கரிகாலன் அமைத்த காவிரிக் கரையும் புதிய செய்தியும்

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில், திருச்சியில் இருந்து தஞ்சை செல்ல காவிரிக்கரை சாலையை விரும்பி பயணிப்பேன். இரண்டு புறமும் அடர்த்தியான மரங்கள் மிக இரம்மியமாக அப்பயணம் இருக்கும். ஆனால் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு அந்த மரங்கள் இன்று அழிக்கப்பட்டுவிட்டன. இம்மரங்களின் முக்கியத்துவம் பற்றியும், கரிகாலனும் தொலைநோக்கு சிந்தனை பற்றியும் தெலுங்கு சோழர் ஆவணம் ஒன்று கூறுகிறது.

கரிகாலன் காவிரிக்கு இரண்டுபுறமும் கரை எழுப்பினான் என்பதே செப்பேடுகள் கூறும் வரலாறு. இதனை அவன் நேரிடிப் பார்வையில் நடத்தியச் செயல். காவிரிக்கு குறுக்கே இருந்த கல்லணை பற்றி வரலாற்றில் தெளிவாக இல்லை. இன்றும் அப்பகுதி அணைக் கரை என்றே அழைக்கபடுகிறது. இருப்பினும் நீரை மடைமாற்றும் நோக்கோடு அந்த அணை இருந்திருக்க வேண்டும் என்பதே பிற்கால ஆய்வாளர்கள் கருத்து.

துளுவ வம்ச விஜயநகர மன்னர்களுடன் திருமண உறவு கொண்ட தெலுங்குச் சொழரான, சூரிய வம்சத்தைச் சேர்ந்த தோரகன்டி தலைவர்களில் ஒருவரைப் பற்றிப் தெலுங்கு காவியமான நரசாபூபாலியம் பேசுகிறது. அதில் ஒரு சுவாரஸ்யமான தகவலை நமக்குக் கிடைக்கிறது.

அதன்படி, “காவேரி ஆற்றின் இரு கரைகளிலும் சாலையோர மரங்களை வரிசையாக நட்டு, கடலின் ராணியான காவிரியை மக்கள் பார்வையிலிருந்து மறைக்க கரிகாலன் திட்டமிட்டார்” என்று அந்தக் காவியம் கூறுகிறது. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் தெலுங்குச் சோழர் தங்கள் சொந்த ஊரான உறையூரையும், காவிரிக்கு கரைகண்ட கரிகாலனையும் நினைவு கூற மறக்கவில்லை.

மேலோட்டமாக இது கவிதையாக இருந்தாலும், கரிகாலன் ஒரு திட்டத்தோடே இதனைச் செய்துள்ளார்.

அதாவது கரிகால் சோழன் கரைக்கு எழுப்பியதையும், அந்த கரை தொடர்ந்து வலுவாக இருக்க அதில் அடர்த்தியாக மரங்கள் நட்ட செய்தி நமக்குச் தெலுங்குச் சோழர் ஆவணம் மூலம் தெரிகிறது. மரங்களின் வேர்கள் கரையினை வெல்ல அரிப்பினைத் தடுக்கும் ஆற்றலுடையது. எனவே அதில் கருத்தில் கொண்டு மரங்கள் அடர்த்தியாக நடப்பட்டுள்ளன. இக்கரைகள் பெருவெள்ளத்தின் பொது அழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்படாமல், பல ஆயிரம் வருடங்களாக நம்மை கரிகாலன் நட்ட இம்மரங்கள் காத்து வந்துள்ளன. இதன் மூலம் சோழரின் தொலைநோக்கு திட்டமிடலும், நீர்மேலாண்மை அறிவியல், கட்டுமானத் தரம் நமக்கு வெளிப்படுகிறது.

ஆனால் இன்று நிலைமை வேறு. சாலை விரிவாகப் பணிகளில் அம்மரங்களை தொடர்ந்து இழந்து வருகின்றோம். எனவே பேரிடர் அபாயத்தை உணர்ந்து வெறிச்சோடிய சாலைகளாக அமைக்காமல் கரிகாலன் வழியை பின்பற்றி மீண்டும் காவிரிக் கரைமுழுவதும் மரங்களை நட்டு, இயற்கை பேரிடரில் இருந்து நிரந்தரமாக மக்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரலாற்றில் சாலையில் மரங்கள் நட்டு சிறப்பு பெற்றவர் அசோகர் என்றால், காவிரியின் கரைகளில் மரங்கள் நட்டு மக்களை இன்றும் காத்து வரும் “எங்கள் மன்னர் கரிகால சோழ” மகாராஜாவும் நினைவுக் கூறத்தக்கவரே.