கலாரசிகனின் கலைக்கோயில்
பல்லவர் காலத்தில் கட்டுமானம் என்கிற அளவில் இருந்த கோயில் கட்டும் பணி, சோழர் காலத்தில் இயக்க மாக மாறியது. ஆகச் சிறந்த உதாரணம்,பெரிய கோயில்.
பக்தி என்பது அக்கால மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. கோயில்கள், புராணம் சார்ந்து இருந்தன. பக்தியைத் தங்கள் வாழ்வின் சித்தாந்தமாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தெய்வ உருவங்கள் வழியாக ஓர் அரசன் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினான்.
ராஜராஜ சோழன், தஞ்சையில் ‘ராஜராஜீஸ்வரம்‘ என்ற பெயரில் பெருங்கோயில் ஒன்றை எழுப்புவதற்கு அடிப் படையாக இருந்தது ஆன்மிகத் தேடலா அல்லது அரசியல் கண்ணோட்டமா என்கிற கேள்வி எழுந்தால் அரசியல் கண்ணோட்டம்தான் என்கிற விடைதான் கிடைக்கிறது. பெரிய கோயிலை ஓர் இறைவழிபாட்டுக் கூடமாக மட்டும் ராஜராஜன் பார்க்கவில்லை. வெறும் இறை உணர்வுக்காக அவர் பெரிய கோயிலை எழுப்பவில்லை. அவர் கணக்கு வேறாக இருந்தது.
பெரிய கோயில், நம்மைப் பொறுத்தவரை ஒரு கண்கவர் சிவாலயம்; ஆனால், இக்கோயிலை ஒரு வழிபாட்டுத்தலமாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சோழ மண்டலத்தின் பங்களிப்புடைய நிர்வாகக் கேந்திரமாக செயல்படுத்தச் செய்துள்ளார் ராஜராஜன் பெரிய கோயில் பொது இடமாக இருந்ததில் ராஜராஜன் அரசுக்கு ஒரு லாபமும் இருந்தது. அரசின் செயல்பாடுகள், அறி விப்புகள், கொடை, ஆட்சிமுறை, வரி விஷயங்கள் போன்றவை கோயில்களில் உள்ள கல்லில் வெட்டி வைக்கப்பட்டன.
தமிழ்ப் பண்பாடு, கலைத் திறமை போன்றவற்றை நாடு அறியவும் வேற்று மொழிக் கலாசாரம் உட்புகுவதைத் தடுக்கவும், சோழ மக்களைக் காக்கவும் ராஜராஜன் இக்கோயிலைப் பயன்படுத்திக் கொண்டார்.சோழர் காலத்து இலக்கியம், அரசியல்,வாழ்வியல் முறைகள், பொருளாதாரம், கலைகளின் வளர்ச்சி போன்றவற்றை பெரிய கோயில் வழியாகவே அறியமுடிகிறது.
மகேந்திர வர்ம பல்லவன், இயற்கையால் அழிந்துவிடக்கூடிய செங்கல், மரம், சுதை மற்றும் உலோகங்களைக் கொண்டு கோயில் கட்டாமல் கருங்கற்களைக் குடைந்து நான்முகன், சிவன், திருமால் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் கட்டினார். ‘இதற்கு முன் கோயில் கட்ட உபயோகித்த மரமில்லாமல், சுதையில்லாமல், செங்கல் இல்லாமல், உலோகமில்லாமல் மும்மூர்த்திகளுக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறேன்’ என்று விழுப்புரம் மண்டகப்பட்டு இலக்சிதன் குடைவரைக் கோயிலில் கல்வெட்டு செதுக்கினார். காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோயில்கள் மத்தியில் மாமல்லபுரக் கோயில்கள் இன்றும் வலுவோடு நின்றுகொண்டிருக்கின்றன.அடுத்து வந்த ராஜசிம்மர், மலைகளைக் குடையாமல் ஒற்றைக் கல்லைக் கொண்டு கோயில்கள் கட்டினார். குடைவரைக் கோயில் களின் பரிணாம வளர்ச்சியாக அவை இருந்தன. சோழ மன்னரான முதலாம் ஆதித்தர், மலையோ கல்லோ இருக்குமிடத்தில்தான் கோயில் கட்டவேண்டுமென்பதில்லை, தேவையான இடத்தில் கற்களைக் கொண்டுவந்து கோயிலைக் கட்டலாம் என்கிற அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு வித்திட்டார். இவருடைய இந்த யோசனைதான் இராஜராஜீஸ்வரம் (பெரிய கோயில்), கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம் போன்ற பிற்காலச் சோழர் காலக் கோயில் களுக்கு அடிப்படையாக அமைந்தது.
சோழர் காலக் கோயில்கள், இரண்டு கட்டங்கள் கொண்டவை. கி.பி. 985 வரையிலானது முதல் கட்டம். இக்காலக்கட்டத்தில் பல்லவர் களின் கோயில்கள், சோழர் கோயில்களுக்கு மாதிரியாக இருந்தன. அவற்றைப் பின்பற்றி சிறிய சிவன் கோயில்கள் ஏராளமாக உருவாயின. கருவறைமீது சிறிய கோபுரமும் முன்பக்கம் ஓர் அர்த்தமண்டபமும்
கொண்ட கற்கோயில்கள் அவை. இக்காலக் கட்டத்துக் கோயில்களில் தஞ்சை நிதம்பசூதனி கோயிலும், திருவெள்ளறை திருமாணிக்கப் பெருமாள் கோயிலும், நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரமும் முக்கியமானவை.
அடுத்தக் கட்டம், ராஜராஜன் காலம் முதல் ஆரம்பிக்கிறது. இந்தக் காலக்கட்டங்களில் சோழர்களின் கோயில்கட்டும் கலை, உச்சத்தை அடைந்தது. பல்லவர்கள் விட்ட இடத்திலிருந்து சோழர்களின் கலைப் பாணி தொடங்கியது. சோழர்கள், செங்கற்றளிகளை கற்றளிகளாக ஆக்கினார்கள் (கற்றளிகள் என்றால் கற்கோயில்). சோழர் கோயில்கள் விரிவான சுற்றுமதில், வெளிப்பிரகாரங்கள், துணைச்சன்னிதிகள் ஆகியவற்றுடன் அமைந்தவை. பெரிய கோயிலும் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயிலும் சோழர் காலக் கலைஞர்களின் தீராத கலைத்தாகத்துக்கு விருந்தாக அமைந்தன. மூன்று கோயில்களும் ஒன்றில் இருந்து ஒன்று உருவானவைதான்.
பெரிய கோயிலைக் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் ராஜராஜனுக்கு எப்படி தோன்றியிருக்கும்? எந்தக் கோயில் இதற்கு ஊக்கமாக இருந் திருக்கும் ?பல்லவர் காலக் கலைக்கூடம் என்று பாராட்டப்படும் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம் அதாவது இன்று கையிலாசநாதர் கோயில் என்றழைக்கப்படும் அக்கோயிலைப் பார்த்து வியந்த ராஜராஜன், தன் சோழ மண்ணில் இப்படியொரு கோயிலைக் கட்டவேண்டும் என்று பெரும் கனவு கண்டார். அதுதான் பெரிய கோயிலாக மலர்ந்தது. (இராஜசிம்மேசுவரம் பார்த்து வியந்த ராஜராஜன் அதற்கு கச்சிப் பேட்டுப் பெரிய திருக்கற்றளி’ என்று பாராட்டியுள்ளார்.) பல்லவர் களின் கலைத்திறன் சாதனையைக் கண்டு பொறாமைப்பட்டு அடுத்த வினாடியே இராஜசிம்மேசுவரத்தை தரை மட்டமாக்காமல் அதை விடவும் ஒரு சிறந்த கோயிலைக் எழுப்பிக் காட்ட வேண்டும் என்று எண்ணியதில் அந்தக் கால மன்னர்களிடமிருந்து ராஜராஜன் தனித்து நிற்கிறார்.
பெரிய கோயில் எப்படி கட்டப்படவேண்டும் என்று ராஜராஜன் தன் மந்திரிகளுடன் ஆலோசனை செய்தார். நிச்சயம் இக்கோயிலைக் கட்டப் பல ஆயிரம் மக்கள் தேவைப்படும் என்கிற கேள்வி எழுப்பப் பட்டபோது.’நம் மண்ணில் தான் திறமைக்குக் குறைவில்லாமல் சிற்பிகளும் ஓவியர்களும் இருக்கிறார்களே! நிச்சயம் செய்து காட்ட முடியும்’ என்று ராஜராஜன் தன் கலைஞர்கள்மீது அதிக நம்பிக்கை வைத்துப் பேசினார். கட்டடக் கலை, ஓவியக்கலை, சிற்பக் கலை இந்த மூன்றின் உதவியோடு கட்டப்படுகிற கோயில் உச்சபட்ச சாதனையை
நிகழ்த்திக் காட்டவேண்டும் என்று ராஜராஜன் ஆசைப்பட்டபோது பாணர் சொன்னார் -‘இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பேசப்படும். பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். சோழப் பேரரசின் அழியாத புகழைப் போல.
ஆற்றங்கரை நாகரிகத்தின் வரலாற்றுப் பதிவான பெரிய கோயிலின் கட்டுமானப் பணி, 1006ல் தொடங்கியது.
தஞ்சாவூர்ப் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் எனப் பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். மலைகளே இல்லாத, கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில் அறுபது, எண்பது கி.மீ தொலைவில் இருந்து கற்களைக் கொண்டுவந்து கோயில் எழுப்பப்பட்டு உள்ளது. கோயில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். தரை கெட்டியாக உள்ள செம்மண் பிரதேசத்தில், பெரியப் பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து இக்கோயிலைக் கட்டியது, ராஜராஜன் காலத்தின் பொறியியல் திறமைக்குச் சான்று.
கற்கள் கொண்டுவரப்பட்ட இடங்களிலிருந்து மண்ணியல் ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. திருச்சியின் மானமலையிலிருந்தும், புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார் கோயில் பகுதியிலிருந்தும் உறுதியான கற்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. பச்சை மலை யிலிருந்து பெரிய சிலைகளுக்கான கற்கள் கொண்டுவரப்பட்டன. பெரிய லிங்கத்துக்கான கல் திருவக்கரையிலிருந்து வரவழைக்கப்பட்டது.மலைகளோ, கற்பாறைகளோ இல்லாத தஞ்சை பூமியில் ஏறத்தாழ இரண்டு லட்சம் டன் எடையுள்ள கற்களைக் கொண்டு 216 அடி உயர முடைய ஒரு மலையாகவே தஞ்சைப் பெரிய கோயிலை வடித்துள்ளார் ராஜராஜன்.
பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பு, சில சமய நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. திசை, வாஸ்து எல்லாம் பார்த்துத் திருக் கோயில் எழும்ப வேண்டிய இடம் முதலில் தேர்வு செய்யப்பட்டது. தேர்ந்தெடுத்த இடத்தை அசுத்தங்கள் இல்லாமல் சுத்தமாக்கி, யானை களைக் கொண்டு நடக்கச் செய்து மண்ணைக் கெட்டிப் படுத்தினார்கள். கோயில் கட்டப்பட்ட காலத்தில் பசுக்களைப் பல வருடங்களுக்கு கட்டிவைத்து அந்தப் பசுக்களின் கோமியம் மற்றும் சாணம் பெரிய கோயில் கட்டப்பட்ட இடத்தில் பல பகுதிகளிலும் விழுமாறு செய்து அந்த இடத்தைப் பவித்திரமாக்கி தோஷங்களை நீக்கியிருக்கிறார்கள்.
இந்தத் தோஷ காரியங்கள் எல்லாம் முடிந்தபிறகு, இன்று கடைக்கால் நடுவதற்கு முன்னால் நிலத்தைக் கோடுகளால் பிரிப்பது போல,அப்போதும் கிட்டத்தட்ட இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. கோயில் கட்டப்போகும் முழு இடத்தையும் குறிப்பிட்ட அளவுடைய கட்டங்களாகப் பிரித்து, அதில் ஒவ்வொரு கட்டத்தையும் காப்பதற்கு ஒரு தேவதையை வழிபட்டிருக்கிறார்கள். அதற்கு பதவிந்யாசம் என்று பெயர். இந்தத் தேவதைகளில் அஷ்டதிக் பாலகர்கள் (எண்திசைக் காவலர் ) மிக முக்கியமானவர்கள். சரி, அந்தக் கோடுகளை எப்படி வரைந்திருப்பார்கள்? அங்கே தான் சோழர் கால சுவாரசியத்தை உள்ளே கொண்டுவருகிறார்கள்.
கட்டட வளாகம் முழுக்க தரையில் நெல்லைப் பரப்பி அதில்தான் கட்டம் வரையப்பட்டது. அதாவது, நெற்பரப்பையே கோயிலாக நாம் எண்ணிக்கொள்ளவேண்டும். கட்டங்கள் வரைந்த பிறகு, பூஜை நடைபெற்றுக் கட்டுமான வேலைகள் ஆரம்பமாயின.
இன்று, நவீனக் கட்டடங்கள் எல்லாம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் போது பெரிய கோயில் இன்றுவரை ஜம்மென்று இருக்கிறது.1342ல், தமிழகத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது, தமிழகத்தில் இருந்த பல கட்டடங்கள் அதனால் பாதிப்புக்குள்ளாகின. ஆனால், 1342ல் மட்டுமல்ல, அதன்பிறகு, தஞ்சாவூரில் ஏற்பட்ட பத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களையும் எதிர்கொண்டு அதே பலத்துடன் வலுவாக நின்றுகொண்டிருக்கிறது பெரிய கோயில். 1000 ஆண்டுகளாகப் பூமியின் அதிர்வுகளைத் தாங்கி நிற்கிறது.சரியான அளவு கொண்ட கற்களை, ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய், பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்து, அதற்குப் பிறகே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்த்தும், பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளும் நடைபெற்றுள்ளன. சுவர்கள், ஒரே அமைப்பாகப் பூகம்பத்தைத் தாங்கும் அளவுக்கு வலுவான அடித்தளங்களோடு அமைந்ததால் இதுவரை எவ்வித நிலநடுக்கத்தாலும் பெரிய கோயிலுக்கு எந்தவிதப் பாதிப்பும் நேரவில்லை. அப்படிப்பட்ட ஒரு நேர்த்தியான, காலத்தையும் தாங்கி நிற்கும் கட்டுமானம்.
பெரிய கோயிலின் ஸ்ரீவிமானத்தைப் (கோபுரம்) பார்க்கிற எல்லோ ருக்கும் ஒரு கேள்வி எழும். விமானக் கட்டுமான வேலையின்போது. கற்களை எப்படி மேலே கொண்டு போயிருப்பார்கள்? பாரம்தூக்கிகள் இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயரக் கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது?சாரங்கள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது என்றால் கோபுரத்தில் மேலே செல்லச் செல்ல உட்பகுதியில் அளவு குறைந்துகொண்டுல் வரும். இதில் சாரம் அமைத்து வேலை செய்யமுடியாது. இந்தப் பிரச்னைக்கு மாற்று வழி கண்டு பிடிக்கப்பட்டது. கோபுரத்தின் உட்பகுதியைக் கடினமான மணல் கொண்டு நிரப்பினார்கள். அதில் ஏறிக்கொண்டு கட்டுமான வேலைகள் நடைபெற்றுள்ளன. உச்சி விமானக் கற்கள் அமைக்கப்பட்ட பிறகு, உள்ளே குவிக்கப்பட்ட எல்லா மணலையும் நீக்கியுள்ளார்கள்.
இது எப்படி நமக்குத் தெரிந்ததென்றால், நீக்கப்பட்ட மணலின் தடயங்களைத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கண்டுபிடித்ததால் இந்த நுட்பம் அறியப்பட்டது. அதேபோல, ஒரு கல்லுக்கும் அடுத்தக் கல்லுக்கும் இடையே சுண்ணாம்புக்காரைப் போன்று எந்தப் பொரு ளையும் வைக்காமல் கட்டியிருப்பதும் உண்மையிலேயே வியக்கத் தக்கது.
பெரிய கோயில், இராஜராஜீஸ்வரம் (அல்லது இராஜராஜேச்சரம்), பெருவுடையார் என்கிற பெயர்கள் இந்தக் கோயிலுக்கு உண்டு. கல்வெட்டுகளில் பிரகதீஸ்வரர், பெருவுடையார், பெரிய கோயில் என்கிற குறிப்புகள் இல்லை. இராஜராஜீஸ்வரம் என்றே கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ என்கிற வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி உள்ளதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் பெரு உடையார். தென்னாட்டுக் கோயில்களில் மிக உயர்ந்த விமானத்தை உடையதால் பொதுமக்களால் ‘பெரியகோயில்’ என்று அழைக்கப் படுகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானத்துக்கு ‘தக்ஷிணமேரு’ என்று பெயர்.கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, பெரிய கோயில் பற்றிப் பல தவறான தகவல்கள் தமிழர்களிடையே பரப்பப்பட்டன . ‘கிருமி கண்ட சோழன் என்ற கரிகாலனால் கட்டப்பட்டது. அவர், இக் கோயிலைக்கட்டி, சிவகங்கை குளத்தில் குளித்து, தனது குஷ்ட நோய் நீங்கப் பெற்றார்’ என ஒரு கல்வெட்டு கூறுகிறது என்றார்கள் சிலர். ‘காடு வெட்டி சோழனால் கட்டப்பட்ட கோயில் இது’ என்றொரு செய்தியும் சொல்லப்பட்டது. இவைதான் உண்மையான தகவல்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கியபோது, நல்லவேளையாக உண்மையான வரலாறு வெளியே வந்தது.
தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களுக்கு நம்மிடத்தில் சரியான வரலாறு கிடையாது. தலப் புராணங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புனைக் கதைகளே பெரும்பாலான கோயில்களின் வரலாறாக உள்ளது.ஆனால், பெரிய கோயில் ஒரு விதிவிலக்கு. இந்தக் கோயிலின் உருவாக்கத்தில் தொடங்கி, ராஜராஜனின் அரசு நிர்வாகம் வரை சோழர் ஆட்சி தொடர்புடைய ஏராளமான தகவல்கள் கல்வெட்டுகளில் வெட்டப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள்தான் பெரிய கோயிலின் புதிரை அவிழ்த்தன.
1886ல், சென்னை அரசாங்கம் ஜெர்மன் நாட்டு கல்வெட்டு ஆராய்ச்சி யாளரைக் கொண்டு பெரிய கோயில் குறித்து ஆய்வு செய்தது. அப்போது கிடைத்த ஒரு கல்வெட்டுச் செய்தியில், ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எழுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்’ என இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம், ராஜராஜ சோழன்தான் பெரிய கோயிலைக் கட்டினார் என்பது சந்தேகத்துக்கிடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்டது. 1892ல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், இக்கோயில் ராஜராஜனால் கட்டப்பட்டதுதான் என்று அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
இப்படியொரு பிரம்மாண்ட படைப்பைக் கட்டி எழுப்பிய தலைமைச் சிற்பி, குஞ்சரமல்லன். இவருக்குத் துணையாக வேலை பார்த்த இதர சிற்பிகளின் அனைவர் பெயர்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டுள்ளன. ஆலய ஊழியத்துக்காக 4 பண்டாரிகளும், 170 மாணி களும், 6 கணக்கர்களும், 12 கீழ்கணக்கர்களும் பணியில் அமர்த்தப் பட்டார்கள். சிலர் நிரந்தர ஊழியர்கள். மற்றவர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.பெரிய கோயில் பண்டாரங்களில் சோழ மண்டல மக்களுக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருள்கள் குவிக்கப்பட்டிருந்ததால், 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். கோயில் பயன்பாட்டுகளுக்காக அயல்நாடுகளிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தினந்தோறும் வழிபாட்டுக்குப் பயன்படும் கற்பூரம், சுமத்ரா தீவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
பண்டைய தமிழர்கள் பிரதானமாகப் போற்றி வளர்த்த கலைகள் கட்டடக்கலை, சிற்பக்கலை ஓவியக்கலை, இசை மற்றும் நடனக் கலைகள். இந்த அத்தனை கலைகளையும் ஒருங்கிணைத்த கோயிலாகப் பெரிய கோயில் திகழ்ந்தது. ஒப்புயர்வற்ற கலைஞர்கள், அக்கலைஞர் களைப் போற்றி வளர்த்த அரசர்கள், கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாடிய பொதுமக்கள் என்று கலையின் வளர்ச்சியில் சோழர் சமூகத்தினருக்குப் பங்கிருந்தது.பெரிய கோயிலின் கட்டுமானப் பணி, கி.பி. 1010ல் அதாவது ராஜராஜன் ஆட்சிக்கு வந்த 25ம் ஆண்டின் 275ம் நாளில் கட்டி முடிக்கப் பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஞானிகளின் ஞானக் கண்களால் காணப்பட்ட கையிலங்கிரியைத் தூலக் கண்களாலும் பக்தர்கள் காண வேண்டும் என்பதற்காக ராஜராஜன் எடுத்த ஒரு முயற்சி, பெரிய கோயில்.
ராஜராஜனின் மேற்பார்வையில் உருவான பெரிய கோயிலின் கட்டுமானம் எப்படி அமைந்தது? பெரிய கோயிலில் எப்படிப்பட்ட கலாசாரக் கொண்டாட்டங்களும் வியக்கும்படியான சிற்பங்களும் அமைந்தன? பார்ப்போம்
கல்வெட்டுகள்
ஓர் அரசின் நிர்வாகம் சரியாக இருக்குமானால் ஆவணங்களும் சரியாக இருக்கும். இதற்கு உதாரணம், ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுகள். ராஜராஜன் காலத்து சமூக, சமய, இலக்கிய, நிர்வாகச் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளப் பெரிய கோயில் கல்வெட்டுகள்தான் உதவி செய்கின்றன.
வரலாற்றில் பெரிய கோயில் பற்றிய விவரங்களும் தன் ஆட்சி குறித்த தகவல்களும் இடம் பெறவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்திருக் கிறார் ராஜராஜன். பெரிய கோயிலில் தேவாரப் பாடல்கள் பாடிய 48 ஒதுவார்களுக்கும், உடுக்கை, கொட்டி மத்தளம் வாசிப்போர் இரு வருக்கும் ஆக 50 பேருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய செய்தி களும் பெரிய கோயில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.இப்படிக் கோயில் கட்டுமான வேலைகளிலிருந்து அதன் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளையும் கல்வெட்டில் பதித்துவிட வேண்டும் என்கிற கவனம் ராஜராஜனிடம் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது.
பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளிலேயே அதிகக் கவனம் பெற்ற கல்வெட்டு இது:
‘ஸர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும்.
அக்கன் என்ற சொல் அக்கா (தமக்கை ) என்பதைக் குறிக்கும். பெண்டுகள் என்றால் அவருடைய மனைவியர், திருமஞ்சனச் சாலை என்பது நீராடும் இடம். ராஜராஜன், நீராடுமிடத்தில் கூறியதைக் கல்வெட்டில் பொறித்திருக்கிறார்கள். அப்படி என்ன சொல்கிறார் ராஜராஜன்?
ஸ்ர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு, அதாவது தஞ்சை கோயிலில் இருக்கும் ஈஸ்வரனுக்கு, அவர் கொடுத்ததையும், அவருடைய அக்கா (குந்தவை) கொடுத்ததையும், அவருடைய மனைவியர் கொடுத்த தையும் மற்றும் யார் யார் என்னென்ன கொடுத்தார்கள் என்பதையும் கல்வெட்டில் பொறிக்க வேண்டும் என்று தன் பணியாளர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.
ராஜராஜன் தன் அக்காமீது எத்தனை பாசம் வைத்திருக்கிறார் என்ப தையும் புரிந்து கொள்ளலாம். அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் என்று கூறும் பொழுது, அக்காள்தான் முதன்மையாக இருக்கிறார்.தம் குடும்பத்தினர் தானம் கொடுப்பது மட்டுமல்ல, யார் என்ன கொடுத்தாலும் அதைக் கோயிலின் கல்வெட்டுகளில் பொறிக்கப்படவேண்டும் என்கிறார் ராஜராஜன்.
இதில் இரண்டு விஷயங்கள்.ஒன்று,எல்லோரையும் சமமாக நடத்துவது. அரசர் குலத்தவர் கொடுப்பதை மட்டும் கல்வெட்டில் பொறித்துவிட்டு, சாதாரண மக்கள் கொடுப்பதை உதாசீனம் செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மேலும், கொடுக்கும் பொருளின் அளவுகளைப் பார்க்கத் தேவையில்லை. கொடுப்பவர்கள் எவ்வளவு கொடுக்கிறார்களோ, அவற்றையெல்லாம் கல்லிலே வெட்ட வேண்டும் என்று கூறுவது அவருடைய பெருந்தன்மையை வெளிப் படுத்துவதாகவே உள்ளது.
மற்ற கோயில்களில் நிவந்தம் (தானம்) செய்பவர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஆனால், ராஜராஜன் காலத்துக் கோயில் களில்தான் கோயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட அத்தனை பேரின் பெயரையும் கல்வெட்டில் இடம்பெறச் செய்து,சாதாரணர் என்று கருதப்பட்ட பலரையும் சரித்திரத்தில் இடம்பெறச் செய்தார் ராஜராஜன்.வேதம் ஓதிய சட்டர்கள், பெருந்தச்சர்கள், ஆடல்மகளிர், அவர்களின் தலைவியராக விளங்கிய தலைக்கோல் மகளிர், ஆடல் மகளிருக்கு ஆடல் நட்டுவனார், பக்திப் பாடலிசைத்த பிடாரர்கள், பல்வேறு இசைக்கருவிகளில் வித்தகர்களாக விளங்கிய வாத்திய மாராயர்கள், சண்டீசப் பெருமானின் பெயரில் கோயில் சொத்துக்களை வாங்கி விற்று அதைக் கணக்கெழுதிய கணக்கர்கள், அரிசி, பருப்பு, நெய்யிலிருந்து வாழைத்தார் போன்ற அத்தனை பொருள்களையும் பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வந்த விவசாயப் பெருமக்கள், நிவந்தங்கள் அளித்த வணிகர்கள், கோயிலுக்குக் காவல் காத்த காவல் வீரர்கள் என்று ஒரு பெரிய கலைஞர் கூட்டமும் இதர கோயில் நிர்வாகத்தினரும் மன்னருக்கு இணையாகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளதை வேறு எங்கு காணமுடியும்?தஞ்சை கோயிலைக் கட்டிய தலைமை சிற்பிக்கும், 1600 பணியாளர் களுக்கும் அவர்களுக்குக் கீழ்நிலை பணியாளராக இருந்த ஒரு சிகை அலங்காரத் தொழிலாளிக்கும் ‘ராஜராஜன்’ என்கிற தன் பெயரையே பட்டமாக அளித்து, அவர்கள் பெயர்களைக் கல்வெட்டில் பொறித்தார் ராஜராஜன். அவருடைய விசால மனத்துக்கு இதைவிடவும் ஒரு சான்று தேவையில்லை.
(நூலிலிருந்து)
ராஜராஜ சோழன் – ராஜராஜ சோழன்
விலை: 240/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/raajaraaja-solan/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers