ஆசீவகர்கள் யார்?

இந்தியாவில் ஆரியரின் வருகையினால் தோன்றிய வேதங்களையும், அவற்றைத் தழுவி நிற்போரையும் எதிர்த்துச் சில மதங்கள் தோன்றின. அவற்றுள் சார்வாகர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் ஒரு தனிக் கடவுளையோ,அன்றேல் அக்கடவுளின் ஏற்றத்தையோ நம்பாதவர்கள். வேதங்கள் கூறும் சமயச் சடங்குகள் மக்களை உய்விக்க முடியாது என இவர்கள் நம்பினர். எனவே, வேத நெறி தழுவாத, வேதத்தை நம்பாத””இவர்கள் வேதஞ் சாரா மதத்தினர், அவைதீக மதத்தினர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். இத்தகைய அவைதீக மதத்துள் பௌத்த மதத்தைத் தோற்றிய பௌத்தருடனும் சமண மதத் தீர்த்தங்கரரான மகாவீரருடனும் ஒரே காலத்தில் வாழ்ந்து பிறிதொரு மதமான ஆசீவகத்தைத் தோற்றி நிறுவ முயன்றவர் மக்கலி கோசலர். இவருக்கு முன்னரே ஆசீவக மதம் தோற்றம் பெற்று விட்டதென்றும் இவர் இருபத்தி நான்காவது ஆசீவகத் தீர்த்தங்கரர் என்றும் கூறுவர்.” ஆனால், தமிழ் நூல்கள் மக்கலி கோசலரே ஆசீவக மதத் தலைவர் எனக் குறிப்பிடுகின்றன.

வேதங்கள் இந்தியாவில் தோற்றுவிக்கப்படும் முன்பாகவே, துறவில் ஈடுபட்ட மக்கள் குழாம் ஒரு பகுதியினராக வாழ்ந்து வந்தனர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. வாழ்க்கையில் பிடிப்பில்லாத இத்தகைய துறவிகள் இந்த உலகம், உயிர்களுக்கு உலகத்துடன் உள்ள தொடர்பு, உயிர்களின் துன்பங்கள், அவற்றை நீக்கும் வகைகள் முதலிய வற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தனர். இவர்கள் தம் மெய்வருத்தம் நோக்காது உண்மையைத் தேடி அலைந்தனர்.இதனால் இவர்களைச் சிரமணர்கள் (śramana) எனக் குறிப்பிடுவர். இத்தகைய மெய்வருத்தம் நோக்காது உயிர்கட்கு உய்தி தரும் உண்மை நிலை தேடி அலைந்த குழுவினரைத் தான் தமிழிலும் சமணர், அமணர்” எனத் தொடக்க நிலையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் இச்சொற்கள் சமணர்களில் ஒரு குழுவினரான ஜைனர்களை (Jaina) மாத்திரம் குறிக்கும் சொற்களாயின.

வேதங்களையும் வைதீகக் கருத்துக்களையும் எதிர்த்தெழுந்த இக்குழுவினர் இரு வகை அடிப்படைக் கருத்தைக் கொண்டு விளங்கினர். சமணர், பௌத்தர் (கி.மு. 5000) ஆகியோர் வினைக் கொள்கையைத் தம் மதத்தின் அடிப்படைக் கருத்தாகக் கொண்டனர். ஏனைய துறவிகளுள் ஆறு குழுவினர்கள் சங்கங்களாகச் சேர்ந்து இயங்கினர்.இவர்கள் வினைக் கொள்கையை ஏற்காது ஊழ்க் கொள்கையைத் தம் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டனர். பூரண கச்சபன் (Purana Kassapa), மக்கலி கோசலன் (Makkhali Gosāla), அஜிதகேச கம்பளி (Ajita Keśa kambali), பகுடகச்சாயனன் (Pakudha Kaccāyana), சஞ்சய பெலத்தி புத்திரன் (Sañjaya Belatthiputta), நிகண்டநாத புத்திரன் (Nigantha Nātaputta) என்ற அறுவரும் எப்போதும் கூட்டாகவே வாழ்ந்தனர் என்றும், இவர்கள் புத்தரின் கொள்கைகளைப் பெரிதும் எதிர்த்து நின்றனர் என்றும் தெரிய வருகின்றது. இவர்களுள் பலர் தனித்தனியாகத் தம் கொள்கைகளை நிலைநிறுத்தியதாகத் தெரியவில்லை. மக்கலி கோசலர் ஒருவரின் கொள்கை மாத்திரமே தனி மதமாகப் பின்னர் நூல்களில் கூறப்பட்டுள்ளது.’

இவர்கள் கர்மா எனப்படும் வினைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு எதிராக மக்கலி கோசலர் நியதி எனப்படும் ஊழ்க் கொள்கையைத்தன் மதத்தின் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டார். முன்னர் கூறியதுபோல் ஊழ்க் கொள்கைப்படி உயிர்களின் இன்பதுன்ப அனுபவங்களுக்கு அவ்வுயிர்களின் செயல்களே காரணம் என்ற வினைக் கொள்கை ஏற்புடைத்தாகாது. அதாவது, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற எண்ணத்திற்குப் பதிலாக ஆசீவகர்கள் ஊழ்க் கொள்கையை நம்பினர். அதாவது நியதி/ஊழ் என அழைக்கப் படும் ஒரு வித வலுவே உலகத்தையும் உயிர்களையும் இயக்கு விக்கின்றது. ஊழின் படியே செயல்கள் நடைபெறும். உலகத்து உயிர்களெல்லாம் நியதிப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உடையன. அவற்றின் பிறப்பு, இறப்பு, அவைகளடையும் மாற்றம், வீடுபேறு எல்லாம் முன்னமே நிறுவப்பட்ட ஊழின்படிதான் நடைபெறும்.

எவ்விதம் ஒரு நூற் பந்தை விட்டெறிந்தால் அது ஒரு குறிப்பிட்ட அளவு நீண்டு, அதன் முடிவில் அது நீளும் தன்மை அற்று விடுமோ அவ்விதமேதான் உயிர்களின் இயக்கங்களும் ஊழ் எனும் ஆற்றலின் எல்லை வரைதான் செல்லும். அதற்கு மீறி அணு அளவு கூடச் செல்லாது. இக்கொள்கையை நிலைநாட்ட முயன்றவரே மக்கலி கோசலர். அவரைப் பின்பற்றிய குழுவினரே ஆசீவகர்கள். வினை எனத் தமிழில் கூறப்படும் பௌத்தர்கள், சமணர்களுடைய வினைக் கொள்கையும், ஊழ் எனப்படும் ஆசீவகர்களின் நியதிக் கொள்கையும் பின்னர் இந்நூலின் மூன்றாவது இயலில் விரிவுறத் தமிழிலக்கியங் களை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடப்படுகின்றன.

தமிழகத்தில் ஆசீவகர்கள் – ர. விஜயலட்சுமி
₹220

Buy: தமிழகத்தில் ஆசீவகர்கள் – முனைவர் ர .விஜயலட்சுமி