வாணிபம், கருத்தியல், நகரமயமாக்கம் :
நகரம் என்பது குறித்து சமூகவியலாளர்கள் விரிவான விளக்கம் தருவர். அவர்கள் தரும் விளக்கத்தின்படி, மக்கள் தொகை மிகுந்து, வேளாண்மை அல்லாத பிற தொழில்கள் நடைபெறும் இடம் என்று சுருக்கமாகக் கூறலாம். தமிழக வரலாற்றில் நகரம் என்பது புதிதான ஒன்றல்ல. பண்டைத் தமிழர்கள் தாம் வாழும் நிலப்பகுதியை அய்ந்து திணைகளாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வொரு திணைக்கும் முதல் கரு – உரி என மூன்று பொருள்களைத் தொல்காப்பியர் பகுந்துக் கூறியுள்ளார். இவற்றுள் கருப்பொருள் என்பது குறித்துக் கூறும் நூற்பாவின் இறுதியில் ‘அவ்வகை பிறவும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூற்பாவிற்கு உரை எழுதிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஒவ்வொரு திணைக்கும் உரிய ஊரின் பெயர்களைச் சுட்டுகிறார். அதன்படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு நிலங்களின் குடியிருப்புப் பகுதிகளும் தாங்கியுள்ள பெயர்கள் வருமாறு: குறிஞ்சி: ஊர், சிறுகுடி, குறிச்சி, முல்லை: பாடி, சேரி, பள்ளி, மருதம் :ஊர், நெய்தல்; பட்டினம், பாக்கம் (நிலைத்த நிலம் பாலைக்கு இன்மையால் குடியிருப்புகளுக்குப் பெயர் இடப்படவில்லை).
இவற்றுள் பட்டினம் என்பது ஏற்றுமதி, இறக்குமதி, வாணிபம் நிகழும் துறைமுகத்தைக் கொண்டது. பத்துப்பாட்டு நூல் வரிசையில் இடம் பெறும் பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினத்தின் வாணிப நடவடிக்கைகளை விரிவுபடக் கூறுகிறது. மருதநிலமான மதுரையில் நிகழ்ந்த வாணிப நடவடிக்கைகளை மதுரைக்காஞ்சி விரிவுபடக் கூறுகிறது. நகர நம்பியர், நகரப் பரத்தையர், நகரவர்,நகரவாயில் என்ற சொல்லாட்சிகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளதுடன் நகர் என்றழைக்கப்படும் நிலப்பகுதியின் வாணிபம், செல்வச் செழிப்பு என்பனவற்றை வெளிப்படுத்துகின்றன.
பிற்காலச் சோழர் ஆட்சியின் போது நகரம் என்பது வணிகர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்ததையும், நகரத்தார் என்ற சொல்லாட்சிஇருந்ததையும், கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளன. அகழ்வாய்வுகளின் போது கிட்டிய சான்றுகளும் நகரம் என்ற அமைப்பு தமிழர் நாகரீக வரலாற்றில் இடம்பெற்றிருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. அயல் நாட்டவர்களின் எழுத்துப் பதிவுகளும் நம் பண்டைய நகரங்கள் குறித்து உள்ளன. இவ் அனைத்தையும் அடிப்படைத் தரவுகளாகக் கொண்டு இந்நூல் உருவாகியுள்ளது.
நூல் குறித்து
இந்நூல் உருவானதன் வரலாற்றை நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாம் அறியலாகும். செய்திகள் வருமாறு: தம் ஆசிரியப் பணியின் தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில், ஆறு பாயும் சமவெளிப்பகுதிகளில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நூலாசிரியர் பயணித்துள்ளார். அப்போது, காவிரி பாயும் நிலப்பகுதியில் உள்ள கும்பகோணம், பாலாறு பாயும் நிலப் பகுதியில் உள்ள காஞ்சிபுரம், தாமிரபரணி ஆறு பாயும் பகுதியில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் உள்ள கட்டிடக் கலை நுட்பத்துடன் கூடிய, பல நூற்றாண்டுப் பழமையைச் சுமந்து நிற்கும் பிரம்மாண்டமான கோவில்களைக் கண்டு வியப்படைந்துள்ளார். இவற்றை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமே அவர் பார்க்கவில்லை. இடைக்காலத் தமிழகத்தின் கோயில் நகரங்களது தொன்மையை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் கண்டுள்ளார். இவ் அனுபவம் இத்தகைய வரலாற்றுக் களங்களை அவற்றின் பிரம்மாண்டமான காட்சிப்படிமத்திற்காக மட்டுமின்றி, நவீன இந்திய உருவாக்கத்திற்கு முற்பட்ட நகரமயமாதலின் வளர்ச்சி சார்ந்ததாகவும் இதை ஆராயவேண்டும் என்ற எண்ணத்தை இவரிடம் உருவாக்கிவிட்டது.
நகரமயமாக்கம் குறித்த ஆய்வு, நமது வரலாற்றாய்வில் முக்கியத்துவம் பெறாத நிலையில் சென்ற நூற்றாண்டின் எழுபதுகளின்பிற்பகுதியில் இவ்வெண்ணம் வளர்ச்சியுறலாயிற்று. இச்சூழலில் தம் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி நகரமயமாக்கம், நகரங்கள் என்பன குறித்து, தம் ஆய்வுப்பார்வையைத் திருப்பினார். இதன் விளைவாக தென் இந்தியாவில் நகரமயமாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டார். தம் ஆய்வுக்கான காலமாக கி.மு.600 தொடங்கி கி.பி.1300 வரையிலான காலத்தை வரையறுத்துக் கொண்டார். ஆய்வு செய்யும் களங்களாக கும்பகோணம், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள உள்நாட்டுப் பகுதிகளையும் தேர்வு செய்துகொண்டார்.
இந்நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள உள்நாட்டுப் பகுதிகளிலும் நிலவிய அரசியல், பொருளியல், பண்பாட்டுக் கூறுகள் ஆகியனவற்றையும் நகரங்களை முதன்மை பெறச் செய்தலில் இவற்றின் பங்களிப்பையும் கண்டறிதல் இவரது ஆய்வு நோக்கமாக அமைந்தது. அத்துடன் தமிழக வரலாற்றின் தொடக்க காலமான கி.மு.300 தொடங்கி கி.பி. 300வரையிலான காலத்தை (சங்க காலம்) ஆய்வில் கிட்டிய செய்திகளுடன் ஒப்பிடும் ஆய்வாகவும் இது அமைந்தது.
இவரது கருத்துப்படி தமிழக வரலாற்றின் தொடக்ககால நகரமயமாக்கம் என்பது கடல்சார் வாணிபம், வெளிநாட்டுத் தொடர்பு என்பனவற்றுடன் தொடர்பு கொண்டதாக இருந்துள்ளது. கோயில் என்ற நிறுவனத்துடன் தொடர்பற்றதாய் இருந்துள்ளது. தென் இந்திய வரலாற்றின் தொடக்க காலம் (கி. மு. 300- கி. பி. 300), வரலாற்றின் வளர்ச்சிக் காலம் (கி. பி. 400-1300) என்ற இரு கால கட்டங்களிலும் நிகழ்ந்த நகரமயமாக்கலை ஆராய்வதாகவே இந் நூல் அமைந்துள்ளது. அறிமுகவுரை தவிர, எட்டு கட்டுரைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் ஆறு கட்டுரைகள் தனித்தனியாக எழுதப் பட்டவை. இவை திருத்தியமைக்கப் பட்டதுடன் விரிவுபடுத்தப் பட்டுள்ளன. இந் நூலின் முன்னுரையும் இரண்டு கட்டுரைகளும் (எண் 2 & 3) இந்நூலுக்காக எழுதப்பட்டவை.
இச் சுருக்கமான அறிமுகத்தையடுத்து இந்நூல் வெளிப்படுத்தும் முக்கிய செய்திகளை அடுத்துக் காண்போம்.
நகரமயமாக்கம் என்பது காலனிய ஆட்சியின் விளைவாக அறிமுகமான ஒன்று என்ற கருத்து உள்ளது. இந்நூலாசிரியருக்கு இக் கருத்தில் உடன்பாடு கிடையாது. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் நகரமயமாக்கம் தன்னியல்பாக நிகழ்ந்த ஒன்றே என்பது இவர் கருத்தாகும். காலனியத்தின் துணையுடன்தான் நகரங்கள் உருவானது
என்பது தவறான கருத்து என்கிறார். அரசியல், நிர்வாகம், வாணிபம், மதம், போர் முறை அல்லது தொழில்நுட்பம் என்பன நகரமயமாக்கத்தில் முக்கிய பங்களிப்பு ஆற்றியுள்ளன. என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் இவர், நகரமயமாக்கம் என்பதை முதல் நிலை நகரமயமாக்கம் (Primary Urbanization), இரண்டாம் நிலை நகரமயமாக்கம் (Secondary Urbanization) என இரண்டாகப் பகுத்துள்ளார்.
இவற்றுள் முதல்நிலை நகரமயமாக்கலுக்கு, உள்ளேயே இருக்கும் வளர்ச்சிப் போக்குகள் காரணமாய் அமைகின்றன. ஆயினும் வெளித் தாக்கம் அறவே இல்லை என்று கூறிவிட முடியாது. இரண்டாம் நிலை நகரமயமாக்கம் என்பது ஒரு பேரரசில் நிகழும் விரிவாக்கத்தின் வளர்ச்சியில் உருவாவது. இதில், வட்டார அளவிலான நிர்வாக மையங்கள், கோட்டைகள் என்பன அடங்குகின்றன. இவை நகரப் பண்பாட்டைப் பரவும்படிச் செய்கின்றன. தொழில் நுட்பம், கல்வி என்பன நகரப்பண்பாட்டின் முக்கிய கூறுகளாகும்.
தென் இந்தியாவின் நகரமயமாக்கம் தொடர்பாக இந் நூலாசிரியர்பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்:
(1) தென் இந்திய நகரங்கள் காலனிய ஆட்சியின் விளைவாக உருவானவை அல்ல.
(2) தென் இந்தியாவில் நிகழ்ந்த நகரமயமாக்கத்தை, கி.மு.300 தொடங்கி கி.பி.300 வரையிலான காலத்தில் நிகழ்ந்தவை. இதனையடுத்து, கி.பி.1300 வரை நிகழ்ந்தவை என இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம். இவை இரண்டிற்கும் இடையே வேறுபாடு உண்டு. முதலாவது பகுப்பு பொருளியல் காரணக் கூறையும், இரண்டாவது பகுப்பு கருத்தியல் காரணக் கூறையும் அடிப்படையாகக் கொண்டது.
பொருளியல் காரணி
வேளாண்மைச் சமூகமாக விளங்கிய சங்க காலத்தியத் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த நீர் மேலாண்மை, உழைப்புப் பிரிவுகள் தோன்றியமை, உபரி உற்பத்தி உருவாதல், சந்தைகளின் வளர்ச்சி என்பன வேளாண்மையின் விரிவாக்கமாக அமைந்தன. இதன் முக்கிய அங்கமாக வணிகர்களின் தோற்றம் அமைந்தது. சங்க இலக்கியங்கள் ‘விலைஞர்’, ‘பகருனர்’ (கூவி விற்பவர்), ‘வம்பலர்’, ‘வணிகர்’ ‘பரதவர் (மீன் பிடித்தலில் இருந்து வணிகரானோர்), உமணர் (உப்பு விற்போர்) என்ற பெயர்களில் வணிகர்களைக் குறிப்பிடுகின்றன. இவர்களைத் தவிர பூவினர் (பூ விற்போர்), கோடியர் (மலர் மாலைவிற்போர்), சுண்ணத்தார் (நறுமணப் பொடி விற்போர்), நீடுகடை இலையினர் (வெற்றிலை பாக்கு விற்போர்), சங்கையறுத்துச் செய்த வளையல்கள் விற்போர், கடையில் பொருள்கள் விற்போர். மணிக்கற்கள் விற்போர், துணி விற்போர், அழகிய ஆடைகள் விற்போர்,கள் விற்போர், செம்பு உலோகத்தாலான பாத்திரம் விற்போர் என்போர் குறித்து சிலப்பதிகாரம், மணிமேகலை காவியங்கள் குறிப்பிடுகின்றன. இவ் விற்பனையில் விற்பனையாளர்களாக, இப்பொருள்களை உற்பத்தி செய்வோரே பெரும்பாலும் விளங்கினர். தனித்தனியாகப் பொருள்கள் விற்கும் வணிகர்களாக மட்டுமின்றி, குழுக்களாகவும் வணிகர்கள் இயங்கி உள்ளனர். இக் குழுக்கள் சாத்து என்று பெயர் பெற்றிருந்தன. உமணர், வம்பலர் என்றழைக்கப்பட்ட இச்சாத்துகள் உள்நாட்டுப் பகுதிகளுக்கு உப்பு, நெல் ஆகியனவற்றையும் சில நேரங்களில் மிளகையும் கொண்டு சென்றன. உப்பு விற்கும் ‘உமண் சாத்துகள்’, பாதுகாப்பிற்காக வாள், வில், ஈட்டி ஆகிய ஆயுதங்கள் தாங்கியவாறு கடினமான பாதைகளில் எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் பயணித்தமையை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
நெய்தல் நில மக்களான பரதவர்கள், முத்து, சங்கு வளையல்கள், மீன் உணங்கல் (கருவாடு), மணிக்கற்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான குதிரைகள் ஆகியனவற்றின் விற்பனையில் ஈடுபட்டு இருந்தனர். இவர்களின் செல்வச் செழிப்பை பெரும்பாணாற்றுப்படை விவரிக்கிறது.
வாணிபத்தினால் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிருந்த வணிகர்கள் வழங்கிய கொடைகளை, தொல் தமிழ்(பிராமி) கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. சமண, பௌத்த சமயத் துறவிகளுக்கு இவர்கள் அமைத்துக்கொடுத்த கற்படுகைகளில் அவற்றை அமைத்துக்கொடுத்த வணிகரின் பெயருடன் அவர் மேற்கொண்டிருந்த வாணிபமும் பொறிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாம் காணலாகும் வாணிபம் குறித்த பதிவுகள் வருமாறு: உப்பு வணிகன், பாணித வணிகன் (கள் வணிகன்), கொல்லு வணிகன் (இரும்பு வணிகன்), அறுவை வணிகன் (துணி வணிகன்), பொன் வணிகன். மணிக்கற்கள் வெட்டுவோன். சங்க இலக்கியச் செய்யுள்களில் அவற்றை எழுதியவரின் பெயரும் இடம் பெறுவது மரபு. இப் பெயர்களில் சில வாணிபத்துடன் தொடர்பு உடையனவாய் அமைந்துள்ளன. அவை வருமாறு: மதுரை அறுவை (துணி) வணிகன் இளவேட்டனார், மதுரை ஓலைக் கடையத்தார் (ஓலை அல்லது காதோலை) உறையூர் இளம் பொன் வணிகனார். காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்.மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இவ்வாறு இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் வணிகர்களையும், அவர்களின் விற்பனைப் பொருளையும் நாம் அறிய உதவுகின்றன.
சங்க இலக்கியங்களுக்குப் பிந்தைய சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காவியங்களிலும் வாணிபம் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன. தமிழக வணிகர்களை மட்டுமின்றி அயல்நாட்டு வணிகர் குறித்த பதிவுகளையும் பண்டைய இலக்கியங்களில் காண முடிகிறது. கடல் வழியாக வந்த இவர்கள் தனிக்குடியிருப்புகளில் வாழ்ந்துள்ளனர். மிலேச்சர் என்றும் யவனர் என்றும் அழைக்கப்பட்ட இவர்களின் வாணிப நடவடிக்கைகள் குறித்த பதிவுகள் கிரேக்க, ரோமானிய ஆவணங்களிலும் உள்ளன. பிளினி என்ற ரோம் நாட்டு வரலாற்றாசிரியர் ரோமுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான வாணிபம் குறித்து எழுதியுள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அலெக்சாண்டிரியா நகரில் வாழ்ந்துவந்த கிரேக்க வணிகனுக்கும் முசிறியைச் சேர்ந்த தமிழ் வணிகனுக்கும் இடையே நிகழ்ந்த வாணிப ஒப்பந்தம் ஆஸ்டிரியா நாட்டின் தலைநகரான வியன்னாவின் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கிறது,
யவனர்களின் வாணிபப் பொருள்கள் குறித்த பதிவும் சங்கஇலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி நகரக் காவலர் களாகவும் அரண்மனைக் காவலர்களாகவும், தச்சர்களாகவும்,மணிக் கற்கள் பட்டறைத் தொழில் வினைஞர்களாகவும் இவர்கள் பணிபுரிந்து உள்ளனர். இவ்வாறு பண்டைத்தமிழகத்தில் நிகழ்ந்த உள்நாட்டு, அயல்நாட்டு வாணிபமானது நகரமயமாக்கத்திற்குக் காரணமாக அமைந்ததை இலக்கியம், தொல்லியல், அயல்நாட்டு ஆவணப் பதிவுகள் என்பனவற்றின் துணையுடன் நிறுவும் இந் நூலாசிரியர் இக் காலத்தில் உருவான நகரங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார். இதன் பொருட்டு சேரநாட்டின் வஞ்சி, கருவூர், முசிறி (கொடுங்களூர்). பாண்டிய நாட்டின் மதுரை, கொற்கை, சோழ நாட்டின் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தொண்டை மண்டலத்தின் கச்சி (காஞ்சிபுரம்) வசவசமுத்திரம் ஆகிய எட்டு நகரங்கள் குறித்த வரலாற்றுச் செய்திகளை எழுதியுள்ளார்.
அத்துடன் அகழ்வாய்வுகளின் துணையால் வெளிப்பட்ட அழகன்குளம் (இராமநாதபுரம் மாவட்டம்) அரிக்கமேடு (புதுச்சேரி) கொடுமணல் (ஈரோடு மாவட்டம்) திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), ஆகிய ஊர்களையும் அறிமுகம் செய்துள்ளார். இவை அனைத்தின் பொதுக்கூறாக அமைவது இங்கு நிகழ்ந்த வாணிபம்தான்.
இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டுரையில் அயல் நாட்டு வாணிபம் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். இவ்வியலின் தொடக்கத்தில், பண்டையத் தமிழகம் குறித்த ஆய்விற்கு முக்கியச் சான்றாக அமையும் சங்க இலக்கியத் தொகுப்புகளின் சிறப்புகளை விதந்தோதுகிறார்.
சங்க இலக்கியத் தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட சமூக அல்லது சமயக் குழுவினால் உருவாக்கப்பட்டதல்ல என்று கூறுவதுடன், ஆளும் மேட்டிமை (Elite) யோரின் அரசவை இலக்கியமும் அல்ல, ஒரு குறிப்பிட்ட குழுவின் செயல்பாடுகள் குறித்த ஆவணமும் அல்ல என்கிறார். ஆறு நூற்றாண்டு (கி.மு.300 – கிபி 300) கால அளவில் இளவரசர்கள், குறுநில மன்னர்கள், வணிகர்கள், குயவர், கொல்லர், தச்சர், பிராமணர், சமணர், பௌத்தர் எனப் பலதரப்பட்ட மக்கள் பிரிவினரால் இவை உருவாக்கப்பட்டு, சாமானிய மனிதர்களையும் சமூகக் குழுக்களையும் சித்தரிக்கும் தன்மைத்தன என்று அவதானித்துள்ளார்.
இவை எழுதப்பட்டு சில நூற்றாண்டுகள் கடந்த பின்னரே (கி.பி.7-8) தொகுக்கப்பட்டுள்ளன என்று கணிப்பதுடன், மானுடவியல், நோக்கில் பார்க்கும்போது ஓர் இனக்குழுச் சமூகம் (Tribal Society) மாறுதலை நோக்கிப் பயணித்துள்ளது என்று புரிந்துகொள்ளலாம் என்கிறார்.
வாணிபம் குறித்த பதிவு சங்க இலக்கியங்களில் குறைவாகவே காணப்படினும், தொல்லியல் சான்றுகள், கிரேக்க ரோமானிய ஆவணப் பதிவுகள் என்பனவற்றை இணைச் சான்றுகளாகப் பயன்படுத்த முடியும் என்பது இவரது நம்பிக்கையாக உள்ளது. மேலும் சங்க இலக்கியங்களை அடுத்து உருவான சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காவியங்களும் பண்டையத் தமிழர்களின் வாணிபம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள திணைக் கோட்பாட்டின் சிறப்பைக் கூறுவதுடன் மருதம், நெய்தல் என்ற இரு திணைகளும் கடல்சார் வாணிப நடவடிக்கைகளையும் அயல்நாட்டு வணிகர்களுடனான ஊடாட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன என்கிறார். இது தொடர்பாக கிரேக்க, ரோமானிய வரலாற்றுச் சான்றுகளுடன் இவர் முன்வைத்துள்ள செய்திகள் குறிப்பிடத்தக்கவை.
அயல்நாட்டு வாணிபம் என்னும்போது ஏற்றுமதி, இறக்குமதி என்ற இரண்டும் தவிர்க்க இயலாதன. இவை குறித்த செய்திகளை தமிழ் இலக்கியச் சான்றுகள், கிரேக்க ரோமானிய நாடுகளின்வரலாற்று நூல்களில் காணப்படும் செய்திகள், தமிழ்நாட்டில் நிகழ்ந்த அகழாய்வுகளில் கிடைத்த பொருள்கள், ரோமானிய நாணயங்கள் என்பனவற்றின் துணையுடன் நன்கு வெளிப்படுத்தியுள்ளார். இவ்வகையில் இது முழுமையை நோக்கிய ஆய்வுப் பயணமாக அமைந்துள்ளது. பழங்கதை பேசுவதாக அன்றி வரலாறாக எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியான – இறக்குமதியான பொருள்கள் குறித்து இந்நூலாசிரியர் வெளிப்படுத்தும் முக்கிய செய்திகள் வருமாறு: பருத்தி ஆடைகள், பொன்னாலும் மணிக்கற்களாலும் செய்த அணி கலன்கள். முத்து, மிளகு என்பன ஏற்றுமதிப் பொருட்களாக இருந்தன. இவற்றுள் இறுதி இரண்டு பொருள்களும் உற்பத்தி செய்யப்படாத சேகரிக்கப்பட்ட பொருள்கள். குதிரை, பாவை விளக்கு, ஒயின், மெல்லிய ஆடைகள், செம்பு, தகரம், ஈயம் என்பன முக்கிய இறக்குமதிப் பொருள்கள். இப் பொருள்கள் தம் சமூக மதிப்பை உயர்த்திக் காட்டும் வழிமுறைகளில் ஒன்றாக இவை மேட்டுக்குடியினரால் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பது இந் நூலாசிரியரின் கருத்தாக உள்ளது. கவிஞர் களுக்கும் பாணர்களுக்கும் இவற்றைப் பரிசாக வழங்கியதும் இதன் பொருட்டே. மிளகு கிடைக்கும் மலைப்பகுதி இல்லாமையாலும், தம் கடல்பகுதியில் முத்துக் குளித்தல் நிகழாமையாலும் நெல், அல்லது வேளாண் உற்பத்திப் பொருள்களாலும் உப்பு உற்பத்தியாலும் தம் பொருளாதாரத்தை சோழர்கள் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் என்கிறார்.
வாணிபத்தின் தாக்கத்தால் ஏற்படும் சந்தை அமைப்பின் வளர்ச்சி யானது நீண்ட தூர வாணிபத்திற்காக நாணயங்களை அச்சிடும்படி அரசைத் தூண்டும் என்ற நம்பிக்கை உண்டு என்று கூறும் நூலாசிரியர் அப்படிப்பட்ட தாக்கம் எதையும் பண்டையத் தமிழகத்தின் வாணிபம் ஏற்படுத்தவில்லை என்று மதிப்பிட்டுள்ளார். அதே போழ்து வட்டார அளவில் ஆங்காங்கே கிடைக்கும் நாணயங்கள் உள்நாட்டு வாணிபம் கடல் வாணிபம் என்ற இரண்டின் நேரடித்தாக்கம் இருந்துள்ளதை உணர்த்துகின்றன என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு உள்நாட்டு. அயல்நாட்டு வாணிப வளர்ச்சியினால் சங்க காலத்தில் நகர்மயமாக்கம் நிகழ்ந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக கி.பி.600 தொடங்கி கி.பி. 1300 வரையிலான காலத்தில் நகர்மயமாக்கம் நிகழ்ந்துள்ளது. இதற்கான உந்து சக்தியாக, ‘கருத்தியல்’ அமைந்திருந்து உள்ளது. இங்கு கருத்தியல் என்பது சைவம் வைணவம் சார்ந்த பக்தியைக் குறிப்பதாகும். (நூலிலிருந்து)
வரலாற்றில் ஒரு வாழ்வு: வரலாறு குறித்த நூல்களின் அறிமுகம் – ஆ.சிவசுப்பிரமணியன்
விலை: 250 /-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/varalaatril-oru-vaazhvu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers