கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது.
குறும்பா என்னும் குறுமான் சாதியுடன் கண்ணகியை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. கேரள வயநாடு பகுதியைக் குறும்பா நாடு என்றும் கூறுவர். இது இன்றைய கோழிக்கோடு மாவட்டம் கல்பெற்றா பகுதியில் இருப்பது ஒரு காலத்தில் இங்கே அதிக அளவில் சமணர்கள் வாழ்ந்தனர். அதனால் இச்சாதியினரிடம் கண்ணகி வழிபாடு பரவலானது. அதனால் இவர்கள் ஆரம்பகாலக் கண்ணகி வழிபாட்டினர் என்றும் கூறலாம்.
கொடுங்கல்லூர் கோவில் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய குறும்பர்கள்” முள்ளுகுறும்பர், தேன் குறும்பர், ஊராளி அல்லது பீட்ட குறும்பர் என்னும் பிரிவுகளை உடையவர். இது 1901-ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி உள்ள தகவல் இவர்களில் முள்ளு குறும்பர்களுக்கு தேன் குறும்பர்களுக்கும் தலைவனாக இருப்பவன் மூப்பன். இவர்களின் குலதெய்வம் மாஸ்தி (மஸ்தி). இதற்குப் பத்தினித் தெய்வம் என்பது பொருள். மாசதிக்கல் என்பது சதிக்கல்லைக் குறிக்கும். இயல்பாகவே பத்தினி வழிபாட்டை உடைய இவர்கள் கண்ணகியை வழிபட்டது இதனாலேயே.
ஸ்ரீகுரும்பா தெய்வத்தைப், (கண்ணகி) பகவதியுடன் ஏற்றிச் சங்கல்பித்த நம்பூதிரிகள் கொடுங்கல்லூர் கோவில் கிழக்கு வாசல் சோபனப்படியில் ஸ்ரீ சக்கரத்தை ஆவோகனம் செய்தனர். இவ்வாசலில் இவர்களுக்குள்ள உரிமையையும் “தன்னாரோ தான் யாரோ” என இவர்கள் பாடுவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கொடுங்கல்லூர் கோவிலில் இப்போதும் மண்ணார் சாதியினரான (வேலன்) பாலக்காவேலன் குடும்பத்தில் மூத்த வாரிசுக்குச் சில உரிமைகள் உள்ளன. இவர் செண்டை முழங்க வேடம் தரித்து கொடுங்கல்லூர் அரசனைக் கண்டு சடங்கு நடத்த அனுமதி பெற்றுகோவில் மேற்கு வாசலில் பீடம் அமைத்து அமருவார். இப்போது பொதுமக்கள் இவருக்குக் காணிக்கை கொடுப்பார்.
பகவதி தாருகனுடன் போர் செய்து காயங்களுடன் திரும்பிய போது மருத்துவம் செய்தவர் வேலன் என்பது ஐதீகம். இவர்கள் சாமுண்டி என்ற தெய்யம் ஆட உரிமை உடையவர்கள். ரத்த சாமுண்டிக்குப் பலி கொடுக்கும் மரபை உடையவர்கள் மலபாரில் வாழும் இவர்களைக் குறித்த பல செய்திகள் சங்ககால வேலன் வெறியாடலை நிகழ்த்தியவர்கள் இவர்களே என்பதை உறுதிப் படுத்துகின்றன.
கேரளத்தின் ஒடுக்கப்பட்ட சாதியினராகக் கருதப்படும் புலையர்கள் இக்கோவிலின் அருகே உள்ள புலைப்பாடம் கோவிலின் குருதி செய்யும் உரிமை உடையவர். புலையர் சமூகம் கேரளத்தில் பரவலாக வாழ்ந்தாலும் கொடுங்கல்லூரில் வாழும் ஒரு குடும்பமே இதைச் செய்கிறது தாருகனைக் கொன்ற தேவி கருவண்டு நிறமுள்ள அழகியாகப் புலையர் குடிலுக்கு வந்தாள் புலையர், அவளுக்கு ஐவகை படையலிட்டு வணங்கினர். கொடுங்கல்லூர் தம்புரான் இந்த தேவிக்குக் கோவில் எடுத்தார்.
புலைப்பாடக் காளிக்குப் பலி நிகழ்வு, நவராத்திரி 9-ஆம் நாள், மார்கழி மாத தாலப்பொலி, கும்ப பரணி, மீன பரணி ஆகியவற்றின் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ளும் உரிமை புலையர்களுக்கு உண்டு. சங்ககாலப் புலையர்களே இவர்கள், தமிழக தேவேந்திர குல வேளாள மரபினர்,என்ற கருத்து உண்டு (செந்தில் மள்ளர், 2013, ப.96). இவர்களுக்கும் பகவதி கோவிலுக்கும் உள்ள உறவு கண்ணகி வழிபாட்டின் தொன்மையைப் புலப்படுத்தும்.
கொடுங்கல்லூர் கோவலனுடன் குடும்புகள் கொண்ட உறவு குறித்த செய்திகள் கோவிலின் பழமையைக் காட்டும். ராமவர்மா ஆய்வு மையத்தின் இதழில் (Vol.8, Part 8, P. 1-41) வந்த ஒரு கட்டுரையை பாகுலேயன்நாயர் (குடும்பரும் கொடுங்கல்லூரும், சிறு பிரசுரம், 1952 மலையாளம், திரிசூர்) எடுத்துக்காட்டுகிறார். இதன்படி சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எடுத்த காலகட்டத்திலேயே குடும்பர்கள் கண்ணகி கோவில் சடங்கில் பங்கு கொண்டனர் எனத் தெரிகிறது. அவர்களின் வழித்தோன்றல்களே இவர்கள் செம்மறியாட்டை தட்சணையாகக் கொடுப்பது (இது நடைதள்ளுதல்), பக்தர்கள் மேல் பழம் வீசுதல் ஆகிய செயல்களை இப்போதும் இவர்கள் செய்கின்றனர். ராமவர்மா ஆய்வுமைய இதழ் “குடும்பர்கள் தமிழ் மரபினர்; தமிழ்க் கடவுளான கண்ணகி வழிபாட்டுடன் ஆரம்பகாலத்திலிருந்தே தொடர்புடையவர்” என்கிறது.
கொடுங்கல்லூர் கும்பமாத பரணி விழா, மீனபரணி விழா என பல சடங்குகளில் பங்கு கொள்ளும் மலையான் தட்டான் என்னும் கம்மாளர் சாதியினர் சிலப்பதிகார காவியத்துடன்
தொடர்புடையவரே. (நூலிலிருந்து)
கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் – அ.கா. பெருமாள்
விலை: 270/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/keralaththil-kannagi-vazhipaadum-kodugganallur-kovilum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers