புராதன இந்து அரசியல், நிர்வாகம் மற்றும் இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்

புராதன இந்து அரசியல், நிர்வாகம் மற்றும் இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்

அரசு – அறிமுகம்

அரசு என்றால் என்ன என்பதற்கும் பலரும் பலவிதமான வரை அலக்கணங்கள் கூறியுள்ளனர். “அரசு என்பது இறைமை இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டு வலிமையால் ஆதரிக்கப்பட்ட சட்டத்தால் குறிப்பிட்ட நிலப்பரப்பின் எல்லைக்குள் பொதுவான ஆதிக்கம் செலுத்தி ஒழுங்கையும், பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கெனத் திட்டமிடப்பட்ட ஒரு சங்கமாகும் என்கிறார் டி.டி. ராபேல் என்ற அறிஞர். மேலும் ”அரசு வர்க்கப் போராட்டத்தின் விளைவு, செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டது.” என்பது போன்ற கருத்துக்களும் கால்மார்க்ஸ் போன்றோரால் கூறப்பட்டன.

பொதுவாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் விவசாயத்துடன் நிரந்தர இடத்தில் வாழத் தலைப்பட்டபோது ஒரு தலைமைத்துவம் அவசியமாகியது. அதுவே அரசின் தோற்றத்திற்குக் காரணமானதெனக் கூறுதல் தவறில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையிலே அந்நாட்டின் சமூக அமைப் பிலும், அரசு நிறுவனம் முக்கிய இடம் வகித்து வந்தது. இந்தியா ஆதியில் பரத கண்டம் / பாரதவர்ஷம் / பாரதம் என்றெல்லாம் அழைக்கப்பட்டமைக்கு பரதன் என்ற அரசன் அரசாண்டமையே காரணம் என்ற புராணக் கருத்தினூடாக இந்திய சமூகத்தில் அரச நிறுவனம் பெற்றிருந்த முக்கியத்துவத்தை உணரலாம்.

இந்து மூலங்கள் :

இந்துநாகரிக வரலாற்றில் அரச நிறுவனத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதற்கு வரலாற்று மூலங்களான இலக்கியங்களும், தொல்பொருட் சான்றுகளும் பெருமளவு துணை செய்கின்றன.

இலக்கியங்கள் என்றவகையில் நால்வேதங்கள், உபநிடதங்கள். இதிகாச, புராணங்கள், தர்மசாத்திரங்கள், அர்த்தசாஸ்திரம், திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை சான்றுகளாகக் கொள்ளலாம். சாசனங்கள், செப்பேடுகள், நாணயங்கள், மட்கல ஓடுகள், இலட்சினைகள் போன்றன தொல்பொருட் சான்றுகளுள் அடங்குவனவாகும். இந்தியா வந்து சென்ற வெளிநாட்டவர் / யாத்திரிகக் குறிப்புகளும் குறிப்பிடத்தக்க சான்றுகளாகக் கொள்ளக்கூடியவை.

சிந்துவெளி நாகரிகத்துக்குரிய தொல்பொருட்கள்

இந்தவகையில் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கருதப் படுகிற உலகின் மூத்த நாகரிகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகக் காலப்பரப்பை எடுத்து நோக்கினால் அங்கே மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய பிரபல்யமான நகரங்களைத் தவிர 75ற்கு மேற்பட்ட வேறு சிறு நகரங்களும் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் நகரமைப்பு, ஒழுங்கு முறை, திட்டமிடல் ஆகியவற்றை நோக்கும்போது இங்கே ஒரு அரசு இருந்திருக்கலாம் அல்லது பெரியதொரு அதிகார வர்க்கம் இருந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

“ஸ்டுவேர்ட் பிக்கட்” என்ற அறிஞர் இங்கே துறவி அரசனாக இருந்திருக்கலாம் என்றும் அவன் அரசியலுக்கும், சமயத்துக்கும் ஒரே தலைவனாயும், உலகச் செல்வத்தையும், சமய மெய்யறிவினையும் பகிர்ந்தளிக்கும் வள்ளலாயும் விளங்கினான் எனக் கூறுகிறார். இது ஆராய்ச்சிக்குரியது எனினும், சிந்துவெளி நாகரிகத்தில் இலக்கியச் சான்றுகள் இல்லாதபடியினால் இவை யாவற்றையும் வெறும் ஊகங்களாகவே கூறவேண்டிய இடர்பாடு உள்ளது.

வேதங்களில் அரசு பற்றிய செய்திகள்

வேதகாலத்தை எடுத்து நோக்கில் ரிக்வேதம் எழுந்த காலச்சூழலே முந்திய வேதகாலப்பகுதி எனப்படுகிறது. ரிக்வேதத்திலும் அரசு பற்றிப் பல கருத்துக்கள், சம்பவங்கள் விரவியுள்ளன. கோன்மையின் தோற்றம் பற்றி நேரடியாகவே வர்ணிக்கும் கதையொன்று ஐதரேயப் பிராமணத்திலே கூறப்பட்டுள்ளது எனினும் காலகட்டத்தைக் கருத்திற்கொண்டு அதனைப் பிந்திய வேதகாலம் என்ற வட்டத்துள் பின்னர் ஆராய்வதே பொருத்தம் ரிக்வேதகாலப் பகுதியை எடுத்துக் கொண்டால் இக்காலத்தில் ஜனக்குழுக்களாய் மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்தனர்.

இந்தத் தொல்குலங்களை (ஜனக்குழுக்களை) குலமுதல்வர்கள் ஆண்டனர். இவர்கள் தமக்கு “ராஜா” என்ற பட்டத்தையும் சூட்டிக் கொண்டனர். ரிக்வேதகால ஆரியர்கள் தமது ஜனக்குழுக்களிடையேயும் ஆரியரல்லாத மக்களோடும் பல சந்தர்ப்பங்களில் போர்களில் ஈடுபட்டனர். போரிற்குத் தலைவன் தேவை. இத்தலைவனே நாளடைவில் மன்னனாகவும் மாறியிருக்கலாம்.

“ஜனக்குழுத் தலைவன் மன்னனாகவும், அரசனாகவும் விளங்கு வதற்குப் போரே காரணம்” என வில்டுரண்ட் அவர்கள் கூறியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. எனவே கோன்மையின் தோற்றத்திற்குப் போரும் முக்கிய காரணம் என உணரலாம். மேலும் ”இக்காலத்தில் கூட்டுமுறை காணப்பட்டதாகவும் இதிலிருந்தே அரசு என்ற நிறுவனம் வளர்ந்திருக்க வேண்டும்” என்றும் “அல்ரக்கார்” அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.

“பரத”ஜனக்குழு மன்னனான சுதாஸ் என்பவன் விஸ்வாமித்திரரின் தூண்டுதலால் பத்து மன்னர்களை இரவி ஆற்றங்கரையில் வென்று புகழ்பெற்றமை பற்றி ரிக்வேத ஏழாம் மண்டலம் குறிப்பிடுகிறது. இவன் வென்றோருள் பூரு, யது,துர்வச, அனு, துருஹ்ய ஆகிய பிரபல்யமான ஜனக்குழுக்களின் தலைவர்களும் அடங்குவர். மேற்குறிப்பிட்ட தசராக்ஞ போர் இருக்குவேதகால ஜனக்குழுப் போராட்டங்களையும், அவற்றாலே மேலாதிபத்தியம் குறிப்பிட்ட சில பகுதிகளிலேற்படுதலையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்தத்தளத்தில் நின்று நோக்கும்போது சாம்ராட், விஸ்வஸ்ய புவனஸ்யராஜா போன்ற விருதுப் பெயர்கள் ரிக்வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் பேரரசன் எனப் பொருள்படும். பதங்களின் பிரயோகமும் ஓரளவு சிந்திக்கத்தக்கதே. இவைதவிர பின் வேதகாலத்தில் அரசன் ஜனகோபாலன், ஓனாசிய, இராஷ்டபதி, பிரஜாபதி எனவும் அழைக்கப்பட்டான்.

மேலும் ஆரியரல்லாத மக்களிடையேயும் முடியாட்சி நிலவியதை இலிபிர, சுமுறி போன்ற தாஸ மன்னர்கள் பற்றி வரும் குறிப்புக்களினூடாக வேதங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. (நூலிலிருந்து)

இந்து நாகரிகம் – ஓர் அறிமுகம் கலாநிதி.ச. முகுந்தன்
விலை: 330/-
வெளியீடு: குமரன் புத்தக இல்லம்
Buy this book online: https://www.heritager.in/product/inthu-nagarigam-or-arimugam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/