நாம் செல்லும் ஆலய கோபுரங்களின் மேலே அமைந்த கலசங்கள், கருவறை வாயிற்படியிலும் பக்கத் தூணிலும் போர்த்தப்பட்டுள்ள வேலைப்பாடுடைய தகடுகள், கருவறையில் உள்ள திருமேனிகளை அலங்கரிக்கும் பொன், வெள்ளி அல்லது பித்தளையிலும் உள்ள கலசங்கள், பிரபை என்று சொல்லப்படுகின்றன. திருவாசி எனப் பல உலோகத்தில் ஆன உருவங்கள் நிச்சயம் நம் கண்ணில் தென்படும்.
ஏற்கனவே எந்த நூற்றாண்டிலோ, ஏதோ ஒரு சிற்பி செய்த சிலைகளுக்கும், தூண்களுக்கும், படிகளுக்கும் இன்று உலோகத்தால் ஆடையாகப் போர்த்தப்பட்டு, அதே கலை நுணுக்கங்களோடு செய்பவர்கள் யார் என்று எப்போதாவது யோசித்திருப்போமா?!
வேலூர் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள விருதம்பட்டில் உள்ள சுவாமிநாதன் ஸ்தபதியார் என்றால் வடஆற்காடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்திலும் நன்கு தெரியக்கூடிய ஸ்தபதி. இவர் சிலை வடிவமைப்பவர் அல்ல. ஆனால் மற்ற சிற்பிகள் செய்த சிலைகளுக்கு கச்சிதமாகக் கலசங்கள் செய்பவர். இன்றும் தன் 87 வயதிலும், நாள் தவறாமல், ஏதோ ஒரு கருவறையில் உள்ள தெய்வ சிற்பத்துக்குக் கசவம் செய்யும் பணியை விடாமல் தொடர்கிறார். நமது ஹெரிட்டேஜர் இதழ்க்காக ஒரு பிரத்யேக நேர்காணல்.
1. கருவறையில் உள்ள சிலைகள் மேல் ஏன் கவசங்கள் தேவை?
கவசங்கள் தான் சிலைகளின் உருவத்தை மேலும் அழகாக்கிக் காட்டும். பூஜையில் கூட சிறு பின்னங்கள் வராமல் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
2. எந்த உலோகங்களில் கவசங்கள் செய்வீர்கள்?
தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை போன்ற உலோக தகடுகளில் பெரும்பாலும் உபயோகப்படுகின்றது. சிறிய சிலைகள் என்றால் முழுவதும் கவசமாகவும், பெரிய சிலைகள் என்றால் முடி, கர்ணபத்திரம், கைகள், மார்பு, கால், மனம் எனத் துண்டுகளாக செய்யப்படும். நிதிவசதியைப் பொறுத்து உலோகம் மாறுபடும்.
3. உங்களுக்கு இந்தப் பணியை அளிப்பவர்கள் யார்?
ஆலய நிர்வாகிகள் மூலவருக்குக் கோயில் சார்பாகக் கவசம் செய்கிறார்கள், மேலும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளுக்காக கவசம் செய்ய வருவார்கள். புதிய ஆலயம் கட்டுபவர்களும் தங்களுக்கு வேண்டிய அளவைக் கூறி பெற்றுச் செல்வார்கள்.
4. உங்களுடைய பிறந்த ஊர், குலத்தொழில் பற்றிய விபரங்களைக் கூறுங்களேன்?
நான் பிறந்தது திருமுருகன்பூண்டி திருப்பூர் இடையில் உள்ள அனுப்பம்பாளையத்தில். அப்பா முருகப்ப ஆசாரியின் தொழில் பாத்திரங்கள் செய்வதுதான். ஒரு கட்டத்தில் பாத்திர தொழில் குறைந்ததால், குடும்பத்தோடு வேலூருக்குத் தொழில் செய்ய வந்துவிட்டோம். அப்பாவுக்குத் தொழிலில் உதவுவதற்காக ‘நான்காம் வகுப்பிலேயே’ படிப்பைவிட்டபோது என் வயது பத்து. பட்டறையில் உதவியாய் இருந்துகொண்டே எனது 12 வயது முதல் தனியாக பாக்கு தட்டுகள், தாம்பூல தட்டுகள் என உருவாக்க ஆரம்பித்தேன். 1935ல் என் அப்பா பட்டறையில் 25 முதல் 30 பேர் வரை பணியிலிருந்தனர். சில ஆண்டுகளில், வேலூரிலும் பாத்திர தொழிலில் ஒரு மந்த நிலை ஏற்பட்டது. மூலப் பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு, தொழில் போட்டி, மேலும் புதிய தலைமுறையிடம் தொழில் ஆர்வமில்லாததும்.
5. கலசங்கள் செய்யும் தொழில் தொடங்கிய திருப்புமுனையை பற்றிச் சொல்லுங்களேன்?
எனது நண்பர் சுந்தரமூர்த்தி குருக்கள், காங்கேயநல்லூரில் அர்ச்சகர். அவ்வூர் முருகன் கோயிலுக்குப் படித்தகடு போடும் வேலைக்கு ஏற்பாடு செய்துதந்தவர். அதுதான் என் முதல் தெய்வப்பணி எனச் சொல்ல வேண்டும். அதே காலகட்டத்தில் வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயிலின் விநாயகர் திருமேனிக்கு வெள்ளிக்கவசம் செய்யும் வாய்ப்பு ஆலய நிர்வாகி வடிவேல் மூலமாகக் கிடைத்தது.
அந்த முதல் கவசம் செய்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது. அப்போது அருகேயுள்ள இரத்தினகிரி முருகன் ஆலயத்துக்குக் கவசங்கள், படித்தகடுகள், தேர் எல்லாம் செய்து தரும் வேலைக்காக பழனியிலிருந்து ஒரு பிரபல ஸ்தபதியை வரவழைத்து அவரிடம் இந்த வேலைகளை ஒப்படைத்திருந்தார்கள்.
என்னுடைய முதல் விநாயகர் கவசத்தை ஒருமுறை பார்த்து ஆலோசனை சொல்லி வழிகாட்ட வேண்டும் என்று கோரினேன். பலமுறை அழைத்தும் அவர் வர மறுத்த காரணத்தால், நான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிற்ப நுணுக்கத் தூண்களை பார்த்துப் பார்த்து காகிதத்தில் குறிப்பெடுத்து கொண்டு வந்து என் முதல் கவச வேலையை முடித்தேன். பார்த்த எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று உற்சாகப்படுத்தினார்கள். கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் உட்பட…
இன்றைக்குப் பல நூறு கவசங்கள் செய்த நிலையிலும் தன் கன்னி முயற்சியான முதல் விநாயகர் கவச அனுபவத்தை சொல்லும்போதே நெகிழ்கிறார் ஸ்தபதியார். இவர் கைவண்ணத்தில். அதே இரத்தினகிரி கோபுரங்களில் இன்று கலசங்கள் மின்னுகின்றது.
6. கவசங்கள் செய்யும் முறையைப் பற்றி விபரமாய்க் கூறுங்களேன்?
உருக்கிச் செய்யும் பஞ்சலோக விக்கிரகங்கள், கல்லில் செதுக்குகின்ற விக்கிரகங்கள் போலவே இந்தக் கவசங்கள் செய்யும் பணியும் மிகவும் சிரம சாத்தியமான வேலை.
முதலில் கவசம் செய்ய வேண்டிய மூல விக்கிரகத்தின் மீது நல்லெண்ணெய் துணியால் ஒற்றிப் பூச வேண்டும். தேன் மெழுகும், குங்கிலியமும் சேர்த்து கொதிக்கும் வெந்நீரில் போட்டு கையில் நன்றாகப் பிசையும் பக்குவத்தில் உள்ள மெழுகைத் தயாரித்து அதை அப்படியே இளஞ்சூட்டோடு எடுத்து மூலவர் சிலையின் மீது அப்பி அந்த மெழுகுத் தட்டையின் மீது தண்ணீரை ஊற்றிக் குளிர்விக்க வேண்டும். இதன் பின்னர், மெழுகுப் படிமத்தை சிலையின் மேலிருந்து அப்படியே ஓடாகப் பெயர்த்து எடுக்கமுடியும். பின்னர் இந்த மெழுகுவார்ப்பை உடையாமல் அதனுள் சிமெண்ட் கலவையை மெல்ல மெல்ல நிரப்பவேண்டும். சிமெண்ட் கலவை நிரம்பிய மெழுகு வார்ப்பு அப்படியே 15 நாட்கள் இருக்கும். அதற்குள் உள்ள சிமெண்ட் நன்றாகக் கெட்டி ஆகிவிடும். இப்போது மூலவிக்கிரகத்தின் பிரதி எடுத்த மாதிரி சிமெண்டில் கிடைத்துவிடும்.
இதன் பிறகுதான் ஸ்தபதியின் வேலைத்திறன் பளிச்சிட வேண்டிய தேவைகள் அதிகம். சிமெண்டில் கிடைக்கும் திருமேனியைத் தரையில் வைத்து அதன் அளவை அளந்து அதன் மீது வெள்ளி தகட்டை காய்ச்சி, உளிகளாலும், சுத்தியலாலும் அடித்து முகம், மார்பு, கைகள், ஆபரணங்கள், கிரீடம் எனத் துல்லியமாக இல்லாமல் ஓரளவு வடிவம் கிடைக்கும் வரை அதை உருவாக்க வேண்டும். இந்தக் கவசத்தை மீண்டும் மூலவர் சிலை மேல் வைத்துப் பார்த்து அதன் நிறை குறைகளை கணித்து அதை தட்டி பொறுத்தும் அளவை உறுதியாக்க வேண்டும்.
மீண்டும் பணிமனைக்கு எடுத்து வந்து இந்தக் கலச தகட்டுக்குள் மறுபடியும் ஒரு கலவையை நிரப்ப வேண்டும் (குங்கிலியம், சீமைஓட்டுதூள், கடலெண்ணெய் கலந்து பதப்படுத்திய கலவை) கவசத்துக்குள் இந்த அரக்கு கலவைப் போய் நன்றாகப் படிந்து ஆறியதும் வெள்ளி தகட்டை விதவிதமான உளிகளைக் கொண்டு அழுத்தி, அடித்து, கண், காது, மூக்கு, பூ அலங்காரம், அணிகலன்கள் எல்லாம் துல்லியமாக உருவாக்க வேண்டும். இதற்கு நகாசு வேலை என்று பெயர். பின்னர் கலச தரம் வெள்ளி கம்பியை சுற்றிப் பற்ற வைக்க வேண்டும். கவசம் நெளியவோ, நசுங்குவதையோ இது தடுத்துவிடும். கம்பி கட்டுதல் முடிந்த பின் நன்றாக பாலிஷ் செய்து துடைத்துவிட்டால் ஜொலிக்கும் கவசம் தயார். எல்லாவித உலோகத்துக்கும் செய்முறை இப்படிதான்.
7. தூண்கள், படிகள், பிரபைகள் போன்றவற்றின் உருவாக்கம் எப்படி?
கருவறை படிகள், தூண்கள் போன்றவற்றுக்கும் இதே போல் ஏற்கனவேயுள்ள சிற்ப வேலைகளை மெழுகில் நகல் எடுத்து வந்து கவசம் செய்ய வேண்டும். பிரபைகள் என்கிற திருவாசிகளை முழுக்க முழுக்க கற்பனையை உபயோகித்தே வடிவமைக்கப்படுகின்றது. பல ஆலயங்களில் உள்ள பிரபை வடிவங்களைப் பார்த்து மனதில் பதியவைத்துக் கொண்டு கற்பனையைக் கலந்து கைதிறமையில் கலந்து செய்ய வேண்டும். மனமும், கைகளும் இணைந்து உருவாக்கும் பணி இது.
8. கோபுர கவசங்கள் செய்முறை பற்றி விளக்கமாகக் கூறவும்?
ஒவ்வொரு கலசமும், பீடம், சிகரம், மையப்பகுதி என்று மூன்று பகுதிகளாக உட்புறம் கூடாக செய்யப்படும். இந்தப் பகுதிகளை மையத்தில் ஒரு குழாய் சேர்த்துப் பிணைக்கும். கோபுர கலசங்கள் பித்தளையிலும் தாமிரத்திலும் தகடுகளை வெட்டி வளைத்துப் பற்றவைத்து செய்யப்படுகின்றன.
இந்த கலசக் கூட்டுக்குள் வரகு என்னும் தானியம் நிரப்பி வைக்கப்படும். நவரத்தின கற்கள் போடும் உபயதாரர்களும் உண்டு.
இந்த வரகும், கலசமும் அண்டவெளியிலிருந்து ஆற்றலை ஈர்த்து மூலவருக்கும், வரும் பக்தர்களுக்கும் தருவதாக ஒரு நம்பிக்கை.
9. தங்களின் 45 வருட அனுபவத்தில் எத்தனைக் கவசங்கள் செய்து இருப்பீர்கள்? தங்களைக் கவர்ந்த கவசம் பற்றி சொல்லுங்களேன்?
நான் இதுவரை செய்த கவசங்கள், கலசங்கள், பிரபைகள், படிகள் என எதையும் கணக்கெடுத்து வைக்கவில்லை. ஆயிரங்களைக் கடந்து இருக்கும் என்பது மட்டும் நினைவு. என்னைக் கவர்ந்த கவசம் எது என்றால் தஞ்சாவூர் மாவட்டம், திருவீழிமிழலை – வீழிநாதர், காத்தியாயினி அம்மன் மேல் உள்ள கவசம் தான் மிகச் சிறப்பான வேலைப்பாடு உடையது. அந்த ஆலய விமான வேலைப்பாடுகளும் அற்புதமானவை. அங்கே உள்ள கல்யாண மண்டபம் கட்டியது இராஜராஜன், என்கிறார் ஸ்தபதியார்.
பேட்டியின் போது செய்து கொண்டிருந்த முருகன் கவசத்தின் மீது பல்வேறு உளிகள், சுத்தியல் கொண்டு வெள்ளி தகடுகள் மீது ஸ்தபதியாரின் கரங்கள் விளையாடுகின்றன. பூக்கள், அணிகலன், யாளி, மகரமீன் என்று வெறும் தகட்டில் அவருடைய கற்பனைக்கேற்ப பூத்துக் கொண்டே வருவது தனி அழகு தான்.
கற்பனை வளமும், கை திறனும் தான் சுவாமிநாத ஸ்தபதியாரின் பிரதான மூலதனம். அதற்கு மேல் இறைவனின் அருட்பார்வையும். அவருடைய தொழில் கூடம் தெய்வீக மனம் கமழ்கின்றது என்பது சம்பிரதாயத்துக்குச் சொல்லவில்லை. சிறியதாக ஒரு ஆலயம் அமைத்து அதில் விஷ்ணு துர்கையைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
நவராத்திரி அன்று சோழர்கால சிற்ப தோற்றத்தில் இருக்கும் அம்மன் தங்க கவசத்தில் காண்பதற்கு வெகு அற்புதமான காட்சி.
மிகுந்த வரலாற்று ஆர்வம் உடையவர், பல்வேறு ஆலய கருவறையுள் உள்ள மூலவர்களைத் தொட்டு அளவெடுத்து கவசங்கள் செய்த பாக்கியவான், 87 வயதிலும் ஓய்வெடுக்காமல் தினமும் சுறுசுறுப்பாகப் பணியில் இருப்பவர், சிறு வயதில் பல கஷ்டங்கள் அனுபவித்ததை இன்று வரை மறக்காமல் இருப்பதாலேயே அவர் இந்தத் தொழிலை மிகச் சிறப்பாக, நேர்மையாகவ் செய்வதாக கூறலாம். (முற்றும்).