நவீன காலத்தில் பரகாவ் (வட கிராமம் -ஆலமர கிராமம்) என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி ஆரம்பகால சமண பௌத்த நூல்களில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராஜகிருஹ நகரத்தின் வளம் கொழிக்கும் புறநகர்ப்பகுதி (பாஹிரியா) நாலந்தா மஹாவீரர் 14 சதுர்மாஸ்யங்களை (பயணங்களில் இருந்து ஓய்வு எடுக்கும் மழைக்காலங்களை) இங்குதான் கழித்தார் என்று சமண நூல்களில் இருந்து தெரியவருகிறது.
ராஜகிருஹத்தில் இருந்து 14 மைல் தொலைவில் நாலந்தா இருக்கிறது. பௌத்த நூல்கள் இவற்றை இரண்டு தனிப் பகுதிகளாகவே குறிப்பிடுகின்றன. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியை
1.அந்தரா ச ராஜக்ருஹம்,
2.அந்தரா ச நாலந்தம் என்றே குறிப்பிடுகின்றன.
புத்தரும் மஹாவீரரும் இந்தப் பகுதிக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வந்திருப்பதாக இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. புத்தர் இங்கு வரும்போதெல்லாம் பவாரிகா என்ற மாந்தோப்பில்தான் தங்குவது வழக்கம்.
புத்தர், அவருடைய ஏராளமான சீடர்கள் பின்தொடர, தனது இறுதி யாத்திரையை நாலந்தாவை நோக்கியே மேற்கொண்டதாக மஹாபரிநிர்வாண சூக்தம் தெரிவிக்கிறது.
புத்தரின் பிரதான சிஷ்யர் ஒருவர் பிறந்ததும் இறந்ததுமான நல கிராமம், இந்த நாலந்தாவாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மௌதகல்யாயண என்ற இன்னொரு புகழ் பெற்ற சீடரும் இதன் அருகில்தான் பிறந்தார்.