தாமிரவருணி ஆறு
திருநெல்வேலி மாவட்டத்துக்கு மிக அழகான மேற்கு எல்லையைத் தந்திருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைகள். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட இருபது சிகரங்கள் இங்கே இருக்கின்றன. மிக அற்புதமான ‘பொதிகை’யின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1867 மீ. இந்தச் சிகரம், ஆண்டுக்கு 3500 மி.மீ.க்கும் அதிகமான மழையைப் பெறுகிறது. இந்தச் சிகரத்திலிருந்துதான் தாமிரவருணி ஆறு தொடங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 500 சதுர கி.மீ. அளவுக்கு நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டிருக் கிறது. பொதிகையிலிருந்து, வானதீர்த்தம் (பாணதீர்த்தம்) அருவி வரையிலும் அடர்ந்த வனப் பள்ளத்தாக்கின் வழி மிக வேகமாகக் கீழிறங்கி ஓடி வருகிறது, தாமிரவருணி.
இந்தப் பகுதியில் பேயாறு, உள்ளாறு என்ற இரு ஆறுகள் வந்து இணைகின்றன. வானதீர்த்தத்தில் அருவியாகத் தாமிரவருணி கீழிறங்கு கிறது. இந்த அருவிக்குக் கீழே வலப்புறம் பாம்பாறும் இடப்புறம் கோரையாறும் வந்து சேருகின்றன. இங்கிருந்து மெலிதாக இறங்கும் ஆறு, பின்னர் சமமான தளத்தில் செல்கிறது. முண்டந்துறையில் தாமிரவருணியின் இடதுபுறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கிய துணை ஆறான சேர்வலாறு வந்து சேருகிறது. பிறகு, பாபநாசம் வந்து சேரும் ஆறு, அகத்தியர் அருவி, கல்யாணி தீர்த்தம் என்ற பெயரில் நூறு மீட்டர் உயர அருவியாகக் குதிக்கிறது. இங்கிருந்து சமவெளியில் பயணத்தைத் தொடர்கிறது தாமிரவருணி.
மணிமுத்தாறு
சமவெளியில் தாமிரவருணியுடன் வந்து சேரும் முதல் துணை ஆறு மணிமுத்தாறு. முன்னர் ‘சிங்கம்பட்டி ஜமீன்’ என்றழைக்கப்பட்ட பகுதியிலுள்ள செங்கல்தேரிக்கு மேலேயுள்ள அடர்ந்த வனப்பகுதியி லிருந்து மணிமுத்தாறு தோன்றுகிறது. மலைப் பகுதியிலேயே வரட்டாறு, குசுங்கிளியாறு, கீழ் மணிமுத்தாறு ஆகியவை மணிமுத்தாற்றில் வந்துசேருகின்றன. இந்தப் பகுதியில் ‘தலை அணை’ என்றோர் அணைக் கட்டு இருக்கிறது; இங்கிருந்துதான் பெருங்கால் புறப்படுகிறது. இந்தப் பெருங்கால் மூலமாகத்தான் சிங்கம்பட்டி பகுதிக்குப் பாசனம் வழங்குகிறது மணிமுத்தாறு. இந்த அணைக்கட்டுக்குக் கீழே இரு கிளைகளாகப் பிரியும் மணிமுத்தாறு, மீண்டும் தாமிரவருணியுடன் கலப்பதற்கு முன்னே ஒன்றாகச் சேர்ந்து விடுகிறது. இந்த இடத்தில் வலதுபுறத்தின் அகலமான கிளையில் கொடிக்கால் என்றழைக்கப்படும் அணைக்கட்டு இருக்கிறது. இந்த அணைக்கட்டிலிருந்து பாசனக் கால்வாய் ஒன்று புறப்படுகிறது. இடதுபுறக் கிளையில் வெள்ள காலத்தில் மட்டுமே தண்ணீர் செல்கிறது; பெரும்பாலான பிற நேரங் களில் வறண்டு கிடக்கிறது. அம்பாசமுத்திரம் அருகே கன்னடியன் அணைக்கட்டில் தாமிரவருணியில் மணிமுத்தாறு வந்து சேருகிறது.
வேலங்குடி கிராமத்துக்கு அருகே தாமிரவருணியின் வலதுபுறத்தில் திடீர் திடீரென வெள்ளப்பெருக்கெடுக்கும் கோரையாறு என்ற காட்டு ஓடையொன்று வந்து சேருகிறது.