கீழடியில் கட்டடக்கலை மாணவர்கள்

பழந்தமிழரின் நகர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வைக் காண, கட்டடக் கலையையும், கட்டடக்கலை மாணவர்கள், கீழடிக்கு சென்று காண்பதற்கான வாய்ப்பை, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி என்ற கிராமத்தில், 2014ல், இந்திய தொல்லியல் துறை, அகழாய்வு செய்தது.

அங்கு, சிறந்த கட்டடக்கலை திறனுடன் கூடிய வீடுகள் அமைந்த 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட, இரண்டாம் கட்ட அகழாய்வில், இதுவரை கிடைத்திராத தமிழரின் அரிய வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. அவை, கட்டடக்கலை, வரலாறு, தொல்லியல், மானுடவியல், பண்பாட்டியல், கலை துறை மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளன. இந்த நிலையில், சென்னையை சேர்ந்த, ‘தளி அறக்கட்டளை’ என்ற அமைப்பு, கீழடிக்கு கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பை சேர்ந்த வித்யாலட்சுமி ராஜசேகர் கூறியதாவது தளி அறக்கட்டளையும், தமிழக பாரம்பரிய சங்கமும் இணைந்து, தமிழகத்தின் தொன்மை, வரலாறு, மரபு பொருட்கள் சார்ந்த கல்வியையும், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு களப்பயிற்சி அளித்து வருகின்றன.

தற்போது, கீழடிக்கு கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரபுப் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வும், அவற்றின் பாதுகாப்பும் தற்போது மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. நம் வரலாறு, பழம் பெருமை பேசுவதோடு முடங்கி விட்டது. ஆனால், நமது பாரம்பரியத்தை அறிந்த வெளிநாட்டினர், அதில் உள்ள மருத்துவம், அறிவியல் சார்ந்தவற்றை ஆராய்ந்து, தம் அறிவியலுடன் இணைத்து, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். இதனால், நம் பாரம்பரியத்தை, பலதுறைகளுடன் ஒருங்கிணைந்த கல்வியாக மாற்ற வேண்டியது அவசியமாகும். தமிழகத்தில் சிறப்பு மிக்க கட்டடங்கள் இல்லை என்பது போன்ற மாயையை கட்டடக்கலை பாடங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், கி.மு., 300ல், ஓடுகள் வேய்ந்து கூரையும், மிகப்பெரிய சுவரும், கிணறு களும் அமைந்த நகரம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் காலத்தையும், நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தையும் மாணவர்கள் அறிந்தால், நம் தொழில்நுட்பத்தின் மீது, நம்பிக்கை பெறுவதோடு, பழப்பொருட்களின் உள்ளே ஒளிந்திருக்கும் வரலாற்றையும், புரிந்து கொண்டு பாதுகாப்பர். கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை, இந்திய தொல்லியல் துறை அடுத்த மாதம் மூட உள்ளது. இதனால், அந்த இடங்களை பார்வையிட்டு, அறிஞர்களுடன் உரையாட மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு பெரிதும் உதவும்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமையான இடங்களை அறியவும் இந்த சுற்றுலா உதவும். சுற்றுலா, சென்னை கோயம்பேட்டில் இருந்து, இம்மாதம், 19ம் தேதி இரவு புறப்படும். சுற்றுலா கட்டணம், 3,000 ரூபாய். மேலும் விபரங்களுக்கு: 97860 68908, 73054 37393 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

img115-001

[Best_Wordpress_Gallery id=”5″ gal_title=”Madurai Pdukottai Youth Heritage Camp”]

கட்டடக்கலையியல் மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள கட்டடக்கலைச் சிறப்புள்ள இடங்களுக்குக் நேரடி கூட்டிச்சென்று (Site Seminar) வகுப்புகள் எடுக்கவேண்டும் என்ற நோக்கில் தளி அமைப்பின் சார்பில் இரண்டு நாள் முகாம் மதுரையில் ஆகஸ்ட்டு மாதம் நடத்தப்பட்டது. அதன் பெயரில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் திரு. ராஜகோபால் அய்யா அவர்களின் அறிவுரையின் படி, தளி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கட்டடக்கலை நிபுணர் திருமதி. வித்யா லட்சுமி ராஜசேகரின் தலைமையில் மதுரைக்கு சென்னையில் உள்ள மாணவர்களை அழித்துச் செல்வது என முடிவெடுக்கபட்டது. தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள கட்டடக்கலை நிபுணர்களான திரு. கார்த்திக், திரு. கெளதம், செல்வி. மோனிக்கா, செல்வன். சங்கீத் மற்றும் செல்வன். பிரபு ஆகியோர் உள்ளிட்டக் குழு அமைக்கப்பட்டு மாணவர்கள் முகாம் அமைக்க தேவையான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. தளி அமைப்பின் சார்பில் தொல்லியல் பேரறிஞர் மற்றும் முன்னால் தொல்லியல் துறை இயக்குநர் முனைவர். தயாளன் அய்யா அவர்கள் அனுமதியுடன் இரண்டுநாள் இளைஞர் முகாமுக்கான கையேடு உருவாக்கப்பட்டது. எங்கள் பயணத்தைப் பற்றிய அறிக்கை, எங்கள் தளி அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் சென்னையில் உள்ளக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கீழடி அகழாய்வுத் தளத்தை காணவேண்டும் என்ற விருப்பதால் தமிழக மரபுசார் குழுவின் தன்னார்வலர்களும் எங்களோடு பயணத்தில் இணைந்துக் கொண்டனர். குறுகியக் காலத்தில் பயண ஏற்பாடுகள் நடைபெற்றதால், ரயில் சீட்டுகள் கிடைக்காததாலும் சென்னையில் இருந்தேப் பேருந்தில் பயணத்தை துவங்கினோம்.

மதுரையில் மூன்று நாட்கள் தங்கிக் களப்பயிற்சி அளிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. இந்த இரண்டு நாள் களப் பயிற்சியை மதுரையைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் முனைவர். கண்ணன் அவர்கள் 20 ஆம் தேதி அன்று துவங்கி வைத்தார். மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கீழடித் தொல்லியல் களம் சென்றுக் காண்பிக்கப்பட்டது. மாலையில், முனைவர். கண்ணன் அவர்களின் தலைமையில் தென்னிந்திய கட்டடக்கலைப் பற்றியக் கருத்தரங்கு மதுரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்குக் கலைகளின் தோற்றம், பரவல், கோயிற்கலைப் பற்றிய அறிமுகம், பரிணாமம் மற்றும் பாதுகாப்புக் குறித்து அய்யா அவர்கள் மிக அருமையான சொற்பொழிவை நிகழ்த்தினார். அடுத்த நாள், முனைவர். ராம்ஜி மற்றும் கட்டடக்கலை நிபுணர் திருமதி. வித்யா லட்சுமி ராஜசேகர் அவர்களின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத் தொன்மையனா இடங்கள் மற்றும் கோயில் கட்டடக்கலைப் பற்றியக் களப் பயிற்சி கொடும்பாளூர், நார்த்தாமலை மற்றும் குடுமியான்மலை போன்ற இடங்களில் மாணவர்ளுக்கு அளிக்கபட்டது. அன்று மாலை சான்றிதழ்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு, எங்களின் இரண்டு நாள் களப்பயிற்சி இனிதே முடிவடைந்தது. மாணவர்களின் இந்தக் களப் பயிற்சிக்குப் பேருதவியாக இருந்த கல்வெட்டு ஆய்வாளர் கல்பூண்டி திரு. பாண்டுரங்கன், தளி அமைப்பின் செயல்பாட்டாளர்கள், தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் அனைவரையும் வணக்கத்துடனும் மதிப்புடனும் தளி அறக்கட்டளை நினைவுக்கூருகிறது.

மேலும், இக்கள பயிற்சியில் ஆர்வமுடன் பங்கெடுத்த கட்டடக்கலை மாணவச் செல்வங்கள் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி ஆர்வமுடன் கற்றலையே நோக்காக கொண்டு எங்களுடன் இரண்டு நாட்கள் பயணப்பட்டது பிரமிப்பையும் ஆர்வத்தையும் தூண்டியது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்குப் பட்ட பல்வேறு துன்பங்களையும் நீக்கும் விதமாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களின் பயண அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டது, தளி அமைப்பு மென்மேலும் தமிழக வரலாற்றுத் தரவுகளை மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல ஊக்க மருந்தாக அமையும்.

youtube=https://www.youtube.com/watch?v=CnhLBwcU86k

– ராஜசேகர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தளி அறக்கட்டளை

Leave a Reply