தென்னாட்டு தாஜ்மகால் – முத்தம்மாள் சத்திரம்

மராட்டியரின் ஆட்சிகாலம் மாராட்டியர் மற்றும் அதற்கு முன்பு தஞ்சையை ஆண்ட கவரை நாயக்கர் மக்களின் கலப்பு ஆட்சியாகவே கருத வாய்ப்புள்ளது. தஞ்சை மராடியட்டியரிடம் வீழ்ந்தபிறகு, கவரை நாயக்கர்களான பல தஞ்சை நாயக்க குடும்பத்தினர், மராட்டியருடன் மண உறவில் இணைந்தனர்.

மராட்டியர் ஆட்சி தஞ்சையில் அமைவதற்கு முன்பு, 1530 முதல் 1674 வரை தஞ்சையை ஆண்ட நாயக்கர்கள் தெலுங்கு பேசும் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாகத் திகழ்ந்தனர். அவர்களின் ஆட்சிக்காலத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளும் அரசவை மொழிகளாகச் சிறந்து விளங்கின. இதைத் தொடர்ந்து, 1676 முதல் 1855 வரை நீடித்த மராட்டியர் ஆட்சியிலும் தெலுங்கு மொழி தொடர்ந்து செல்வாக்குடன் இருந்தது.

மராட்டிய அரசர்களில் பலர் தெலுங்கு மொழியில் புலமை பெற்றவர்களாகவும், தெலுங்குப் புலவர்களை ஆதரிப்பவர்களாகவும் இருந்தனர். இதன் விளைவாக, தெலுங்கில் ஏராளமான இலக்கியங்கள், உரைநூல்கள், நாடகங்கள், மற்றும் கீர்த்தனைகள் உருவாயின. மேலும், நாயக்கர் குடும்பங்களைச் சேர்ந்த பலர் மராட்டியர் அரசவையில் உயர் பதவிகளை வகித்தனர். மராட்டிய அரசர்கள் சிலர் தெலுங்கு நாயக்கர் குடும்பத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதும், இந்த மொழி மற்றும் கலாச்சார இணைப்புக்குக் கூடுதல் சான்றாக உள்ளது.

இதன் காரணமாக, தஞ்சையில் மராட்டியர் காலக் கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் தெலுங்கு ஆவணங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக, தஞ்சை விட்டோபா கோயில் (1819) மற்றும் பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள மனோ ராவ் (1814) ஆகிய இடங்களில், மராட்டி கல்வெட்டுகளுடன் தெலுங்கு மொழி கல்வெட்டுகளும் அருகருகே காணப்படுகின்றன.

முத்தம்மாள் சத்திரம்: வரலாறு மற்றும் கொடைகள்

தஞ்சை மராட்டிய மன்னர்கள் மேற்கொண்ட அறப்பணிகளில், அவர்கள் அமைத்த பல சத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சோழ மண்டலத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் முக்கிய சாலைகளில், கி.பி. 1749 முதல் 1897 வரை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர்களால் சுமார் 20 பெரிய சத்திரங்கள் கட்டப்பட்டன. இச்சத்திரங்களுக்காக சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன.

இந்தச் சத்திரங்களில் மிகவும் பெரியதும், சிறப்பு மிக்கதும் ஒரத்தநாட்டில் அமைந்துள்ள முத்தம்மாள்புரம் சத்திரம் ஆகும். இது தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

முத்தம்மாள் யார்?

இரண்டாம் சரபோஜி மன்னர் (1798-1832) தன்னுடைய காதலி முத்தம்மாளின் நினைவாக இச்சத்திரத்தைக் கட்டினார். தமிழ்க் கல்வெட்டுகளில் முத்தம்மாள் என்று குறிக்கப்பட்டாலும், மராத்தி மற்றும் மோடி ஆவணங்களில் “முக்தாம்பாள்” என்று இப்பெயர் காணப்படுகிறது. முத்தம்மாள் கவர நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர், மேலும் அவரது சகோதரர்களான சின்னண்ணா மற்றும் பெரியண்ணா ஆகியோர் சரபோஜி மற்றும் சிவாஜி ஆகிய இரு மன்னர்களின் காலத்திலும் அரண்மனையில் உயர் பதவிகளை வகித்தனர்.

பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டின்படி, முத்தம்மாள் இரண்டாம் மகப்பேறின்போது குழந்தை இறந்த பிறகு, ஒரு மாதத்திலேயே உடல்நலம் குன்றி இறந்தார். தான் இறக்கும் தருவாயில், தனது பெயரில் ஓர் அன்னசத்திரம் அமைக்க வேண்டும் என்று சரபோஜியிடம் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, கருவுற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார். அதன் காரணமாக, இந்தச் சத்திரம் நிறுவப்பட்டது.

சிறு காதல் கதை:

வாரிசு இல்லாத துளஜா மன்னரின் தத்துப்பிள்ளையாக, 10 வயது பாலகன் ராஜாராம், மகாராஷ்டிரத்திலிருந்து தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சரபோஜி எனப் பெயரிடப்பட்டது. 22 வயதில் அவர் தஞ்சையின் மன்னராகப் பட்டம் சூட்டப்படுவதற்கு முன்பு, அரண்மனையின் உயர் அதிகாரியின் தங்கையும் பேரழகியுமான முத்தம்மாள் மீது காதல் கொண்டார்.

முத்தம்மாள், இரண்டு முறை கருவுற்றார். முதல் குழந்தை பிறந்து உடனடியாக இறந்தது. இரண்டாவது குழந்தை இறந்தே பிறந்தது. இந்தக் கவலையான பிரசவத்தில், முத்தம்மாளும் உயிரிழந்தார்.

முத்தம்மாளின் கடைசி ஆசை

மரணப் படுக்கையில் இருந்த முத்தம்மாள், துயரத்தில் இருந்த மன்னரிடம் ஒரு வரம் கேட்டார். “என் பெயர் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். அதற்காக ஒரு சத்திரம் அமைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறப்பு மருத்துவ வசதிகள் செய்துதர வேண்டும்” என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

தனது காதலியின் நினைவாக, சரபோஜி மன்னர், தனது முன்னோர்களின் கட்டிடக் கலைப் பாணியிலேயே ஒரு பிரம்மாண்டமான சத்திரத்தை ஒரத்தநாட்டில் கட்டினார். ஏற்கனவே இருந்த சத்திரங்களைப் போலவே, இந்தப் புதிய சத்திரத்திலும் வழிப்போக்கர்களுக்குத் தங்குமிடம், உணவு, மற்றும் மருந்து ஆகிய அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

அன்னச் சத்திரமும் கலைக்கூடமும்

முத்தம்மாள் சத்திரம், அரண்மனைக்கு நிகரான அழகுடன், கலைகளின் இருப்பிடமாக உருவானது. இங்கு ஒரே நேரத்தில் 5,000 பேர் உண்டு, ஓய்வெடுக்கலாம். மேலும், அவர்களுக்கு மருத்துவ வசதிகள், கல்விக்கூடம் போன்ற தனித்தனி வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டன.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகையின் கிழக்குப் பகுதி நுழைவாயிலில், மராத்தி மொழியில் பொறிக்கப்பட்ட மூன்று வரிக் கல்வெட்டு, சத்திரம் கட்டப்பட்ட ஆண்டு மற்றும் அதன் நோக்கம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துள்ளது. சத்திரத்தின் கீழ்த்தளம், குதிரை மற்றும் யானைகள் இழுத்துச் செல்லும் தேர் வடிவில் வடிவமைக்கப்பட்டு, கருங்கற்கள், செங்கல், மற்றும் சுதைச் சிற்பங்களால் கலைநயத்துடன் காட்சியளிக்கிறது.

சத்திரத்தின் மேல்தளம் ராஜஸ்தானி பாணியில் கட்டப்பட்டுள்ளது. மாடங்கள், கனமான சுவர்கள், உருளை வடிவத் தூண்கள், பெரிய முற்றங்கள், பூஜை அறைகள், கிணறுகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், காய்கறித் தோட்டம், மாட்டுப் பண்ணை என அனைத்து வசதிகளும் இங்கே ஒருங்கே அமைந்துள்ளன. ஒரு அன்னச் சத்திரம் அழகிய கலைக்கூடமாகவும் திகழ்ந்தது.

முத்தம்மாள் சத்திரத்தின் சேவைகள்

மராட்டியர் ஆட்சிக்காலத்தில், இச்சத்திரம் ஒரு பிரம்மாண்டமான மாளிகையாகத் திகழ்ந்தது. ஒரே நேரத்தில் 5,000 பேருக்கு மேல் தங்கக்கூடிய வசதி இதில் இருந்தது.

அன்னதானம்: ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்கள், வழிப்போக்கர்கள், மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் சாதி, மத பேதமின்றி உணவு வழங்கப்பட்டது.

கல்வி: தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, பாரசீகம், உருது போன்ற மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இங்கு ஆங்கிலக் கல்வியும் கற்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம்: அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, மற்றும் யுனானி போன்ற மருத்துவ முறைகளைக் கையாளும் வைத்தியர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தனர்.

சிறப்பு வசதிகள்: முதியோருக்கு உதவித்தொகை, ஏழைகளுக்கு உணவு, உரியவர்களுக்கு உடை ஆகியவை வழங்கப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

கோயில் நிர்வாகம்: இச்சத்திரத்தின் வருவாயில் ஒரத்தநாட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், அய்யனார் கோயில் மற்றும் பிடாரி கோயில் போன்ற கோயில்களின் பூசைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

சத்திரத்தின் கலைநயம் மற்றும் தற்போதைய நிலை
முத்தம்மாள் சத்திரம் ஒரு அரண்மனை போல, கலைநயமிக்க கட்டுமானத்துடன் கட்டப்பட்டது. இதன் நுழைவு வாயில், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஊஞ்சல் மேடை, மற்றும் மரத்தாலான தூண்கள் ஆகியவை கலை நுட்பங்களுக்குச் சான்றாக உள்ளன. இங்குள்ள சௌகண்டி மண்டபம், தோட்டத்தின் நடுவில் அமைந்திருப்பது சிறப்பு.

கல்வெட்டுகள்: இங்குள்ள கல்வெட்டுகள், முத்தம்மாள் சத்திரம் குறித்துப் பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. அவற்றில், 1825-ஆம் ஆண்டுக்குரிய முத்தம்மாள்புரம் அன்னச் சத்திரம் பற்றிய தமிழ்க் கல்வெட்டும், 1872-ஆம் ஆண்டு இராமசாமி மஹால் பழுதுபார்க்கப்பட்டதைப் பற்றிய மரப் பொறிப்பும், மற்றும் சத்திரத்தின் நிறுவனர் சரபோஜி குறித்த மராத்தி மொழிக் கல்வெட்டும் முக்கியமானவை.

யாக சாலைகள்: சரபோஜி மன்னர் 1809-ஆம் ஆண்டு இக்கிராமத்தில் இரண்டு யாகங்கள் நடத்தியுள்ளார். இதற்கான யாக சாலைகள் கட்டப்பட்டு, அதற்கான கல்வெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, இந்தக் கலைப்பொக்கிஷம் சேதமடைந்த நிலையில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் பள்ளிக்கூடமாகவும், பின்னர் மாணவர் விடுதியாகவும் பயன்படுத்தப்பட்ட இது, இப்போது சிதிலமடைந்துள்ளது. எனினும், தமிழகத் தொல்லியல் துறை இதனைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் கட்டிடத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்தம்மாள் இறந்த பிறகு, “நான் எப்போதும் உங்கள் பரம்பரையை நலமுடன் காப்பேன்” என்று அவர் சரபோஜியிடம் கூறியதாகவும், அதன் காரணமாக தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தினர் இன்றும் நாயக்க மரபை சேர்ந்த முத்தம்மாளைத் தங்களின் குலதெய்வங்களில் ஒருவராக வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், முத்தம்மாளை வணங்கித் திருநீறு இட்டு நலம் பெறுவதாக அவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை இன்றும் தொடர்கிறது.

சத்திரத்தின் நிர்வாகமும் பொருளாதாரமும்

நில மானியங்கள்: முத்தம்மாள்புரம் சத்திரத்திற்கு தென்னமநாடு, புதூர், கண்ணந்தங்குடி கிழக்கு, வன்னிப்பட்டு போன்ற நான்கு கிராமங்கள் மட்டுமன்றி, வேறு சில கிராமங்களில் உள்ள நிலங்களும் கொடையாக அளிக்கப்பட்டன. மொத்தம் 8,875 ஏக்கர் 63 சென்ட் நிலம் சத்திரத்திற்கு மானியமாக வழங்கப்பட்டது.

வருமானம்: 1889-ஆம் ஆண்டில், சத்திரத்தின் நிகர வருமானம் ரூபாய் 32,800 என மதிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில், சத்திரத்திற்குரிய சேமிப்புத் தொகையானது அரசாங்கத்திற்கு வட்டிக்குக் கடன் வழங்கப்பட்டும் வந்தது. இதன் மூலம் மாதத்திற்கு 600 சக்கரம் வட்டியாகக் கிடைத்தது.

ஆங்கிலேயர் நிர்வாகம்: 1855-இல் கிழக்கிந்திய கம்பெனியார் தஞ்சை அரசைப் பொறுப்பேற்றபோது, அரண்மனை மற்றும் அதன் சொத்துகள் காமாட்சியம்பா பாயிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், சத்திரங்களின் நிர்வாகம் மட்டும் கம்பெனி அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர், இது மாவட்டக் கழகத்தின் கீழும், இப்போது மாவட்ட ஆட்சியரின் கீழும் இயங்கி வருகிறது.

முத்தம்மாள் சத்திரத்தின் தினசரி நடைமுறைகள்

உணவு வழங்கல்: இச்சத்திரத்தில் மாணவர்களுக்கும், பயணிகளுக்கும் தனித்தனி உணவுப் பட்டியல்கள் இருந்தன.

மாணவர்களுக்கான உணவு: ஒரு மாணவருக்கு ஒரு வேளைக்கு கால் படி அரிசி, 1/32 படி பருப்பு, 3/64 சேர் புளி, 1/64 சேர் மிளகாய் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட்டன. வாரத்தில் இரண்டு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பண்டிகை நாட்களில் பாயாசம், புளியோதரை, வடை போன்ற சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன.

பயணிகளுக்கான உணவு: பயணிகளுக்கு ஒரு வேளைக்கு அரை படி அரிசி, 1/32 படி பருப்பு, 3/64 சேர் புளி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

பைராகிகளுக்கு உணவு: வடக்கிலிருந்து வந்த துறவிகளான பைராகிகளுக்கு அரிசி நீங்கலாக, ஒரு வேளை உணவு ஒரு அனாவிற்குள் (ஆறு புதுக் காசுகள்) செலவாகும்படி வழங்கப்பட்டது.

உணவு வழங்கும் நேரம்: சத்திரத்தில் காலை 9 மணிக்கு மேல் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பகல் 12 மணிக்கு மணி அடித்து அன்னதானம் நடைபெற்றது. நடமாட இயலாதவர்களுக்கு வீதிதோறும் சென்று உணவு வழங்கப்பட்டது.

முக்கியப் பொறிப்புகள்: சத்திரத்தில் உள்ள மரப் பொறிப்பில், 1872-ஆம் ஆண்டு சத்திரத்தின் ஒரு பகுதியான இராமசாமி மகால் பழுதுபார்க்கப்பட்டது பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. அப்பணியை கலெக்டர் கேட்டல் துரை உத்தரவுப்படி சூப்பரின்டென்ட் சீத்தாராம பிள்ளை, மேலாளர் மாதவ ராவ், மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டனர்.

இச்சத்திரம் 1802 ஜனவரி 16-ஆம் நாள் பொங்கல் திருநாளை ஒட்டித் திறக்கப்பட்டது. இது துன்மதி புஷ்யசுத்த திரயோதசி-யில் கட்டத் தொடங்கப்பட்டிருக்கலாம் என ஆவணங்கள் கூறுகின்றன.

அண்ணா சத்திரம்: தஞ்சையில் “அண்ணா எஸ்டேட்” என்ற பெயரில் பெரும் நிலக்கிழார்களாக வாழும் முத்தம்மாளின் சகோதரர்களான சின்னண்ணா மற்றும் பெரிய அண்ணா ஆகியோரின் பரம்பரையினர், சூரக்கோட்டையில் ஒரு சத்திரத்தை கட்டியுள்ளனர்.

மராட்டிய மன்னன் தந்து தஞ்சை காதலிக்கு கட்டிய தென்னாட்டு தாஜ்மகால் என்றே கருதலாம்.