கல்வெட்டியல் – கா.ராஜன்

கல்வெட்டியல் – கா.ராஜன்

கல்வெட்டியல் என்பது பொதுவாக கல்லின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும், அவை தரும் செய்திகளையும் தொகுத்துப் படிக்கும் ஒரு இயலாகும். பழமையான எழுத்துக்கள் காலந்தோறும் பெற்ற வளர்ச்சியை உணர்ந்து, பின்னர் அவற்றை கால முறையாகப் படித்து கல்வெட்டுச் சான்றுகள் தரும் தரவுகளை வரலாற்றியல், மொழியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரம் போன்றவற்றின் பின்புலத்தில் கண்டுணர்ந்து நடுநிலைநோக்குடன் மனிதன் சமூகமாகப் பெற்ற பன்முக வளர்ச்சியை அறிதல் கல்வெட்டியல் ஆகும்.

இந்தியாவில் இத்தகைய எழுத்துப்பொறிப்புக்கள் பாறைகளிலும், கற்களிலும், கற்பலகைகளிலும், கற்றூண்களிலும், மரப்பட்டைகளிலும், நாணயங்களிலும், முத்திரைகளிலும், சிலைகளிலும், ஓலைகளிலும், செங்கற்களிலும், சங்குகளிலும், பானை ஓடுகளிலும், ஓலைகளிலும் காணப்படுகின்றன. இவ்வெழுத்துப் பொறிப்புக்கள் காலநிலையிலும் அதில் இடம்பெறும் செய்திகளைப் பொறுத்தும் அளவில் வேறுபடுகின்றன.

ஒரு சொல் முதல் ஓராயிரம் சொற்களுக்கும் மேலாக இக்கல்வெட்டுக்களில் பொறிப்புகள் இடம் பெறுகின்றன. இத்தகைய கல்வெட்டுக்கள் பரந்துபட்ட இந்தியாவின் பன்முகப்பண்பாட்டுத் தன்மைக்கு ஏற்றவாறு குறைந்தோ மிகுந்தோ காணப்பெறுகின்றன.

வரலாற்று உருவாக்கத்தில் கல்வெட்டுக்களின் பங்கு :

இந்திய வரலாற்றை உருவாக்கம் செய்ய கல்வெட்டு மிகச் சிறந்த முதன்மைச் சான்றாக விளங்குகிறது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கியங்கள், சமயநூல்கள், நாணயங்கள், தொல்லியல் சான்றுகள் போன்றவை இவற்றில் பெரும் பங்காற்றிய போதிலும் கல்வெட்டுத் தரவுகள் சில இலக்கியங்களின் காலத்தை முடிவு செய்யவும், அரசுகளின் மரபுரிமையை நிலைநாட்டவும் பெரிதும் பயன்படுகின்றன.

இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுக்கள் பெரும்பான்மையானவை கொடைக் கல்வெட்டுக்களாகக் கோயில்களில் காணப்பட்ட போதிலும் இக் கொடைக் கல்வெட்டுக்களின் ஊடாக கிடைக்கின்ற வரலாற்றுச் செய்திகளை நாம் ஒதுக்கிவிட முடியாது. பொதுவாக இலக்கியங்கள் காலந்தோறும் பெயர்த்து எழுதப்படுவதாலும், இடம்விட்டு இடம் நகரக்கூடியத் தன்மை பெற்றிருப்பதாலும், சமூக மேல்தட்டு மொழியைக் கொண்டு விளங்குவதாலும் சில நேரங்களில் இலக்கியங்களைவிடச் சமகால வரலாற்றுச் செய்திகளைத் தாங்கி நிற்கின்ற கல்வெட்டுக்கள் ஒரு சிறந்த வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

கல்வெட்டுக்கள் நிலையானவையாகவும், இடம் மாறாதவையாகவும், சாதாரண மக்கள் பேசுகின்ற மொழியில் அமைந்தவையாகவும் இருப்பதால் இதன் வரலாற்று முக்கியத்துவம் மேலும் கூடுகிறது. கல்வெட்டுக்கள் அரசனின் புகழ்பாடுபவையாக அவனது செயல்களை எடுத்தியம்புவையாக மட்டுமே இருந்த போதிலும் வட்டார அளவிலான சம காலக் கல்வெட்டுக்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும் பொழுது அதன் முக்கியத்துவம் நன்கு விளங்கும்.

கல்வெட்டுக்கள் யாரால். என்ன எதற்கு. நோக்கத்திற்காகப் பொறிக்கப்பட்டன என்பதை மனதில் நிறுத்தி புள்ளியியல், தர்க்க ரீதியிலான அடிப்படையில் அதில் காணும் வரலாற்று நிகழ்வுகளைக் கல்வெட்டாய்வாளர் கையாண்டால் மட்டுமே இதை ஒரு மிசச்சிறந்த வரலாற்றுச் சான்றாகப் பயன்படுத்திக் கொள்ள இயலும். சில நேரங்களில் இலக்கியங்களில் காணப்படாத செய்திகள் கல்வெட்டுக்கள் மூலம் பெறப்படுவதை காணலாம்.

எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியங்கள் சமண சமய தொடர்பான செய்திகளைப் பெரும்பாலும் தாங்கி நிற்கவில்லை எனலாம். ஆனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் சமணம் தழைத்தோங்கியிருந்தது என்பதை கணிசமான தமிழ் – பிராமி கல்வெட்டுக்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதேபோல் செங்கம் பகுதியில கிடைத்த நடுகற்கள் அங்கு நிலவிய அக்காலச் சமூகச் சூழலை நமக்கு எடுத்துரைக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் மேலாக காலந்தோறும் ஒரு மொழியின் எழுத்து வரிவடிவங்களில் ஏற்பட்ட மாற்றத்தைக் கல்வெட்டு மூலம் மட்டுமே திறம்பட எடுத்துரைக்கமுடியும். எனவே கல்வெட்டுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு தரவுகள் ஒரு நாட்டின் வரலாற்றுத் தொன்மையை நிரல்பட உய்த்துணர வகை செய்கின்றன.

விலை:500/-