இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம்
முன்னுரை
மனிதன் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் இயற்கையின் செயல்பாடுகளாகும். பிறப்பது இன்பத்துடன் வரவேற்கப் படுகின்றன. இறப்பது துன்பத்துடன் வெறுக்கப்படுவது. முன்னது தாலாட்டாகவும், பின்னது ஒப்பாரியாகவும் இருவேறு நிலைகளில் மக்களால் பாடப்பட்டு வருகிறது. ஒப்பாரிப் பாடலில் துன்பச் சுவை எளிய நடையில் அமைவதால் இறப்பிற்குத் தொடர்பற்றவரையும் தொடர்புடையவராக்கும் ஆற்றல் ஒப்பாரிக்கு உண்டு. இறந்தவரின் வாழ்ந்த காலத்தை அச்சிறு நேரத்தில், அழுபவர்கள் படம் பிடித்துக் காட்டுவர். ஒப்பாரி ஒரு வளர் கதையைப் போன்றது. இதற்கு முடிவு கிடையாது.
ஒப்பாரி என்ற சொல் முதன் முதலில் திருக்குறளில் “அவரன்ன ஒப்பாரியாம் கண்டதில் (குறள். 1071) என்று வருகின்றது. இதில் ‘ஒப்பாரி’ என்பது ஒத்தவர் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. இராம நாடகத்தில் யுத்த காண்டம் 18 ஆவது பாட்டில் ‘மகனேயென்று ஒப்பாரி சொன்னாள்’ என்று வருகிறது. இங்கு ஒப்பாரி என்பது அழுகைப் பாட்டையே குறிக்கிறது.
நாட்டுப்புற மக்களால் இறப்பு நிகழ்ச்சியின் போது பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களை ‘இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம்’ எனும் இவ்வியலின் தலைப்பைக் கொண்டு முதல் பகுதியில் I ஒப்பாரி சொல் விளக்கம் எனும் தலைப்பின் கீழ் ஒப்பாரி – பகுப்பும் கூறுகளும், அழுகைச் சுவை, ஒப்பாரி பொதுப்பார்வை ஆகியவை ஆராயப்பட்டுள்ளது.இரண்டாம் பகுதியில் II மாரடித்தலும் தலைவிரிக் கோலமும் எனும் தலைப்பில் தாலியறுப்பு விழாவில் மாடிரத்தல், சிறுகதையில் மற்றும் நாவலில் மாரடிப் பாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் பகுதியில் III கையறு நிலை விளக்கம், கையறு நிலையும் ஒப்பாரியும், கையறுநிலைத் துறையின் கருத்தலகுகள் விவரிக்கப்பட்டுள்ளது. நான்காம் பகுதியில் IV இலக்கியங்களில் ஒப்பாரி எனும் தலைப்பின் கீழ் கையறுநிலை காலனைப் பழித்தல், வடக்கிருத்தல், ஒப்பாரியின் தன்மையை உணர்த்தும் கையறுநிலைப் பாடல்கள் என்பதை விளக்கப்பட்டுள்ளதோடு சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, இராமாயணம்,தனிப்பாடல், புராணம், பரணி, கதைப்பாடல், சிறுகதை, புதினம், நாடகம் ஆகியவற்றில் ஒப்பாரியின் தாக்கத்தை எடுத்தாளப்பட்டுள்ளது.
ஐந்தாம் பகுதியில் V புதுக் கவிதைகளில் ஒப்பாரி என்ற தலைப்பில் காஞ்சித் திணை – புதுக்கவிதை: நிலையாமையை முன்வைத்து என்பதில் தாபதநிலை, காடுவாழ்த்து, தபுதார நிலை, முதுவாலை, பையுள், மன்னைக் காஞ்சி, சிறு காவியத்தில் ஒப்பாரி ஆகியவை ஆராய்நதளிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் பகுதியில் தொகுப்புரை இடம் பெற்றுள்ளது.
I ஒப்பாரி சொல் விளக்கம்
”ஒப்பாரியை ‘ஒப்ப + ஆரி’ என்று சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1956 இல் வெளியிடப்பட்ட தமிழ் அகராதி பிரித்து ‘அழுகைப் பாட்டு’ என்று பொருள் கூறுகின்றது. ஒரு தமிழ் ஆங்கில அகராதி ஒப்பாரிக்கு ஒப்புதல் ஒப்புச் சொல்லி அழுதல் என்று பொருள் கூறுகிறது. அதோடு பெண்களால் பாடப்படுவது என்றம்; இறந்தவர்க்கும் அடுத்த பிற பொருட்களுக்கும் ஒப்புச் சொல்லிப்பாடுவது என்றும் கூறுகின்றறது” இறந்தவர்களை நினைத்தும், இழந்தப் பொருளை நினைத்தும் பாடப்படும் பாடல்களே ஒப்பாரிப் பாடல்கள் எனலாம். “இறந்தோர்க்கும், இழந்தார்க்கும் இடையில் உள்ள உறவினை ஒப்பிட்டுப்பாடுவதால் ‘ஒப்பாரி’ என்ற பெயரினைப் பெற்றது என்றும் கூறுவர். ஒப்பாரிப் பாடல்கள் தாழ்ந்த குரலில் தணிந்த இசையில், இரங்கல் தொனியில், ஏங்கல் ஒலியில் மிக மென்மையாக முகாரி இராகத்தில் பாடப்படுகின்றன.”
தமிழில் ஒப்பாரியைப் பிலாக்கணம், பிணக்காணம், கையறுநிலை, புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு எனக் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் ஒப்பாரி யை Elegy, dirge, death, lament, mourinig songs என்ற சொற்கள் சுட்டுகின்றன. இவையனைத்தும் காசுக்காகப் பாடுவது என்று பொருள் தந்தாலும் சில நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு.
ஒப்பாரி – பகுப்பும் கூறுகளும்
“மடியில் கண் விழிக்கும் மனிதன் மரணத்தில் கண்மூடும் போதும் நாட்டுப்புற மக்கள் பாடல்கள் பாடி வழியனுப்புகின்றனர். அதாவது தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்துவதாகவும், தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதாகவும் இப்பாடல்கள் அமைகின்றன. தாய்மையின் முதல் இலக்கிய வெளியீடு தாலாட்டென்றால், அதே தாய்மையின் இறுதி இலக்கிய வெளிப்பாடுதான் ஒப்பாரியாக அமைகிறது. இது பெண்மைக்குரிய சோகத்தின் பிரதிபலிப்பாக சோக உணர்ச்சிகளின் தொகுப்பாக ஒப்பாரி எழுகிறது.””
காலையின் ஒப்பாரியை ‘அந்தி அழுகை’ என்றும்; மாலையின் ஒப்பாரியை ‘சந்தி அழுகை’ என்றும் கூறுவர்.
ஒப்பாரிக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாடு பொருளாகின்றனர். ஒப்பாரிப் பாடல்கள் பல வகைப்பட்டது. கணவன் இறப்பில் மனைவி பாடும் ஒப்பாரி, தாய் இறப்பில் மகள் பாடும் ஒப்பாரி, மகன் இறப்பில் தாய் பாடும் ஒப்பாரி, அண்ணன் இறப்பில் சகோதரி பாடும் ஒப்பாரி, தம்பி இறப்பில் சகோதரி பாடும் ஒப்பாரி, மாமன் இறப்பில் மருமகள் பாடும் ஒப்பாரி, மாமியார் மருமகள் பாடும் ஒப்பாரி, பிள்ளை இல்லாக் குறைக்காகத் தாய்பாடும் ஒப்பாரி எனப் பகுக்கலாம்.
மனத்திற்கு வன்மையினையும், மகிழ்வினையும், இன்பத்தினையும் தந்த ஒன்றை, மறைந்த பொழுது வெளிப்படும் இந்தத் துன்ப உணர்ச்சி மனித சமுதாயத்தின் உணர்ந்த பண்பினைக் காட்டுவதாகும். இவ் வுணர்ப்பத்தின் சாவின் பொழுது வெளிப்படுத்தப்படுகின்றது. இன்ப உணர்வு அரும்பாமல் போனாலும் போகலாம். ஆனால், ஓர் இறப்பால் யாருக்கும் உணர்ச்சி எழாமல் போகாது. ஓர் இறப்பின் பொழுது இறக்கத்தையும், இளகிய நெஞ்சத்தையும் தன்னகத்தே பெற்ற அங்கே குழுமியுள்ள பெண்கள் தங்களுக்கு அவ் இறப்பால் ஏற்பட்ட துன்பத்தினை வெளிப்படுத்தும் பொழுது ‘பாட்டு வடிவில்’ வெளிப்படுத்துவர்.”” இதை ஒப்பாரிப் பாடலின் கூறுகளெனலாம்.
”ஒப்பாரிச் சொல்லி அழும்போது அழுபவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் உள்ள உறவைப் பொறுத்து அவர்களின் விளிப்புகள் வேறுபடுகின்றன. இறந்த கணவனை நோக்கி அவன் மனைவி ‘அதிகாரி, சீமை அதிகாரி’ என்றும்; தாய் இறந்த போது மகள்கள் ‘என்னைப் பெத்த அம்மா, என்னைப் பெத்தாள்’ என்றும்; தந்தைக்கு அவள் மகள்கள் ‘என்னைப் பெத்த ஐயா, என்னை பெத்தார்’ என்றும்; அத்தைக்கு, ‘அத்தை மாமியார் அம்மா, என்னைத் தேடிய அம்மா’ என்றும்; மாமனாருக்கு, ‘என்னைத் தேடிய சீமை அதிகாரி, என்னைத் தேடிய அம்மா’ என்றும்; சகோதரிக்கு ‘எம் பொறவி அம்மா, எம் பொறவி ராசாத்தி, என்றும்; சகோதரனுக்கு ‘எம்’ பொறவி ராசா, எம் பொறவி, சீமை அதிகாரி’ என்றும்; கணவனின் மூத்த சகோதரிக்கு ‘மாமிக்கு சொன்னது’ என்றும்; கணவனின் மூத்த சகோதரனுக்கு ‘மாமனாருக்குச் சொன்னது’ என்றும்; கணவனின் இளைய சகோதரிக்க ‘தோழியர் அம்மா’ என்றும்; கணவனின் இளைய சகோதரனுக்கு ‘தங்கத்துரை அய்யா,’ ‘சின்னத்துரை அய்யா’ என்றும் ஒப்பாரிப் பாடுவதில் அந்தந்த வட்டாரச் சொற்கள், திரி சொற்கள், பெயர்ச் சொற்கள் இடம் பெறுவதைக் காண முடியும்.
“ஒப்பாரிப் பாடுவதல் இறந்தவர்களின் ஆவிகள் சாந்தியடைவதாகவும், ஒப்பாரிப் பாடாவிட்டால் ஆவிகள்துன்புறுவதாகவும், இவ்வுலகம் விட்டு மறு உலகம் செல்ல ஒப்பாரிகளே இறக்கைகளாகப் பயன்படுவதாகவும், இவற்றால் ஆவிகள் மூலம் தீங்கு வராமல் காக்க முடிகிறது என்றும் மக்கள் நம்புகின்றனர். இதை நோக்குமிடத்து ஒப்பாரி நம்பிக்கை சார்ந்தும் பாடப்பட்டு வருகிறது என்பதை அறியமுடிகிறது.
தாலாட்டுப் பாடல்களைப் போன்றே ஒப்பாரிப் பாடல்களை மேம்படுத்த வேண்டும் அல்லது வளர்க்க வேண்டும் என்ற முனைப்பில் புலவர்கள் சிலர் பல ஒப்பாரிப் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவை: “ஆறு பேருக்குப் பாடிய அம்பிகாபதி ஒப்பாரி, பஞ்சரத்ன ஒப்பாரி, பாவையர் ஒப்பாரி, மரகத ஒப்பாரி, மோட்டார் ஒப்பாரி,அதி நூதன எமலோக ஒப்பாரி, பஞ்ச கல்யாண ஒப்பாரி, ரயில்வே பரிதாப மரண சூரிய காந்தி ஒப்பாரி என்று ஒப்பாரிப் பாடல்களை இயற்றி வெளியிட்டிருக்கின்றனர். இறந்தவருக்கு ஏற்ற வகையில் பாட வேண்டும் என்று பாடல்களை எழுதியுள்ளனர். இதே போன்று நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் கோவலனைப் பிரிந்த கண்ணகி,மாதவி இவர்கள் இருவரும் வைத்த ஒப்பாரி; மன்மதனுக்காக இரதி வைத்த ஒப்பாரி என்று ஒப்பாரிப் பாடல்களும் இயற்றப்பட்டிருக்கின்றன” (பேரா. ஆறு. அழகப்பன், நாட்டுப்புறப் பாடல்கள் ஒரு திறனாய்வு, பக். 132). எனினும் பெண்கள் பாடுவது போன்ற உயிர்ப்பான ஒப்பாரிப் பாடல்களாக இருக்குமா என்பது ஆய்விற்குரியது.
கரூர் நாட்டுப்புற வழக்காற்றியல் – பேரா.சி. சக்திவேல்
விலை: 230/-
Buy this book online:
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/