பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

“போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும்.

சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை,

சங்கறர் + அந்தி =சங்கறாந்தி என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். அந்தி என்றால் முடிவு, இறுதி, இறத்தல், மறைதல், பரிநிருவாணம் என்றுபொருளாகும்.

‘சங்கறன்’ என்ற பெயர் ஆதிகாலத்தில் பகவான் புத்தருக்கே உரிய சிறப்புப் பெயராகும். சங்கம் + அறன் = சங்கறன்.

அதாவது, சங்கம் வைத்து அறம் வளர்த்தவராதலால் அவருக்கு ‘சங்கறன்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஆகவே சங்கறர் + அந்தி என்றால் சங்கறராகிய பகவான் புத்தர் அந்தியடைந்த -இறுதியடைந்த – பரிநிருவாணமுற்ற காலம் என்பது பொருளாகும்.

மார்கழி இறுதி நாளில் அவர் பரிநிருவாணமுற்றதால் அந்த நாளைப் போதிப் பண்டிகை என்றும், அதைத் தொடர்ந்து வந்த மூன்று நாள்களை சங்கறர் அந்தியடைந்த நாள்களாகக் கொண்டாடி வந்தார்கள்.

அதாவது பகவான் புத்தர் பரிநிருவாணமுற்ற நாளையும் அதைத் தொடர்ந்து வந்த மூன்று நாள்களையும் அவரது நினைவைப் போற்றும் நாள்களாகக்கொண்டாடி வந்தார்கள். இப்போதும் நம்மில் ஒருவர் இறந்துவிட்டால் அடக்கம் செய்த நாளையும் அதைத் தொடர்ந்து வரும் சில நாள்களையும் துக்க தினங்களாக – அந்தியடைந்த நாள்களாக அனுசரிப்பதைக் காணலாம். அவ்வாறு தான் பகவான் பரிநிருவாணமுற்றதற்கு பின்பு தொடர்ந்து சில நாள்களை நினைவு நாள்களாக அனுசரித்து வந்தார்கள். அந்த நாள்கள்தாம் சங்கறாந்திப் பொங்கல் பண்டிகைகளாகும்.

பகவான் புத்தருக்கிருந்த ஆயிரம் பெயர்களில் சங்கறன் என்பதும் ஒன்றாகும். சங்கறாந்திப் பொங்கல் நாள்கள் பகவான் இறுதியடைந்த நினைவு நாள்களாகும்.

“சங்கறரந்திய புண்ணியகாலம் பொங்கலிட்டுப் புண்ணியஞ் செய்வோர் தங்குஞ்சங்கத் தண்ணருள் பெற்று மங்காசெல்வ வாழ்க்கை பெறுவர்.”

சங்கறராகிய பகவான் புத்தர் அந்தியடைந்த புண்ணிய நாளில் பொங்கலிட்டு, தான தருமங்கள் செய்து வாழ்பவர் பகவானின் நல்லருள் பெற்று குறையாத செல்வமும், வாழ்வும் பெறுவர் என்பது மேலேகண்ட வீரசோழியம் செய்யுளின் பொருளாகும்.

“சமண முனிவர்களுக்குச் சத்திய தன்மத்தையே பெரும் பாலும் போதித்தவராதலின் சங்க தருமர் – சங்கறர் என வழங்கி வந்தார்கள். அவர் பரிநிருவாணமடைந்த அந்தியங் காலத்தைச் சங்கறர் அந்திய புண்ணிய காலமென்றும், இந்திர விழாவென்றும்,தீபசாந்தி நாளென்றும்,சுவர்க்க ஏறிய நாளைச் சொக்கப்பானை கொளுத்துவது என்றும் வழங்கி வருகின்றார்கள்.(க.அ.பண்டிதர்).

மார்க்கத்தின் அடையாளங்களைப் பண்டிகைகளை மக்கள் அறிந்துகொள்ளாதிருக்கவே உண்மைகள் வலிந்து மறைக்கப்பட்டுப்போயின.

சங்கறன் ஆகிய புத்த பகவான் அந்தியடைந்த நாளையும், அதைத் தொடர்ந்து வரும் நாள்களையும், மக்கள் போகிப் பண்டீகையென்றும், பொங்கல் பண்டிகையென்றும் வழங்கி வருகிறார்கள். அந்த நாள்களில் மக்கள் அனைவரும் புதிய ஆடைகளையும், அணி மணிகளையும் அணிந்து, சிறப்பான உணவுப் பொருள்களையும் செய்து உண்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்.

கொண்டாடுவது என்பதற்கு அக்காலத்தில் பொருள் வேறு. பிறருக்கு உணவளித்து பாசியாற்றுவதே சிறந்த அறமாகக் கருதப்பட்டு வந்தது. பிறருக்கு ஈகை புரிவதற்காகவே மக்கள் பண்டிகைகளைக் கொண்டாடி வந்தனர்.

பண்டிகை என்ற சொல்லுக்கு பிறருக்கு ஈகை புரிதல் என்றே பொருளாகும். பண்டு + ஈகை = பண்டிகை. பண்டு என்றால் பழைய காலத்தில் என்பது பொருளாகும். பழைய காலத்தில் மக்கள் பிறருக்கு ஈகை புரிவதற்காக குறிக்கப்பட்ட நாள்களே பண்டீகை நாள்கள் ஆகும். ஈகை – பிறருக்குக் கொடுத்து உதவுதல்-தானமளித்தல்.

பகவான் புத்தர் காலத்தில் இப்போது உள்ளதுபோல் பண்டிகைகளோ, விழாக்களோ இல்லை. அக்கால சமூகத்தில் இன்று இருப்பதைப்போல் தொழில் வளர்ச்சியோ, பொருளாதார வளர்ச்சியோ இல்லை. மக்களில் பலர் குடும்பமாக வாழாமல் துறவிகளாகவும், முனிவர்களாகவும், முனிவர்களுக்குச் சீடர்களா கவும் சுற்றித் திரிந்து வந்தனர். வறுமையினால் உணவுக்கு ஏங்கித் தவித்தவர் பலராவார். ஊனமுற்றோரும், நோயாளிகளும் தங்கள் பசியைப் போக்கிக்கொள்ள இங்கும் அங்கும் அலைந்து திரிந்து வந்தனர். அவ்வாறு நலிவைடைந்த மக்களுக்கு உணவு, உடை, சீவரம், (துவராடை) நோய்க்கு மருந்து முதலானவற்றைக் கொடுத்து உதவவேண்டுவது இல்லறத்தில் வாழ்பவர் கடமையாக அறிவுறுத்தப்பட்டது.

மக்களின் பசியை ஒரு பெரிய நோயாகவும், அதைப் போக்குவது சிறந்த அறச்செயலாகவும் மணிமேகலைக் காப்பியம் விவரிக்கிறது. அள்ளஅள்ளக்குறையாத அமுத சுரபியின் வாயிலாக மக்களின் பசித்துன்பத்தைப் போக்கியதாக அக்காப்பியம் கூறுகிறது.” -நூலிலிருந்து

மக்கள் போற்றும் பவுத்தப் பண்டிகைகள் (பவுத்த சமய வரலாற்றுக் குறிப்புகள்) – ஜே.ஆனந்தராசன்
விலை: 70/-
Buy this book online: https://heritager.in/product/makkal-porrum-pavuththap-pandikakal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4