விழுப்புரம் மாவட்டத் தொல்லியல் சுவடுகள்
ஆசிரியர் பெயர் : முனைவர் நா.இளங்கோ
- திருவக்கரையின் நில அமைப்பு, கல்மரங்களின் காலம், மரங்கள் கல்லாக மாற்றம்பெற்றமை குறித்த அறிவியல் விளக்கங்கள், கல்மரங்களின் தனிச்சிறப்பு இவற்றை விவரிப்பதோடு திருவக்கரை ஊர்ப்பெயராய்வு, கோயில் வரலாறு, கோயிலின் தனிச்சிறப்புகள் எனப் பல அரிய தகவல்களோடு இக்கட்டுரை அமைந்துள்ளது.
- தாய்த்தெய்வத் தோற்றம், இலக்கியங்களில் பயின்று வருபவை, இன்று நமக்குக் கிடைக்கும் விசிறிப்பாறையே தமிழர்களின் தொன்மைத் தாய்த் தெய்வம் எனச்சொல்லி நிறைவு செய்கிறார்.
- உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றான சிந்துவெளி நாகரிகம் என்பது தமிழர்களின் நாகரீகமே என்பது ஹீராஸ் பாதிரியார், பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா, ரஷ்ய நாட்டு அறிஞர் நார்சோ, எச்.டி.சங்காலியா, சேவியர் தனிநாயகம் அடிகளார் முதலான அறிஞர்களின் கருத்தாகும். என்பதை எடுத்துச் சொல்லி அவர்கள் கருத்துக்கு வலு சேர்க்கிறது கீழ்வாலை ஓவியத்தில் உள்ள குறியீடுகள் என்று நிறைவு செய்கிறார்.
- பெருமுக்கல் கல்வெட்டுகள், கீறல் ஓவியங்கள் அறுபது கல்வெட்டுகளின் கருத்துரைகள் என அனைத்தையும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார் . ஆசீவகத்திற்கும் பெருமுக்கலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கருதுகோள்களாகும் என்று கூறி நிறைவு செய்கிறார்.
- தொண்டூர், நெகனூர்ப்பட்டி, செஞ்சி இங்கெல்லாம் சமணம் பரவியிருந்த தன்மைகளையும் சமணம் குறித்துப் பல தகவல்களையும் விளக்கமாகவும் விரிவாகவும் மிகவும் சுவைபட எழுதி உள்ளது பாராட்டுதற்குரியது.
- திருநாதர் குன்றில் மூன்று கல்வெட்டுகள் கிடைத்தன. இக்குன்று ஆயிரத்து எழுநூறு ஆண்டுப் பழைமையுடைய வரலாற்றைக் கொண்டது என்று கூறி, கல்வெட்டுகள் சொல்லும் செய்திகளை விளக்குகிறார். திருநாதர் குன்று தமிழகச் சமண சமய வரலாற்றிலும் தமிழி என்ற தொல்லியல் வரலாற்றிலும் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது என்பதை எடுத்துக் கூறியுள்ளார். இங்குதான் கல்வெட்டில் -ஐ- என்ற எழுத்தைப் பார்க்கிறோம் என்பதனையும் இத்துடன் 24 தீர்த்தங்கரர்களைப் புடைப்புச் சிற்பமாக ஒரே இடத்தில் வெட்டுவித்த கலைக் கருவூலமாகும் என்று நிறைவு செய்கிறார்.
- செங்கல் இல்லாமலும் மரம் இல்லாமலும் உலோகம் இல்லாமலும் சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா, சிவன், விஷ்ணுவிற்கும் விசித்திர சித்தன் என்னும் முதல் மகேந்திரவர்மனால் இந்த இலட்சிதன் குடைவரைக் கோயில் அமைக்கப் பெற்றது என்பதை அங்குள்ள கல்வெட்டால் அறிகிறோம். சங்க கால மன்னர்களின் கோயில்கள், மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்கள், குடைவரையின் கட்டடக்கலை நுட்பங்கள், பல்லவர்களின் கலைகள் அனைத்தையும் விளக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- இராஜசிம்மன் பனைமலைக் கோயில் குறித்துச் சிறப்பான விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளதோடு இவன் எங்கெங்குக் கோயில் கட்டினான் என்பதையும் கோயிற்கலைகள் குறித்தும் ஓவியம் குறித்தும் கோயில் கலை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதையும் நீர்நிலை ஏற்படுத்தியதையும் வெகு சிறப்பாக எழுதியுள்ளார்.
- சாளுவன்குப்பம் என்ற திருவிழிச்சில் முருகன் கோயிலை அகழ்வாய்வு வழியாக வெளிக்கொணர்ந்தமை, ஆய்வாளர்களின் பெயர்கள், அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி நிறைவு செய்கின்றார்.