தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்
பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன.
தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிப் பெயர்களும் உள்ளன.
கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 150க்கும் மேற்பட்ட தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பிராகிருதப் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளன. இப்பெயர்களில் பல கீழடியில் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க வந்த வடநாட்டு உள்நாட்டு வணிகர்களின் பெயர்களாக இருக்கவேண்டும். இவற்றில் சில பெயர்கள் மதுரையைச் சுற்றியுள்ள தமிழ்பிராமிக் குகைத்தளங்களிலும் காணப்படுகின்றன. தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறை கீழடி அகழாய்வில் கண்டறிந்த தமிழ்பிராமிப் பொறிப்புள்ள பானையோடு ஒன்றில் குவிரன் அத(ன்) என்ற பெயர் உள்ளது.33 கி.மு. இரண்டாம் நூற்றாண்டு விக்கிரமங்கலம் கல்வெட்டில் ‘குவிராதன்’ என்ற பெயரும் மேட்டுப்பட்டி தமிழ்பிராமிக் கல்வெட்டில் குவிரந்தை என்ற பெயரும் காணப்படுகின்றன.
அகழாய்விலும் தமிழ்பிராமிக் குகைத்தளத்திலும் காணப்படும். இப்பெயர் ஒற்றுமை ஆய்விற்குரியது. குபேரன் என்ற வடமொழிப் பெயரையும் ஆதன் என்ற தமிழ்ப்பெயரையும் இணைத்து வணிகர் ஒருவர் வைத்த பெயராக ‘குவிராதன்’ என்ற பெயர் இருக்கலாம்.
நாணயங்கள் :
சங்ககாலத்தில் உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையில் நடைபெற்றாலும் வெளிநாட்டு வர்த்தகம் தங்கம், வெள்ளி முதலிய நாணயங்கள் மூலம் நடைபெற்றுள்ளது. இதனைப் பின்பற்றி பாண்டிய மன்னர்களும் செம்பினால் ஆன நாணயங்களையும் வெள்ளியால் ஆன முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர்.
சங்ககாலப் பாண்டியர் சதுர வடிவில் செம்பாலான ஒருபுறம் யானை, மறுபுறம் கோட்டுவுருவத்தில் மீனும் பொறித்த காசுகளை வெளியிட்டுள்ளனர். மேலும் ஒருபுறம் காளை அல்லது வேலியிட்ட மரத்தின் முன் நிற்கும் குதிரையும் மறுபுறம் மீன் உருவமும் பொறித்த காசுகளையும் வெளியிட்டுள்ளனர். செம்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான காசுகளைச் சங்ககாலப் பாண்டியர்கள் வெளியிட்டுள்ளனர். 35 ஒருபுறம் வேலியிட்ட மரத்திற்கு முன் நிற்கும் குதிரை உருவமும் மற்றொருபுறம் மீன்உருவம் பொறித்த காசுகளையும் ஒருபுறம் மன்னர்தலையும் மற்றொருபுறம் மீன்உருவம் பொறித்த சதுரச் செம்புக் காசுகளையும் பாண்டிய மன்னர்கள் சங்ககாலத்தில் வெளியிட்டுள்ளனர்.
சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் பாண்டிய மன்னர் பட்டப்பெயர் பொறித்த காசு ஒன்று கிடைத்துள்ளது. செம்பினாலான சதுர வடிவிலுள்ள இக்காசில் சங்ககாலப் பாண்டியன் பெயரான “பெருவழுதி” என்ற பெயர் முன்புறம் பொறிக்கப்பட்டுள்ளது. இம் முன்பக்கத்திலேயே கடல் ஆமை உள்ள நீர்த்தொட்டியின் முன் நிற்கும் குதிரை ஒன்றும் காணப்படுகிறது. இக்காசின் பின்புறம் கோட்டுருவத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்காசினை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளனர்.
பாண்டிய மன்னர்கள் மௌரியர் காலத்து வெள்ளி முத்திரைக் காசுகளைப் போன்று காசுகளை வெளியிட்டுள்ளனர். பாண்டியர் இம்முறையில் சதுரம் மற்றும் செவ்வக வடிவிலுள்ள அறுவகை வெள்ளிக்காசுகளை வெளியிட்டுள்ளனர். இவற்றில் வடநாட்டு முத்திரைக் காசுகளில் காணப்படுவது போன்று அறுகிளைச் சின்னம், நாய், வேலியிட்ட மரம், சூரியன், செடி, டாரின், மூன்று கிளைச் சின்னம், ஸ்தூபம் முதலிய உருவங்கள் காணப்படுகின்றன. இக்காசின் பின்புறம் சின்னமான மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னர்களுக்குச் செழியன், மாறன் என்ற பெயர்கள் இருந்திருப்பதைச் சங்க இலக்கியப் பாடல்கள் தெரிவிக்கின்றன. இப்பெயர் பொறித்த காசுகளைச் சங்ககாலப் பாண்டியர்கள் வெளியிட்டுள்ளனர். ‘செழிய’ என்று பெயர் பொறித்த நாணயங்கள் பெரும்பாலும் வெள்ளீயத்தாலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இரும்பு, நிக்கல், செம்பு கலந்து வட்டவடிவில் செய்யப்பட்டிருக்கின்றன. இவை கொற்கையின் வடக்குப்புறம் ஓடும் தாமிரபரணியாற்றில் கிடைத்துள்ளன.முன்புறம் ‘செழிய’ என்று தமிழ்பிராமி எழுத்துக்களில் பெயர் பொறித்துப் பின்புறம் யானை உருவம் பொறித்த பல்வகை வட்டக்காசுகள் இவையாகும். இதேபோன்று பின்பக்கம் ‘செழியன்’ என்று தமிழ்பிராமி எழுத்துக்களில் பெயர் பொறித்தும் முன்பக்கம் கடல் ஆமையின் உருவம் பொறித்த வட்டவடிவ சங்ககாலப் பாண்டியர்க் காசுகளும் கிடைத்துள்ளன. இக்காசுகளை கி.மு. 3, 2ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவையாகக் கருதுகின்றனர்.” இவை செம்பு, வெண்கலத்தால் ஆனவையாகும்.
முன்பக்கம் அரசனின் தலையுடன் அதனைச்சுற்றி ‘மாறன்’ என்று தமிழ்பிராமி எழுத்துக்களில் பெயர் பொறித்து பின்பக்கம் நிற்கும் யானையின் உருவம் பொறித்த வட்டவடிவ செப்புக் காசுகளும் தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்துள்ளன. இவை கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட காசுகளாகக் கருதுகின்றனர்.12 சங்ககாலப் பாண்டியர்கள் வடநாட்டு மற்றும் கிரேக்க, ரோமானிய நாட்டுத் தொடர்பின் காரணமாக அதிக அளவில் வணிகத்திற்குப் பயன்படும் வகையில் காசுகளை வெளியிட்டுள்ளனர் எனலாம்.
வெளிநாட்டுக்காசுகள் :
பாண்டியர்கள் வடஇந்தியப் பகுதிகளோடும் ரோமானிய நாட்டோடும் கொண்டிருந்த தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் பாண்டிய நாடெங்கும் வட இந்திய முத்திரை குத்தப்பட்ட வெள்ளி நாணயங்களும் ரோமானியரது தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களும் பாண்டிய நாடெங்கும் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ளன.
வெள்ளி முத்திரை நாணயங்கள் :
பாண்டிய நாட்டில் தேனி மாவட்டத்துப் போடி நாயக்கனூர்ப் பகுதியில் உள்ள எல்லைப்பட்டியில் உள்ள ‘டங்டங்மேடு’ என்று அழைக்கப்படும் சங்ககால வாழ்வியல் மேட்டில் மண்கலயம் ஒன்றில் 1138 முத்திரை குத்தப் பெற்ற வடஇந்திய வெள்ளி நாணயங்கள் அடங்கிய புதையல் 1941ஆம் ஆண்டு கிடைத்துள்ளது. இதில் சங்ககால மீன்உருவம் பொறித்த முத்திரை குத்தப்பட்ட வெள்ளிக்காசுகளும் இருந்தன. சங்கரன்கோவிலுக்குத் தெற்கேயுள்ள திருநெல்வேலி மாவட்டத்து வீரசிகாமணியில் 1952-ல் 287காசுகள் அடங்கிய முத்திரை குத்தப்பெற்ற வெள்ளிநாணயங்களின் புதையல் கிடைத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்து நெடுமங்கலத்தில் முத்திரை குத்தப்பெற்ற 212 வெள்ளி நாணயங்களின் புதையல் கண்டறியப் பட்டுள்ளது. ‘பாண்டியரின் தலைநகரான மதுரையிலும் 1956-ல் பாண்டியர் காசுகளோடு வெள்ளி முத்திரை நாணயங்கள் கிடைத்துள்ளன.” தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் அழகன்குளத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் வெள்ளி முத்திரை நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.” இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகிலுள்ள வட்டாணத்தில் வெள்ளி முத்திரைக்காசுகள் அடங்கிய புதையல் ஒன்று கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் நகர்ப்பகுதியில் சில வெள்ளிமுத்திரை நாணயங்கள் கிடைத்துள்ளன. பாண்டியநாட்டில் வெள்ளிமுத்திரை நாணயங்கள் பெரும்பாலும் பாண்டியநாட்டுப் பண்டைய பெருவழிப் பாதையிலேயே கிடைத்துள்ளன. இவை பாண்டியநாட்டிற்கும் கங்கைச் சமவெளிக்கும் உள்ள வணிக உறவை உறுதிப்படுத்துகின்றன. கௌடில்யர், மெகதனீஸ் நூற்களில் பாண்டியநாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அசோகனின் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலும் பாண்டியநாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.” கலிங்க மன்னன் காரவேலனின் கி.மு. முதலாம் நூற்றாண்டு உதயகிரி – கண்டகிரி பிராமிக் கல்வெட்டிலும் பாண்டியநாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவையெல்லாம் பாண்டியநாடு வட இந்தியாவோடு கொண்டிருந்த தொடர்பைக்
காட்டுகின்றன. (நூலிலிருந்து)
பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிகநகரங்கள் (கி.மு.400 – கி.பி.1400) முனைவர் வெ.வேதாசலம்
விலை: 400/-
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/pandiyanaattil-vanigam-vanigar-vaniganagarangal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers