தமிழ்நாட்டுக் கோபுரங்கள் :
தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தமிழகம் எங்கும் தெய்வீகச் சூழ்நிலை நிரம்பியதாக்கி இக்கோபுரங்கள் விளங்குகின்றன. ‘கோபுரம்’ என்னும் சொல்லே தமிழகத்தின் தனிச்சொல் என்பர்.
கோபுரம் என்பது கோயிலின் வாயிலை அலங்கரித்து நிற்கும் கட்டட அமைப்பாகும். இது பண்டைய காலத்தில் இவ்வளவு சிறப்பாக இல்லை. தமிழகத்தில் கட்டடப்பகுதிகள் பல்லவர் காலத்திலிருந்து தான் காணக்கிடைக்கின்றன எனக் கண்டோம். மிகவும் தொன்மையான கோபுரம் எனக் குறிப்பிடத்தக்கது கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் ஆண்ட பல்லவ மன்னன் இராஜசிம்மன் எடுத்த கோயில்களில்தான் காணப்படுகின்றன. மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலிலும், காஞ்சி கைலாயநாதர் கோயிலிலும் இவற்றைக் காண்கிறோம். இவ்விரு கோயில்களிலும் கோபுரங்கள் மிகச் சிறியவையாக உள்ளன. கருவறையை அலங்கரிக்கும் விமானம் மிகவும் உயரமாக இருக்க, கோபுரம் மிகமிகச் சிறிதாக உள்ளதைக் காண்கிறோம். வாயில் நிலைக்கு மேல் ஒரு சிறிய சாலை வடிவு மட்டும் காணப்படுகிறது. இவற்றை “துவார சாலை” என்றே குறிப்பர்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உத்தரமேரூர் என்ற இடத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று கர்ப்பக்ருஹத்தை உடைய திருமால் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு கருவறைக்கும் எதிரில் ஒரு சிறு கோபுர அமைப்புக் காணப்படுகிறது. இதற்குப் பின்னர் பல்லவர் காலக் கோபுரம் என்று கூறும் அளவுக்கு குறிப்பிடத்தக்கது ஏதும் எஞ்சவில்லை.
சோழர் காலத் தொடக்கத்தில் கோபுரங்கள், விமானங்களை விடச் சிறியவையாகவே கட்டப்பட்டன. எஞ்சியுள்ள சி கோபுரங்களின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கல்லாலும் கட்டப்பட்டு விளங்குகின்றன. இவற்றில் ஒரு சிலவாகிலும் முழுமையும் கல்லால் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். மேற்பகுதி பழுதடைந்த காரணத்தாலும், பிற்காலத்தில் கோபுரங்கள் உயர ஏழுப்பப்பட வேண்டும் என்ற காரணத்தாலும் மேலே செங்கற்களைக் ஒப்பப்பட் வேண்டும் என்ற காரணத்தாலும் மேலே செங்கற்களைக் கொண்டு கட்டியுள்ளனர் போலும். மேலப்பழுவூர், கீழப்பழுவூர் முதலிய ஊர்களில் இக்காலக் கோபுரங்களைக் காணலாம். இவற்றின் வாயிலில் வாயிற் காவலர் சிலைகளைக் காண்கிறோம்.
இராஜராஜ சோழன் தஞ்சையில் பெருங்கோயிலை எடுத்த போது ஒரு புதிய மரபைத் தோற்றுவித்துள்ளதைக் காண்கிறோம். இராஜராஜன் காலத்திலும் விமானம் மிகவும் உயரமாகவே கட்டப்பட்டது. இருப்பினும் விமானத்தின் முன்னர் இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டன. வெளியில் உள்ளது உயரமாகவும் உள்ளே உள்ளது உயரம் குறைவாகவும் கட்டப்பட்டுள்ளது. இராஜராஜேச்சுரத்தில் இரு கோபுரங்களும் திருவாயில் எனப் பெயர் பெற்றிருந்தன. ஒன்று ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனவும் மற்றது ‘இராஜராஜன் திருவாயில்’ எனவும் பெயர் பெற்றிருந்தன.
விமானத்தின் முன்னர் இரு கோபுரங்கள் எடுப்பது சோழர் கால இறுதிவரை தொடர்ந்து வந்தது. கங்கைகொண்டசோழபுரத்தில் விமானத்தின் முன்புறம் ஒரு கோபுரம் மட்டும் எஞ்சியுள்ளது. அதிலும் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளது. தாராசுரத்தில் விமானத்தின் முன்னர் இரண்டு கோபுரங்கள் உள்ளன. கடைசியாக இவ்வாறு இரு கோபுரங்கள் திரிபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனால் எடுக்கப்பட்டன. இங்கும் கோபுரங்களின் அமைப்பு தஞ்சையைப் போலவே உள்ளதைக் காண்கிறோம்.
சற்றேறக்குறைய இதே காலத்தில் அதாவது இரண்டாம். குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து கோயிலின் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப்பெறும் மரபு தொடங்கியது. தில்லையில் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் 12, 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இக்கோபுரங்களின் கீழ்ப்பகுதிகள். கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலும் கட்டப்பட்டன. இவை ஏழு நிலைகள் உடையவையாகக் கட்டப்பட்டன. ஆதலின் இவைதிருநிலை ஏழு கோபுரம் (எழுநிலைக்கோபுரம்) எனப் பெயர் பெற்றன. இக்கோபுரங்கள் சுமார் 100 அடி உயரம்தான் எழுப்பப்பட்டன. அடிப்பகுதி பரந்து கட்டப்பட்டது.
இவ்வாறு எழுப்பப்பட்ட கோபுரங்களில் சில புதிய அமைப்புகளைக் காண்கிறோம். கல்லால் கட்டப்பட்ட கீழ்ப்பகுதி இரு பிரிவுகளாகக் காணப்படுகிறது. இவற்றில் கீழ்ப்பகுதியில் பல பரிவார தெய்வங்களின் உருவங்களும் மேற்பகுதியில் முக்கிய தெய்வத்தின் பல தோற்றங்களும் சிற்பங்களாக இடம்பெற்றுள்ளன. அவற்றின்கீழ் சில கோபுரங்களில் அத்தெய்வங்களின் பெயர்கள் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. தில்லையில் கீழை மற்றும் மேலைக்கோபுரம், தாராசுரத்தில் வெளிக்கோபுரம் ஆகியவற்றில் அத்தெய்வங்களின் பெயர்கள் பொறித்து வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும் நுழைவாயிலின் இருமருங்கும் உள்ள நிலைக்கால்களில் பரதநாட்டியத்தில் உள்ள 108 கரணங்கள் சிற்பங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. தில்லையில் கீழைக் கோபுரத்திலும் மேலைக்கோபுரத்திலும் நாட்டியக் கரணங்கள் சிற்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பரத மாமுனியின் நாட்டிய நன்னூலில் உள்ள அந்தந்த கரணத்தைக் குறிக்கும் செய்யுட்கள், கல்வெட்டாகக் கீழே பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இக்கோபுரங்களின் மேற்பகுதியில் சுதை உருவங்கள் அதிகம் இல்லை.
சோழர் காலத்திற்குப் பிறகு தமிழகத்தை விஜயநகரபேரரசர்கள் ஆண்டனர் அவர்கள் புகழ்வாய்ந்த கோயில்கள் அனைத்திலும் மிகவுயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். ஏற்கனவே இருந்த திருச்சுற்றுகளுடன் பெரும் திருச்சுற்றுகளை எடுத்து அவற்றின் வாயிலை அலங்கரிக்க வானளாவும் கோபுரங்களை எழுப்ப ஆரம்பித்தனர். காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களில் இதுபோன்ற உயர்ந்த கோபுரங்கள் எடுக்கப்பட்டன. 150 அடி உயரத்திற்கு மேல் இக்கோபுரங்கள் எடுக்கப்பட்டன. இக்காலக் கோபுரங்கள் அனைத்துமே கீழ்நிலை கல்லாலும் மேல் நிலை செங்கல்லாலும் எடுக்கப்பட்டன. மேல்நிலையில் சுதை உருவங்கள் அதிகம் இல்லை.
விஜயநகர மன்னர்களில் மிகச்சிறந்த உயர்ந்த கோபுரங்களை எடுத்தவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். அவரே காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை முதலிய இடங்களில் 180 அடி உயரத்திற்கு மேல்கோபுரங்களை எழுப்பியுள்ளார். அவர் காலத்தில் கோபுரப் பணி மிகவும் சிறந்திருந்தது. ஆதலின், அவர் எடுத்த கோபுரங்களை ‘ராயர் கோபுரம்’ என்று மக்கள் அழைக்கத் தலைப்பட்டனர். சில இடங்களில் மிகவும் பெரிய கோபுரம் எடுக்க அடிப்பகுதியைக் கல்லால் எடுத்திருக்கிறார். அதற்குள் அவர் காலம் முடிவடைந்துவிடவே பணி மேற்கொண்டு நடக்கவில்லை. இவ்வாறு பாதியில் நின்று போன கோபுரங்களையும் மக்கள் ராயர் கோபுரம் என்று அழைக்கலாயினர். பொதுவாக விஜயநகர மன்னர்கள் காலத்தை கோபுரக் காலம் என்றே கூறலாம்.
விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக வந்த நாயக்க மன்னர்களும் உயர்ந்த கோபுரங்களை எழுப்பியுள்ளனர். மதுரையில் திருமலை மன்னன் ஒப்பற்ற கோபுரத்தை எடுத்தான். அதில் ஆயிரக்கணக்கான சுதை உருவங்களை வைத்து அலங்கரித்தான். திருமலை மன்னன் மதுரையில் திருப்பணி செய்ததை மதுரைத் திருப்பணிமாலை மிக அழகாகச் சித்தரிக்கிறது.
உரக்க வெகு ரொக்கங் குடுத்துப் படங்குதூ
ணுத்திர முதற் பழங்கல்
ஒடிந்தன பிடுங்கி நலமாயமைந்துக் காரை
யோடு சீரண மகற்றி
அரைத்த சுண்ணாம்பை வெல்லச்சாறு விட்டுநன்
றாய் குழைத்துச் செங்கலும்
அடுக்காப் பரப்பிக் கடுக்காயோ டாமலக
மரிய தான்றிக் காயுழுந்
தொருக்காலிருக் காலிடித்து நன்னீரினி
லூறிய கடுஞ்சாறும் விட்
டுழி காலங்களினு மசையாத வச்சிரக்
காரையிட் டோங்கு மம்மை
சிரக்காலம் வாழவே மீனாட்சி கோயிலுஞ்
செப்பமிடு வித்து நன்றாய்ச்
செய்வித்த புண்ணியஞ் சதகோடி புண்ணியஞ் திருமலை மகீபனுக்கே
தமிழகக் கோயில் கலைகள் – முனைவர் இரா.நாகசாமி மா.சந்திரமூர்த்தி
Buy this book online: https://www.heritager.in/product/tamilakak-koyyil-kalaikal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Related books :