ஆடி மாதக் காற்றின் தாலாட்டில் இப்பூமிப் பந்து அயர்ந்து உறங்கிக்
கொண்டிருந்தது. சூரியன் தன் கதிர் விழிகளைத் திறக்கலாமா? வேண்டாமா என
யோசித்துக் கொண்டிருந்த நேரமது. சூர்யா தன் போர்வையை நன்கு இழுத்துப்
போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான். ‘தடக் தடக்‘ என்று குதிரைகளின்
குளம்படிச் சத்தம் அவன் காதுகளை கிழித்துக் கொண்டிருந்தது. “பழையாறைக்கு
வா!” என்ற அசரிரீக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். இவன் எழுந்ததைப் பார்த்து,
என்னாச்சு சூர்யா? என்றவாறு அவன் மனைவி மீராவும் உடன் எழுந்தாள்.
சூர்யா கருமையான ஆஜானுபாகுவான தோற்றமுடையவன். மீரா
பெயருக்கேற்ப எழிலோவியம். இருவரும் பெற்றோர்களை இழந்தவர்கள்.
தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டுள்ளனர்.
திடுக்கிட்டு எழுந்த சூர்யா, மீரா கேட்ட கேள்விக்கு மலங்க மலங்க விழித்துக்
கொண்டிருந்தான். உனக்கு பழையாறை எங்கே உள்ளது என்று தெரியுமா? என
மீராவைப் பார்த்துக் கேட்டான். எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு மீரா நழுவி
ஓடிவிட்டாள். கூகுள் ஆண்டவரின் துணைக் கொண்டு ஒரு வழியாக
பழையாறையைக் கண்டுபிடித்துவிட்டான். கணிணியில் பார்த்துக்
கொண்டிருக்கும் போதே காபியுடன் வந்தாள் மீரா. என்ன சூர்யா!
கண்டுபிடிச்சாச்சா? என்ற கேள்வியுடன் அருகில் வந்தாள்.
ஆச்சு மீரா! உடனே நாம பழையாறைக்கு கிளம்பறோம். அப்படி என்ன
அவசரம் சூர்யா? என மீரா கேட்டாள். என்னை யாரோ அங்கு வரச் சொல்லி
அழைத்தது போன்ற அசரிரீ என் காதுகளில் விழுந்தது. ஓ! கனவா, அதற்கு ஏன்
இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீர்கள் சூர்யா! என மீரா ஆச்சர்யத்துடன்
கேட்டாள். வெறும் கனவாகத் தெரியவில்லை மீரா! அது ஒரு உணர்வு உனக்குப்
புரிய வாய்ப்பில்லை.
இருவரும் உடனே பழையாறைக்குப் புறப்படுகின்றனர். கூகுள் வரைபடம்
மூலமாக பழையாறைக்குக் காரில் வந்தடைந்தனர். இங்கு நாம் எதற்கு
வந்தோம்? யாரை பார்க்கப் போகிறோம்? என ஒன்றும் தெரியாத குழப்பத்திலேயே
காரை விட்டு இருவரும் இறங்கினர். சுற்றிலும் இயற்கை பச்சைப் பசேல் என
ஊரெங்கும் பச்சைப் போர்வை போர்த்திக் கொண்டு ஆடிக் காற்றில் நடனமாடிக்
கொண்டிருந்தது. சூர்யாவின் பாதங்கள் நிலத்தில் பட்டதும் சில்லென்ற
உணர்வுபட்டது. சுற்றும் முற்றும் பார்த்தான்.
“ராமசாமிக் கோவில்” போகனுங்களா? என தேநீர் கடையில் இருந்த
பெரியவர் ஒருவர் கேட்டார். சூர்யாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல்
ஆமாம் எனத் தலையாட்டினான்.காரில் எல்லாம் செல்ல முடியாது நடந்துதான்
செல்ல வேண்டும் என அப்பெரியவர் கூறினார். இந்த ஒற்றையடிப் பாதை
வழியாகச் செல்லுங்கள்! எனக் கூறி ஒரு திசையைக் கை காட்டினார். இருவரும்
பொடி நடையாக நடக்கத் துவங்கினார்கள்.
வழி நெடுக முட்செடிகளும், சேறும் சகதியும் கூடிய மண் சாலையாகவே
காணப்பட்டது. எங்கு சென்று கொண்டிருக்கிறோம் எனத் தெரியாத சூர்யாவிற்கு
நெஞ்சு ‘படக் படக்’ என அடித்துக் கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் காரை
வீடுகளும், ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதும் கண்ணிற்குத் தென்பட்டன.
2
அருகே செல்லச் செல்ல கோவில் இருப்பதற்கு சுவடே இல்லாத இடத்தில்
அக்கோவில் இருந்தது.
கோபுரங்களிலெல்லாம் செடிகள் முளைத்து இருந்தன. யாரோ
வருகைக்காக காத்துக் கொண்டிருந்தது போல் இருந்தது அக்கோவில்.
சூர்யாவிற்கு தலைச் சுற்ற ஆரம்பித்தது. கோவிலின் உட்புறம் நுழைந்ததும்
அவனது கண்கள் நாலாபுறமும் எதையோ தேடத் தொடங்கியது. இவனது
செயல்களைப் பார்த்து மீரா திகைத்துப் போனாள். சூர்யா! சூர்யா! என்னாயிற்று
உங்களுக்கு? என்ற மீராவின் வார்த்தைகள் அவன் செவிகளில் விழவேயில்லை.
மாறாக,
“திருமன்னி வளர விருநில மடந்தையும்
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுஞ்——”
எனத் தொடங்கி, கோப்பரகேசரி உடையார் இராசேந்திர சோழன் பராக்! பராக்!
என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலிக்கத் தொடங்கின.
கோவில் உள்பிரகாரத்தைச் சுற்றி ஓடலானான். மீராவும் அவனைப் பின்
தொடர்ந்தாள். சிற்பிகள் செதுக்கும் உளிகளின் ஓசை அவனுக்கு மட்டும் கேட்டுக்
கொண்டிருந்தது. எதையோ தேடிக் கண்டுபிடித்தவனாய், கோபுரத்தின் கீழ்ச்
சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை ஒவ்வொன்றாய் படிக்கத்
துவங்கினான். படித்துக் கொண்டிருந்தவன், பள்ளிப்படைக் கோவில் என்ற
எழுத்துக்களைக் கண்டதும் கோவில் கருவறையை நோக்கி ஓடினான். மீரா
செய்வதறியாது சூர்யாவைப் பின் தொடர்ந்து ஓடினாள்.
கோவில் கருவறையினுள் சென்றதும் அன்னையே! அன்னையே! என்று
கதறி அழுது கொண்டிருந்தான். கருவறையினுள் லிங்க வடிவில் இருந்த
3
இராமலிங்க சுவாமியை ஆரத் தழுவிக் கொண்டான். சூர்யாவிற்குத் தன் தாயைக்
கட்டிக் கொண்டது போன்றவொரு உணர்வு.
ஆம்! சுமார் ஆயிரம் வருடத்திற்கு முன்னமே தன் சிற்றன்னைக்காக ஒரு
மகன் எழுப்பிய பள்ளிப்படைக் கோவில். அம்மகன் வேறு யாருமல்ல, கங்கை
முதல் கடாரம் வரை முடி சூடி ஆண்டவனும், மன்னன் இராச ராச சோழனின்
புதல்வனான இராசேந்திர சோழன் தான். அவன் தன் சிற்றன்னை பஞ்சவன்
மாதேவியின் நினைவாக பள்ளிப்படைக் கோவிலைக் கட்டினான்.
அச்சிவலிங்கத்திற்குக் கீழே தான் பஞ்சவன் மாதேவியின் உடலை அடக்கம்
செய்து கோவில் எழுப்பினர்.
இவற்றையெல்லாம் கோவில் கல்வெட்டுகள் மூலம் மீரா அறிந்து
கொண்டாள். சூர்யாவிற்கும் இந்த கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்று
புரியாமல் குழம்பினாள். சூர்யாவை எவ்வாறு தேற்றுவது என்று தெரியாமல்
திணறினாள். சூர்யா வேறு அன்னை என்று கூறி அழுது கொண்டிருந்ததால் ‘இவன்
யார்?’ என்கிற குழப்பமும் அவளை ஆட்கொண்டது.
ஒருவாறாக சூர்யாவைத் தேற்றினாள். மேலும் அக்கோவில் முழுவதும்
இருவரும் விளக்குகள் ஏற்றினார்கள். சூர்யா தன் கைகளாலேயே
அக்கருவறையைச் சுத்தம் செய்து அச்சிவலிங்கத்திற்கு பூசை செய்தான். இனி
வருடா வருடம் அவன் பிறந்த நாளன்று தவறாமல் இங்கு வர வேண்டும் என்று
முடிவு செய்து கொண்டான். அக்கோவிலை விட்டுப் பிரிய மனமில்லாமல்
கிளம்பி, வந்த வழியே திரும்பி நடந்தார்கள்.
நமக்கும் இக்கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?. தான் ஏன் அன்னை என்று
கூறி அழுது புரண்டோம்? என்ற எண்ண ஓட்டங்கள் வேகமாக அவன் மனதில்
4
ஓடிக் கொண்டிருந்தன. மன்னன் இராசேந்திர சோழன் தன் சிற்றன்னைக்காக
இக்கோவிலைக் கட்டியிருக்கிறான். அப்படியானால் முற்பிறவியில் நான் என்ன
இராசேந்திர சோழனா? என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவன்
அகக்கண் முன்னே அவனைப் போன்றே ஒரு உருவம் குதிரையில்
உடைவாளுடன் வந்து கொண்டிருந்தது.
– மாலாமோகன்
கற்பனைத் திறனுடன் சொல்லாடல் வளமும் கைகோர்த்துக் கொள்ள அருமையாக எழுதியுள்ளீர்கள் மணிமாலா… வாழ்த்துக்கள்
நல்ல நடை அழகு, கதை தொய்விழ்லாமல் நகர்கிறது ,
ரத்தின சுருக்கமாக சொல்லியுள்ளீர்கள்.அருமை. சின்ன திருத்தம். பிறந்த நாள் அன்று ராஜ ராஜனோ,ராஜேந்திரனோ,விழா எடுத்ததில்லை. பிறந்த/ஜென்ம நட்சத்திரத்தில் தான் விழா எடுத்துள்ளனர்.அதனால் சூர்யாவும் வரலாற்றுடன் அவ்வண்னமே தொடர்பு படுத்தலாம். மேலும் சூர்யா மீரா முன்னுரை சிறிது விளக்கமாக இருந்திருக்கலாம். நன்றி.