ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இம்மலையின் பெரும்பாலான பகுதிகள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மாவட்டம் வட்டம், பரமனந்தலில் தொடங்கி, வேலூர் மாவ அமர்த்தியில் முடிவடையும். இம்மலையின் உயரம் 915 மீட்டராகும். கடல் மட்டத்திலிருந்து 1070 மீட்டர் உயரத்தில் உள்ள ஜவ்வாது மலையில் அமைந்துள்ள 32 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியை மட்டுமே சார்ந்து அமைகிறது இந்த ஆய்வு.
தமிழகத்தில் மலையாளிகள் (மலைவாழ் மக்கள்) வசித்து வருகின்றனர். மலையாளி என்ற சொல் மலை என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதுவே மலைவாழ் மக்களையும் குறித்தது. ஜவ்வாது மலையினர் தகவல் தொடர்புக்குத்தமிழ் மொழியையும், தமிழ் எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் மாமிச உணவை உண்ட போதிலும், மாட்டிறைச்சியை உண்பதில்லை. அவர்களின் வழக்கமான உணவு ராகி, அரிசி, சாமை, கொள்ளு, சோளம் முதலியனவாகும். ஆண் மக்களுக்குத் தந்தை வழிச் சொத்துரிமை கிடைக்கிறது..
மலையாளிப் பெண்கள் விவசாய வேலைகள், கால்நடைப் பராமரிப்பு, எரிபொருள் சேகரித்தல், தண்ணீர் கொண்டு வருதல் ஆகியவற்றுடன் மற்ற பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் சமுதாய, மதச் சடங்குகள் தொடர்பான செயல்களிலும் பங்கேற்கின்றனர். அம்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற இளம்பருவச் சடங்குகளை நிறைவேற்றுகின்றனர்.
அடுப்பெரிக்க விறகு பயன்படுத்தும் இவர்கள் விவசாயத்திற்கு மழை நீரையும், கிணற்று நீரையும் நம்பியே வாழ்கின்றனர்.
அம்மக்களுள் உருகவுண்டன் அல்லது ஊரான் என்று அழைக்கப்படும் கிராமத் தலைவர் மற்ற அங்கத்தினர்கள் உதவியுடன் செயல்படுகிறார். இந்தப் பொறுப்புகள் பரம்பரை வழியில் அமைகிறது. இந்தக் குழு மணவாழ்க்கை, சொத்துப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்றது.
32 கிராமங்களிலும் வாழ்பவர்களில் 100 சதவீதம் பேரும் மலையாளிகளே. வெளிநபர் யாரையும் அங்கு நிலம் வாங்கி குடியிருக்க அனுமதிப்பதில்லை. போதுமான போக்குவரத்து வசதி இல்லாமையே இந்தப் பகுதிகள் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகக் கருதலாம்.
இன்று மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மலையாளிப் பழங்குடியினர் கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, ஏலகிரி, ஜவ்வாது. சித்தேரி, பாலமலை ஆகிய மலைகளில் வாழ்கின்றார்கள். தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடியினர் மலையாளிகளே. இவர்கள் இம்மலைகளின் பூர்வ குடிகள் அல்லர், பாதியில் வந்தவர்களே.
காஞ்சிபுரத்தில் தாங்கள் வழிபட்டுவந்த குலதெய்வத்தின் சிலையைத் திருடிச் சென்ற இருளப் பூசாரிகளிடமிருந்து மீட்பதற்குக் கிளம்பிய மூன்று வேளாள சகோதரர்களில் சின்னண்ணன் கொல்லிமலையிலும், நடு அண்ணன் பச்சை மலையிலும், பெரியண்ணன் கல்வராயன் மலையிலும் தங்கிவிட்டனர். இவர்களின் வழி வந்தோரே இன்றைய மலையாளிகள் என்பதை அவர்கள் வழங்கிவரும் இடப்பெயர்ச்சிக் கதை மூலமும் பிற வழக்காறுகளின் மூலமும் அறியமுடிகிறது. இவர்களின் இடப்பெயர்ச்சி 7 வகையான கதைகளாகக் கூறப்படுகின்றன (தர்ஸ்டன் 1909 IV 499, சி.மகேஸ்வரன் 1983: 229-30. தி.கோவிந்தன் 1195 : 17-176, வேதவல்லி 2002).
ஜவ்வாது மலை மலையாளிகளின் பூர்வீகம் பற்றி பல்வேறுப்பட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றுள் இப்படி ஒரு கதை சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கங்கண்டி கிராமத்தில் வேடர்கள் வசித்து வந்தனர். அவர்கள் மேல் இன மக்கள் அல்லர். அவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்த வெள்ளாளர்களை அணுகி, தங்களுக்குத் திருமணம் செய்துகொள்ள பெண் கொடுக்கும்படி கேட்டனர். வெள்ளாளர்கள் அவர்களுக்குப் பெண் கொடுக்க மறுத்ததோடல்லாமல் அவர்களை அவமானப்படுத்தியும் உள்ளனர். ஆகவே, கங்கண்டி வேடர்கள் காஞ்சிபுரத்திலிருந்து ஏழு வெள்ளாளப் பெண்களைக் கடத்திக்கொண்டு கங்கண்டி சென்றுவிட்டனர். தங்கள் பெண்களை மீட்பதற்காக ஏழு வெள்ளாளர்கள் கங்கண்டி நோக்கிச் சென்றனர்.
அவர்கள் காஞ்சிபுரத்தை விட்டுப் புறப்படும்போது தங்கள் மனைவிகளிடம், தங்கள் நாய்கள் மட்டும் திரும்பி வந்தால், நாங்கள் அங்கே இறந்துவிட்டதாக நினைத்து இறுதிச் சடங்குகள் செய்துவிடுமாறு கூறிச் சென்றனர். அவர்கள் பாலாற்றை அடைந்தபோது வெள்ளம் காணப்பட்டது. ஆனாலும் அவர்கள் சமாளித்து பாலாற்றைக் கடந்துவிட்டனர். ஆனால் அவர்களோடு சென்ற நாய்களால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அதனால் அந்த நாய்கள் காஞ்சிபுரத்திற்குத் திரும்பி வந்துவிட்டன. ஆற்றைக் கடந்து சென்ற வெள்ளாளர்கள் வேடர்களைக் கொன்று தங்கள் பெண்களை மீட்டுக் காஞ்சிபுரத்தை அடைந்தபோது அவர்களின் மனைவிமார்கள் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளை முடித்து விதவைகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம் வெள்ளாளர்கள் அவர்களைத் தங்கள் இனத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்தனர். பிறகு இந்த ஏழு பேரும் காஞ் சிபுரத்தை விட்டு கங்கண்டி சென்று வேடர் பெண்களை மணந்து ஜவ்வாது மலையில் தங்கி பல தலைமுறைகளாக வாழ்ந்து வரலாயினர். அதனால்தான் மலையாளிகள் தங்களை “காரை காத்த வெள்ளாளர்” என்று கூறிக் கொள்ளலாயினர். ஆனால். இதற்கு வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. அவர்கள் மலைகளில் வாழ்ந்து வருவதால் “மலையாளிகள்” (மலையை ஆள்பவர்கள்) என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பூர்வீகப் பழங்குடியினர் அல்லர். சமவெளிகளில் மற்ற இன மக்களின் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் ஜவ்வாது மலைகளுக்குக் குடிபெயர்ந்த அவர்களின் பெயர்கள் எல்லாம் இறுதியில் ‘சுவுண்டன்’ என்றே முடியும்.
விவசாயம் மட்டுமே அவர்கள் செய்து வரும் தொழில் அதுவும் மழையை நம்பி மட்டுமே நடைபெறுகிறது. பெரும்பாலானவர்கள் கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனுடனே இறக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.
பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நிலையில் உள்ளவர்கள். அவர்கள் இப்போது பணத்தை சேமித்து கூரைவேய்ந்த மண் வீடுகளை மாற்றி ஓட்டு வீடுகளைக் கட்டி வரும் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கென செலவு செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மக்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஒவ்வொரு கிராமத்தினருக்கும் ஒரு கோயில் உண்டு. ஏட்டளவில் கல்வி. மருத்துவ வசதிகள் இருப்பது போல தோன்றினாலும் நடைமுறையில் போதிய கல்வி, மருத்துவ வசதி எதுவும் இல்லை என்பதே உண்மை. அம்மக்கள் காட்டுப் பகுதியில் வசிப்பதால், பத்திரிகை, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி போன்ற எந்த வசதிகளும் பெற்றிருக்கவில்லை. அவர்களின் அரசியல் அறிவு மிகவும் குறைவானதே. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமலேயே தங்களுக்கான உலகத்தில் வாழ்கின்றனர் அவர்கள்.
ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும்
200/-
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.