எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இக்கோயிலானது மொட்டையாண்டி கரடு என்றே அறிந்திருக்கிறேன்.
“குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்றக் கருத்துக்கேற்ப, இங்குள்ள ஒரு குன்றில் மொட்டையாண்டியாக வள்ளி தெய்வானையுடன் முருகன் நின்று காட்சியளிக்கின்றார் என்று அங்குள்ள மக்கள் கூறுங்கின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கணக்குவேலன்பட்டி கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார அனைத்து மக்களும் திருட வந்த கள்வர்களை சபித்து கல்லாக மாற்றியத் தெய்வமாக வருடம்தோறும் பங்குனி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வெகு விமர்சயாகத் திருவிழாவினைக் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் புங்கம்பாடி அருள்மிகு மீனாட்சி அம்மன் சொக்கநாதர் ஆலயத்தை பற்றி ஆய்வு செய்ய எண்ணம் தோன்றியது.
இந்த ஆய்வு தொடர்பாக புங்கம்பாடி அரண்மனையார் திரு. முத்து ராமைய்யா அவர்களுடன் இணைந்து ஓய்வுபெற்ற அரசு தொல்லியல்துறை அலுவலர் திரு. ராமச்சந்திரன் அய்யாவை அழைத்துவந்து மொட்டையாண்டி கரடில் ஆய்வு நடத்தினோம்.
பாறையில் ஏறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ள முருகன் வள்ளி தெய்வானையாக நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம். அக்கோயில் முருகன் கோயில் அல்ல என்றும், 1000 ஆண்டுகள் பழமையான சமணச்சிற்பம் என்றும், முருகனாக இருக்கும் சிற்பம் 24 தீர்த்தங்கரரில் ஒருவராக இருக்கக்கூடும் என்றும் அருகில் பணிப்பெண்கள் என்றும் கண்டறிந்து கூறினார்.
அச்சிலை முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதராக இருக்கலாம் என்றும் அருகில் உள்ளவர்கள் அவரது மகள்கள் சுந்தரி, பிராமியாக இருக்கலாம் என்றும் கூறினார் முகம் சிதைந்துள்ளது.
மேற்குறித்த சமணச் சிற்பத்தொகுதியைக் கடந்து சிறு குன்றுப்பாதையில் சற்றே மேலே ஏறிச் சென்றால் சமதளமாகக் காணப்படும் பெரிய பாறைப்பரப்பு, ஓரிடத்தில் பசிய இலைகள் படர்ந்து நிற்கும் சுனை நீர்ப்பள்ளம், மற்றோரிடத்திலும் சிறிய சுனை ஒன்று, பாறைப்பரப்பைக் கடந்து சற்று மேலே சென்றால், பெரிய குன்றுப்பாறையின் கீழ் சிறிய குகைத் தளத்தில் சமணத்துறவிகள் தங்கியிருக்கும் படுக்கையும் காணப்படுகிறது.
குகைத் தளத்துள் நீர் புகுந்துவிடாமல் பாறையின்மீது மழைநீர் வடிந்து வெளியேறக் கல்லில் விளிம்பு வெட்டியிருக்கிறார்கள். குகை அமைப்பு மிகச் சிறிது. மற்ற இடங்களில் இருப்பதுபோல், பாறையே கூரையாக மடிந்து காணப்படும் சூழல் இங்கு இல்லை. இது போன்ற இடங்களில், கூரை போன்ற செயற்கை அமைப்பு உருவாக்கப்படும். அதற்கேற்றவாறு, பாறையில் குழிகளை அமைப்பது வழக்கம். பாறையில் அத்தகைய குழிகள் காணப்படுகின்றன.
பாறைச் சமதளத்தில் கல்வெட்டு நிறைய எழுத்துகள் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஆறு எழுத்துகள் கொண்ட ஒரு வரியும் அதன்கீழ் ஒன்றன்கீழ் ஒன்றாக இரண்டு எழுத்துகளுமே தற்போது காணப்படுகின்றன.
பிறகு கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை சுந்தரம் அவர்கள் ஒரு முறை வந்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் முடிவில் இச்சிற்பமானது 24 தீர்த்தங்கரரில் முதன்மையானவரான ஆதிநாதர் என்கின்ற ரிஷபநாதரின் மகனான பாகுபலியாக இருக்கலாம் என்று கூறினார். ஆனால் இந்த ஆய்வு விவாதத்திற்குட்பட்டு இச்சிற்பம் பாகுபலியல்ல என்றும் 24 தீர்த்தங்கரரில் ஒருவராக இருக்க வேண்டும் ஏனெனில் இச்சிற்பத்திற்கு மேல் முக்குடை உள்ளது. பாகுபலிக்கு முக்குடை இருக்காது.
இதுவரை யாரும் இவ்வரலாற்று சிறப்பிடத்தை ஆய்வு செய்யவில்லை. ஏனெனில் கொங்குநாட்டில் உள்ள சமணத்தடயங்களை ஆய்வு செய்து கொங்குநாடும் சமணமும் என்ற நூலை எழுதிய புலவர் ராசு அவர்களிடம் கேட்டபோது இவ்விடத்தை ஆய்வு செய்யவில்லை என்று கூறினார்.
எனவே அரவக்குறிச்சி வட்டாரத்தில் சமண தடயம் பற்றித் தெரிந்தது இதுவே முதல்முறை.
சுகுமார்பூமாலை