தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

நம்பமுடியாத புலமையாளர்

தமிழ்நாட்டில் அறியப்பட்டவர்களைப் போல் அறியப்படாத பெரிய அறிஞர்களின் பட்டியல் ஒன்றும் இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, சி.சு.மணி.

தொல்காப்பியம் உயிர்ஈற்றுப் புணரியலைப் பற்றிப் பேசவேண்டுமா? சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேசவேண்டுமா? பரிமேலழகர் உரைச் சிறப்பு என்ன? தமிழிலக்கிய நெடும் பரப்பில் எங்கே எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய ஓர் அறிஞர் அவர்.

சி.சு.மணி அஞ்சல் துறையில் எழுத்தராக இருந்தார். ஆனால், அவர் நெல்லை மாவட்டத்தில் எல்லாப் பேராசிரியர்களுக்கும் பேராசிரியர். எந்தத் தமிழ், ஆங்கிலப் பேராசிரியருக்கும் மரபு வழி இலக்கியத்தில் ஐயம் ஏற்பட்டால் அவரிடத்திலே போய்த்தான் தெரிந்துகொள்வார்கள். அவரது வாசிப்பு அவ்வளவு விரிவானது; ஆழமானது; மிக நுணுக்கமானது.

கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில்தான் அவர் பட்டம் பெற்றிருந்தார். ஆனால், அவரிடம் இசை உட்பட, பல துறைப் புலமைகள் இருந்தன. அவர் தன்னைத்தானே கேலியாகச் சொல்லிக்கொள்கிற மாதிரி, புளிய மரத்தடியை விட்டு எங்கும் போகாமலேயே எல்லா ஞானத்தையும் பெற்றுக்கொண்ட நம்மாழ்வாராக அவர் விளங்கினார்.

யார், எப்போது, என்ன வந்து கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுக்கக்கூடிய ஒரு செல்வனைப்போல அவருடைய வீடு, அறிவைத் தேடி வருபவர்களுக்குத் திறந்தே கிடந்தது. உடல் நலம் குன்றியிருந்த கடைசி நிமிடம்வரை அது அப்படியேதான் இருந்தது.

உணர விரித்துரைத்தல் என்றால் அதுதான் நல்ல கல்வியின் பயன் என்று சொல்வார் வள்ளுவர். கற்றவன் அதை அடுத்தவர் உணருமாறு விரித்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்கிற ஆற்றல் பேராசிரியர்களைவிட அவருக்கு நிறைய இருந்தது. அவர் எல்லோருக்கும் ஆசிரியராக மட்டுமன்றிக் கடைசி நிமிடம்வரை மாணவனாகவும் இருந்தார். என்ன புதிய புத்தகம் வந்திருக்கிறது என்றுகேட்பார். 69ஆம் வயதில், 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘புனைகளம்’ மூன்றாவது இதழ் ஏன் வரவில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்னால் கேட்டார்.

அவருடைய மரபு சைவ மரபு. அவருடைய தாயார் குமரகுருபரருடைய தம்பியின் வழியில் வந்தவர். எனவே, அவருக்குச் சைவ மரபுப் பின்புலம் இருந்தது. ஆனால், மத அடியாரைப்போல அவர் ஒரு போதும் நடந்துகொள்ள மாட்டார். தேவாரத்தை அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லுவார். ‘சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்’ என்ற சம்பந்தர் தேவாரத்திற்குச் சைவர்கள் சொல்கிற கதையை ஒப்புக்கொள்ள மாட்டார். இது அகப்பொருள் பாசுரம் என்பார். சிவஞான முனிவர் சொல்லுகிற ‘சத்சூத்திரர்’ என்ற கருத்தை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். சைவ சித்தாந்தம் ரௌரவ ஆகமத்தினுடைய மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய கருத்தையும் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். பதிநான்கு சாத்திரங்களுக்கும் உரை எழுதி, ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பெரும் பணியாகிய ‘சிவஞான மாபாடியத்துக்கு ஆயிரம் பக்கங்களில் எளிய உரையை வரைந்திருந்தாலும் சிவதீட்சை பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், நல்ல சைவராக வாழ்ந்தார். சைவநெறி என்பது ஒரு வாழ்நெறி என்று அடிக்கடி சொல்வார்.

அவருடைய எழுத்துப்பணி மிக விரிவானது. பதினான்கு சாத்திரங்களுக்கும் உரை எழுதியிருக்கிறார். சிவஞான மாபாடியத்துக்கு உரை எழுதுவது அவ்வளவுதான காரியமன்று; அதிலுள்ள கடுமையான இலக்கணப் பகுதிகளெல்லாம் யாவரையும் மலைக்கவைக்கும். அது அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு. ஐம்பது அல்லது அறுபது ஆண்டுக்காலமாக யாருமே படிக்காதிருந்த சிவஞான மாபாடியத்தை இன்னுமொரு நூற்றாண்டுக் காலத்திற்கு ஒரு கல்லூரி மாணவன் தைரியமாகத் தொட்டுப் பார்க்கலாம்; அந்த அளவுக்கு உரை எளிமையானதாகும்.

சைவம் மட்டுமல்ல, வைணவ நூல்களையும் படிப்பார்.ஆச்சார்ய ஹிருதயமும், மும்மூச்சுப்படியும் ஸ்ரீவைஷ்ணவ பூஷணமும் அவருடைய நாவிலே சாதாரணமாக வந்து விழும். ‘செந்நிறத்த தமிழோசை என்றதனாலே அகஸ்தியமும் அனாதி என்று சொன்னாரல்லவா’ என்று அவர் மேற்கோள்காட்டுகிறபோது, நமக்கு தலைசுற்றும். ஒரு திருநீறணிந்த சைவர் இவ்வளவு சாதாரணமாக மேற்கோள் காட்டுகிறாரேயென்று!பைபிளிலே ஜேம்ஸ் எடிசன்னிலிருந்து பதின்மூன்று பதிப்புகள் அவரிடத்திலே இருந்தன. இமாம் கஸாலி பற்றிய நூல்களையெல்லாம் அவர் வைத்திருந்தார். முஸ்லிம்களிடம் இமாம் கஸாலியரைப் பற்றி அவரால் பேச முடியும். கூடுதலாகச் சில விசயங்களைச் சொல்லவும் முடியும். அவர் கடைசியாக என்னிடத்திலே வாங்கிப் படித்த புத்தகம், சமண ஷியாத்வாதம் பற்றியது.

அவரது நினைவாற்றல் ஒரு கணிப்பொறியை நினைவுபடுத்துவதாக இருந்தது. மனப்பாடமாகச் சொல்லி நடத்துவார். வீட்டு மாடியில் ஒரு காலத்தில் எல்லோருக்கும் உணவளிக்கும் அளவுக்கு அவருக்குப் பொருள் வசதி இருந்தது; செய்தார். எல்லோரும் வந்து உட்கார்ந்திருப்போம். கேட்பவர்கள் பெறுவான் தவம் என்பது மாதிரி வந்து உட்காருவார்கள். சொல்லிக்கொண்டிருப்பார்; எல்லோரும் கேட்டுக்கொண்டே இருப்போம். எல்லாப் பக்கமும் சுற்றிச்சுற்றி வருவார்.

மூல இலக்கியங்களை மட்டுமல்லாமல் உரைகளையும் நுணுக்கமாகப் படித்திருந்தார். சிலப்பதிகார உரையில் இவருக்கு இருந்த பயிற்சி, பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் போன்றவர்கள் மெச்சும்படி இருந்தது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரறிஞர் வானமாமலை, நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் அ.ராகவன் போன்ற எல்லோரும் அவரை மதித்தார்கள். எல்லோரும் அவர் வீடு தேடிவந்து சென்றார்கள். குன்றக்குடி திருமடம் சேக்கிழார் விருதை ஏற்படுத்திய முதலாண்டிலேயே அதனை அவருக்கு வழங்கியது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் அவருடைய குரல்வளம் மிக அருமையாக இருந்தது. செவ்வியல் இசையையும் காவடிச் சிந்தையும் தேவாரத்தையும் பாடுவார். இத்தனைக்கும் ஓயாது புகைபிடிக்கிற வழக்கம் உடையவர்; இருந்தாலும் அவரது குரல் மணிக்குரலாக இருந்தது.

அவருடைய நடை, தோற்றம்,எழுத்து, பேச்சு, காசுக்குத் தன்னுடைய புலமையை விற்காத வாழ்க்கை என எல்லாமே கம்பீரம் நிறைந்ததாக இருந்தது. அந்தக் கம்பீரத்தைக் கடைசிவரை காப்பாற்றினார். ஆக, ஒட்டுமொத்தத்தில், நான் என்னுடைய குருநாதரை இழந்துபோனேன். சைவ உலகம் மிகப்பெரிய சைவ சித்தாந்தியை இழந்துவிட்டது. தமிழ் இலக்கியம் பெரிய மரபிலக்கியப் பேரறிஞரை இழந்தது. எங்கள் நெல்லை மாவட்டம் ஒரு பல்துறை அறிஞரைப் பறிகொடுத்துவிட்டது.(நூலிலிருந்து)

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் – தொ. பரமசிவன்
விலை: 135/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/tamilar-uravu-muraigalum-samayamum-vazhipaadum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers