சக்கிலியர் எனும் தொழில் வணிகக் குழு

சென்னையில் உருவான க்ரோம் தோல் நிறுவனம், தென்னிந்தியாவின் முதல் தோல் தொழிற்சாலை. அந்த இடம் இன்று குரோம்பேட்டை என அழைக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களின் குறிப்புகளின்படி, 1857-ல் சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தோல் பொருட்கள், உலகிலேயே மிக உயர்ந்த தரமானவை. இவற்றை உருவாக்கியவர்கள் சக்கிலியர்கள். காலனியக் காலம் தொடங்கும் வரை, தொலை தூரங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஆட்டுத்தோலால் ஆன பைகளைத் தைத்ததும் இவர்கள்தான்.

தென் இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டு வரை, தோல் பைகள் மற்றும் பிற தோல் பொருட்களைத் தயாரிப்பதில் இவர்களே முன்னணியில் இருந்தனர். இதனால் பலர் வணிகர்களாகவும், பெரும் பணக்காரர்களாகவும் உயர்ந்தனர்.

வேலூர் கோட்டை மற்றும் சக்கிலியர் கோட்டை

வேலூர் கோட்டை மூன்று செங்குத்தான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் இயற்கையாகவே உறுதியானவை. இவற்றுள், ஏறுவதற்கு கடினமான பெரிய பாறைகள் உள்ளன. ஒவ்வொரு மலையும், துப்பாக்கிகளுக்கான துளைகளுடன் உறுதியான கல் சுவர்களால் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மலைகளும், 60 அடி தடிமனுள்ள வலுவான கல் அரணாலும், 80 அடி அகலமுள்ள வெளிப் பள்ளத்தினாலும் இணைக்கப்பட்டுள்ளன.

வேலூர் கோட்டையில் மூன்று முக்கிய மலைகள் உள்ளன:

ராஜகிரி (பெரிய மலை): இந்த மூன்று மலைகளிலேயே மிகவும் உயரமானதும், கோட்டையின் முக்கியப் பகுதியாகவும் இது உள்ளது.

கிருஷ்ணகிரி (ஆங்கில மலை): வடக்குப் பகுதியில் உள்ள இந்த மலையைப் பற்றி வரலாற்றாசிரியர் ராபர்ட் ஓர்ம் தனது குறிப்புகளில் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.

சந்திராயன் துர்கம் (செயின்ட் ஜார்ஜ் மலை): தெற்குப் பகுதியில் உள்ள இந்த மலை, ராஜகிரியுடன் ஒரு தாழ்வான, பாறைகள் நிறைந்த முகடு வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

சக்கிலியர் கோட்டை

நான்காவது மலையான சக்கிலி துர்க் (18-ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் பீம்சென் இதை சாமர் திக்ரி என்றும் குறிப்பிடுகிறார்) சிறியதும், முக்கியத்துவம் குறைந்ததுமாகும். ஆனால், இது நன்கு பலப்படுத்தப்பட்ட உச்சியைக் கொண்டுள்ளது.

“இங்கு ஆட்சி செய்த ராஜாவோடே சக்கிலி சர்தார்‌ கூடயிருந்தான்‌. அவன்‌ சொந்தமாகக் சக்கிலி துர்க்கம்‌ கட்டினான்‌. அதன் பேரில்‌ சின்ன ஏரிபோல்‌ குளம்‌ அதில்‌ மதகுவைக்து, கழனி பண்ணிப்பயிரிடுகிறது  அந்து மலை பேரில்‌ புஞ்சைப்‌ பயிருமாகிறது. அப்படியிருக்க, சக்கிலி துர்க்கம் கீழே பட்டாபிராமன்‌ கோவில்‌ கட்டி, ரெண்டு காழி வழிக்குக்‌ சதுரமாய பெரிய பேட்டை கட்டி, அதற்கும்‌ கிழக்கே ஜெயம்‌ கொண்டான்‌ பேட்டை இது செண்டும்‌ இடங்கைப்‌ பேட்டையாக்‌ கட்டினார்கள்‌” என்கிறது கர்நாடக ராஜாக்கள் சரித்திரம் நூல்.

இந்த மலை, ஒரு சக்கிலியர் தலைவர் தனது படைகளுக்குத் தேவையான தோல்பொருட்களைச் செய்ய அமைத்த தொழிற்சாலை அமைந்துள்ள கோட்டை என்றும், சக்கிலியப் படைவீரர்கள் தங்கிய கோட்டை என்றும் கூறப்படுகிறது.

தோல் வணிகம்

19-ஆம் நூற்றாண்டுவரை, தென்னிந்தியாவில் எல்லா விதமான தோல்பைகளையும், பொருட்களையும் தயாரிக்கும் வல்லமை சக்கிலியர்களுக்கு இருந்தது. இது அவர்களுக்கு பெரிய வருவாயைக் கொடுத்தது. பலர் வணிகர்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் உயர்ந்தார்கள்.

பின்னர், தொழில் புரட்சியின் காரணமாக தொழிற்சாலைகளில் உருவான தோல்பொருள்கள் மற்றும் ரப்பர் உற்பத்தி அதிகரித்ததால், சக்கிலியர்களின் வாழ்வு அடியோடு பாதிக்கப்பட்டது. இன்று ரப்பர், நெகிழி (plastic) எந்த இடங்களில் எல்லாம் பயன்படுகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் முன்பு தோலால் செய்யப்பட்ட பொருட்கள்தான் இருந்தன.

“தமிழ்க் கல்வெட்டுகள் புலப்படுகின்ற வணிகக் குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள்” என்ற நூலில், சக்கிலியர்களில் தோல் வணிகம் செய்தவர்கள் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில், இறைவனை சிறப்பு தரிசனம் செய்ய அவர்களுக்கு உரிமை இருந்திருக்கிறது.

பறம்பன் மற்றும் சக்கிலி வணிகர்கள்

பறம்பன் என்பவர்கள் தோல் தொழில் செய்த வணிகர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களுக்கு காரோடன் என்ற பெயரும் உண்டு. பறம்பன்கள் உடும்பு, நாய், ஆடு, மாடு, மான், புலி போன்றவற்றின் தோல்களைப் பதப்படுத்தி, பலவிதமான பயன்பாட்டுப் பொருள்களை உற்பத்தி செய்துள்ளனர்.

போர்வீரர்களுக்கான கைச்சரடு (கையுறை), மெய்புதை அரண் (உடற்கவசம்) போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்துள்ளார்கள். அதோடு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கைப்பை, இடுப்புவார், காலணி, இசைக்கருவிகளுக்குத் தேவையான பாகங்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்து விற்றுள்ளனர். இதனால், தோல் தொழில் அக்காலத்தில் சிறப்பாக நடந்துள்ளது. இவர்களில் சக்கிலி என்ற தோல் தொழில் செய்த சாதியினர் பிற்காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

‘சக்கிலி’ என்ற தொழில் சாதிப்பெயர், பிற்காலத்தில் தொழில் சார்ந்த சாதிப்பெயராக மாறியுள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழரின் 24-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1202) கல்வெட்டில், சக்கிலியர் என்ற சாதிப்பெயர் இடம் பெற்றுள்ளது.

சோழர் காலத்தில் சக்கிலியர் சிறப்பு வழிபாடு 

திருவண்ணாமலையுடையார் திருக்கோயிலில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில்  சக்கிலி சாதியினர் இறைவனுக்கு தோலால் திருவடி (காலணி) செய்து கொடுத்துள்ளார்கள். இதற்காக, இறைவனுக்கு திருமஞ்சணம் செய்யும் நேரத்தில் இவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, அக்கால சமூக அமைப்பில் தொழிலுக்கு அளிக்கப்பட்ட மதிப்பை வெளிப்படுத்துகிறது.

சக்கிலியர்கள், தாங்கள் தோலால் செய்து அளித்த திருவடிநிலைக்கு (காலணிக்கு) மேல் தங்கக் காப்பு அணிவிப்பதற்காக, பத்து பொற்காசுகளுக்கு ஆறு கழஞ்சு எடை கொண்ட செம்பொன்னை வழங்கினர். சக்கிலியர்கள் இந்தத் தொண்டைச் செய்ததற்காக, அவர்களுக்கு திருமஞ்சனம் நடக்கும்போது இறைவனைத் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் அக்காலத்தில் ஒரு தொழிலுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு வெளிப்படுகிறது.

இத்தகையத் தொழில்களைச் செய்தவர்களைக் கொண்டு, அவர்களின் பொற்காசு அளித்த வணிகச் சாதிகளை அடையாளம் காணமுடிகிறது. இவற்றைக் காணும்போது, இவர்களின் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்துவந்த தோல் குலத்தொழில்களும், தோல் பொருட்களின் வணிகமும் எவ்வளவு மதிக்கப்பட்டிருந்தன என்பதை நாம் உணர முடிகிறது.

கல்வெட்டின் பொருள் மற்றும் விளக்கம்

இந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழரின் 24 ஆம் ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1202) பொறிக்கப்பட்டுள்ளது.

அருங்குன்றங்கிழையான் நாற்பத்தெண்ணாயிரப்பிள்ளை மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் திருவண்ணாமலையுடைய நாயனாருக்குச் செய்த அறச்செயல்களைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

அவை:

  1. உடையார் திருவண்ணாமலையுடைய நாயனாருக்கு தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்ய, 32 பசுக்களை அளித்தனர். மேலும் ஐந்து தலைகள் கொண்ட மணி விளக்கு ஒன்றையும் கோயிலுக்கு வழங்கினர்.
  2. சக்கிலியர்கள், தாங்கள் தோலால் செய்து அளித்த திருவடிநிலைக்கு (காலணிக்கு) மேல் தங்கக் காப்பு அணிவிப்பதற்காக, பத்து பொற்காசுகளுக்கு ஆறு கழஞ்சு எடை கொண்ட செம்பொன்னை வழங்கினர்.
  3. சக்கிலியர்கள் இந்தத் தொண்டைச் செய்ததற்காக, அவர்களுக்கு திருமஞ்சனம் நடக்கும்போது இறைவனைத் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் அக்காலத்தில் ஒரு தொழிலுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு வெளிப்படுகிறது.
  4. நாச்சியார் (அம்மன்) திருக்கண் (திருஷ்டி) படாதிருக்க, வேர்வாளி என்ற அணிகலனை அணிவிப்பதற்காக இரண்டு கழஞ்சு பொன்னைக் கொடுத்தனர்.
  5. சுந்தரப்பெருமானையும், நாச்சிமாரையும் எழுந்தருளச் செய்து, மங்கையர்க்கரசி மண்டபத்தைத் கல்லால் கட்டினர்.
  6. சூரம்பிகெணியில் திருமஞ்சனம் செய்யப் பயன்படுத்தப்படும் கிணற்றைக் கல்லால் கட்டினர்.
  7. பிரம்மதேசத்தில் 20 தென்னங்கன்றுகளை நட்டனர்.
  8. இருபத்தி நான்காம் ஆட்சியாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது, ஒரு காசுக்கு ஒரு உழக்கு அரிசி விற்றதால் கிடைத்த பணம், பொருள்கள், மற்றும் நெல் ஆகியவற்றை ஒன்று திரட்டி, திருநதியைத் தூர்வாரி (கட்டி), நீர் பாசன வசதி செய்தனர்.
  9. காடுகளை அழித்து, நிலத்தைச் சமன் செய்து, கழனி (விவசாய நிலம்) உருவாக்கினர். அந்த ஊருக்குத் திருவண்ணாமலை பெருமாள் நல்லூர் எனப் பெயரிட்டனர்.
  10. எரிப்பட்டி அழகியசோழன் நல்லூர் மற்றும் திருமெனிபிரியாத நல்லூர் ஆகிய ஊர்களுக்கு, மங்கையர்க்கரசி மற்றும் நாற்பத்தெண்ணாயிரப்பிள்ளை ஆகியோர் நிலங்களை வழங்கினர். இந்த நிலங்களை கோயிலின் தானத்தார் (நிர்வாகிகள்) பெற்றுக் கொண்டனர்.

கடைசியாக, இந்த அறச்செயலை அறிந்து பூசிக்க நம்பியார் (கோயிலின் தலைமை அர்ச்சகர்) உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.