Description
நெல்லை நாட்டுச் சிறந்த கோயில்களுள் ஒன்று சங்கர நயினார் கோயில். ஆதியில் அது புற்றுக் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோற்றுகின்றது. இன்றும் பாமர மக்கள் அதனைப் பாம்புக்கோவில் என்றே வழங்குவர். அங்குள்ள புற்று மருந்து என்னும் திருமண் எவ்வகைப் பிணியையும் தீர்க்க வல்லதென்று கருதப்படுகின்றது. அக்கோயிலையுடைய ஊர் முன்னாளில் இராசபுரம் என வழங்கிற்று.17 இதனாலேயே இராசை என்னும் பெயர் இலக்கியத்தில் அவ்வூரைக் குறிப்பதாயிற்று. பிற்காலத்தில் கோயிற் பெயரே ஊர்ப் பெயராகக் கொள்ளப்பட்டது.