வேந்தர் என் வேள்வி வளர்த்தார்
முற்காலத்தில் வேந்தர், வேளிர் என்போர் களவேள்வி, இராசசூய வேள்வி, துரங்க வேள்வி. அறக்கள வேள்வி, மறக்கள வேள்வி, வதுவை வேள்வி மதுகொள் வேள்வி போன்ற வேள்விச் சடங்குகளைச் செய்ததாக நம் இலக்கியங்களில் குறிப்புகள் பல உள்ளன. பிற்காலம்கூட, கி.பி.13ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் வீரபலியாகத்துடன் முடி சூடினான் என்று அழகர்மலைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
மன்னர்கள், வேந்தர்கள் முடிசூடும் நிகழ்வுகள் வேள்விச் சடங்குடன் தொடங்கின. பிற்காலத் தென்காசிக் கல்வெட்டுகளில் பாண்டிய அரசர் சிற்றரசாக எய்திய நிலையிலும் வேள்விச் சடங்குகள் நிகழ்த்தி முடி சூடினர் என்று கி.பி. 1554, கி.பி. 1568 எனும் ஆண்டுகளில் அமைந்த தென்காசிப் பாண்டிய வேந்தர்கள் கல்வெட்டுகள் “வீரவேள்” எனவும் ”சீவல வேள்” எனவும் மகுடம் சூடினதாகக் காணப்பெறுகின்றன.
கி.பி.7ஆம் நூற்றாண்டினரான கொங்கு வேளிரின் பெருங்கதை வேள்விச் சாலையைத் தீவேள் சாலை என்கிறது. (3 மகத காண்டம்22 பதுமாவதி வதுவை). ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை “முத்தி வேள்வி நான்மறை வளர ஐ வேன் உயர்த்த அலு தொழிலாளன்“ (6-7) என்பதால் ஐ வேள் என்ற சொல் ஐந்து வேள்வி என்று பொருள்படும்.
கி.பி. 7ஆம் நூற்றாண்டுத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருமழபாடி பதிகத்தில் “விழவும் வேள் ஒளியும்” என்பதற்குப் பாடபேதமாக “விழாவும் வேள் ஒலி நீர்” என்னும் குறிப்புகள் காணப்பெறுகின்றன. புகழையே ஒளி என்று திருநாவுக்கரசர் குறிப்பிட்டார் என்று நம்பலாம்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டு நூலான திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணி வேள்வியும் விழாவும் நிகழ்ந்த செய்தியை “விழவும் வேள்வும்” என்றே குறிப்பிடுகிறது.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் ‘விழவும் வேள்வும்’எனக் குறித்திருப்பது ஊர்களில் நிகழ்த்தப்பட்ட விழாக்களையும் நிகழ்த்தி வைக்கப்பட்ட வேள்ளிகளையும் தெளிவாகக் குறித்துள்ளது. வேள்விச் சடங்குகளை அரசர் நடத்தினர். எனினும் வேள்விச் சடங்கு வேதியரால் நடத்தும் நிலை இருந்தது. கி.பி.11ஆம் நூற்றாண்டு நூலான வீரசோழியத்திற்குச் சற்றுப் பின்னர், கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் உரை செய்த பெருந்தேவனார் வேதீயன் என்பதற்கான பொருளைக் கூறியவிடத்து வேள்தீயன் என்பதே வேதியன் என்று அந்தணரைக் குறித்தது என்று விளக்கமளித்துள்ளார்.
முடி சூடுவதற்கென வேள்விச் சடங்கு நடந்தது என்பதற்குச் சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலிருந்து சான்றுகள் உள்ளன.
கூற்றுவ நாயனார் சோழ நாட்டினைக் கைக்கொண்டு ஆட்சி செய்ய முயற்சித்தபொழுது அரச குலம் அல்லாத கூற்றுவ நாயனார் என்ற தலைவனுக்கு முடி சூடுவதில்லை என்று தில்லைவாழ் அந்தணர் மறுத்த செய்தியை விளக்கிய சேக்கிழார்,
செம்பியர்தம் தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி
என்று சுட்டிக்காட்டுவது மூவேந்தர் உயர்குடி அரசர்; கூற்றுவ நாயனார் கீழ்க்குடியில் தோன்றி அரசராக அமைந்தவர். இதனால்வேதியர்கள் முடி சூட்டிட மறுத்தது என்பது வேள்விச் சடங்கு நடத்தி முடியைச் சூட்டி வைத்தல் செய்ய மாட்டோம் என்பதே.
முடி சூடுதல் வேள்விச் சடங்குடன் தொடர்புடையதே. இதனாலேயே தில்லைவாழ் மூவாயிரவர் முடிசூட்டி வைக்க மறுத்தனர். கூற்றுவ நாயனாரின்குடி வேள்விக்குத் தொடர்புடைய அரசர்குடி அன்று எனப் பெறப்படும்.
“தொல்லை நீடும் குலமுதலோர்” என்போர் தொன்றுதொட்டு நாட்டினை ஆளும் உரிமையுடைய மூவேந்தர்குடி என்றும் மூத்த குடியினர் என்றும் உணரப்படும்.
கி.பி. 833இல் அமைந்த சாத்தூர் இருக்கன்குடி கல்வெட்டு வேளிரின் சிறப்புகள், ஆட்சி, நிலங்கள், ஊர், நகர் என்றும் வேளிரைப் “பெருஞ்சாந்தி குல மன்னர்” என்றும் பெருமையுடன் உண்மை உணர்த்தி உள்ளதை முன்பும் பார்த்தோம். பெருஞ்சாந்தி குல மன்னர் என்பது வேள்வி செய்த வேளிரைக் குறித்திருப்பதை ஆதிபூர் மண்டங்குடி மன்னர் வரலாறு என்று நூல் வேள்முடி சூடிய குறுநில மன்னர் என்று எடுத்தோதுகிறது. வேள்வி என்பது ஒளி பெறுதலுக்காக நடத்தப்படும் சடங்கு. இக்கல்வெட்டில் சந்திராதித்த குலத்தவர் என்றும் அரச மரபு அடையாளம் காட்டுகிறது.
வேளிர் பற்றிச் சிறப்பாக ஆராய்ந்துள்ள அறிஞர் இரா. பூங்குன்றன் தம் கட்டுரையில் (வரலாற்றில் வேளாண் குடிகள்) வடபுல அறிஞர் ரோமிலா தாபர் சொல்லிய சில செய்திகளில் ‘ஒளி’ அரசரோடு தொடர்புடையது. வேள் என்பதற்கு மூல திராவிட மொழியில் ஒளி லிடுதலை, தலைமை பெறுதல், சிறப்பாக இருத்தல் என்று விவரித்துள்ளார். (நூலிலிருந்து)
தமிழக வேளிர்: வரலாறும் ஆய்வும் – நெல்லை நெடுமாறன்
விலை: 140 /-
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Buy this book online: https://www.heritager.in/product/tamilaga-velir-varalarum-aayvum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers