பாசனத் தொழில்நுட்பம் :
நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், பள்ளமும் மேடுமான நிலப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவது எளிதல்ல. வீணாகும் நீரினை குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தேக்கி வைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவது மழைக் காலங்களில் ஆபத்தானது. எனவே, நிலப்பரப்பியலின் கூறுகளை ஏற்றதாகப் பயன்படுத்தி நீரினை வேளாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும். காவிரிச் சமவெளி போன்ற நிலப் பகுதிகளில் நீரினைப் பயன்படுத்துதல் ஒரு வகையில் எளிது என்றாலும் பிறிதொரு வகையில் சிக்கலானது. சோழ நாடான காவிரிச் சமவெளி பொறுத்து மேற்கினின்று சீராக ஓடிவரும் காவிரியும், அதன் கிளையாறுகளும், வாய்க்கால்களும் பரந்த வயல்களுக்கு நீர் பாய்ச்சினாலும் கடல் நோக்கி ஓடும் நீரினை வேளாண்மைக்காக நிறுத்தி வைத்து வாய்க்கால்வழியே நீரினை நிலங்களுக்குப் பாய்ச்சுதற்கு ஒரு நுட்பமுறை தேவைப்படுகிறது. ஆய்விற்குண்டான பகுதியில் வாய்க்கால்முறை தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. காவிரியாற்றினின்றும் பிரிந்து வரும் கிளையாறுகள், அவற்றினின்றும்பிரிந்துவரும் பெருவாய்க்கால்கள், அவற்றிலிருந்து வரும் வாய்க் கால்கள், அவற்றிலிருந்தும் பிரியும் உட்சிறுவாய்க்கால்கள், இவற்றினின்றும் பிரியும் கண்ணாறுகள் என்று நீரின் ஓட்டம் பல நிலைகளைத் தாண்டி விளைநிலத்தினை அடைய வேண்டியுள்ளது. இவ்வாறு ஆற்றுநீர் பல நிலைகளைத் தாண்டி வருவதால் நீரின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீரோட்டம் சீராகிவிடுகிறது. நீர்,பல நிலைகளைத் தாண்டி வரும் போக்கினை, பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.
காவிரியாறு – கிளையாறு – பெருவாய்க்கால் – வாய்க்கால் உட்சிறு வாய்க்கால் – கண்ணாறு – நிலம்
கடை நிலையில் ஆகச் சிறிய மெல்லிய வாய்க்காலாக கண்ணாறு என்பதனைக் கொள்ளலாம். புவியீர்ப்பினால் சரிவான நிலத்தினைப் பற்றிக் கொண்டு இயல்பாகவே ஓடிவரும் நீரினைக் குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்ட வாய்க்கால்கள் வழியே திருப்பி அதன் வேகத்தினைக் கட்டுப்படுத்தல் பாசன நுட்பத்தில் முதன்மையான ஒன்று.
சோழ நாட்டில் வாய்க்கால் முறை நீர்ப்பாசனம் பின்பற்றப்பட்டு வந்திருந்தாலும் தொடர்ந்து குளத்து முறை நீர்ப்பாசனமும் இருந்து வந்துள்ளதை, கல்வெட்டுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. வாய்க்கால் முறை நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தினை பாய்ச்சல், பாய்ச்சுதல் எனும் சொற்கள் விளக்க, கிணற்று முறை, குளத்து முறை நீர்ப் பாசனத்தினை இறைத்தல் எனும் சொல் விளக்குகிறது.
கிணற்று முறைப் பாசனம் :
பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் கிணறு, துரவு என்றும் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து ஏற்றம் வைத்து நீரினை இறைத்துப் பாசனம் செய்துள்ளனர். கிணற்றில் ஏற்றம் இறைக்க, முன்பு இறைத்து வருகிற துரவில் என்ற கல்வெட்டுத் தொடர்கள் இதனை விளக்குகின்றன.3
குளத்து முறைப் பாசனம் :
சோழ நாட்டிலுள்ள பாசனக் குளங்கள் வாய்க்கால்களால் நிரப்பப்பட்டுள்ளன. இக்குளங்களிலிருந்து ஏத்தங்கள் மூலம் நீர் இறைக்கப்பட்டு பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குளத்திலே நீர் இறைக்கவும், ஏத்தம் இரைத்த குளம், குளத்தில் ஒரு நீர்க் கோவைக்கு இறைக்க என்ற கல்வெட்டுத் தொடர்கள் ஏத்த முறைநீர்ப்பாசனத்தை விளக்குகின்றன (இவ்விரு பத்திகளுக்கு சி.என். சுப்ரமணியத்தின் ஆய்வு பெரிதும் பயன்பட்டது).
வாய்க்கால் முறைப் பாசனம் :
வாய்க்கால்முறை நீர்ப்பாசனம் ஓர் எளிதான வலைப்பின்னல் அமைப்புப் போன்று தோன்றினாலும் சரிவான நிலப்பரப்பின்மேல் ஓடும் நீரின் வேகத்தினை மெள்ள மெள்ள குறைத்துக் கடைசியில் விளை நிலங்களுக்குப் பாய்ச்சுதல் எளிமையான ஒரு நுட்பமன்று.
ஆற்றிலிருந்து நேரிடையாகப் பிரியும் வாய்க்கால் தலைவாய்க்கால் என்றும் அவ்வாய்க்கால் தொடங்குமிடம் வாய்த்தலை, வாய்க்கால்தலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாய்க்காலில் இருந்து பிரியும் வாய்க்கால் உவன்றி வாய்க்கால் எனப்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து பிரியும் வாய்க்காலின் தலை, வாய்த்தலை என்பதுபோல் வாய்க்காலி லிருந்து பிரியும் தலை, உவன்றி எனப்பட்டுள்ளது.
வாய்க்கால்கள் ஆற்றுக்கு நீர்தருவன என்பதை கடம்பாற்று வாய்க்கால், பழவாற்றுக்கே விழுந்த வாய்க்கால், கடம்பாற்றுக்கே பாஞ்ச வாய்க்கால் போன்ற கல்வெட்டுத் தொடர்கள் விளக்கும். வாய்க்கால்கள் ஏரி, குளங்களுக்கு நீர் தருவன என்பதை, கரையேரிக்கு நீர் பாயும் ஆற்றுக்கால், நல்லூர் ஏரிக்கு நீர் பாய்கின்ற வாய்க்கால், சிறுவாய் ஏரிக்கு பாய்கிற வாய்க்கால் போன்ற தொடர்கள் விளக்கும் கண்ணாற்றினின்றும் சிறுசிறு வாய்க்கால்கள் பிரிந்து சென்றுள்ளதை கண்ணாற்று விலக்கு வாய்க்கால் என்ற தொடரால் அறியலாம்.
வாய்க்கால்முறை நீர்ப்பாசனத்தில் முதன்மையான சிக்கல், நீரின் வேகத்தினை, தேவைக்கேற்ப கட்டுப்படுத்துவதாகும். இச்சிக்கலைத் தீர்க்க ஒரு குறிப்பிட்ட வாய்க்காலின் அதிவேக நீரினைக் கட்டுப்படுத்த இடைவாய்க்கால்களும், உட்சிறு வாய்க்கால்களும் ஏதுவாக உள்ளன. இவ்வகை வாய்க்கால்கள் காவிரிநீர் அதிகமாகப் பாயும் சோழ அரசின் மையப் பகுதியிலேயே அதிகமுறை பயன்படுத்தப்பட்டுள்ளமை கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. (நூலிலிருந்து)
சோழர் அரசும் நீர் உரிமையும் – முனைவர் கி.இரா. சங்கரன்
விலை: 60/-
வெளியீடு: NCBH
Buy this book online: https://www.heritager.in/product/sozhar-arasum-neer-uriaiyum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers