தொல்லியலின் வகைகள் (பொருளாதார, இனவியல் தொல்லியல்)

தொல்லியலின் வகைகள் (பொருளாதார, இனவியல் தொல்லியல்)

தொல்லியல் என்பது பழமையான பொருட்கள் அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்தும் துறை ஆகும். ஆனால் காலகட்டங்களுக்கு ஏற்பவும், பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை வைத்தும், பொருட்களின் பிரிவை வைத்தும், அவை சேகரிக்கப்படும் முறையை வைத்தும் தொல்லியல்துறை வல்லுநர்கள் தொல்லியலை வகைப்படுத்துகின்றனர்.

மத்தியதரைப் பகுதி தொல்லியல்:

கிரேக்க ரோமானியத் தொல்லியல் பிரிவை மத்திய தரைக் கடல் தொல்லியல் என்று அழைக்கின்றனர். மேலும் மத்திய தரைக் கடலிலும் பல தொல்லியல் சான்றுகள் அதிக அளவில் கிடைக்கின்றன. எனவே இப்பகுதியைத் தொல்லியல் சுரங்கம் என்றும், மத்திய தரைக்கடல் நீரடி அருங்காட்சியகம் என்றும் அழைக்கின்றனர்.

எகிப்தியத் தொல்லியல் :

எகிப்து நாட்டின் பாரம்பரியமிக்க பிரமிடுகளும், அங்கே கிடைக்கும் அரிய கலைச் செல்வங்களுமே எகிப்தியத் தொல்லியல் (Egyptology) என்னும் தனிப்பிரிவு தோன்றுவதற்குக் காரணமாயிற்று. பழங்கால மனிதனின் நாகரிகம். எழுத்துமுறை போன்றவற்றைத் தெளிவாக எகிப்திய தொல்பொருளியல் விளக்குகின்றது. எகிப்தின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட சிலர் எகிப்துதான் உலகின் பண்பாட்டு மையம் என்றும் அங்கிருந்துதான் பிற நாடுகளுக்கு நாகரிகம் பரவியது என்றும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு எகிப்தில் தொல்லியல் சான்றுகள் அதிகமாகக் கிடைக்கின்றன.

வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொல்லியல்:

இது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மனிதனைப் பற்றிய எந்தவித எழுத்து ஆவணங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.எனவே மனிதனின் தோற்றத்தையும், மனித நாகரிக வளர்ச்சியையும் அறிந்துகொள்வதற்குத் தொல்லியல் சான்றுகளே முதன்மைச் சான்றுகளாகத் திகழ்கின்றன. தொல்லியலும் மனிதன் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து அவன் பயன்படுத்திய பொருட்கள், சமூகப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றது. பழைய கற்கால மனிதன் நெருப்பின் பயனை அறியாதவனாகவும், இயற்கைக்கு அஞ்சியும், கற்கருவிகளைப் பயன்படுத்தியும் வாழ்ந்தான் என்பதை அறிகின்றோம். புதிய கற்காலத்தில் சற்று நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் நெருப்பின் பயனை அறிந்த வனாகவும், கூரிய கல் ஆயுதங்களைப் பயன்படுத்துபவனாகவும் இறந்தவர்களை அடக்கம் செய்து கல்பதுக்கை போன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பவும் அறிந்திருந்தான். பின்னர் உணவுதேடி அலைந்த மனிதன் உணவு உற்பத்தி செய்யவும் தொடங்கினான். தனக்குத் தேவையானவற்றைத் தன் இருப்பிடத்திலேயே தயாரிக்கும் திறனைப் பெற்றான். இது கற்காலத் தொல்லியப் பிரிவு என்று அழைக்கப்படுகின்றது.

உலோகக் காலத் தொல்லியல்:

பெருங்கற்காலத்தின் இறுதியில் இரும்புக் காலம் தொடங்குகின்றது. இதனைத் தொடர்ந்து வெண்கலக் காலம். செம்புக் காலம் தொடங்கு கின்றது.இக்கால கட்டங்களில் மனிதன் தனக்குத் தேவையான ஆயுதங்களையும் ஆடை அணிகலன்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கினான். இவை உலோகக் காலத் தொல்லியல் எனப்படுகின்றது.

வரலாற்றுக் காலம்:

வரலாற்றுக் கால நாகரிகங்களைப் பற்றிஅறிந்துகொள்வதற்குத் தொல்லியல் சான்றுகளோடு இலக்கியச் சான்றுகளும் துணை நிற்கின்றன. இக்காலத்தில் தொல்லியல் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு புதிய பரிமாணங்களைப் பெற்று வளர்ச்சியடைந் துள்ளது.வரலாற்றுக் காலத் தொல்லியல் என்பது பண்டைக்காலத் தொல்லியல், மத்திய காலத் தொல்லியல் தொழிற்தொல்லியல், பொருளியல் தொல்லியல், இனத் தொல்லியல் கோயில் மற்றும் பௌத்தத் தொல்லியல் என்று பலபிரிவுகளாகப் பிரிந்து வளர்ச்சி யடைந்துள்ளது. இவ்வாறு பல பிரிவுகளை தன்னகத்தே கொண்ட தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்குப் பல்வேறு வகைகளில் பயன்படுகின்றது. இங்குப் பொருளாதாரத் தொல்லியல் மற்றும் இனவியல் தொல்லியல் போன்ற முக்கியமான பிரிவுகளைப் பற்றிக் காண்போம்.

தொல்பொருளியல் பொருளாதாரம் :

தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அக்கால மக்களின் பொருளாதார வாழ்க்கையை அறியலாம். இலக்கியங்கள் வல்லோரையும், நல்லோரையும், பணக்காரர் களையும், சாதனையாளர்களையும் கூறும் நிலையில் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை அறிந்துகொள்ள தொல்லியலே உதவுகின்றது. அகழ்வாய்வில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பொருளாதார நிலையை அறிந்துகொள்ளும் தொல்லியல் அறிஞர்கள் பல தொன்மைச் செய்திகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.. பொருளாதாரத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு அகழ்வாய்வுகள் மேற்கொள்வதில்லை. அகழ்வாய்வு வெளிப்பாட்டில் கிடைத்த பொருட்களை வைத்து வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து இன்றுவரை மனித உலகில் எப்படிப்பட்ட பொருளாதார மாற்றங்களை அடைந்தான் என்பதை அறிந்துகொள்வதில் அறிஞர்கள் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.

பொருளாதார அடிப்படையிலான தொல்லியலைச் சுற்றுச் சூழ்நிலையில் தொல்லியல் என்ற பிரிவிலும் ஒழுங்குபடுத்தலாம். எந்த ஒரு நாட்டின் பொருளாதாரக் கல்வியும் அந்நாட்டின் இயற்கை வளங்கள், தட்பவெப்பநிலை, உயிரினம் ஆகியவற்றை முக்கியக் கூறுகளாகக் கொண்டுதான் இயங்கும். இக்கூறுகள் பழமையான வரலாற்றைத் தெரிவிக்கும் முக்கிய கருவிகளாகத் தான் சொல்லப் படுகின்றன. ஹரப்பா, மொஹஞ்சதாரோ, கலிபாங்கன். லோதல் போன்ற இடங்களில் அகழ்வாய்வில் பருத்தி, தானியங்கள். குதிரைகளைத் தவிர பிற விலங்குகளின் பொம்மைகள் போன்றவை கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் பொருளாதார வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவுகின்றன.

மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகப் பயன்படுத்திய கலைநயப் பொருட்கள், நுண்கருவிகள் போன்றவற்றைப் பிறநாடுகளோடு ஒப்பிடும்பொழுது இந்தியா, எகிப்து, சுமேரியா, பாபிலோனியா போன்ற நாடுகளுக்கிடையே ஏற்பட்ட வணிகத் தொடர்புகளை அறிய முடிகின்றது. சிந்து என்றாலே பருத்தி என்று பொருள் எனத் தொல்லியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இங்குத் தானியங்கள் சேமிக்க மிகப்பெரிய களஞ்சியங்கள் பயன்படுத்தப்பட்டன. லோதல் என்ற இடத்தில் நெல் உமியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபங்கனில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உழுது பாத்தி கட்டிய அமைப்பு, விவசாய முறை அமைப்பு கிடைத்துள்ளது. இரும்பு தவிர ஏனைய உலோகங்களாலான அரம், கோடாரி, அம்பு முனைகள், ஈட்டிமுனைகள், ஊசிகள் போன்றவை கிடைத்துள்ளன. இவை பல்வேறு தொழில் செய்யும் சமூகத்தினரான குயவர், கொல்லர், தச்சர், தட்டார். செம்புவணிகப் பொருட்கள் செய்யும் கம்மியர், கற்கருவிகள் செய்வோர் கட்டிட வேலைக்காரர், முத்திரை உற்பத்தியாளர் போன்ற தொழில் விற்பன்னர்கள் இருந்தனர் என்பதைத் தெளிவாக்குகிறது. மேலும் அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள், வேளாண்மையும். உள்நாட்டு, அயல்நாட்டு வாணிபமும் முக்கியத் தொழிலாக இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்கின்றன.

இந்திய நாட்டிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற வாணிபத்தை அறிந்துகொள்ள தொல்லியல் சான்றுகள் உதவுகின்றன. அதிலும் குறிப்பாகத் தமிழகம் பல்வேறு நாடுகளான கிரீஸ், ரோம், பாரசீகம், அரேபியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கொண்டிருந்த வாணிபப் போக்குவரத்தை அந்நாட்டு மக்கள் பயன் படுத்திய கலைநுட்பப் பொருட்கள், நாணயங்கள் போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்கின்றோம். இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய வெளிநாட்டினரின் தங்க நாணயங்களுள் பெரும் பாலானவை பூம்புகார், அரிக்கமேடு, கொங்குநாடு, பாண்டிய நாடு எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை ஆகும். இவை அனைத்தும் சங்க இலக்கியங்கள் வர்ணிக்கும் பண்டைத் தமிழரின் பொருளாதார வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஆல்சின் என்ற அறிஞர் பழங்காலத்தில் இந்தியர்கள் தொழிற் துறையில் மகத்தான சாதனைகள் அடைந்துள்ளனர் என்று கூறுகின்றார். மேலும் D. H. கோர்டன் என்பவர் தனது வரலாற்றுக்கு முற்பட்ட இந்திய கலாச்சாரத்தின் பின்னணி எனும் நூலில் சிந்துச் சமவெளி மக்கள் மட்பாண்டங்கள் மற்றும் செம்பு போன்றவற்றைப் பயன்படுத்தியதோடு கட்டிட நிபுணர்களாகவும் கலைத்திறன்மிக்கவர் களாகவும் சிறந்த நாகரிகமுடையவர்களாகவும் வாழ்ந்தார்கள் என்று விவரிக்கின்றார். வி.பி. மெயின்கார் (V.B.Mainker) தன் நூலான மெட்ரோலாஜி இன் தி இன்டஸ் சிவலிசேசன் (Metrology in the Indus Civilization) என்ற நூலில் பலவித முத்திரைகள் புழக்கத்தில் இருந்ததை விவரிக்கின்றார்.

தமிழ்நாட்டில் கொங்குநாட்டைச் சார்ந்த கொடுமணல், கரூவூர், வெள்ளலூர், பேரூர், திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம். தூத்துக்குடி மாவட்ட பையம்பள்ளி போன்ற இடங்களில் மேற் கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் நம் நாட்டில் காலம்காலமாகப் பயன்படுத்திய விலைமதிப்புயர்ந்த நவரத்தினங்கள், கற்கள், பாசிகள்கூர்முனைகள் கொண்ட கருவிகள் உணவு தானியங்கள் போன்ற செய்திகளைத் தருகின்றன. இன்றும் சீரிய பொருளாதார நோக்கில் தொல்லியல் இயங்கவேண்டும் என ராபின் டேனியல் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நமது தொன்மையான பயிரியல் கூறுகள், மனிதனின் பொருளாதாரக் காலகட்டநிலை, அவன் உணவு, உறைவிட முறைகள், இயற்கையின் மாறுபாடுகளுக் கேற்ப மனிதன் இயங்கிவந்த நிலை போன்றவற்றைத் தெரிந்துகொள்ள அவசியமான ஒன்றாகப் பொருளாதாரத் தொல்லியல் விளங்குகின்றது. மனிதனின் பண்பாட்டு மாற்றங்கள்தான் பொருளாதார மாற்றங் களுக்கும், வளர்ச்சிக்கும் காரணம் என்பது சர் ஆன்டரூ ஷெரட் (Andrew Sherat) என்பவரின் கூற்றாகும்.

வரலாறு என்பதே சாதாரண மனிதனின் மாற்றங்களையும் வாழ்க்கையையும், சமூக – பொருளாதார வளர்ச்சியையும் விவரிப் பதாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இருக்கின்ற வனுக்கும், இல்லாதவனுக்கும் இடையே நடைபெற்ற வர்க்கப் போராட்டமே வரலாறு என்று “கார்ல் மார்க்ஸ்” என்னும் அறிஞர் கூறுகின்றார். எனவே ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மனிதனின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ள தொல்லியல் சான்றுகள் உதவியாக இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
(நூலிலிருந்து)

தொல்லியல் – முனைவர் தி.செல்வநாயகி (ஆசிரியர்), முனைவர் தி.மனோன்மணி (ஆசிரியர்)

வெளியீடு: NCBH
Buy this book online:https://www.heritager.in/product/tholliyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers