சங்க இலக்கியப் பாடல்களின் மூலம், கரிகாலன் காஞ்சியில் தான் உருவாக்கிய புதிய தலைநகரில் பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்ட சிறப்புமிக்க வேள்விச் சடங்குகளால் ஈர்க்கப்பட்டான். ஆரியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டதன் விளைவாக அதனை தானும் நடத்தி, செலவுமிக்க வேத யாகங்களை ஆதரித்த முதல் தமிழ மன்னன் கரிகாலன் ஆனார்.
கரிகாலனின் இறப்புக்குப் பிறகு, அவனது வேள்விச் சிறப்பைக் குறித்து கரும்பூட்கிழான் பாடிய பாடலில், தமிழர்களின் நிலத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சிறந்த வேள்விச் சடங்கின் மிகப்பழமையான விளக்கம் காணப்படுகிறது.
அப்பாடல், “அறத்தை நன்குணர்ந்த பார்ப்பனர்களின் அவையில், வேள்விச் சடங்குகளை நன்கு அறிந்தவர்கள், சடங்குகளை வழிநடத்தினர். வேள்விச்சாலை வட்டமாக, பல பாதுகாப்பு மதில்களால் சூழப்பட்டிருந்தது. அதன் உள்ளே, பருந்தின் வடிவத்தில் ஒரு இடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நடப்பட்ட உயரமான வேள்வித்தூணின் அருகே, கற்பொழுக்கத்தில் சிறந்த பெண்களாகப் போற்றப்பட்ட தங்கள் மனைவியருடன் வேள்வி நடத்தியவர்கள், வேத யாகத்தை முடித்தனர்” என்று குறிப்பிடுகிறது.
பாடலின் பொருள் விளக்கம்
“அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்,”
புறநானூறு 224. இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குளவாதனார் .
அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து – அறநெறிகளை முழுமையாக உணர்ந்த அறிஞர்களின் சிறந்த அவையில்.
முறைநற்கு அறியுநர் – வேள்விச் சடங்குகளின் வழிமுறைகளை நன்கு அறிந்தவர்கள்.
முன்னுறப் புகழ்ந்த – முன்னின்று வழிநடத்திப் போற்றிய.
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு – தூய்மையான இயல்பையும், குற்றமற்ற கற்பொழுக்கத்தையும் கொண்ட மனைவியருடன்.
பருதி உருவின் பல்படைப் புரிசை – வட்ட வடிவமான பல மதில்களால் சூழப்பட்ட.
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் – பருந்தின் வடிவத்தில் அமைக்கப்பட்ட வேள்வி மேடையில், வேள்வித் தூணாகிய உயரமான கம்பத்தின் அருகே.
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம் – வேத வேள்விச் சடங்குகளை முடித்தான்.
சோழனை பின்பற்றி பிற மன்னர்களின் வேள்வி ஆர்வம்
கரிகாலனால் தொடங்கப்பட்ட வேள்விகளை ஆதரிக்கும் வழக்கம், மற்ற தமிழ மன்னர்களாலும் பின்பற்றப்பட்டது. சேர வம்சத்தைச் சேர்ந்த பல்யானைச்செல் கெழு குட்டுவன், பத்து யாகங்களை நடத்தினார் என்று தொன்மை வாய்ந்த வரலாறுகள் கூறுகின்றன. அதனடிப்படையில், பத்து யாகங்களை நடத்தியதற்கு பாலக்கௌதமனார் என்ற புலவருக்கு அவர் உதவினார். இந்த யாகங்கள் முடிந்ததும், அந்தப் புலவரும் அவரது மனைவியும் நேராக சொர்க்கத்திற்குச் சென்றனர்.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் பல யாகங்களை ஆதரித்தார். அவர் ஒரு பார்ப்பன வேள்வியாளருக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கினார். இந்த நிலங்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் ஒரு சர்ச்சைக்குள்ளானது.
பின்னர், அந்த நிலம் ஒரு செப்பேட்டுடன் சேர்த்து மீண்டும் அதன் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது. கரிகாலனின் வாரிசுகளில் ஒருவரான பெருநற்கிள்ளி, வேத சடங்குகளின்படி முடிசூட்டி, ‘இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி’ என்ற பட்டத்தைப் பெற்றார்.
ஆனாலும், இந்தச் சடங்குகளுக்குப் பிறகு, சோழ வம்சம் விரைவில் வீழ்ச்சியடைந்து, சில நூற்றாண்டுகளுக்குத் தென்னிந்திய வரலாற்றிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துபோனது.
படம்: இன்றும் கேரளாவில் பருந்து வடிவில் மேடைகள் அமைக்கப்பட்டு யாகங்கள் நடத்தப்படுகின்றன.
மூலம்: தமிழர் வரலாறு – சீனிவாச அய்யங்கார்
கட்டுரை: Rajasekar Pandurangan