“செஞ்சி அழிந்து சென்னை ஆனது” என்ற ஒரு பழமொழி உண்டு. சென்னை மாநகரத்திற்கு முன்பே செஞ்சி ஒரு முக்கிய நகரமாக விளங்கியதை இது உணர்த்துகிறது. செஞ்சியைக் கைபற்ற ன் நடந்த பல போர்கள் இதற்கு ஓர் உதாரணம்.
பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆட்சியாளர்களின் கைகளில் மாறி வந்த செஞ்சி, நாயக்கர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை, மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கியது. பிரித்தானியர் இதனை வீழ்த்தமுடியாத அரணுடைய நாடு என்ற பொருளில் “கிழக்கின் ட்ரோய்” என்றனர்.
செஞ்சியின் வளமான வரலாற்றில், நாயக்கர்களின் ஆட்சி ஒரு முக்கிய அத்தியாயமாகும்.
பல்லவர் வழி வந்த காடவர் கோன் பற்றி பாடல் ஒன்று செஞ்சி நகரில் இருந்த மதிலை (கோட்டையை) பற்றி கூறுகிறது. அவரை செஞ்சியர் கோன் என்கிறது. செஞ்சி என்ற பெயர் இஞ்சி அதாவது காவல் நிறைந்த மதில் என்பதில் இருந்து தோன்றி இருக்கலாம் எனது ஐயம்.
செஞ்சியைப் பற்றிய தொடர்ச்சியான வரலாறு 15-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தெளிவாகக் கிடைக்கிறது. அதற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன.
மாறவர்மன் வீரபாண்டியன் காலத்து “சிங்கபுரம்” கல்வெட்டில் செஞ்சி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கி.பி. 1135-1150: இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் எழுதிய “விக்கிரம சோழன் உலா” என்ற நூலில் “செஞ்சியர் கோன்” என்ற குறுநில மன்னன் முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகழேந்திப் புலவர்: “தொண்டை மண்டல சதகம்” கூறும் தகவலின்படி, புகழேந்திப் புலவரும் ஒரு செஞ்சி அரசனைப் பற்றி ‘கலம்பகம்’ பாடியுள்ளார்.
கோனார் சிற்றரசர்கள்: “கர்நாடக தேச ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்” என்ற நூல், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஆனந்தக் கோனார், கிருஷ்ணக் கோனார், புலியக் கோனார் ஆகிய கோனார் அல்லது இடையர் பரம்பரையைச் சேர்ந்த சிற்றரசர்கள் செஞ்சியை ஆண்டதாகக் குறிப்பிடுகிறது. இக்கூற்றுக்கு நேரடி வரலாற்றுச் சான்றுகள் இல்லாவிட்டாலும், செஞ்சிக் கோட்டைகளை முதன்முதலில் கட்டியவர்கள் இவர்களே என்பது பல வரலாற்றாசிரியர்களும் ஏற்கும் உண்மையாகும்.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி: இந்தக் காலகட்டத்தில் செஞ்சி, ஹொய்சாளர்களின் ஆட்சியிலிருந்து விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டிற்கு மாறியது.
செஞ்சி நாயக்கர்களின் எழுச்சி: 15 – 17 ஆம் நூற்றாண்டுகள்
செஞ்சி நாயக்கர்களின் தனித்த ஆளுகை கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி, சுமார் 150 ஆண்டுகள் நீடித்தது. கி.பி. 1464: செஞ்சி நாயக்கர் மரபு இந்தக் காலகட்டத்தில் தொடங்கியதாகப் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
வெங்கடாபதி நாயக்கர்: இவரே செஞ்சியைத் தன் கீழ் கொண்டு வந்து ஆண்ட முதல் நாயக்க மன்னராகக் கருதப்படுகிறார். தொண்டை மண்டலத்தின் தலைநகராகச் செஞ்சி விளங்கியது என்று குமார கம்பணன் காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509-29): விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர், கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவரைச் செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆள நியமித்தார். இவரே செஞ்சி நாயக்க வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கியவராகக் கருதப்படுகிறார்.
செஞ்சி நாயக்கர்களின் ஆட்சிப்பகுதி வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரை கடற்கரையோரமாகப் பரவியிருந்தது எனப் பேராசிரியர் சீனிவாச சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். நெல்லூர் முதல் கொள்ளிடம் வரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கராட்சியில் அடங்கியிருந்தன.
முக்கிய நாயக்க மன்னர்கள்:
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்: கிருஷ்ண தேவராயரின் சமகாலத்தவரான இவர், நாயக்க மரபில் காலத்தால் முந்தியவர். பேரரசு ஆதிக்கத்திலிருந்து விலகி தனி அரசு நிறுவுவதில் ஈடுபட்டார்.
சூரப்ப நாயக்கர்: இவர் புலவர்களைப் போற்றியவர். சீனிவாச தீட்சிதர் என்னும் அறிஞரை ஆதரித்தார். முதலாம் வேங்கடரை எதிர்த்ததால் சிறைப்படுத்தப்பட்டார்.
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்: இவர் ஒரு தீவிர வைணவர். தில்லை கோவிந்தராஜரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வெள்ளாற்றங்கரையில் கிருஷ்ணப்பட்டணம் என்னும் ஊரை நிறுவினார், இது தற்போது பரங்கிப்பேட்டை என அழைக்கப்படுகிறது. இவருக்குப் பிறகு செஞ்சி நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது என ந.சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் செஞ்சி கலை மற்றும் கட்டிடக்கலையில் பெரும் வளர்ச்சி கண்டது. நாயக்கர் கால கலை மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலம் எனலாம்.
செஞ்சி கோட்டை மற்றும் கொத்தளங்கள் பலப்படுத்தப்பட்டு, கட்டிடக்கலையின் கவர்ச்சியுடன் சிறந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டன. சுமார் 150 ஆண்டுகள் நாயக்க மன்னர்கள் ஆட்சியில், விஜயநகரப் பாணியில் கோட்டை அமைப்பும், அதனுள் பல அழகிய கட்டிடங்களும் கட்டப்பட்டன.
மிகப்பெரிய அகன்ற கற்களாலான கோட்டைச் சுவர்கள், சிற்ப வேலைப்பாடுள்ள மண்டபங்கள், கோயில்கள், மற்றும் கீழே கற்களாலும் மேலே செங்கற்களாலும் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுள்ள உயரமான கோபுரங்கள் கட்டப்பட்டன. இவை விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரான ‘ஹம்பி’யின் கட்டிடக்கலையை நினைவுபடுத்துகின்றன.
நாயக்கர்களின் ஆளுகையில் செஞ்சியின் நிலை
விஜயநகரப் பேரரசின் கீழ்: ஜான் நியூஹாப் மற்றும் வைக்கோ பாதிரியார் போன்றோர் குறிப்பிடுவது போல, விஜயநகரப் பேரரசின் கீழ் மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்கள் திறை செலுத்தும் சிற்றரசர்களாக ஆண்டுக்கு 6 முதல் 10 மில்லியன் பிராங்குகள் வரை திறை செலுத்தி ஆட்சி செய்தனர்.
செஞ்சி நாயக்கர்களின் வரலாற்றை அறிய பல்வேறு ஆதாரங்கள் துணைபுரிகின்றன:
மெக்கன்சி போன்ற அறிஞர்கள் தொகுத்த ஓலைச்சுவடிகள். பிமெண்டா பாதிரியாரின் பயணக் குறிப்புகள். ரகுநாதப்யுதையம், சாகித்ய ரத்னாகாரம் போன்ற இலக்கிய நூல்கள்.
செஞ்சி நாயக்கர்களின் வரலாறு பற்றி உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைப் படைப்புகளைக் கொண்டு ஆராய்வதன் மூலம் ஓரளவு தெளிவாகிறது. அவர்களின் ஆட்சியின் கீழ், செஞ்சி ஒரு முக்கியமான கலாச்சார மற்றும் கலை மையமாகத் திகழ்ந்தது என்பதை இன்றும் நிலைத்திருக்கும் அவர்களின் கட்டிடங்களும் சிற்பங்களும் பறைசாற்றுகின்றன என்பதை இந்நூல் விவரிக்கிறது.
நூல் வேண்டுவோர்: 097860 68908 சில பிரதிகளே உள்ளன.