திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை :

தென்னிந்தியக் கோயில்கள் திராவிட வகைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய கோயில்களை அமைப்பது எங்ஙனம் என்பதை மயன் என்பவரால் எழுதப்பட்ட மயமதம் எனும் நூல் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் சங்க காலம் தொட்டே மண்ணினாலும் மரத்தாலும், செங்கற்களாலும் கோயில் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில்கள் எத்தகைய இலக்கண விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டன என அறிய இயல வில்லை. தமிழகத்தில் பல்லவர், பாண்டியர்களது ஆட்சி நடைபெற்ற காலத்தில் கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதலே கல்லைக் குடைந்து கோயில்கள் உருவாக்கும் முறை பின்பற்றப் பட்டது. பல்லவர்களுக்கும் மேலைச் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த போரின் காரணமாக வாதாபியில் இருந்து குடைவரை அமைக்கும் மரபு தமிழகத்திற்கு வந்ததாகக் கூறுவர் அறிஞர்.

குடைவரை மரபு தமிழகத்தில் கி.பி.7-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இக் காலத்தில் வெட்டப்பட்ட குடைவரைக் கோயில்களுக்கு என இலக்கண விதிமுறைகள் இருந்ததாய் அறிய இயல வில்லை. பின்னர் வகுக்கப்பட்ட ஆகமங்களில் இறைவனுக்காகக் கட்டப்படும் கோயில்கள் இன்னின்ன தெய்வங்களுக்கு இன்னின திசைகளை நோக்கி அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட செய்திகள் குடைவரைகளில் பின்பற்றப் பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் குடைவரைகள் மலைகள் எப்பக்கமாக அமைந்திருக்கின்றனவோ அதைப் பொருத்தே குடைவரைகளின் திசைகள் அமைந்தன என்றாலும் குடைவரைகள் எத்திசை நோக்கி அமைந்திருப்பினும்அக்குடைவரையின் கருவறை மட்டுமாவது கிழக்கு நோக்கி அமைக்க வேண்டும் எனும் முயற்சி பல குடைவரைக் கோயில்களில் பின்பற்றப் பட்டிருப்பதைக் காணலாம். எனவே குடைவரைகளின் காலத்திலேயே ஆகமங்கள் மற்றும் மயமதம் முதலான நூல்கள் இருந்துள்ளன என யூகிக்க முடிகிறது. மேலும் பல்லவ மன்னன் இராஜசிம்மனுக்கு (கி.பி. 686- 705) ஆகமப் பிரியன்’ என்றொரு பட்டப்பெயர் இருந்துள்ளதினின்றும் மதுரைக்கருகில் உள்ள ஒத்தக்கடை யானைமலை நரசிங்கப் பெருமாள் கோயிலில் (கி.பி.770) ஜடில பராந்தகன் காலத்தில் குடைவரை குடையப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்ற செய்தியை கல்வெட்டில் ‘நீர் தெளித்தான்’ என்று குறிப்பிட்டுள்ளபடியால் அக்காலத்தில் கோயில் இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை உறுதி செய்யலாம்.

கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கும் கட்டுமானக் கோயில்களை எவ்வாறு கட்டவேண்டும், அதன் உறுப்புக்கள் எந்தெந்த அளவுகளில் இடம்பெற வேண்டும். கோயிற் கட்டுமான அமைப்பில் இடம்பெறும் உறுப்புக்களின் பெயர்கள் என்ன போன்ற செய்திகளை மயமதம் மற்றும் ஆகமங்கள் எடுத்துரைக்கின்றன.

கோயில்கள் மனித உடலோடு ஒப்பிடப்பட்டே அமைக்கப் படுகிறது. கோயிலை மனிதனின் கிடந்த கோலத்துடனும், நின்ற கோலத்துடனும் ஒப்பிடுவர். திருமூலர்கூட கோயிலைப் பற்றிக் கூறுமிடத்து,

“உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்”
என்று கூறியுள்ளார். எனவே மனிதனின் உடல் உறுப்புக் களோடு கோயில் கட்டுமான உறுப்புக்களை ஒப்பிடலாம். கோயிலின் மிக முக்கியமான பகுதி இறைவனது திருவுருவம் அமைக்கப்படும் கருவறையாகும். இக் கருவறையின் அடித்தளம் முதல் அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கலசம் வரையிலான அமைப்பை ‘விமானம்’ என்பர். அதே சமயம் கோயிலின் நுழைவுவாயிலில் இடம்பெறுவதே ‘கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

விமான உறுப்புகள் :

1. அதிட்டானம்- பாதம்
2. பித்தி- கால்
3. பிரஸ்தரம்-தோள்
4. கண்டம்- கழுத்து
5. சிகரம்-தலை
6. ஸ்தூபி-மகுடம்

கோயில் அமைப்பும் கிடந்த கோலமும் :

1.கருவறை
2.முகமண்டபம்
3.மகாமண்டபம்
4.முன்மண்டபம்
5.வாகன மண்டபம்
6.நூற்றுக்கால் மண்டபம்
7.ஆயிரக்கால் மண்டபம்
8.கல்யாண மண்டபம்
9.வசந்தமண்டபம்
10.பள்ளியறை
11.மடப்பள்ளி
12.பிரகாரங்கள்
13.கொடிமரம் (துவஜஸ்தம்பம்)
14.பலிபீடம்
15.தெப்பக்குளம்

கோபுரங்கள் :

கோபுரம் என்பது கோயில் உறுப்புக்களில் மிக முக்கிய மானதும் அழகுடையதும் ஆகும். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பது பெரியோர் வாக்கு. இக் கோபுரம் சுற்றுப்புறச் சுவரில் ஊடறுத்துச் செல்லும் நுழைவுவாயிலின் மேல் கட்டப்படுவதாகும்

தமிழகத்தில் பல்லவரது துவக்க்காலக் கோயில்களான குடைவரைகள், பஞ்ச பாண்டவ ரதங்கள், மாமல்லை கடற்கரைக் கோயில் முதலான இடங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட வில்லை. இராஜசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில்தான் முதன் முதலாகச் சிறுகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லவர்களும் சோழர்களும் விமானத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். எனவே இவர்களது காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் மிக உயர்ந்த விமானங்களுடன் கூடிய கோயில்கள் எழுந்தன. உதாரணமாக காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், சோழரது தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், தஞ்சை பெரிய கோயில், திருப்புவனம் கம்பகேசுவரர் கோயில் முதலியவற்றைக் கூறலாம். இக்கோயில்களில் எல்லாம் கோபுரங்கள் மிகச் சிறிய அளவினதாகவே அமைக்கப்பட்டுள்ளன.

பிற்காலப் பாண்டியர் காலத்தில் குறிப்பாகச் சுந்தர பாண்டியன்தான் உயர்ந்த கோபுரங்களைக் கட்டத்துவங்கி னான். இவன் கட்டிய கோபுரங்களுள் உயர்ந்த கோபுரங்களாக இன்றும் நிலைத்திருப்பவை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சுவாமி சன்னதிக்குக் கிழக்கே உள்ள சுந்தர பாண்டியன் கோபுரமும், சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள கோபுரமும் ஆகும்.

விசயநகர நாயக்கர் காலத்தில் விமானங்களைச் சிறியனவாகவும், கோபுரங்களைப் பெரியனவாகவும் அமைத்தனர். கிருஷ்ணதேவராயர் எனும் நாயக்க மன்னர் தனது ஆட்சிக் காலத்தில்தான் மிக உயர்ந்த கோபுரங்களை அமைக்கத் துவங்கினார். இவர் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் முதலிய இடங்களில் கோபுரங்களை 7, 9, 11 நிலைகளைக் கொண்டதாக அமைத்தார். பிற்காலத்தில் உயர்ந்த கோபுரங்களை எல்லாம் மக்கள் ‘இராயகோபுரம்’ என்று அழைத்ததற்கு இவரே காரணம்.

திருமலை நாயக்கரது ஆட்சிக் காலத்தில் பல உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப் பட்டன. இன்னும் பல கோயில்களில் இவர் துவங்கிய கோபுரப் பணிகள் ஏதோ ஒரு காரணத்தால் தடைபட்டு, துவங்கிய நிலையிலேயே மொட்டைக் கோபுரங் களாகக் காணப்படுகின்றன. நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில்களில் கோயிலின் நான்கு புறமும் கோபுரங்களை அமைப்பது சிறப்பாகும். கோபுரத்தின் கீழ்ப்பகுதி கருங் கல்லினாலும் பிற பகுதிகள் செங்கல், சுண்ணாம்பாலும் கட்டப் பட்டிருக்கும். நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோபுரங்களில் ஆயிரக் கணக்கான சுதை சிற்ப வேலைப் பாடுகள் காணப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெற்குக் கோபுரம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். தமிழகத்திலேயே பழமையான மிக உயர்ந்த கோபுரமும் தமிழக அரசின் சின்னமாக விளங்கி வருவதும் திருவில்லிபுத்தூர் கோயிற் கோபுரமாகும். தமிழகத்திலேயே மிக உயர்ந்த கோபுரமாகத் திகழ்வது கி.பி.1980-களில் கட்டி முடிக்கப்பட்ட திருவரங்கம் கோயில் கோபுரமாகும்.

கோபுர நுழைவு வாயில் :

1. துவாரசோபை
2.துவாரசாலை
3.துவாரப் பிரசாதம்
4. துவார ஹர்மியம்
5. துவார கோபுரம் (நூலிலிருந்து)

இந்தியக் கட்டடக்கலை வரலாறு – முனைவர் அம்பை மணிவண்ணன்
விலை: 300/-
வெளியீடு: இந்து சமய அறநிலையத்துறை
Buy this book online: https://www.heritager.in/product/indiak-katttkkalai-varalaru/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers