Team Heritager November 18, 2024 0

பாறை ஓவியங்கள்

பாறை ஓவியங்கள் :

‘இந்நூல், விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கீழ்வாலை என்ற ஊரிலே கண்டுபிடிக்கப் பெற்ற பாறை ஓவியங்களைப் பற்றியதாகும். வரலாற்றுக்கு முற்பட்ட இந்த ஓவியங்களுக் கிடையே முதன் முதலாகச் சிந்துவெளி நாகரிகக் குறியீட்டு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என் தலைமையில் இயங்கி வருகின்ற புதுவை வரலாற்றுக் கழகத்தைச் சார்ந்த பாகூர் புலவர் சு. குப்புசாமியும்,வில்லியனூர் புலவர் ந.வேங்கடேசனும் இவ்வோவியங்களைக் கண்டுபிடிப்பதில் காட்டிய ஊக்கமும் பேருழைப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி முதல் தகவல் தந்தார். பின்னர் இக்கண்டுபிடிப்பு, செய்தித் தாள்களில் வெளியிடப்பெற்றது.

இந்தக் கண்டுபிடிப்பு, வரலாற்றுக்கு முற்பட்ட ஓவியங்களைப் பற்றிய ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. தொல்பொருள் ஆய்வுத்துறை, வரலாற்றுத்துறை சார்ந்த அறிஞர் பலரும் இந்தப் பாறை ஓவியங்களைக் காணச் சென்றார்கள். ஆர்வத்தோடு ஆராய்ந்தார்கள். கீழ்வாலையில் காணப்படும் எழுத்து வடிவங்கள் சிந்துவெளிக் குறியீட்டு எழுத்துக்களே என்று அறிஞர்கள் பலரும் ஒப்புக்கொள்ளுகின்றார்கள். இந்தக் குறியீட்டு (முத்திரை) எழுத்துகள் குஜராத் மாநிலத்தில் அகழாய்வு செய்துள்ள லோத்தால், காலிபங்கன் என்ற இடங்களிலும் காணப்பட்டன.ஆயினும், இப்பொழுது திடீரென்று தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில், திருக்கோவிலூர் வட்டத்தைச் சார்ந்த கீழ்வாலையில் உள்ள பாறை ஓவியங்களுக்கிடையே காணப்பெறுவது பெரிய புதிராக உள்ளது. புதுவை வரலாற்றுக் கழகத்தினர் இந்தப் பாறை ஓவியங்களைக் கண்டு பிடித்த பின்னர், அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அப்பகுதியில் மூன்று நான்கு பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில் விலங்கு, மனித (உருவங்கள்) ஓவியங்கள் கிடைத்தன. ஆனால், இந்த ஓவியங்களில், கீழ்வாலை ஓவியத்தில் காணப்பெறும் சிந்துவெளி நாகரிகக் குறியீட்டெழுத்துகள் கிடைக்கவில்லை.

கீழ்வாலை:

விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் கெடார் அருகே அமைந்துள்ளக் கிராமம். இங்குள்ளப் பாறை ‘இரத்தக் குடைக்கல் பாறை’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், இந்தப் பாறையில் சிவப்பு வர்ண ஓவியங்கள் இருப்பதுதான். இவ்வோவியங்களை 1982-ஆம் ஆண்டில் ஆய்வாளர் அனந்தபுரம் கோ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டறிந்தார். தொல்பழங்கால ஓவியங்கள் மத்தியப் பிரதேசம் பிம்பெட்கா, தமிழ்நாட்டில் மறையூர்,மலைப்பட்டி, வேட்டைக்காரன்மலை உள்ளிட்ட இடங்களிலும் கண்டறியப் பட்டுள்ளன. ஆனால் இந்த ஓவியங்களுக்கும் கீழ்வாலையில் கண்டறியப்பட்ட ஓவியங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. மேற்சொன்ன இடங்களில் இருக்கும் பாறை ஓவியங்களில் சிந்துவெளிக் குறியீடுகள் இல்லை. ஆனால், கீழ்வாலை ஓவியங்களில் மட்டும் இந்தக் குறியீடுகள் காணப்படுகின்றன. “கீழ்வாலைப் பாறை ஓவியத்தில் 50க்கும் மேற்பட்ட குறியீடுகள் சிந்துவெளி முத்திரைக் குறியீடுகளோடு இணைந்திருக்கின்றன” என்கிறார் அனந்தபுரம் கோ.கிருஷ்ண மூர்த்தி அவர்கள்.

கீழ்வாலைப் பாறை ஓவியங்களில் குறியீடுகள், பறவை முகம் கொண்ட மனிதர்களும் இடம்பெற்றுள்ளது குறித்துமிகவும் ஆய்வுசெய்த பி.எல்.சாமி, ‘இந்த ஓவியங்கள் கி.மு.500 லிருந்து கி.மு.1000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கலாமென்று’ குறிப்பிட்டார். ‘விலங்கு, பறவை முகம் மற்றும் மனித வடிவம் கொண்ட ஓவியங்கள் எகிப்திலும், கிரேக்கத்திலும், அமெரிக்க இந்திய ஓவியங்களிலும் இடம் பெறுகின்றன’ என்கிறார் ஆய்வாளர் இராசு. பவுன்துரை. கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் பலசொற்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஓவியமும் ஒரு சொல்லின் அறிகுறி’ எனத் தெரிவித்துள்ளார் ஆய்வாளர் கா.இராஜன். ‘சிவந்த நிறக் கலவையால் எழுதப்பெற்ற இச்சிந்துவெளி எழுத்து வடிவங்கள் அனைத்தும் பழந்தமிழ்ப் பெயர்களாகவே அமைந்து இருக்கின்றன’ என்கிறார் முனைவர் இரா.மதிவாணன். கீழ்வாலைப் பாறை ஓவியங்களில் படகு, குதிரை போன்றவையும் இடம்பெற்றிருப்பதும் சிறப்பிற்கும் ஆய்விற்கும் உரியனவாகும்.

ஆலம்பாடி:

இங்குள்ள ஒரு ஓவியத்தின் மீது மற்றொரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனை இரண்டடுக்கு வண்ணப்பூச்சு என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆலம்பாடிப் பாறை ஓவியங்கள் குறித்து ஆய்வுசெய்த முனைவர் இரா.மதிவாணன் “பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஆலம்பாடி குறிப்பிடத்தகுந்த ஒரு சிறந்த இடமாக விளங்குவதன் காரணம் மற்ற இடங்களில் இல்லாத ஓவிய உருவங்கள், எலும்புக்கூடுகள் இப்பாறை ஓவியங்களில் காணப்படுவதே. விலங்குகள், மான், எருது, பன்றி போன்றவை தடித்த வரைகோடுகளால் வரையப்பட்டு சிவப்பு நிறம் தீட்டப் பெற்றுள்ளது. அதில் சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் பாறையின் உட்பரப்பில் அங்கும் இங்குமாகக் காணப்படு கின்றன’ என்கிறார். ஆய்வாளர் இராசு. பவுன்துரை “கற்காலப் பாறை ஓவியங்களில் காணப்படும் மற்றொரு சிறப்பு எக்ஸ்ரே வடிவமாகும். இவ்வடிவத்தினை பிம்பெட்கா ஓவியத்திலும், தமிழ்நாட்டில் ஆலம்பாடி ஓவியத்திலும் காணமுடிவதாக”த் தெரிவித்துள்ளார்.

செத்தவரை :

விழுப்புரம் திருவண்ணாமலைச் சாலையில் அமைந்துள்ள கிராமம். இங்குள்ள அய்யனார் மலையில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதில்விலங்கினங்கள், மனித உருவங்கள், மீன், ஆயுதங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் விலங்கினங்களின் வண்ண ஓவியங்கள் சிறப்புடையவை. மேலும் தீ, ஐந்து விரல்கள் நன்கு தெரியும்படி அமைந்த கை முத்திரை, வீடு போன்று வரையப்பட்ட ஓவியங்கள் குறிப்பிடத்தக்க வையாகும். இங்குச் சிவப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களே காணப்படுகின்றன. மாடு, குதிரை, பாம்பு, பசு, மான், மீன், அன்னம் போன்றவையும் இதில் இடம் பெற்றுள்ளன. செத்தவரை ஓவியத்தில் கேடயம், வேல் ஆகிய வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இங்குக் காணப்படும் மற்றொரு சிறப்பு எருமையின் உருவமாகும். இந்த ஓவியத்தில் எருமையின் எலும்புகள் கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. இவ்வகை வடிவமைப்பானது ‘எக்ஸ்ரே’ என்று குறிக்கப் படுகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த வேட்டைக்கால மனிதர்களால் இவ்வடிவமைப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது எனவும் கருதுவர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பாடியந்தல், குளிர்சுனை, தொண்டூர், முட்டத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள்
காணப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டம் கல்தோன்றிய காலம் முதல் – கோ.செங்குட்டுவன்

 

Buy this book online: https://heritager.in/product/viluppuram-maavattam-kalthonriya-kaalam-muthal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://heritager.in/product-category/books/tamil/history/

Category: