தமிழ் நாட்டில் வடமொழியை எழுத தொன்றுதொட்டு வழங்கிய எழுத்தை கிரந்தம் என்பர். வடமொழியில் கிரந்தம் என்றால் நூல் என்று பொருள். ஆதலின் வடமொழியை எழுத வழங்கிய எழுத்தையும் கிரந்தம் என்றனர் போலும். முதன்முதலில் இப்பெயர் எப்பொழுது வழக்கில் வந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை.கடந்த சில நூற்றாண்டுகளாகவே இப்பெயர் வழங்கி வந்துள்ளது. பல எழுத்துகளின் பெயர்களைக் குறிக்கும் ‘சமவயங்க சுத்த’ என்ற சமண நூலோ ‘லலித விஸ்தரம்’ என்ற பௌத்த நூலோ, இப்பெயரைக் குறிக்கவில்லை. திராவிடி என்னும் பெயருள்ள ஒரு எழுத்து லலிதவிஸ்தரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்நூல் கி.பி. 5,6-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. அக்காலத்தில் தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்தும், தெலுங்கு-கன்னட பகுதியில் நிலவிய எழுத்தும் ஒன்று போலவே இருந்தன. ஆதலின் இவ்வெழுத்தையே திராவிடி என்று அழைத்தனர் போலும். கிபி. 7-ம் நூற்றாண்டில் இருந்து தெலுங்கு கன்னட எழுத்துக்களும், கிரந்த எழுத்துகளும் தனித்தனியாகப் பிரியத் தொடங்கின. தமிழ் நாட்டில் தமிழ் எழுத்துக்களின் அமைதியைப் பின்பற்றியே இவ்வெழுத்துகள் வளர்ந்தன. திராவிடியில் இருந்து பிரிந்து, தமிழ் எழுத்தின் அடிப்படையில் தமிழகத்தில் வளர்ந்த இவ்வெழுத்தை கிரந்தம் என்று அழைக்கிறோம்.தமிழி கல்வெட்டுகளில் பிராகிருதச் சொற்களை எழுத உபயோகிக்கப்பட்ட வடமொழி எழுத்துகளே கிரந்த எழுத்துக்களின் முன்னோடிகள் எனலாம். தமிழகத்தில் பல குகைகளிலுள்ள கல்வெட்டிகளில் ‘ஸ’ என்னும் வட எழுத்தும், ‘த’ என்னும் வர்க்க எழுத்தும் காணப்படுகின்றன. அரிக்கமேட்டில் நடந்த அகழ்வாய்வில் எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இவற்றில் தமிழ் எழுத்துக்களும்,சாதவாஹனர் எழுத்துகளை ஒக்கும் வர்க்க எழுத்துகளும் உள்ளன. இவையே கிரந்த எழுத்துகளின் முன்னோடிகளாகும்.
Price include Processing Charges