவகர் என்ற பெயருடன் தேராசியர் (Terāsiya – Trairasika) என்ற பெயரும் இவர்களுக்குண்டு. தேராசியர்கள் என்ற சொல் ‘திரைராசிகர்’ (Trairāsika) என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். உறுதி, மறுப்பு, அலட்சியம் (assertion, negation, indifference) என்ற மூன்றையும் இவர்கள் வாழ்வின் பண்புகளாக அமைத்துக்கொண்டமையால் ‘திரைராசிகர்’ (trai- மூன்று ) என அழைக்கப் பட்டனர். தமிழிலுள்ள தேவாரங்களில், குறிப்பாகத் திருஞான சம்பந்தர் பாடல்களில் பிற சமயத்தோரைக் கண்டித்துக் கூறும் வரிகளில் தேரர்கள் என்ற சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. இச் சொல் ஆசீவகர்களைக் குறிப்பதாகலாம். இது பற்றி ஓரளவு விரிவாகப் பின்னர் மூன்றாவது இயலில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

ஆசீவகர்களின் தமிழ்நாட்டு வருகை

ஆசீவகர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், இவர்களால் எங்கும் குறித்து வைக்கப்படவில்லை. இவர்களைப் பற்றி இன்று நாம் அறிந்து கொள்வதெல்லாம், பிற சமயத்தினர் இவர்களைக் கண்டித்துக் கூறும் பகுதிகள் வாயிலாகவே தெரிய வருகின்றன. இவர்கள் தமிழ் நாட்டிற்கு முதலில் எப்பொழுது வந்தனர் என்பது பற்றித் தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இவர்கள் மௌரியர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைத் தேவநம்பியதீசனின் பாட்டனாரான பந்துகாபயன் ‘ஆசீவகர்களுக்கு உறைவிடம்’ (ājivikānām geham) ஒன்றை அநுராதபுரத்தில் அமைத்திருந்தான் என்று மகாவம்சம் கூறுவதிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.

அசோகன் காலத்தில் (கி.மு. 270) ஆசீவகர்கள் இந்திய நாட்டில் செல்வாக்குடையவராக விளங்கியதை அவன் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. அசோகனின் தந்தையான பிந்துசாரன் காலத்திலேயே ஆசீவகர்கள் அரசனின் ஆதரவு பெற்றிருந்தனர். ஆசீவக சங்கங்கள் பௌத்தர்கள், சமணர்கள்போல் ஆங்காங்கு வேரூன்றியிருந்தனர்.

அசோகன் காலத்தில், கயாவிற்குப் பதினைந்து மைல் தொலைவிலுள்ள பாராபர் மலையில் (Barabar Hill) ஆசீவகர்களுக்கு நன்கொடை அளித்த செய்தி நான்கு குகைகளில் குறிக்கப்பட்டுள்ளது. வடநாட்டில் செல்வாக்குற்றிருந்த ஆசீவகர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தனர் என்பது பற்றித் திட்டமாகக் கூற முடியவில்லை. சந்திர குப்த மன்னன் உட்பட பத்திரபாகு முனி தலைமையில் சமணர்கள், சிரவண பெல்கோலாவிற்கு வந்தது போலவும், அசோக தூதர்கள் பெருமளவில் தமிழ்நாட்டிற்கு வந்தது போன்றும், ஆசீவகத் துறவிகள் தமிழ்நாட்டிற்குக் குழுவாக வந்தமை பற்றி எங்கும் அறிய முடியவில்லை. ஆனால், இந்திய இலக்கியங்கள் கூறும் செய்திகளின்படி ஆசீவகர்கள் வரலாற்றை நோக்கின் அவர்கள் வடநாட்டைவிடத் தென்னாட்டில் மிக்க செல்வாக்குடன் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது தெரிய வருகின்றது.
(நூலிலிருந்து)

தமிழகத்தில் ஆசீவகர்கள் – முனைவர் ர .விஜயலட்சுமி


வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/tamizhagaththil-aaseevagargal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers