தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம் – பெ.நிர்மலா
விலை: ₹260
பக்கம்: 408
தமிழகத்தில் பெரும் கோவில்கள் உருவாக்கப்பட்டபோது, அவற்றின் கருத்து நிலைப் பதிவுகள், எவ்வெவ்வகையில் பதிவு செய்யப்பட்டன என்னும் விரிந்த கோணத்தில், சிற்பம் என்னும் ஒரு புள்ளியை, இந்நூல் ஆய்வு செய்துள்ளது. தாய்வழிச் சமூகமரபு அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் வைதிக ஆணாதிக்க மரபு, எப்படிக் கால் ஊன்றியது என்று, இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது.
புராணக் கதைகளைக் கொண்டு கட்டப்பட்ட சாத்திரங்கள், சிற்பக்கலை மரபில் உள்வாங்கப்பட்டு, பெண்ணை மூன்றாம் தரத்திற்கு இறக்கிய அவலம் சுட்டிக் காட்டப்படுகிறது. மிகக் கனமான (உருவத்திலும் உள்ளடகத்திலும்) கருப்பொருளை, எளிதாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொன்மம் (தொன்மை) எனில், பழமை என்றறிவோம். இந்நூல், பெண் பழமை நிலை பற்றிச் சிற்பங்களின் ஊடாக ஆராய்கிறது எனக் கொள்ளலாமா? வைதிகக் கருத்துகள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்ற நிலையே, பிறப்பு முதல் இறப்பு வரை கொள்ளப்பட்டு வருகிறது என்பதைப் பல சான்றுகளுடன், நூலாசிரியர் விளக்கியுள்ளார். வலப்பக்கம் உயர்ந்தது, இடப்பக்கம் தாழ்ந்தது என்றும், ஆண் வலம் என்றும் பெண் இடம் என்றும் பாகுபடுத்துவதும், ஆணாதிக்கச் சிந்தனையே. “மனுவில் பெண்ணிழிவு செய்வது போலவே, விவிலியத்திலும் காணப்படுவதை எடுத்துக்காட்டியுள்ளார்.
பெண், தொன்மங்களில், சிற்பங்களில், எழிலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளாள். பொதுவாக, இந்த எழிலில் மயங்கும் மக்கள், அதிகம் தான். ஆனால், அந்த எழிலையும் மீறி, கலை எதையோ பிரசாரம் செய்கிறது. அதாவது, ஆணாதிக்கச் சிந்தனை முறையே என்று, வெளிப்படையாகச் சொல்லலாம். கலை எனும் பெயரால், சமூகத்தில் நச்சு ஊட்டப்படுகிறது என்பது, நூலின் உள்ளடக்கம்.